Friday, August 31, 2012

சுயம் ---2

தையும் எழுதாதவர்களுக்குக் கிடைக்கிற அனுபவங்கள், எதையும் எழுதுபவர்களுக்குக் கிடைக்கக் கூடுமென்கிற உத்தரவாதம் இல்லை... ஆகவே, கிடைக்காத அனுபவங்களக் கூட கிடைத்த பாவனையில் கிறுக்கித் தள்ளும் சுபாவம் இயல்பாகவே கொண்டுள்ளனர் எழுதுபவர்கள்..

எழுதுகிற அபிப்ராயமற்ற அனுபவஸ்தர்களின் அனுபவங்கள் அனாமதேயமாக அவர்களுள் அமிழ்ந்து அஸ்தமனமாகி விடுகிற அவலம் அன்றாட நிகழ்வாக அவர்களுக்கு... அவை குறித்த கிஞ்சிற்று பிரக்ஞை கூட அற்று அடுத்த அனுபவங்களுக்காக அலைபாய நேர்கிறது அவர்களுக்கு..

ஆனால் வெறுமே இருந்துகொண்டு பற்பல அனுபவங்களை சந்தித்த சாதனையோடு தனது எழுத்துப் பந்தலை எழுப்பி மாய்ந்து போவான் ஓர் தேர்ந்த எழுத்தாளன்..

மேற்சொன்ன மாதிரி அனுபவங்களை மாத்திரம் அன்றாடம் தரிசித்து எழுதுகிற நோக்கமற்று வலம் வருகிற எனது நண்பர் ஒருவர் சொன்னார் என்னிடம்..: "இந்த எழுதுவதென்பது பெரிய மனவியாதி போல.. அதற்கு அடிக்ட் ஆகிவிட்டால் அவ்வளவுதான்.. எழுதிக் கொண்டே கிடக்க வேண்டியது தான்... ஏதாவது எழுதாமல் இருந்தாலோ, அந்த நாளே அனாசாரமாகப் போய் விடும் அவர்களுக்கு" என்றாரே பார்க்கலாம்.

எதையேனும் எழுதிக் கிழிக்கிற, கிழித்துக் குவிக்கிற எனக்கே ஒரு வகையான குற்ற உணர்வாகி விட்டது அதனைக் கேட்டு. 
மேற்கொண்டு எழுதித் தான் ஆகவேண்டுமா என்கிற கேள்வி என்னைக் குடைய ஆரம்பித்துவிட்டதென்றால் பாருங்களேன்..

இப்படி சமயங்களில் அனர்த்தங்கள் எல்லாம் பெரிய அர்த்தம் கண்டு விடுகிற விபரீதம் எல்லா சம்பவங்களிலும் சகஜமாகி விடக் கூடும்.. 

நல்ல விஷயங்களில் லயிப்பது கூட கெட்டபழக்கம் போல ஓர் மாயையை தோற்றுவிப்பது வேடிக்கையாக உள்ளது.. 
ஆனால் சுலபத்தில் ஓர் நல்லதைக் கெட்டதாக மாற்றுகிற ,மற்றும் கெட்டதை  நல்லதாக மாற்றுகிற வல்லமை வதந்திக்கு உண்டு..

1 comment:

  1. உண்மை தான் சார்... முடிவில் சொன்னீர்களே அது 100 % உண்மை...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...