இன்னும் இரண்டு
அல்லது மூன்று
மாதங்கள்
கால்களுக்கு வரக்கூடும்
என்கிற தகுதியில்
என் கால் செருப்புகள்
உள்ள நிலையில்...
மற்றொரு புதுஜோடி
செருப்புக்கு அவசியமும்
அவசரமும் என்ன என்கிற
கேள்வி என் மனைவியினிடத்து...
கண்காட்சி ஸ்டாலில்
மிகத் தரமானதென்று
உத்தரவாதமாகக் கூவியதைத்
தொடர்ந்து அலைமோதிய
கூட்டத்தில் நானும்
மயங்க நேர்ந்ததை விளக்கும்
பொறுமையற்று --
"வாங்கியாச்சு , விடு"
என்று மட்டும் சொன்னேன்...
ஒரு வருடம் வரக்கூடும்
என்று நம்பி ஒன்றரை
வருடம் வரை வந்த
ஒரு ஜோடி செருப்பு
ஒரு அவசர நடையில் அறுபட்டு
தெருவோரம் ஓரங்கட்ட வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டது
சில வருடங்கள் முன்னர்...
--பிற்பாடு
பொருளாதார பலவீனமோ
அல்லது அந்த செருப்பை இழந்த
வேதனையோ... மேற்கொண்டு
சில மாதங்கள் வெறுங்காலோடு
தான் திரிந்து வந்தேன்...
அப்போதெல்லாம் என்
செருப்பில்லாத கால்கள்
குறித்த எந்தப் பிரக்ஞையும்
அற்றிருந்த என் மனைவி
இன்று
எனது முன்ஜாக்கிரதையை
கேவலப்படுத்துகிறாள் ..!!
அவளிடமுள்ள
ஐந்து ஜோடி செருப்புகளில்
எதைத் தேர்ந்தெடுப்பது
என்கிற அவளது
குழப்பங்களை மட்டும் ரகசியமாய்
அன்றாடம் ரசித்துக் கொண்டிருக்கிறேன்
மானங்கெட்டுப் போய்...!!!
சுந்தரவடிவேலு..
No comments:
Post a Comment