Showing posts with label புதுக்கவிதை. Show all posts
Showing posts with label புதுக்கவிதை. Show all posts

Saturday, September 24, 2016

சிரிக்கமுடியாத நகைச்சுவை..

Image result for death crying laughing modern arts
ன்கு பரிச்சயமானவரின் 
அகால மறைவு 
க்ஷணங்கள் சில 
துணுக்குற வைத்து.. 
பிற்பாடாக வருகிறது 
ஒரு ஆசுவாசம்.. 

எவருக்கும் இது 
புது நிகழ்வன்று.. 
ஏதோ ஒரு தருவாயில் 
எல்லாருக்குமான 
திடுக்கிடல்.. 
எல்லாருக்குமான 
ஆசுவாசம் .. 

மறுபடி உடன்கட்டைமுறை 
பிரகடனப் படுத்தப்படும் 
பட்சத்தில் ..
சென்ற பிறப்பில் 
அவ்விதம் மாண்ட 
இப்பிறவிப் பெண்டிர் கூட 
துடைப்பமும் காலணியும் 
உயர்த்திப் போர்க்குரல் 
எழுப்பக் கூடும்.. !!

எல்லாருக்கும் தெரியும் 
துயரம் சில நாட்கள் என்று.. 
அதன்பிறகு அவ்வப்போது 
வருகிற இறந்தவர் ஞாபகத்தை...
சற்றே அழுது .. 
கண்ணீரில் சுண்டி எரிந்து விடலாம்...!

துயர் சில நாட்களே 
என்று புரிந்து விடுகிற நமக்கு 

சில நொடிகளே 
நீர்க் குமிழ் எனப் 
பருத்து வெடித்து விடக்கூடியவை 
சந்தோஷங்கள் என்பன 
என்பதும் தெரியாமல் இல்லை...!

அடர்த்திமிகு மரணத்தின் முன்னர் 
மிக சுலபத்தில் நீர்த்து 
விடும் தன்மை கொண்ட 
இந்த வாழ்வின் மீதான பிரக்ஞை 
மிகவும் அடர்த்தியாயிருப்பது 
முரண்பட்ட .. மற்றும் 
சிரிக்கமுடியாத நகைச்சுவையாக 
நமக்குள் அமிழ்ந்து கிடக்கிறது.. !!
Laugh Now Cry Later Clown Masks Tattoo Design

Sunday, September 11, 2016

பிண ஊர்வலப் பூக்கள்..

Image result for LOVE FAILURE HEARTS
ன்னை மறப்பதற்கான  
பயிற்றுவிப்பில் இருக்கிறேன் 
என் இதயத்துக்கு...!

ஒரு போலீஸ் நாய்போல 
உன் நினைவினை 
மோப்பம் பிடித்துக் 
குரைத்துக் கொண்டே 
கிடக்கிறது எந்நேரமும்.. !!

எனது வெற்றிகரமான 
ஒருதலைக் காதல் 
என்றோ காலாவதியாகி 
விட்டதென்கிற தீர்மானத்தில் 
அமைதியாகி விட்டிருந்த 
அதே இதய நாய்.. , 
எதற்காக மறுபடி 
உமது சுவடுகள் குறித்த 
குமுறலில் குரைக்க வேண்டும் 
என்பதே கேள்வி...!

நாயெனக் குரைக்கிற 
அதே இதயம் தான் 
அப்படியொரு அறிவுப் பூர்வக் 
கேள்வியையும் தொடுக்கிறது...!

ஒரு பரிமாணத்தில் 
ஏங்கியும் , மற்றொரு 
பரிமாணத்தில் ஆறுதலளித்தும் 
அந்நியன் விக்ரம் 
போன்று ஸ்பிலிட்டெட் 
பெர்சனாலிட்டி கொண்ட 
காதலில் தோற்ற 
கோடிக் கணக்கான 
இதயங்கள் இந்தப் 
பிரபஞ்சமெங்கிலும் 
சிதறிக் கிடக்கின்றன 
பிண ஊர்வலப் பூக்கள் போல.. !!
Image result for LOVE FAILURE HEARTS

Wednesday, August 17, 2016

முரண்களின் ராஜ்ஜியம்..

முரண்களினூடே 
இயங்கப் பெறுகிறது 
வாழ்க்கை.. 
யாதொரு ப்ரத்யேகத் 
தன்மையிலுமாக 
நிலைத்திருப்பதற்கான 
சாத்தியக் கூறுகளற்ற 
குழப்பங்களைப் பற்றிக் கொண்டே 
நீள்கிறது காலம்.. !

பற்றற்றிருப்பதற்கான லாவகம் 
பிடிபட்ட தெளிவில் இருக்கையிலேயே 
பொருள்கள் மீதான 
பேராவல் பீறிடுகிறது.. 

மௌனத்தை மய்யப் படுத்த 
முனைகையிலேயே
ஏதேனும் முணுமுணுக்க 
வாய் பிரயத்தனிக்கிறது.. 

வேசி வீட்டு பூஜையறையில் 
வருகிற பக்தி 
கோவிலில் அவளைப்
பார்த்துவிட நேர்ந்த போது
வராமல் மறுதலித்து விட்டது.. !

மரணத்திற்கு எதிர்மறையான 
இந்த வாழ்க்கை.. 
மரணத்துடன் ஒப்பிடுகிற
தகுதியையே இழந்து 
நிற்பதாகத் தோன்றுகிறது.. 

மரணம் தெளிவானது .. 
குழப்பமற்றது.. 

புதைப்பதா எரிப்பதா 
என்கிற முரண்பட்ட 
சடங்குகளுக்குரிய குழப்பங்கள் 
வாழ்பவர்களின் பிரச்சினை மட்டுமே.. !

Friday, April 15, 2016

தோல்வி..........

 

தோல்விகளுக்கும் 
எனக்குமான சிநேகிதம் 
'தாயும் புள்ளையும்' போல.. 

அதனிடையே கிஞ்சிற்று 
அவ்வப்போது எட்டிப் 
பார்க்கிற வெற்றிகள் என்பன 
'புற்றுப் பாம்பு' போல.. 

மடியினில் சாய்த்து 
தாய் அக்கறையோடு 
உறங்க வைப்பன தோல்விகள்.. 

தட்டி எழுப்பி 
உறக்கம் கலைத்து 
தடுமாறச் செய்வன வெற்றிகள்.. 

பழக்கமான சொந்தங்கள் போல 
பரஸ்பரம் ஆரத் தழுவச் 
செய்கின்ற தோல்விகள்.. 

பணக்காரத் திமிரோடு 
பாராமுகமாய் அலட்டிக் 
கொள்கிற வெற்றிகள்.. 

படுதோல்விக் கற்கள் வீசி 
இந்த வெற்றி நாய்களை 
விரட்டியடிப்பதில் நான் 
கைதேர்ந்தவனாக்கும்.. !!

Tuesday, April 5, 2016

பிறவி...


Image result for butterfly with a man
சிறகுகள் பிய்ந்து 
உதிர்ந்து சீக்கிரமே 
காணாமல் போனாலும் 
நான் ஏன் 
பட்டாம் பூச்சியாகப் 
பிறக்காமல் போனேன் 
என்கிற வருத்தம் 
தவிர்க்க முடியவில்லை.. 

இந்த ஆறாம் 
அறிவுள்ள மனித 
உடல் தவிர்த்து 
பிற எந்த உடலாயினும் 
அதனில் தரித்து  
இந்தப் பிரபஞ்சத்தை 
தரிசித்திருக்கலாம் 
என்கிற அங்கலாய்ப்புக்கு
அருகதையாகிறது 
இந்த மனிதப் பிறப்பு.. 

வசந்த அனுபவங்களும் 
கசந்த அனுபவங்களும் 
வாழ்நாள் நெடுக 
இழைந்தவாறே 
பீடுநடை போடுகின்றன 
நம்மோடு என்றாலும்-- 

மாற்றுப் பிறப்புக்கு 
ஏங்குகிற சுகத்துக்காகவே 


மனிதப் பிறப்பெடுத்துப்
பார்க்கலாம் 
பட்டாம்பூச்சி உட்பட...!!
Image result for butterfly with a man

Sunday, March 27, 2016

புதைகுழிப் பிராந்தியங்கள்.

Arundhati-backview-mallu-actress
நீ 
அற்ற இந்தப் 
பிராந்தியத்தின் 
வெறுமை .. 
கற்பனை செய்வதற்கே 
கொடியதாக இருக்கிறது.. 

இப்போது தான் 
இந்தப் பிராந்தியமே 
நிம்மதிப் பெருமூச்சு 
விடுகிறது.. 

அதிகாலை மார்கழியாய் 
புரிபடுகிறது.. 
கோடையின் வெம்மை..!

கங்கையாய் நனைக்கிறது.. 
கானல் சிற்றலைகள் ..!!

நீ எழுந்து போய் 
விடக்கூடாதென்று 
பிரார்த்தனை செய்கிறது 
இந்தப் பிராந்தியம். 

உன்னை உள்வாங்கிக் 
கொள்கிற புதைகுழிகள் 
உருவாகக் கூடுமோ 
என்று அரற்றத் 
துவங்கிற்று மனது.. 


எதற்கிந்தப் பதற்றம் 
என்றுன் கண்கள் 
திரும்பிக் கேட்கின்றன 
என்னை.. 

பிராந்திய வில்லன் 
குறித்த எமது 
ஆற்றாமையை விளித்தேன் .. 

புதைகுழிக்குள் 
நீ வர மறுப்பாயோ 
என்னோடு? 
என்று நீ 
கேட்ட போது தான் 
'அட.. அதானே'
என்று அமைதியானது 
என் மனது.. !!


Friday, February 12, 2016

கடவுளும் நானும்..



ன்னை வசீகரித்து 
மூர்ச்சையாக்கினாய். 
கோவிலுக்கு வந்த பெண்களில் 
கவிதை புனைவதற்கான
அனைத்து யோக்யதைகளையும் 
புதைத்து வைத்திருந்தன
உமது அவயவங்கள் மட்டுமே.. !

கர்ப்பகிரக சுவாமி அலங்காரம் 
எமது பிரக்ஞையில் ஏனோ 
குவியவே இல்லை.. 
நமஸ்கரிக்கிற உமது 
கைவிரல்களும் 
பிரார்த்தனையில் முனகும் 
உமது உதடுகளுமே
திரையிடப் படாத 
தரிசனமாயிற்று எனக்கு.. !

  உம்மைப் பார்த்துப்
பிரார்த்திக்க வேண்டிய தேவை 
சுவாமிக்கு இருந்தது போலவே 
எனக்குத் தோன்றியது.. 
ஆனால் நீ சுவாமி பார்த்து
உருகிப் பிரார்த்தித்தது 
முரணாய்ப் புரிந்தது எனக்கு.. !!

ஆனால் சுவாமியிடம் 
பிரார்த்தித்தே தீரவேண்டிய 
பல இன்னல்களில் மூழ்கிக் 
கிடக்கிற நான் 
சுவாமி மறந்து உன்னில் 
லயித்து உன்னைப் 
பிரார்த்தித்தமைக்காக 
நிச்சயம் சுவாமி 
என்னை தண்டிக்க 
வாய்ப்பில்லை  
என்கிற இந்த 
உத்திரவாதத்துக்குக் காரணம் ..

என்னை கவனிக்காமல்  
என்போலவே சுவாமியும் 
"உன்னை மட்டுமே 
தரிசித்துக் 
கொண்டிருந்திருக்கக்  கூடும் "
 என்பதாலுமே  கூட 
இருந்திருக்கலாம்?..!!

[--இன்னொன்றும் கூட எனக்குத் தோன்றுகிறது.. தன்னைத் தவிர்த்து உன்னைப் பார்த்தமைக்காக ஸ்வாமி  எம்மை தண்டிப்பதாவது?.. இன்னும் கூட சேர்த்து எமக்கு அருள் பாலிப்பாரோ ? ஹஹ.. ]





Monday, January 25, 2016

கஞ்சன் டைரியில்..

முதற்கண் 
பிச்சை இடுபவர்கள் 
நிறுத்த வேண்டும்.. 
பிச்சைக் காரர்கள் 
தானாகக் காணாமல் 
போவார்கள்.. 
உழைக்கத் துவங்கி 
காசு சேர்ப்பார்கள்.. 

உழைத்து நாம் 
கொடுக்கிற காசு 
அவர்களை 
உழைக்காமல் 
சம்பாதிக்க வைக்கிறது..!

தானப் பிரபுவாக 
நம்மைத் தகுதி 
உயர்த்திக் காண்பிக்கிற 
காசு.. 
திருவோடு சேர்ந்ததும் 
நம்மை சபிக்கத் 
துவங்கும் ?..

'கோவில் உண்டியலில் 
சேர்ப்பான்' என்று 
கருதினாலோ ...

திருவோட்டில் சேர்த்து 
பிச்சைக்காரன் பீடியூத 
உதவுகிறானே!.. 

கவலை வேண்டாம் 
திருவோட்டுக் காசே.. 
பீடி விற்கிற 
பெட்டிக் கடைக்காரன் 
நிச்சயம் உன்னை 
உண்டியலில் சேர்ப்பான்...!!


Thursday, January 21, 2016

சுடும் நிழல்..

எனது நிழல்
உனது மார்பகப் 
பிராந்தியத்தில் 
விழுந்தமைக்காக 
அத்தனை சந்தோஷத்தில் 
அனாவசியமாக 
இருந்துவிட்டேன்.. !

உமது நிர்வாணத்தை 
சுலபத்தில் தரிசிக்கிற 
புருஷ வாய்ப்பு 
கிட்டுவது அரிது 
என்கிற 
அவநம்பிக்கையின் 
நிமித்தம் என்னில் 
பிறந்த கிறக்கமது ..!!

இத்தனைக்கும் 
எனது நிழல் என்பது 
அந்தி சூரியனின் 
வார்ப்பு.. 
அதனையும் முகில் 
அந்த ஷணத்தில் 
மறைத்திருக்கும் 
பட்சத்தில் - எமது 
நிழலுக்கு உமது  
மார்பகங்களில் 
படர சந்தர்ப்பம் 
அமைந்திருக்காது..!!

என்  நிழல் 
மீதான எனது 
பொறாமை 
எனக்கே என்னைக் 
கேவலமாக 
அடையாளப் படுத்திற்று.!!

பின்னொரு நாளில் 
நீ மார்பகப் புற்றில் 
அவதியுறும் 
தகவலறிந்து 
துடித்துப் போனேன்.. 

அதற்கான 
முழு சந்தேகமும் 
என்னுடைய நிழலின் 
மீது படியத் துவங்கிற்று 
அந்தத் தருணம் முதல்..!!

Wednesday, October 21, 2015

தேய்மானம்..

சுற்றிலுமாக 
ஆச்சர்யங்கள் 
விரிந்து பறந்து 
கிடக்க.. 

விரல் வைத்து வைத்து 
தேய்ந்தது என் மூக்கு.. 

பிளந்து பிளந்து 
மூட மறந்த வாய்... 
அகல விழித்து 
இமைகள் இழந்த 
கண்கள்.. 

எனது அவயவச் 
சிதைவுகள் 
என்னை 
ஆச்சர்யமூட்டும் 
வஸ்துக்களுக்குப் 
பொருட்டன்று..!

இன்னும் இன்னும் 
நான் வியந்து விரியவும் 
வெடித்துச் சிதறவுமே 
அதன் செயற்பாடுகள் 
அனைத்தும்...

நான் மரணித்த 
பிறகும் கூட 
எனது ஆன்மாவிற்கு 
சொர்க்கத்தை 
அறிமுகம் செய்து 
அலட்டிக் கொண்டன 
எம்மைப் 
புடை சூழ்ந்த 
ஆச்சர்ய வெறி 
பிடித்த சூழல்கள்.. !!

Tuesday, September 22, 2015

ர "களைகள்"....

ராவணனை 
ஹிட்லரை 
கோட்சேவை 
நல்லவர்கள் என்று 
சூளுரைக்கிற 
கெட்டவர்கள் 
இருக்கத் தான் 
இருக்கிறார்கள்.. 

ஆனால் 
காந்தியைக் கூட 
அவதூறு சொல்கிற 
ஹிம்ஸாவாதிகள் 
குறித்துத் தான் 
நமது கவலைகள் 
யாவும்.. 

பிச்சை 
எடுப்பதை 
ஊக்குவிக்கத் 
தெரிந்தவர்களுக்கு 
தர்மம் குறித்த 
பிரக்ஞை 
எங்கனம் இருக்கப்
போகிறது ?

நீர்நிலையின் 
அமைதியை 
சலனப் படுத்தி 
சிற்றலை நிகழ்த்தும் 
ஆவல் தென்றலுக்குக்  
கூட வந்து விடுகிறது..!

பிடுங்கி வீசவேண்டிய 
களைகள் 
வழிநெடுக வாழ்வுநெடுக 
வீற்றிருந்தாலும் 
நல்லவைகளை 
அடையாளப் படுத்த 
அவசியமாகி விடுகிற 
வினோதம் 
சுவாரஸ்யமே..!!

Sunday, September 20, 2015

வாஞ்சை..

சிக்கு நான் 
பிஸ்கட் சாப்பிட்டுக் 
கொண்டிருந்த போது.. 
வாஞ்சையோடு 
வாலாட்டிக் கொண்டு 
வந்து நிற்கிறது
சென்ற மாதம் என்னைக் 
கடித்து .... தொப்புளைச் 
சுற்றி ஊசிகள் போடச் 
செய்த அந்த 
காவி வண்ணத் தெருநாய்.. 

பற்பல பணி நிமித்தங்கள் 
நடுவே 
நாய்க்கடி மருத்துவத்தையும் 
கவனித்தாகவேண்டிய 
அவஸ்தைகளும் சூழ்ந்து 
எமது சூழலை 
இம்ஸிக்கச் செய்த 
நாயை .. 
தக்க தருணம் பார்த்து 
கழுத்தறுக்க என் 
மனிதபுத்தி ஆயத்தமாயிற்று.. 

வசமாக இன்று 
மாட்டிக் கொண்டதாக 
பீறிட்டுச் சிலிர்த்தது மனது.. 

'கடிச்சுட்டு வெக்கமில்லாம 
பிஸ்கட்டுக்கு வந்து வேற 
வாலாட்டுற நீ?' 
என்று முனகின உதடுகள்.. 

சப்தமில்லாமல் 
பின்புறக் கதவைத் 
திறந்து .. கைக்குச் சிக்கிய 
இரும்புத் தடி ஒன்றை  
எடுத்துக் கொண்டு 
நாய் நின்று கொண்டிருந்த 
முன்வாசலுக்கு வந்தேன்.. 

நான் பிஸ்கட் எடுக்க 
உள்ளே சென்றிருப்பதாகக் 
கருதி அது இன்னும் 
வாலை ஆட்டியவண்ணமே 
நின்றிருந்ததைப் பார்க்கையில் 

-உடனடியாக 
இரும்புத் தடியை கீழே போட்டுவிட்டு 
கையிலிருந்த 4 பிஸ்கட்டுகளை 
மட்டுமே போட முடிந்தது.. 

என்னைக் கடித்த வாய்
பிஸ்கட்டில் லயித்திருக்க 
அதன் நெற்றியை 
நீவுவதில் 
எனது வாஞ்சையும்  
நாயைப் போன்றே 
சிறந்து விளங்கிற்று.. !!

Tuesday, July 28, 2015

பொய்யான நிஜங்கள்..

ரிதார ஒப்பனைகளைக் 
காட்டிலும் 
தத்ரூப யதார்த்தங்கள் 
மிக வசீகரிப்பவை.. 

எனிலும் 

நிர்வாண யதார்த்தங்களுக்கு 
ஆடை ஒப்பனைகள் 
தவிர்ப்பதற்கில்லை..!

தனித்திருக்கும் 
நமது அறைக் கண்ணாடி 
ரகசியங்களாக 
அவைகளை நிவர்த்தி செய்வோம்..!!

குறிவைத்து 
இலக்கு நிர்ணயித்து 
தவறுகிற குறிகள் 
மிக இம்சை தருபவை..!

அனிச்சையான வீச்சில் 
தெறித்துப் பிளவு படுகிற 
அந்த விபத்து 
மிகவும் சுவாரஸ்யமானது..!!


Wednesday, July 22, 2015

கரைதல்..



ன்னில் ஊடுருவும் 
சாத்யக் கூறுகளை யோசிக்கிறேன்..
என்னிலேயே பிறந்தநாள் தொட்டு 
இருந்திருந்து அலுத்துப் போயிற்று 
எனக்கு.. 

உமது அவயவத்தின் ஏதோ 
ஒரு பிராந்தியமாக என்னால் 
வீற்றிருக்க முடியாமற்போனது  
எமது துரதிர்ஷ்டம் ...

கண்கள் மாதிரி உடனே 
ஸ்பரிசிக்கிற யோக்யதை 
கைகளுக்குக் கிடைக்காத 
சாபம் .. உன்னைத் தொடுகையில் 
தீரத் தான் தீரும்.. 

உன்னைத் தொடுகையில் 
உன்னில் நானும் 
கரைந்துவிடுவேன் என்பது 
எனது உத்தேசம் .. 
விடவேண்டும் என்பது  
எனது பிரார்த்தனை.. 

மறுபடி நானாக அற்று 
நீயே என்றாகி 
நிறைவு வரைக்கும் 
இருந்து சாகும் எண்ணம் எனக்கு..!!

Monday, April 20, 2015

இன்னொரு பாப்பா..

என் மகள் 
ஸ்னேகாவுக்கு 
முந்தைய 3
பெண்குழந்தைகள் 
லாவண்யா 
ஸ்ருதி
ப்ரீத்தி 
இருக்கின்றனர் எனிலும் 
இன்னொரு தம்பிப் பாப்பாவோ 
தங்கச்சிப் பாப்பாவோ 
கொஞ்சவும் விளையாடவும் 
வேண்டுமென்று அவ்வப்போது 
 அடம் பிடிக்கையில் 
எனக்கும் மனைவிக்கும் 
அழுகையும் சிரிப்பும்
 சேர்ந்து வரும்.. 
3 மாதக் குழந்தையாக 
ஸ்நேகாவை 
தத்தெடுத்து வந்த வரலாற்றை 
பின்னொரு நாளில் 
தெரிவிக்கக் காத்திருக்கிறோம்..
இந்த ஐந்தாவது வயதில் 
பிடிக்கிற அடத்தை மறக்கடிக்க 
நீலம் ரோஸ் கலந்த நிறத்தில் 
சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.. 
சிரித்தவாறு அழுத்திக்  
கொண்டு வலம் வருகிறாள்.. 

அடிக்கடி  இறங்கி 
தம்பியை உட்காரவைக்க 
தயார் நிலையிலிருப்பதாக  
கேரியரைக் காண்பிக்கிறாள்.. !!

Friday, April 10, 2015

அந்தி...................

முக வரவேற்பு 
அறையில் 
வயோதிகச் சுருக்கங்களை
மனசே இல்லாமல் 
வரவேற்க நிற்கிறது 
இளமைப் பொலிவு.. 

அழையா விருந்தாளியாக 
வெட்கமே அற்று 
வருகிறது முதுமை.. 

பௌருஷம் பருத்து 
தேஜஸாகக் காணப் பட்ட 
அந்த அழகிய வெள்ளாமை 
முகத்தின் நடுவே 
ஊடுபயிராக.. இல்லை இல்லை.. 
களையாகத் துவங்கி விட்டன 
பாழ் சுருக்கங்கள்.. 


எத்தனையோ களிம்புகளைத் 
தடவி.. பிடுங்கி எறியப் 
பிரயத்தனித்தாயிற்று..!

சற்றே புரையோடியதாக 
ஓர் மாயையைத் தோற்றுவித்துவிட்டு 
மறுபடி அதன் ஆளுமையை 
வீறு கொண்டு காண்பிக்கின்றன 
சுருக்கங்கள்.. 

எத்தனை விரட்டினாலும் 
நன்றியுள்ள நாய் போன்று 
வந்து வந்து நக்குகின்றன 
முதுமை நம்மை.. 

அடர்ந்த கருமுடியினுள் 
திடீரென்று ஒரு நாள் 
அகப்பட்ட ஒற்றை 
வெள்ளைமுடி 
அன்றெல்லாம் அதிசயமாக 
உணரப் பட்டு 
அதே மயிரிழையில் கவலையும் 
மனசைத் தொற்றிக் கொண்டு.. 

பிறகு வெகுவிரைவிலேயே 
நரைத்த முடிகள் நடுவே 
கறுப்புமுடி கண்டு 
ஆறுதலடைகிற சுலபத்திற்கு 
வந்துவிட முடிகிறது நம்மால்.. !!

Tuesday, February 10, 2015

சம்பந்தமில்லாதவர்கள்..

தாயினிடத்து 
சிப்பிக்குள் முத்து போல 
ஆரோக்கியமாக 
பத்திரப் பட்டுக் கிடந்தோம்.. 

வெளி வந்த 

சில வருடங்களில்.. 

நோயெனும் 

தீவிரவாதியிடம் 
சிக்கிய பிணைக் கைதிகளாக 
மாறின நம் உடல்கள்.. !!

அல் -கொய்தா போன்ற 

ஆஸ்பத்திரிகளும் 
ஒசாமா பின்லேடன் போன்ற 
டாக்டர்களும் 
நோய்களின் தோழர்களே அன்றி 
ஆரோக்கியத்தின் பாதுகாவலர்களா 
என்ன??

வலி நிரம்பிய வாழ்க்கைகள் 

கைநழுவப் பார்த்தாலும் 
இறுகப் பற்றி வாழ முனைபவர்கள்
மனிதர்கள்..  
வலியற்ற மரணங்கள் 
ஆலிங்கணம் செய்ய வந்தாலும் 
புறந்தள்ளும் அவசரகதியில் தான் 
நம் அனிச்சை செயல்கள் அனைத்தும்....!!

குண்டுவைத்துத் தகர்க்கிற  

துர்க்குணம் நிரம்பியவன் 
கால்களைப் பற்றியேனும்  
வாழ்ந்து விடுமளவுக்கு 
இந்த வாழ்க்கை சுவாரஸ்யப் 
பட்டுப் போகிறது எல்லாருக்கும்.. 

நித்தரையினூடே இழைய வருகிற 

இயல்பான மரணத்தைக் கூட  
உடனடியாக அடையாளம் கண்டுணர்ந்து 
துப்புரவாக்கும் துரிதம் நம்மில்.. 

ஆனால் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் 

அற்று நம்மை அள்ளிப் போட்டுக் 
கொண்டு போய்  விடும் ஒரு எதிர்பாரா 
தருவாயில் மரணம்... 

"இஸ்மாயிலுக்குத்  தர வேண்டிய 
ஐம்பதாயிரம் ஆகட்டும் 
ஆறுமுகம் நமக்குத் தரவேண்டிய 
அறுபதாயிரம் ஆகட்டும் 
ஜோசப் மனைவி இசபெல்லா 
அடகுக்கு வைத்திருந்த 
தோடாகட்டும்  "
மேற்கொண்டு 
எந்தக் கணக்கு வழக்குகளும் 
செத்தவனுக்கு இனி சம்பந்தமில்லை.. !!



Friday, January 2, 2015

அசாத்யப் பிரியன்..

முத்தெடுக்க 
நெருப்பில் மூழ்கி 
தீக் கங்கெடுக்க 
கடலுள் மூழ்குகிறேன்.. 

ஆம்புலன்ஸ் ஏறி 
ரஜினி படம் முதல் ஷோ 
போகிறேன்.. 
மாரடைப்பு வந்ததற்கு 
மாட்டுவண்டி ஏறி 
ஆசுபத்திரி போகிறேன்.. 

பம்பர் குலுக்கலில்  
பரிசு கிடைத்தும் 
தற்கொலைக்கு 
திட்டம் போடுகிறேன்.. 

பாதாளத்துள் 
புதையுண்டு போய் 
பிராணவாயு தேடுகிறேன்.. 

--இதையெல்லாம் விட 
பெண்ணே.. 
உமது காதலை எதிர்பார்த்து 
கவிதை புனைகிறேன்..!!

Tuesday, December 16, 2014

ஒரு விவசாயி எழுதிய காதல் கவிதை..

என் கன்னக் காடுகளில் 
உன் முத்தமழை.. 
என் சேற்றுக் கன்னங்களில் 
உன் முத்தத் தாமரைகள்... 
என் தேனடைக் கன்னங்களில் 
உன் முத்தத் தேனீக்கள்.. !!

மழை பெய்த என் 
கன்னக் காடுகளில் 
உமது முத்த வெள்ளாமை.. !

பிறகு--
எனது வெள்ளாமைக் கன்னங்களில் 
ஊடுபயிராய் உமது முத்தங்கள்.. 

இன்னும் பிறகு---
பிடுங்கி எறியப் படவேண்டிய 
களைகளாக உமது முத்தங்கள்... !!

--மனச் சலிப்பை நிகழ்த்துகிற 
சுரப்பிகளை நீக்கியாக வேண்டும் 
மனிதனிடத்து...!
அல்லவெனில்-
நாறுவதை மணக்கிறதென்பான்.. 
மணப்பதை நாறுகிறதென்பான்.. !!

Friday, November 21, 2014

வெள்ளை இருட்டு..

எங்கெங்கிலும்
வியாபித்திருக்கிற
வெறுமை குறித்த
பிரக்ஞை எவர்க்குமில்லை...

-வீரியமில்லாத
பிரச்னைகள் குறித்து
மிகவும் குவிக்கப்
பட்டுள்ளன எல்லாரது
இதயங்களும்...

கவனிக்கப் படாத
அடர்ந்த இருளினூடே
கிஞ்சிற்று சிதறிக்
கிடக்கிற வெளிச்சம்
குறித்து அதீத கவனம்
எல்லாருக்கும்..

வெளிச்சம்
அணையக் காத்திருக்கிறது..
இருளோடு ஐக்கியமாக
முயல்கிறது..

இருட்டுக்கு ஒன்றும்
வெளிச்சம் தேவைப் படாது.
வெளிச்சம் மட்டுமே
எப்போதும் இருட்டை
விரட்டுகிற முயற்சியிலேயே
இருட்டோடு கரைந்து போகும்.. !!


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...