Showing posts with label ஆதங்கம்..... Show all posts
Showing posts with label ஆதங்கம்..... Show all posts

Wednesday, May 25, 2011

என் அனாமதேய கவிதை ஒன்று....

வண்டு தானே
பூவைக்குடையும்?...
என் நெஞ்சை
பூ இங்கு குடைகிறதே ...
 
சுகமானதே
இந்த முரண்கள்..
புது ஸ்வரமானதே
எந்தன் முணகல்....

புல்நுனி பனித்துளி
காற்றில் சிதறும்
உன் விழிகளின் வீச்சிலோ
பாறை சிதறும்...

ரத்தின சுருக்கமாய்
உன் இடை இருக்கும்
ரொம்பவே பேசிடும்
உன் மார்புகளும்...

வாய் வெடிக்கப்
பேசுபவன் நான்
எப்பொழுதும்...ஆனால்
வார்த்தைகள் வரவில்லையே
உன்னைக்கண்டதும்...

--சினிமா பாட்டெழுதுகிற சிறு முயற்சி... எழுத எழுத என்னவோ வைரமுத்து, வாலி போல ஆகி விட்டதான உணர்ச்சி... இப்படி கிறுக்கிக் கிழித்துப்போட்ட கவிதைகள் ஏராளம் உண்டு... அப்படி கிழித்துப்போட்ட சில ஞாபகங்களை இன்று பிளாகில் ஒட்ட வைத்து சிலிர்த்துக்கொள்வதில் ஓர் அல்ப ஆத்மதிருப்தி..

--இதற்கு மெட்டுப்போடவோ, இட்டுக்கட்டி பாடவோ இளையராஜாவும் ரஹ்மானும் வரப்போவதில்லை என்பது தெரியும்... ஆனபோதிலும் என்ன, படிக்கிற நாமாவது ராகமாக பாடிப்பார்ப்போமா??       

Monday, April 18, 2011

எண்ணுதல் நல்லது வேண்டும்...

வாழ்க்கை மாயை என்கிற பிரக்ஞை அதீதம் பேர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை... சகலமும் சாஸ்வதம் என்கிற தன்னம்பிக்கைகளை வரவேற்போம்... ஆனால் ஐநூறு ஆண்டுகள் வாழ்வோம் என்பதான தன்மையில் மிகப்பலரும் , இந்த வாழ்க்கை குறித்தும் அதனை அனுபவிப்பது குறித்தும் பகீரதப் பிரயத்தனங்களோடு செயல் படுவதை பார்த்தால், பெரிய ஹாஸ்யமாகவும் அதே சமயத்தில் சற்று எரிச்சலாகவும் கூட உணர நேர்கிறது..

தானும் தன சந்ததிகளும் எந்த சிரமங்களும் அற்று இந்த உலக வாழ்வை உன்னதமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்து விட வேண்டும் என்கிற வேட்கை தான் பலரிடம் காணப்படுகிறதே அன்றி, மற்ற சம்பந்தமில்லாத நபர்களும் அதே தன்மையில் லயிக்க வேண்டும் என்கிற ஆசைகளோ ஆர்வங்களோ எவர்வசமும் உள்ளதாக நினைக்க முடியவில்லை... 

பொது நலம் குறித்தும், பிறரும் ஆனந்தம் அடைய வேண்டும் என்கிற மேலான எண்ணங்களும்  ஓர் மனிதனுக்கு இயல்பாக வளர்வதே அந்த சமுதாயம் நாகரீகமாகவும் ஆரோக்யமாகவும் வாழ்வதற்கான சாத்யக்கூறுகள் கொண்டவை என்பது மறுக்க முடியாத உண்மை...

அதுவன்றி தன் மகனும் பேரனும் மாத்திரமே சொகுசு கார்களில் பவனி வரவேண்டும் என்றும், பக்கத்து வீட்டுக்காரன் பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கொண்டு போக வேண்டும் என்று கருதுவது கேவலமான மற்றும் சகிக்கவொண்ணா மனோபாவம் ஆகும்...

தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்கிற மேலான போக்கு காணப்பட வேண்டும்... தன் கக்கூஸை மாத்திரம் டைல்ஸ் ஒட்டி அழகு பார்க்கிற மனசு, பொதுக் கக்கூஸில், பெண்குறி குறித்த ஆபாச சித்திரங்களை வரைந்தும் , படிப்பவர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் விளக்கங்கள் தந்தும் கொண்டாடி கூத்தடிப்பது பொறுக்கித்தனத்தின் உச்சம் மற்றும் தண்டனைக்கு உரிய போக்கும் ஆகும்...


Monday, November 29, 2010

கேவலமானவர்களின் சந்தோஷங்கள்..

{இப்படியாக சிலரை என் வாழ்நாளில் சந்திக்க நேர்ந்ததன் பொருட்டு எனக்குள் இப்படி ஓர் காழ்ப்பு... ஆனால் இப்படியான ஈனத்தமையில் உலவுபவர்களால் தான் நல்லவர்கள் இன்னும் நல்லவர்களாக தெரிகிறார்கள் என்று கருதுகிறேன்.}

உன் உற்சாகம்
எனக்கு வெட்கமாக
இருக்கிறது...
                                                            
ஓர் நாசுக்கில்லாமல்
குதூகலிக்கிறாய்...
உன் உற்சாகத்தைக்
காட்டிலும் உன்
சோபை இன்மை
நாகரீகமாக தெரிகிறது...

இங்கிதமற்ற உன்
பேரானந்தம்
என்னுள் இம்சை
விளைவிக்கிறது...

உன் சிரிப்பைக்காட்டிலும்
ஓர் அறை விட்டு உன்னை
அழவைப்பது
ஆரோக்கியமாகப்
படுகிறது எனக்கு...

உன் சந்தோஷத்தின்
மீதான என்னுடைய கோபம்
எல்லாருக்கும் என்னை
"பயித்தியக்காரன்" போல
தோற்றுவிக்கலாம்..,
--ஆனால் என்னைப்போல
உன்னை அன்றாடம்
தரிசிக்கிற அவஸ்தைகளை
அவர்கள் அனுபவிக்காத போது
அப்படித்தான் தோன்றும்..
இருக்கட்டும்..!!

உன் கால்களுக்கான
பாதணிகளை மாத்திரம்
தேர்ந்தெடுக்கிற சுயநலமி நீ..
--போலியோ பாதிப்பில்
விந்தி நடக்கிறவர்களைப்
பார்த்து, கையில் கூட வாயை
மூடத்தெரியாமல் சிரிக்கிற
உன் போன்ற ஓர் ஜென்மத்தை,
அதன் சிரிப்பை எப்படி
பொறுத்துக்கொள்வது??

Tuesday, October 12, 2010

நேரம் காலம் நல்லா இருந்தா...

எழுதி சம்பாதிக்கிற எண்ணம் கொண்டவர்கள் ... அது சாத்யமாவது அவ்வளவு எளிமையுமல்ல, அவ்வளவு சிரமமும் அல்ல... இப்படி இரண்டு வகையறா கோணங்களிலும் வசீகரமாக உணர வைக்கிற இந்த உலகம் ஆச்சர்யம் நிரம்பியது..
அந்தக்காலகட்டங்களில் எழுதி, எழுத்தாளர்களாக பிரபலமானவர்கள் உண்டு., பிரபலமாகாமலே நன்றாக எழுதியவர்களும் உண்டு..
எது எப்படியான போதிலும் எழுதி எவரும் பெரிய கோடீஸ்வரர்களாக ஆனதாக எந்த செவி வழி செய்திகளும் இல்லை..

ஆனால் இன்றைய சூழல்கள் வேறு... கண்டதையும் எழுதி விரல் நொந்து கிடக்கிற பல எழுத்தாளர்களும்  உண்டு,  சும்மா feather touch செய்து லட்சம் கோடி அள்ளுகிற கில்லாடி எழுத்தாளர்களும் உண்டு.. உதாரணமாக வைரமுத்து, பா.விஜய், என்று நீண்டதொரு பட்டியல் போடலாம்... உடனே அவர்கள் மீதாக அவசரப்பட்டு பொறாமை கொள்வது அறிவீனம்.. அவர்களது இலக்கிய அறிவு, அதனை நாசுக்காக கையாள்கிற திறன், ரசிகர்கள் வியக்கும் வகையில் காட்சிகளில் கற்பனா சக்தியை கொணர்வது..., இப்படி நிறைய திறமைகள் இருக்கும் அவர்களை எல்லாம் ஆய்வு செய்கையில்...

நாமெல்லாம், டுபாக்கூராக நான்கு வார்த்தைகளை தெரிந்து வைத்துக்கொண்டு சுலபத்தில் கவிதை எழுதி விடலாம், பிரபலக் கவிஞர்கள் ஆகி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருப்பது வீண்வேலை...  

விஷய ஞானம், அதை பாங்காக வெளிக்கொணரும் திறமை..... யாவற்றையும் விட நேரம் அதிர்ஷ்டம் எல்லாம் ஒரு சேர கும்மி அடித்தால் நாமும் ஆனந்தக் குலவை கொட்டிக்கொண்டு பிறரை பொறாமை கொள்ள செய்து கொண்டிருக்கலாம்....

Tuesday, October 5, 2010

அனாதையாகும் திறன்கள் ..

எவருடைய டைரிகளை எடுத்தும் எனது சரிதங்களைக் கிறுக்கிக் கொண்டிருந்திருக்கிறேன் எனது பால்ய காலங்களில்...இன்னொருவர் டைரியை பார்ப்பதோ படிப்பதோ அநாகரீகம் என்றிருக்க நான் கொஞ்சமும் இங்கிதமற்று எழுதியிருக்கிறேன்..
நல்ல வேலையாக நான் அப்படி கிறுக்கிய டைரிகள் யாவும் எனது தந்தை  மற்றும் சகோதரிகளின் டைரிகள் என்பதால் வெறும் திட்டு வாங்கியதோடு தப்பித்துக்கொண்டேன்...
விவஸ்தை  ஏதுமற்று என் அன்றாட நிகழ்வுகள் யாவற்றையும் அந்த டைரிகளில் தத்துபித்தென்று எழுதிக்குவித்து விடுவேன்...          

என் எழுதுகிற தன்மை உணர்ந்து அவர்களாவது எனக்கு ஒரு டைரி பரிசாகவோ "இந்தா வச்சுத்தொலை" என்றோ கொடுத்திருக்கலாம்... குறைந்த பட்சம் பழைய பாடாவதி டைரி யாவது கொடுத்திருக்கலாம்.. அவ்வளவு டைரி யிலும்  ரெண்டொரு பக்கங்கள் சின்ன வரவு செலவு கணக்குகளோ இன்னபிற அவர்களது படிப்பு சம்பந்தமாக எதாவது நாலு பக்கங்கள் மாத்திரம் தான் எழுதி இருப்பார்கள்.. 

இதை நான் ஏன் இவ்வளவு மெனக்கெட்டு சொல்ல வருகிறேன் என்றால், ஏதேனும் எழுதுகிற திறனுள்ள ஒரு நபரை அந்தக்குடும்பத்தில் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டுமேயன்றி அதனை மதியாமலும், பழித்துக்கொண்டும் இருப்பது எந்த விதத்தில் ஆரோக்கியம் என்பது எனக்குப்புரியவில்லை... 

எழுதுகிற திறன் மட்டும் அல்ல, வேறு வகையறா சார்ந்த திறன்கள் ஏதேனும் ஒரு நபருக்கு இருப்பினும் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிற பாங்கு வேண்டும், அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு.. திறன்களை அடையாளம் காணும் திறனற்று இருப்பவர்களைக்கூட மன்னிக்கலாம், ஆனால் அது தெரிந்தும் வெறுமனே இருப்பவர்களை என்ன செய்வது....இப்படித்தான் பல குடும்பங்களில் பல கலைகள் அனாதையாக அரங்கேற முடியாத அவஸ்தைகளோடும் மௌனமான வலிகளோடும் உயிருடன் புதையுண்ட வண்ணம் உள்ளன...

Sunday, November 1, 2009

திருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...

வருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி...
சொன்னது சொன்னது போலவே நடக்கிறது.. பிரச்சினை என்னவானாலும் அதற்கு அற்புதமான தீர்வுகளை அள்ளி வழங்குகிறார் அந்தக்கருப்பராயன் கோவில் பூசாரி..
நினைத்த காரியம் பலித்து விட்டால் மீண்டும் அதே கோவில் சென்று நாம் விரும்பிய காணிக்கைகளை பரிசளித்து விட்டு வரலாம்...
மேற்சொன்ன யாவும் செவி வழி செய்திகள்.. நாமும் தான் பிறந்த நாள் தொட்டு பிரச்சினைகளுடன் தானே இருக்கிறோம்.. ஒரு முறை போய்விட்டு வருவோமே என்கிற விதமாக ரெண்டொரு நாட்கள் முன்னர் சென்று வந்தேன்...

சில இடங்களில் ஆன்மிகம் எவ்வளவு கேவலப்பட்டுப்போய் இருக்கிறது என்பதற்கு பெரிய உதாரணமாய் இருந்தது அந்த இடமும் அங்கு நிகழ்கிற கூத்துக்களும்..

குறி சொல்கிற அந்தப்பூசாரி சரமாரியாக பீர் பிராந்தி ஒயின் ரம் என்று நம் முன்னாடியே ஊற்றி ஊற்றி தண்ணீர் கூட கலக்காமல் அப்படியே ராவாக அடிக்கிறார்.. போதையில் பிதற்ற ஆரம்பிக்கிறார்... குறி சொல்ல அவர் தேர்ந்தெடுக்கிற நபர் படுகிற அனைத்த துன்பங்களையும் சொல்கிறார்.. அவைகள் கூடிய விரைவில் கருப்பராயனால் தீர்த்து வைக்கப்படும் என்கிறார். குறி கேட்ட அந்த நபர் அப்படியே புல்லரித்துப்போய் விடுகிறார்.
அங்கே வருகிற முக்கால்வாசி பக்தர்கள் நேர்த்திக்கடனாக அனைத்து வகை மதுபானங்களையும் பரிசாக அளிக்கின்றனர்.. அந்தப்பூசாரியும் யாவற்றையும் பாக் செய்து மீண்டும் ஒயின் கடைகளுக்கே சப்ளை செய்வதாகக்கேள்வி... அது போக பணம் .. தங்கம் வெள்ளி என்று வேறு பரிசளிக்கிறார்கள் மக்கள்...

ஒரு வேளை சோற்றை உலையில் கொதிக்க வைக்கவே எவ்வளவோ பேர்கள் படாத பாடு படுகிற இந்தக்கால கட்டங்களில் இப்படி மிதப்பாக சுலபத்தில் லட்சங்களும் கோடிகளும் குவிக்கிற புத்திசாலிகள் புற்றீசல்கள் போல முளைத்த வண்ணம் தான் உள்ளனர்...

இந்தத் திறன்கள் நம் போன்ற எளிய மக்களுக்கு கை கூடுவதில்லை... ஆனால், இப்படியான பித்தலாட்ட நபர்களிடம் ஏமாந்து நாசமாய் போவதற்கு மட்டும் கை கூடுகிறது..

மாடாக உழைக்கத்தெரிந்தவர்கள் கூட இந்த மாதிரியான சோம்பேறிகளிடம் சிக்கி சீரழிகிற கொடுமை மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

இங்கு சென்று திரும்பியது நரத்திலிருந்து மீண்டது போல உள்ளது.. நாம் வந்து வாழ்கிற இடம் சொர்க்கம் இல்லை என்றாலுமே கூட .. இந்த மாதிரியான அனாசாரமான இடங்களிலிருந்து திரும்பி வருகையில் நம் இடம் கூட சொர்க்கமாகத்தான் தெரிகிறது...



சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...