உன்னைக் காண்பதற்கான
ஆயத்தங்களோடு நானிருந்தாலும்
இப்போதைக்கு-
ஒத்திப்போடுவதற்கான
சந்தர்ப்பங்களே நிகழ்ந்த
வண்ணமாயுள்ளது...
உன் விலாசமெனக்கு
புரிபடாமல் இருந்தாலும்
உன்னை சுலபத்தில்
கண்டு பிடித்து விடுவேன்
என்கிற நம்பிக்கை
தீவிரமாயுள்ளது..!
முழு முகவரிகள் தெரிந்து
வைத்திருக்கிற நபர்களைக்
கூட நான் சந்திக்க
முயல்வதில்லை..
உன் நினைவுகளினூடே காலம்
கழிப்பதென்பது சற்று தர்ம சங்கடம்
தான் என்ற போதிலும் --- காலம்
உன் நினைவுகளைப் பிரதிபலித்தவாறே
என்னை ஓர் சுகந்த ஹிம்சையில்
செலுத்துகிறது..!!
பூ தடுக்கி
கல்லின் காலில்
ரத்தம் வழிவதாக,
நிலவைப் பார்த்து
சூரியனுக்கு கண் கூசுவதாக...
--ஆயிரம் கவிதைகள்
எழுத முடிகிற என்னால்
--உன் பற்றி
எழுதும் போது மாத்திரம்
எந்தப்பொய்யும்
சொல்ல முடிவதில்லை...!! ..
சுந்தரவடிவேலு...
No comments:
Post a Comment