Saturday, July 24, 2010

குப்பைக்கூடை

மேஜை மீது
பரவிக்கிடக்கிறது
குப்பைகள்..
மேஜையின் அடியில்
காலியாகக்கிடக்கிறது
குப்பைக்கூடை...                                        
உழைக்க தயார் நிலையில்
இருக்கையில்
வேலை கொடுக்காத
எஜமானனைப்பார்த்து
சலித்துக்கொள்வதைப்போல
தோன்றுகிறது
குப்பைக்கூடையின் வெறுமை...

மேஜை மீது இருப்பதில்
குப்பை எது,
தேவைப்படுவது எது
என்று பகுக்க முடியாத
வேலைப்பளுக்களும்
வேலை முடிந்த பிறகாக
சோம்பல்களும் ஒருங்கிணைந்து
கொள்கிறது அன்றாடம்...

சரி , குப்பைக்கூடையை
திருப்திப்படுத்தலாம் என்று
ரெண்டொரு காகிதங்களை
கசக்கி சுருட்டி வீசினாலோ
பிற்பாடு, அதே காகிதங்கள்
அவசியமாகி -- அந்தக்
கசக்கல்களை நிதானமாகப்
பிரித்துப்பார்க்க  வேண்டியாகி
விடுகிறது அனேக சமயங்களில்....
-- அதனாலேயே
உத்தரவாதமாகக் கசக்கி
வீசி விடலாம் என்கிற குப்பைகள்
கூட எந்நேரமும் மேஜையின்  மீது....!!

என் அலுவல் அறையின்
அந்தக்குப்பைக்கூடையை
நான் பார்க்க நேர்கையில் எல்லாம்
அதென்னவோ அந்தக்கூடை
வேலை இல்லாத குற்ற உணர்வில்
சங்கடப்படுவாதாகவே
எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கிறது..!!!

சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...