Showing posts with label கவிதை.... Show all posts
Showing posts with label கவிதை.... Show all posts

Friday, August 10, 2012

பாப்பாவின் குறும்பு


பாப்பாவின் குறும்பு
எனக்கும் மனைவிக்கும்
ரத்தக் கொதிப்பேற்றும்..
முதுகில்அறைந்து விடுவதும்
கால்களுக்குக் கீழே
நறுக்கென்று கிள்ளி
விடுவதும் எங்கள்
தண்டனை முறைகள்...

முதுகில் என் மனைவி
அறைகையில்
அவளை நான் கண்டிக்கிற
தருணங்களும்
கால்களுக்குக் கீழே
நான் கிள்ளுகையில்
மனைவி என்னைக்
கண்டிக்கிற தருணங்களும்
வாய்ப்பதுண்டு...

அவள் அறைவதும்
நான் கிள்ளுவதும்
பரஸ்பரம் ஆட்சேபங்கள்
எதுவுமற்று கூட
அவ்வப்போது நிகழும்..
ரகளையின் சூடு
பாப்பாவிடம் அப்படி
இருக்கும்...

பிந்தைய தருணமொன்றில்
எங்கள் இருவராலும்
கொஞ்சப் படுவாள்..
எங்கள் முத்தங்களில்
ஈரமாகி கசங்கிப் போவாள்...

தீவிர ரகளையில்
இருவரிடமும்
தாக்குதலுக்குட்பட்டு ..
அழுது ஆர்ப்பாட்டம் செய்து
அப்படியே தூங்கிப்
போகிற போது மட்டுமே
நாங்களிருவரும்
அதிகம் கலங்கிப்
போக நேர்கிறது..
ஒவ்வொரு தருவாயிலும் ...!!
!

Thursday, March 29, 2012

கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்..


...

எங்கெங்கிலும்
வியாபித்திருக்கிற
வெறுமை குறித்த
பிரக்ஞை எவர்க்குமில்லை...

-வீரியமில்லாத
பிரச்னைகள் குறித்து
மிகவும் குவிக்கப்
பட்டுள்ளன எல்லாரது
இதயங்களும்...

கவனிக்கப் படாத
அடர்ந்த இருளினூடே
கிஞ்சிற்று சிதறிக்
கிடக்கிற வெளிச்சம்
குறித்து அதீத கவனம்
எல்லாருக்கும்...


மௌனங்கள் கேட்பாரற்றும்
உளறல்கள் மட்டுமே
கவனிக்கப் பட்டும்...
வெற்றுத்தாள்
கண்டுகொள்ளப் படாமல்
கிறுக்கல்கள் மட்டுமே
ஈர்க்கப் பட்டும்...

இப்படியாக
வாழ்க்கை மொத்தமும்
இல்லாதது போல
என்றுமிருக்கிற
எதையும் எவரும்
கவனம் கொள்ளாமல்....

-என்றைக்கும்
இருப்பதாக நினைத்து
கவனிக்கிற எதுவும்
நிலைக்கப் போவதில்லை
என்கிற பிரக்ஞை
எவருக்குமில்லை...                         


சுந்தரவடிவேலு 

Monday, March 19, 2012

ஓர் சபலிஷ்டின் நடைப் பயிற்சி..



அதிகாலை...
வெளிச்சம் வர
இன்னும் சில
நிமிடங்கள்...
எனது நடைப்
பயிற்சி..வழக்கமாகத்
தெருச் சந்துகளில்...

மனம் போன போக்கில்
கால்கள்...
வீட்டின் பக்கம்
ஓர் ஹை ஸ்கூல்
மைதானம் ஹோவென்று
இருந்த போதிலும்..
-தெருக்களில்
நடை போடுகிற
ஆனந்தம் அலாதி..

அந்த ஹை ஸ்கூல்
அலுத்துப் போனதற்குக்
காரணம்-- சுற்றி சுற்றி
அதையே சுற்றியாக
வேண்டிய அறுவை உணர்வு..
அதையும் தாண்டி
என்றேனும் ஹை ஸ்கூல்
மைதானம் சற்று
சுவாரஸ்யப் படுவதுமுண்டு..
ஏனென்று ஆய்ந்து பார்க்கையில்
எவரேனும் தனது
தொப்பை பெருத்த மனைவியை
இழுத்துக் கொண்டு வந்திருக்கக்
கூடும்.. !!

ஆனால் அதைக்
காட்டிலுமாக ஓர் கிறக்கம்
தன் வாசல்களில்
நீர் தெளிக்கிற, கோலமிடுகிற
பெண்டிர் மீது...
குனிந்து அவர்கள் கோலங்களில்
லயித்திருக்கையில்
என் துரிதநடை தளர்வடையும்...!
அவர்களின் கோலத்தில்
நான் லயித்திருப்பேன்
என்கிற பொய்யை நீங்கள்
நம்பி விடவா போகிறீர்கள்??

இப்படி பல வீதிகள்..
சேலை தென்படாத வீதிகள்
எவ்வளவு நேர்த்தியாக
உள்ளபோதிலும் --
அவைகளில் நான்
நடப்பதில்லை...

துவைப்பதற்கென்று
வெளியே போடப்
பட்டுள்ள சரிவான கற்கள்...
அதே சரிவோடு பெண்கள்..
என்னைப் பார்த்ததும்
மாராப்பை அத்தனை
அவசரமாக சீர்ப்
படுத்துவதைப் பார்த்தால்
"நாம் மட்டும் தான்
ராமனில்லையோ"
என்கிற சந்தேகம் பீறிடும்...

பெண்கள் பாவம்..
தன் அதிகாலைக் கடன்களை
செவ்வனே மெனக்கெட்டு
நிறைவேற்றிக் கொண்டிருக்கையில்
--என் போன்ற 
தடிமாடுகள் .. வாக்கிங் போகிறோம்
என்கிற போர்வையில் 
கண்களால் கற்பழித்துக்
கொண்டிருக்கிறோம்..??



Wednesday, November 16, 2011

கனவுகளைத் தின்பவன்...


 


கனவுகளின் 
சம்பவக் கோர்வை
எப்போதும் எனக்கு
பிரம்மிப்பு..
ஓர் தேர்ந்த
திரைக்கதை போல.,
காட்சியமைப்பின்
யதார்த்தம் குலையாமல்
நிதர்சனத்தைக் காட்டிலும்
தெளிவும் பொலிவும்
இழைந்தன கனவுகள்..

யதார்த்த வாழ்க்கை
இங்கே நைந்த சேலையாய்
இருக்க, கனவுகள்
ஆயத்தப் பட்டாடையாய்
ஜ்வலிக்கிறது..

நிஜங்கள் இங்கே 
சுரணை இழந்து கிடக்கையில்
நிழல்கள் தொடு
 உணர்வில் நெளிகிறது...!

சினிமாவில் ஓர் சோகக்
காட்சிக்காக விசும்பிவிசும்பி
கைக் குட்டையை நனைத்தவன்
அப்பா செத்ததுக்கு
கண்ணீருக்குப் பதில்
எச்சிலைத் துப்பி --
கன்னத்தில் இழுக்க வேண்டியாயிற்று...

கற்பனைகளுள்
சுலபமாக அடியாழம் 
சென்று விடமுடிகிற என்னால்
உண்மைகளின் சமதளத்தில்
காலூன்றி நிற்கக் கூட
அனுமதி கிடைக்காத உணர்வு...

வெட்கப்படவும் 
ஒளிந்துகொள்ளவுமே 
அதிகம் பழகியிருக்கிறேன்...
யதார்த்தங்களோடு கைகுலுக்கவோ
புன்னகைத்து வரவேற்கவோ
பால்யம் தொட்டே
அன்னியப்பட்டு நிற்கிறேன்..

எல்லா நண்பர்களின்
வீடுகளுக்கும் அவர்களது
அனுமதியில்லாமலே கூட
சுலபத்தில் பிரவேசிக்க 
முடிகிற என்னால் ---
"நீ இருக்கிறாயா? 
உன் வீடு வரட்டுமா?"
என்று உரிமையில் கேட்கிற
நண்பனிடம் கூட 
வெளியே இருப்பதாக
சொல்லிவிட்டு
மல்லாந்து
படுத்துக் கிடப்பேன் 
என் அறையில்..!!
                                                               
சுந்தரவடிவேலு 

Wednesday, November 9, 2011

திருடனின் நேர்மை...

நகைக்
கடையில் 
ஒன்றரைப் பவுனை
ஒழுங்காகத் 
திருடியவன்
--பெட்டிக்
கடையில்
எள்ளுருண்டை 
திருடி 
பிடிபட்டு
அடி வாங்கினான்...

இதற்கு முன்னர்
என்னென்ன 
திருடி இருக்கிறாய்
என்கிற விசாரணைக்
கேள்வியில்...
நல்ல வேலையாக
"கடலை மிட்டாய்"
என்று மட்டும் சொல்லி
டபாய்த்து விட்டான்...

"ஓடிப் போடா
அற்பத்திருடா "
என்று விரட்டியடிக்கப்
பட்டான்...
அடுத்தநாள் மறுபடி
நகைக் கடையில்
தன் கைவரிசையைக்
காட்டினான் 
நாலு சவரனில் 
சங்கிலி திருடி...

இந்த முறை
எள்ளுருண்டைக்கு 
ரெண்டு ரூபாய் 
கொடுத்துச் சாப்பிட்டான்
அவன்..!!

Friday, January 21, 2011

நிகழ்.....

இறந்த மற்றும்
எதிர் காலங்கள் 
குறித்தான 
பிரக்ஞைகளிலேயே
அநேகம் பேர்களுடைய                         
வாழ்நாட்கள் கழிந்துவிட
நிகழ்கால ஸ்மரணை
சற்றும் அற்றுத்தான் 
வாழ்ந்து வருகிறோம்...

மெய்ஞானிகளும் 
பொய்ஞானிகளுமே கூட
நிகழ்காலத்தில் வாழ்ந்து
பழகச்சொல்கிறார்கள்...
வாழ்வின் மொத்த சாராம்சங்களும்
நிகழ்காலத்திலேயே 
புதைந்துள்ளதாகவும் 
இறந்த மற்றும் எதிர் காலங்கள்
யாவும் மலையளவு மாயை
என்கின்றனர்....

இதனை எல்லாரும் 
பன்முறை கேட்டாயிற்று...
மேற்கொண்டும் எவரேனும்
சொல்கையில் கேட்பதற்கு
சுகமாகவும் கடைபிடிக்க
சுலபமாகவும் தோன்றும்...
அதற்காக 
நேற்றைக்கு டீச்சர் 
கொடுத்த ஹோம் வொர்க்கை
மறக்க முடியுமா...
செய்யாமல் போனால் நாளைக்கு
அடிவாங்குவதை நினைத்து
பயக்காமல் தான் இருக்க முடியுமா?...



.

Saturday, October 9, 2010

காலக்கைதி

விளையாடுகிறது
என்று நினைத்தால்...
--மனசைக்கீறி
ரணப்படுத்தி இருக்கிறது
காலப்பூனை..!

என்னைக் கடித்துக்
குதறப்போவது புரியாமல்
மாரில் அழுத்திக்
கொஞ்சிக்கொண்டிருந்திருக்கிறேன்...          

--பூனை பாவனையில்
புலியாக இருக்கிறது காலம்..,
காலப்புலி...!!

மண்புழுவென 
நினைத்த "காலம்"
பூராணாக ஊர்கிறது....
--சுழற்றும்  சாட்டை
என கருதிய "காலம்"
கொத்தும் பாம்பாக நெளிகிறது..


பூக்களை சொரியுமென்று
நினைத்தால்
முட்களை செருகுகிறது காலம்..
பன்னீர் தெளிப்பதாக
நினைத்தால் எச்சிலை உமிழ்கிறது...

--என் மரணத்தைக்
காரணம் காட்டியாவது
காலத்தை நான்
குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தாமல் விடமாட்டேன்..!!!

Thursday, September 23, 2010

உள்ளொன்று வைத்து...

இன்னொருவன் மனைவி
என்னைப்பார்த்து சிரிப்பதில்
எந்த விபரீதங்களும் இல்லை..
இன்னொருவனைப்பார்த்து
என் மனைவி சிரிப்பதே              
விபரீதமெனக்கு...
--என் மீது எனக்குள்ள
நம்பிக்கை
என் மனைவி மீது
இல்லாதது வினோதமே..

இத்தனைக்கும் நான்
பிறன் மனை புணர்வதற்கான
சந்தர்ப்பம் வாய்க்கையில்
அதனைக்கூட சாதகமாக்கிக்
கொள்கிற ஏற்பாட்டில் இருக்கிறவன்..,
--ஆனால்
தன்னைப்பார்த்து எவனாவது
சிரித்தாலே கூட
அதனை ஓர் புகார் போல
என்னிடம் முறையிடுபவள்
என் மனைவி..
''என் புத்தியை
அவள் தன்மையோடு
ஒப்பீடு செய்கிற யோக்யதையே
கிடையாது'' என்கிற கூற்றில்
ஆணித்தரமாயுள்ளேன்
என்ற போதிலும்
--எவனாவது
பல்லைக் காட்டறான்னு
நீயும்  எங்காச்சும்
இளிச்சுக்கிட்டு நிக்காதே---
என்கிற ஓர் மிரட்டலோடு
வெளிக்கிளம்புவேன்
அனேக சமயங்களில்.....!!!

Sunday, August 29, 2010

சம்பந்தமற்றவை....

விபத்துக்களில்
பிரசவமாகிற மரணங்கள் 
சவக்கிடங்கில் 
சங்கமிக்கின்றன....

கதறிக்கொண்டு 
வருகிற உறவினர்களுக்கு 
சிதைந்த அடையாளங்களோடு சில,
சிரித்த முகங்களோடு கூட சில.....       

பிரசவக்கூடத்தில் 
ஒலிக்கிற சுகமான 
அழுகைக்கும் 
சவக்கூடத்தில் ஒலிக்கிற
வேதனையான ஓலங்களுக்கும்
எந்த சம்பந்தங்களும் இல்லை...

Tuesday, September 8, 2009

இந்தியன் பயங்கள்....

நின்று கொண்டிருக்கிற
பேருந்தைக் கடப்பதென்றால்
சற்று பயக்காமல் இருக்க முடியாது...
எந்த ஜன்னலோரத்தில் எந்தக் கிழவி
வெற்றிலை பாக்கு எச்சில் உமிழப்
போகிறாளோ...
கடைசிக்கு, சிகப்பில்லாமல்
வெறும் எச்சிலைத் துப்பினால் கூட
தேவலாம்...!(?)
ஓர் டுபாக்கூர் மெஸ்ஸில்
பசியோடு பரோட்டாவை வாயில்
வைக்கையில் ,
வாஷ் பேசீனில் , எதாவது ஓர்
விவஸ்தை கெட்ட ஜன்மம்
காரி உமிழ்ந்து வாயை கொப்புளிக்குமோ
என்று பயக்காமல் இருக்க முடியவில்லை...!!
பொண்டாட்டியோடு ஓர்
குறுக்கு வீதியைக் கடக்கையில்
ஒரு இங்கிதம் கெட்ட
நாய், சிறுநீர் கழிக்க ஜிப்பைத்
திறந்து தொலையுமோ என்று
எப்படி சார் பயக்காமல் இருப்பது?
--அதே குறுக்கு வீதியில்
நாம் சிறுநீர் கழித்துக்
கொண்டிருக்கையில் ,
ஏதாவது ஒரு நாய்
தன் பொண்டாட்டியைக்
கூட்டிக் கொண்டு வந்து விடக்கூடாதே
என்று பயக்காமலும் தான்
இருந்து விட முடிகிறதா சாரே?

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...