Thursday, October 30, 2014

சூரசம்ஹாரம் திருச்செந்தூர் ...

முதல் முறையாக கந்தர் சஷ்டிக்கு சூரசம்ஹாரம் பார்க்க திருச்செந்தூர் சென்று வந்தேன்..
கிட்டத்திட்ட நாற்பதாண்டு காலங்களுக்கும் மேலாக எப்படி இந்த பிரம்மாண்டத்தை கேள்விப் பட்டுக் கொண்டு மட்டும் இருந்தேன் என்கிற கவலையான வினா விடையற்று ததும்பிற்று என்னில்..

நரகக் கூட்டம் அது.. எங்கெங்கிலும் பம்மி பம்மியே சென்றாக வேண்டிய கடின சூழல்.. தனித்து சென்றேன் என்பதால் பிற பெண்களுள் சுலபத்தில் இழைய நேர்ந்தது.. அனைவருக்குமே அப்படியான வாய்ப்புகள் அங்கே வேண்டாமெனிலும் கொட்டிக் கொடுக்கிறது இந்த நாள்..

எதிரினக் கவர்ச்சிகளும் பக்தி எண்ணங்களும் பரவசக் குழப்பத்தில் யாதொருவரையும் ஆழ்த்தி விடுகிற வல்லமையை பிரவகிக்க செய்கிற இந்த சூழல், சற்றே குற்ற உணர்வுகளையும் எட்டிப் பார்க்க செய்கிற ஒரு தர்மசங்கடத்தினை நம்முள் திணிக்கத் தான் செய்கிறது..

சட்டை  பனியன் கழட்டியாக வேண்டும்.. வியர்த்து வழிகிற வெற்றுடம்போடு ஆளாளுக்கு உரசுகிற அந்த அவஸ்தை.. அதனூடே பெண்டிரும் வந்து........ எல்லா சோம்பேறிகளின் கலோரிகளும் நிச்சயம் நேற்று அதிகம் எரிந்திருக்கக் கூடும் என்பது எமது . அனுமானம்.ஆம், வியர்த்து ஒழுகியும், மன அரிப்பின் வக்கிரத்திலும் பல கலோரிகளும் பொசுங்கி சாம்பலாகி இருக்கக் கூடும்.. !!

முருகனைத் தவிர்த்து எல்லா கபட நாடகங்களும் அங்கே சுலப அரங்கேற்றமாக வியாபித்திருக்கிற கொடுமை சற்றே உற்று நோக்கின், புலனாகும்.. 250 ரூ. டிக்கட் வாங்கிக் கொண்டு என்னோடு வந்து பொது தரிசனத்தில் சுவாமி கும்பிட்ட நபர்.. அப்படி பல நபர்கள்..
இத்தனைக்கும் எனக்கு முன்னரே டிக்கட் எடுத்துக் காத்துக் கொண்டிருந்து விட்டு வந்தவர்கள். நான் அந்தக் கூட்டத்தில் தி.நெ.வேலியில் வாங்கி வைத்திருந்த ஹல்வாவை திணித்து விட்டு உட்புகுந்த பரம ரகசியம் எமக்கே ஆச்சர்யம்.. புகுந்தேனா உள்ளே கொண்டு வரப் பட்டேனா என்பதெல்லாம் அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.. 250ரூ.டிக்கட்டை கையில் வைத்துக் கொண்டு உள்ளே வர முடியாமல் திணறிக் கொண்டிருந்த பரம பக்தர்களின் கதி நகைக்க  உகந்ததாக இருந்தது..

திருப்பூரில் எமக்கு பரிச்சயமான சில நபர்களை தி.செந்தூரில் தரிசிக்க வாய்த்தது .. அடிக்கடி திருப்பூர் ஈஸ்வரன் பெருமாள் கோவில்களில் நான் பார்க்க நேர்ந்த ஒரு நபரை அடையாளம் கண்டு .. "நீங்க திருப்பூர் தானே?"
"யெஸ் .. நீங்க?"
"நானும் திருப்பூர்.. உங்களை நான் நம்ம ஊர் கோவில்களில் அடிக்கடி பார்ப்பேன் .. "
"ஓ .. அப்டியா.. "
அவர் தி.செந்தூருக்கு குடும்பத்தோடு வந்து ஒரு வாரமாக லாட்ஜில் தங்கி இருப்பதையும் அன்றாடம் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வதையும் பெருமையாக சொல்லி.. "நீங்க சாமி பார்த்துட்டீங்களா?" என்று கேட்டார். 
நான் "இல்லைங்க" என்ற எமது சோக வரலாற்றை சொல்லவே, மனுஷர் டென்ஷன் ஆகி  .. அவருக்கு அறிமுகமான ஒரு அய்யரை எமக்கு அறிமுகப் படுத்தி "இவரு எங்க ஊரு.. பார்த்து உள்ளே தரிசனம் செய்ய உதவுங்கள்" என்று சொல்லி நாசுக்காக  நகர்ந்து கொண்டார்.. 

"முருகன் நம்மை கை விடலை" என்கிற எமது அனுமானம் பொடி தவிடாக 2 நிமிடம் தான் பிடித்தது.. "உடனே உள்ளே போக எல்லார் கிட்டவும் 1500 ருப்பீஸ் வாங்கறேன்.. எனக்கு தெரிஞ்சவா உங்க ஊர்க்காரர்.. அவர் இன்ட்ரட்யூஸ் பண்ணியதால ஜஸ்ட் ஒரு தௌஸண்ட் கொடுத்தேல்னா போறும் "

'இன்னாங்கடா நடக்குது இங்க?.. இப்டியுமாடா குடுமியப் போட்டு பட்டய விட்டுக்கிட்டு ருத்ராக்ஷய மாட்டிக்கிட்டு  ஃப்ராடு பண்ணுவீங்க?' என்று தமிழ் ஹீரோஸ்  விக்ரம் விஷால் ரேஞ்சுக்கு கதற வேண்டும் போன்று வெறி என்னில் பூவாகி, பிஞ்சாகி, கணிந்தாலும் யதார்த்தத்தில் யாவற்றையும் மூடிக் கொண்டு மெளனமாக அந்தப் பக்கம் நகர்ந்து விட மட்டுமே நேர்ந்தது.. 

நாமெல்லாம் தான் கல்லில் கடவுளைக் காண இங்கே குழுமி வந்துள்ளோம். இங்கே வீற்றிருக்கிற கோவில் பூசாரிகளும் அர்ச்சகர்களும் இன்னபிற கோவில் சார்ந்த நபர்களும் பேசுகிற கடவுளையே கண்டிருந்தாலும் வாயில் மண்ணை கல்லை வைத்து அடக்கி விட்ட கயவர்கள் என்று தான் தோன்றிற்று எனக்கு.. 

சரி நமக்கெங்கே சாமி தரிசனம் தரப் போகிறார்?.. அடுத்த ஒரு அமைதி தருவாயில் வந்து  குடும்பத்தோடு தரிசிப்போம் .. இப்போதைக்கு கடலில் கொஞ்சம் நேரம் அளவளாவி விட்டு நகர்ந்து விடுவதே உத்தமம் என்றொரு முடிவு எடுத்தவனுக்கு செந்தூர் முருகனே மனம் இறங்கி இருக்க வேண்டும்.. 
நான் வெளியே செல்ல வேண்டும் என்று கெஞ்சியும் என்னை வெளியில் . விடவில்லை. 'இந்தக் கூட்டத்துல நீங்க வெளிய போக முடியாது.. அப்டி கோவிலுக்கு உள்ளே போயி தான் வரமுடியும் ' என்று சிறை வைத்தனர்.. 
பிரணவ மந்திரத்துக்கு அர்த்தம் புரியாத பிரம்மனை முருகன் சிறை வைத்தது போல, தேவர்களை இம்சித்த காரணத்துக்காக சூரனை சம்ஹாரம் செய்தது போன்று  ... நானும் ஏதோ தவறுகள் புரிந்து முருகனிடம் வசமாக மாட்டிக் கொண்டது போன்ற  அனர்த்த  பிரம்மைகள் என்னில் புடைசூழ்ந்து குடைந்து எடுத்தன.... 

ஆட்டு மந்தையைத் திறந்து விட்டது போன்று கதவைத் திறக்கவே திமுதிமு வென்று கூட்டம்  முட்டி மோதவே நானும் அவர்களுள் ஐக்கியமாகி உட்புகுந்து முருகன் முகம் கண்டு அகமலர்ந்தேன்.. 

கோவிலின் உட்பிரகாரத்தினுள் நிகழ்ந்த  களேபரங்கள் , சேரிக்குள் நடக்கிற வன்முறைக்கு  கொஞ்சமும் சளைத்ததில்லை.. குத்தும் வெட்டும் ரத்தக் களரிகளும் மிக மிக சாசுவதம் போன்று அங்கே பொதுமக்களும் போலீசுகளும் மோதிக் கொண்டதைப் பார்க்க நேர்ந்து ஆடிப் போனேன்.. 

ஒரு மிகப் பெரிய கலவரம் நேர்ந்து, சூரபத்மனை தலையை எடுத்து அசுரர்களை கொன்று குவித்த மெல்லிய அழகு முருகனின் இந்த வரலாறு அன்று நிஜத்தில் நிகழ நேர்கையில் இதே ஆர்ப்பரிப்போடு கடல் இருந்திருக்கலாம். ஆனால், இப்படியான மனிதக் கூட்டங்களும் ஆர்ப்பரிப்புகளும்  இருந்திருக்குமா என்பது கேள்வி.. 

ஆனால் இதே கற்பனையோடு, இதே ஒரே கதையோடு ஒவ்வொரு வருடமும் நிழலாக நிகழ்கிற  இந்தக் கூத்துக்கு பரவி இருக்கிற மக்களுக்கு எத்தனை முருகன் வந்து எத்தனை சூரர் தலைகளை காவு வாங்கினாலும் போதாது என்றே தோன்றுகிறது.. " ஹ்ம்ம்.. கமான் முருகா.. இன்னும் இன்னும்.. ஒன்ஸ் மோர்" என்று காரவத்தலை வேர்கடலையை பட்டாணி சுண்டலை வாயில் போட்டு அரைத்துக்  கொண்டே கூவிக் கொண்டே இருப்பார்கள்.. 


Friday, October 24, 2014

தீபாவளிகள்.. அன்றும் இன்றும்..

ஒற்றை ஒற்றையாய் 
அன்று விட்ட 
ஊசி வெடி ஆனந்தம் 
கட்டுக் கட்டாய் 
இன்று விடுகிற 
சர வெடிகளில் காணோம்.. 

சுவர்களில் அடித்து 
சத்தமெழுப்பிய 
அன்றைய வெங்காய 
வெடி சுகம் 
இன்றைய காது பிளக்கிற 
டைம்பாமில் மிஸ்ஸிங்.. 

நட் போல்டை லூஸ் 
பண்ணி கொள்ளுப் 
பட்டாசை செருகி 
பிறகு டைட் வைத்து 
தூரம் தூக்கி எறிந்து 
அது கீழே வந்து 
எழுப்புகிற அந்த சப்தம் 
இன்றைய பிளாஸ்டிக் 
துப்பாக்கிகள் எழுப்புகிற 
தொடர் குண்டு வெடிப்புகளில் 
இல்லவே இல்லை.. 

இன்றெல்லாம் ஆகாய 
மார்க்கமாக சென்று 
வண்ணங்கள் பரப்பி 
அலட்டிக் கொள்கிற 
கவுரவப் பட்டாசுகள் 
அன்றெல்லாம் இல்லை. 
காலி பாட்டில்களில் 
செருகி விடப் படுகிற 
ஒற்றை ராக்கெட் 
"உர்ஷ் " என்றொரு 
சப்தம் எழுப்பி மேலே சென்று 
ஒரே வெடியை வெடிக்கும். 
சமயங்களில் அதுவும் 
புஸ்வாணமாகி நம்மை 
நமுத்துப் போகச் செய்யும்.. !

ஆனால் 
இன்றைக்கு நிற்காமல் 
ஆயிரம் வெடிகள் வெடிக்கின்றன.. 
அன்று விடுபட்டுப் போன 
எத்தனையோ ஒற்றை 
வெடிகளையும் 
இன்றைய பட்டாசுகள் 
ஈடுகட்டுவதாக ஒரு 
அற்ப கணக்கு எனக்கு.. !!

Sunday, October 19, 2014

அரசியல் பேசறேன்..

சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிறையிலிடப் பட்ட அன்றைய கால கட்டங்களில் அவர்களை விடுதலை செய்யச் சொல்லி இந்த அளவுக்கு போராட்டங்கள் நடத்தி இருந்தால் நமது இந்தியா இன்று மிகவும் சுபிட்சம் பெற்றிருக்கும்.. ஆனால், அப்படிப் பட்ட தியாகிகள் சிறையில் இருப்பதை பெருமையாகவும் கர்வமாகவும் நினைத்து, அந்த சம்பவங்களை வரலாறுகளாக மாற்றி இன்றைக்குப் பாட புத்தகங்களில் இடம்பெற செய்து விட மட்டுமே நம்மால் முடிந்திருக்கிறது.. ஆனால் இன்றைய அரசியல் தலைவர்கள் சொத்துக் குவிப்பு வழக்குகளிலும் , மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளிலும், 2 G அலைவரிசை என்று அழைக்கபடுகிற தொலைபேசி சம்பந்த ஊழல் வழக்குகளிலும் சிக்கி நியாயமாக தண்டனை பெற வேண்டிய ஒரு சூழ்நிலையை சட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுத்த முற்பட்டாலும் , நாமெல்லாம் அதற்காக மிகவும் போராடி, உண்ணாவிரதம் இருந்து , கருப்பு சட்டை அணிந்து , அழுது ஆர்ப்பாட்டங்கள் செய்து , கவலை அடைந்து , தீக்குளித்து காயங்கள் அடைந்து, தற்கொலைகள் செய்து .. நமது கண்டனங்களை தெரிவித்து வருகிறோம்.. அரசியல் தலைவர்களை எல்லாம் விட மிகப் பெரிய குற்றவாளிகளாக நாம் தான் நமக்குத் தெரிகிறோம்.. இதே போக்கு தொடருமானால், இந்த மாநிலங்களை , இந்த நாட்டினை ஆள்கிற தலைவர்கள் மேற்கொண்டும் சுலபமாக சகஜமாக யதார்த்தமாக இதே போன்ற தவறுகளை தொடர்ந்து செயற்படுத்திக் கொண்டே தான் வருவார்கள்.. சுப்ரமணிசாமி போன்ற அரசியல் வாதிகள் நம் அனைவரது காழ்ப்பு உணர்ச்சிக்கும் ஆளாக நேர்கிற இந்த அநாகரிக விபத்தை நாம் சந்திக்கத் தான் வேண்டுமா?.. மகோன்னதமானவர்களைக் கொண்டாடும் குணமற்று, நம்மிடமிருந்து நமது சக்தியைப் பறித்து நமக்கே குழியைத் தோண்டும் சுயநலமிகளை ஆராதிக்கிற நமது மடமையை நாம் மட்டுமே தான் அடையாளம் கண்டு அதனைக் களைந்தெறிய வேண்டுமேயன்றி, வேறெவரும் அக்காரியத்தை செய்வதற்கு சாத்தியமில்லை.. ஜெய் ஹிந்த் ... 

Sunday, October 12, 2014

சுப்புணி


ஒன்று 
சுப்புணி ன்ற சுப்பிரமணி இன்னைக்குக் காலைல தான் அந்தக் கோட்டப் பெருமா கோவில் இருக்கற வீதியில செயின் சிநாச்சிங் செஞ்சு ரெண்டொரு நிமிஷம் ஓடித் தப்பிச்சவன், வாக்கிங் போறதுக்காக எதிர்த்தாப்புல வந்துக்கிட்டு இருந்த ஒரு தொண்டுக் கெழம் தன்னோட வாக்கிங் ஸ்டிக்ல அவன் காலுக்குள்ள வுட்டு விழ வச்சு, கம்பத்துல கட்டி வச்சு 'பொதுமாத்து' வாங்க வச்சுது.. 

என்னவோ ஏரியா கவுன்சிலர் பதவி கெடச்ச மாதிரி அதுக்கு ஒரே பாராட்டு மழ .. சாகப் போற வயசுல அதுக்கொரு போலீஸ் உத்தியோகம்.. 

வீதியில போறவன் வாரவன் எல்லாருமா ஆளாளுக்கு போட்டு வாங்குன வாங்குல சுப்புணிக்கு ஒதடு வீங்கி, கன்னம் வீங்கி, பல்லு ஒடஞ்சு ரத்தம் சட்டை காலர், வயிற்றுப் பகுதி என்று ஏகத்துக்கும் சிகப்பாய் நனைந்திருந்தது.. 

அவனும் முடிஞ்ச வரைக்கும் 'அண்ணே நான் திருடலை.. அது என்னோடது .. அவ என்னோட பொண்டாட்டி ண்ணே .. நம்புங்க ண்ணே ..' னு ஆன வரைக்கும் கெஞ்சிக் கதறிக் கூத்தாடிப் பார்த்தான்.. 
'இத இப்டி நீ சொல்வே. நாங்கெல்லாம் நம்பனும்?.. சுத்தப் பேமானிக ன்னு நெனச்சியாடா தே.மவனே..?' என்றொருவன் மூக்கில் குத்தினான்.. 
'வேணும்னா அவள விசாரிங்க ண்ணே ..' என்றான்.. 

ஆனா, அந்த சிறுக்கிமவ அந்த ஸ்பாட்டை விட்டே எஸ் ஆயிட்டா கழுத.. 

'சும்மா நாமலே போட்டு அடிச்சு எங்கயாச்சும் செத்துக் கீது போனான்னா போலீஸ் கோர்ட்ன்னு நாமுளும் சேர்ந்து அலையணும். மொட்டயா போலீசாண்ட  ஒரு கம்பிளின் கொடுத்துட்டம்னா அவுக வந்து ஸ்பெஷலா கவனிச்சுக்குவாங்க.. பாதி உசிர நாம புடிங்கிட்டோம்.. மீதிய அவனுக பார்த்துக்கு வானுக.. ' என்றான் ஒருவன்.. 

அரை சுரணையில் இருந்த சுப்புணிக்கு இதைக் கேட்டு இன்னும் பீதி பற்றிக் கொண்டது. 

இரண்டு 
------------
' ஹே . சாவித்ரி .. இது உன்னோட கழுத்துக்கு சூப்பரா இருக்கும் புள்ளே.. வாங்கிக்கிறையா? '
'நெசமாவா மாமா சொல்றீங்க?'
'நெசந்தான் புள்ள.. '

கல்யாணமாகி ரெண்டுமூணு வருஷமோ நாலஞ்சு வருஷமோ ஆகி இருந்திருந்தா கூட எந்தப் புருஷனும் இப்டி அக்கறையா நகைக் கடைக்குப் பொண்டாட்டியக்  கூட்டிட்டுப் போயி விசாரிக்க மாட்டான் .. ஆனா, சுப்ரமணிக்கும் சாவித்திரிக்கும் ரெண்டரை மாசம் தான் ஆவுது.. 
ஆக , மோகம் 30 ஆசை 60 ங்கற 90 நாள் கணக்குலேயே இன்னமும் 15 நாள் பாக்கி இருக்கு. அப்டிங்கற போது சத்தியமா எந்தப் புருஷனும் தமாசுக்குக் கேட்க  வாய்ப்பில்லே.. 

'இப்ப எதுக்கு மாமா.. அப்புறம் பார்த்துக்கலாம்' என்ற சாவியைக் கூட வாயை அடக்கி விட்டு நம்ம சுப்புணி அந்த 3 பவுன் கொடியை ஆசை ஆசையாய் வாங்கி  அவளுக்கு மாட்டி விட்டான்... 

3 மாதங்கள் நிறைவு பெறவே இன்னும் ஒரு வாரம் இருக்கையில் தான் நேற்று அந்த சம்பவம் ... 

2 நாட்கள் முன்னர் அந்தப் புதுப் பொண்டாட்டி முந்தைய காதலனோட எஸ்கேப் .. எதேச்சையா அவன் கூட அவளைப் பார்த்திருக்கான் .. 2 பேரும் வெளியூரு  தப்பிச்சுப் போக இருக்கும் போது , இவன் பார்த்திருக்கான்.. 
'திருட்டு முண்ட.. ஏண்டி என் வாழ்க்கைய நாசக் கேடு செஞ்சே?' ன்னு கேட்டு வெஞ்சிருக்கான் .. அழுதிருக்கான்.. 
அதைப் பார்த்து அவ சிரிச்சாளாம் .. 
அவ காதலன் .. 'இந்தப் பொட்ட கூட போயி என்ன வாழ்ந்து கிழிக்கப் போறே?' ன்னு நக்கல் செஞ்சானாம்.. 

பொண்டாட்டிய மிஸ் பண்ணி, ஆசை ஆசையா வாங்கிக் கொடுத்த 1 லட்சம் ரூபா செயினை  மிஸ் பண்ணி, அதையாச்சும் புடுங்கலாம்னு புடுங்கப் போயி , தர்மடி வாங்கி, ஜேப்படி திருடன்னு  பேரைக் கெடுத்து , ஒதடு மனசு எல்லாம் வீங்கி.. இதெயெல்லாம் சொன்னாலும், மக்களோ போலீசோ நம்பாம... ஐயோ.... 

மூன்று 

அந்த கருமங்கள் எல்லாம் முடிந்து நாலஞ்சு வருஷம் ஆச்சு..  
2வதாக சுப்புணி கல்யாணம் செஞ்சு அவனுக்கும் ருக்குவுக்கும் இப்ப மூன்றரை வயதிலும்  2 வயதிலும் ரெண்டு குழந்தைகள்.. 
இவனுடைய முந்தைய வரலாறுகள் அனைத்தையும் ருக்குவிடம் ஒரு காவியம் போன்று அரற்றித் தீர்த்தான்.. அவளும் அதிலே மலைத்து, இவன் மீது ஒரு  இரக்கம் கலந்த சிநேகமும் மதிப்பும் கொண்டிருந்தாள் .. 

இவன் ஊகித்து வைத்தது போன்றே ஒரு அசந்தர்ப்பத்தில், சாவித்திரியை இவன் நினைத்த கோலத்திலேயே சந்திக்க நேர்ந்து சந்தோஷமாக சிரித்தான்.. 
எஸ், அவனது காதலனால் ஒரு ப்ராத்தல் சந்தையில் விற்கப் பட்டு நாறிக் கிடந்தாள்.. இவனைக் கண்டதும் மூஞ்சியை மூடி அழுதாள்.. கழுத்தில் சிகப்புப் பாசிகள்  கோர்த்த ஒன்றை அணிந்திருந்தாள்.. 

அங்கே நின்றிருந்தால் மறுபடி ஏதேனும் பங்கம் விளைவிக்கத் துணிந்து விடுவாள் இந்த சதிகாரி என்று நகர முற்படுகையில்.. 
பின்னாடி இருந்து வந்த ஒரு 3 வயதுப் பெண்குழந்தை அவளது சேலை முந்தானையைப் பற்றிக் கொண்டு அழுவதற்கு தயாரானது.. 

தனது குழந்தைகளுக்கு வாங்கியிருந்த பொம்மைகளையும் தின்பண்டங்களை யும்  அதன் கைகளில் திணித்து விட்டு அங்கிருந்து எதுவும் பேசாமல் விரைந்தான்  சுப்பிரமணி.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...