Saturday, August 18, 2012

மதுபானக் கடை (திரைப்பட விமரிசனம் )

மதுபானக் கடை படம் பார்த்தேன்..
நிஜமாகவே ஓர் கச்சடா ஒயின் ஷாப்புக்குள் நுழைந்த ஓர் அசூயை நிரம்பிய சூழலை உருவாக்கிய செட்டிங் போட்டவருக்கு ஓர் பெரிய பாராட்டு...

அங்கே வந்து அன்றாடம் குடிக்கிற குடிகாரப் பயல்கள் ஆகட்டும், குடித்துவிட்டு அவர்கள் செய்கிற ரகளைகள் ஆகட்டும், மிக யதார்த்தமாக நகர்த்தி அசத்தி இருக்கிற திரைக்கதைக்கு ஒரு குவாட்டர் .. இல்லை இல்லை.. ஒரு புல்லே வாங்கித் தரலாம்..

அந்த மாமூல் ரகளை செய்கிறவர்களை விரட்டியடிப்பதும், அவர்களது லூட்டியை சலித்துக் கொள்வதும் கூட நகைச்சுவை இழையோடும் விதமாக அமைந்துள்ளது...

அந்த மதுபானக் கடைக்கு ஓர் முதலாளி , கஸ்டமர்களுக்கு சப்ளை செய்கிற டாஸ்மாக் தொழிலாளிகள், எல்லாருமே நடிக்கவில்லை.., மாறாக இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள் அந்தப் பாத்திரங்களாகவே... காமெரா இவர்களுக்கெல்லாம் தெரியாமல் இவர்களை சுட்டுத் தள்ளியது போல யதார்த்தம் தாண்டவமாடுகிறது படம் நெடுகிலும்... ஒ(ளி )லிப்பதிவின் யதார்த்தங்கள் கூட அதே கரகாட்டம் ஆடியுள்ளதெனில் மிகையன்று... இவ்வளவு யதார்த்தங்களோடு இசையும் சேர்ந்து கொள்கிறது..

இப்படி ஓர் நாற்றவெளி, கதையின் மையமாயிருக்கையில் ... வாசமானதொரு காதலும் தளமமைத்திருப்பது ஆச்சர்யமும் ஆறுதலும் நிரம்பிய விஷயங்கள்... சாராயக் கடையின்  முதலாளி மகளையே டாவடிப்பதும் , டாவடித்தவாறு அந்தப் பெண்ணின்  அப்பனையே அதாவது தன் முதலாளியையே நக்கலாகவும் கேவலமாகவும்  பேசுவதும், அதற்காக அந்தப் பெண் சற்று கோபிப்பதும்  பிற்பாடு காதலில் துவண்டு கோபிக்கிற சுரணை இழப்பதும் நம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பப் புதிய காட்சிகள்...

இவ்வளவு இயல்பான சினிமாவுக்கு , திரை அரங்கு மொத்தத்திலும் பத்துப் பதினைந்து பேர்கள்  இருந்தால் அதிகம்... ஒருக்கால் ரெண்டு வாரம் ஆனதால் கூட்டம் குறைந்து காணப் படுகிறதோ தெரியவில்லை..

-நிச்சயம் ஒரு நல்ல சினிமாவை சுலபத்தில் அடையாளம் கண்டு கொள்கிற எவருமே இதையும்  அதே சுலபத்தில் அடையாளம் கண்டு கொண்டு வியப்பார்கள் என்பதில்  கிஞ்சிற்றும் ஐயமில்லை..

1 comment:

  1. சுருக்கமாக சொன்னாலும் நன்றாக விமர்சித்து உள்ளீர்கள்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...