Friday, December 25, 2009

happy christmas..

முன்பெல்லாம் கிறிஸ்துமஸ் நாளன்று நான் சர்ச் சென்று வருவேன்.. சர்ச் எனக்கு ரொம்பப்பிடிக்கும்.. மிகவும் நீண்ட அதன் விஸ்தாரமான தன்மை எனக்குள் ஓர் தாங்கொணா மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும்.. மண்டியிட்டு அமைதியாக பிரார்த்திக்கிற கிறிஸ்துவர்களும் அவர்களது பக்தி முறைகளும் எனக்கு அலாதி ஆனந்தம்..
ஓர் ஹிந்துவாக கோவில்களை நான் மிகவும் ரசிக்கிறவன் என்றாலும் .. பிற மதம் சார்ந்த விஷயங்களும் என்னை அவ்வப்போது ஈர்க்கும்...
இயேசு ஜனித்தது மற்றும் , முள்கிரீடத்தில் அவரை துன்புறுத்தியதும், மற்றும் ஆணி கொண்டு சிலுவையில் அறைந்த விஷயங்களும் .. அவர்களது கற்பனைக்கேற்ப அலங்காரம் செய்து வைத்திருப்பதை பார்க்கையில் ஓர் பரவசம்..
திருவள்ளுவரின் உருவமோ ஜீசஸின் உருவமோ மனிதர்களின் கற்பனை தான் என்றாலும், அந்தக்கற்பனையே உண்மையைக்காட்டிலும் வீரியம் பொருந்தியதாயும் பொருத்தமானதாகவும் அமைந்து விட்டதென்றே சொல்ல வேண்டும்..

என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

Saturday, December 19, 2009

பணவெறி..

ஆரம்பத்தில் கம்பியுட்டர் மூலமாக நிறைய சம்பாதிக்க முடியும் என்பது போல பற்பலரும் சொல்லக்கேட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்து, பிற்பாடு .. தொண்ணூறு சதவிகிதம் டுபாக்கூர் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்வதற்கு சொந்தமாக ஒரு கணினி தேவைப்படுகிறது.
கணினி குறித்து எந்த அறிவுமே அற்றவர்கள் , இப்படி எல்லாம் வதந்திகளை கிளப்பி, என் போன்ற சில ஜென்மங்களை எப்பாடு பட்டாவது கம்பியூட்டரை வாங்க வைத்து விடுகிறார்கள்..

அப்படி எல்லாம் நெகிழ்வாக சம்பாதிக்கிற சாத்யக்கூறுகள் இல்லை என்பதை அந்த வதந்தி பரப்பிய நபர்களிடம் சொன்னால், "ஓஹோ.. அப்படியா சேதி... நல்ல வேலை .. நாங்க வாங்கலை." என்று வேறு தப்பித்த தன்மையில் புத்திசாலித்தனமாக உரையாடுகிறார்கள்.

அதன் உபயோகம் வேறு விதத்தில் கண்டிப்பாக இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் சொல்வது போல குறுக்கு வழிகளில் பணம் பண்ண முடியும் என்பதெல்லாம் எந்நாளும் நடவாது..
உதாரணத்திற்கு என்னென்னவோ BUX பெயர்கள் எல்லாம் சொல்லி பேபால் , அலெர்ட் பே என்றெல்லாம் கருத்து சொல்கிறார்கள். உள்ளே நுழைந்து விளம்பரங்களை கிளிக் செய்தால் டாலர் பிய்த்துக்கொட்டும் என்றெல்லாம் பிதற்றுகிறார்கள்..
விரல்கள் வலி எடுப்பது தான் மிச்சம்..
எந்த நாயும் எதுவும் தராது..
ஆகவே அவைகளை எல்லாம் விடுத்து எதாவது tally, coral drawing , என்பதெல்லாம் கற்று நம் சுய உழைப்பில் வேண்டுமானால் சம்பாதிக்கலாம். அது தான் ஆத்மதிருப்தியும் கூட...
அப்படி நம் குருட்டு அதிர்ஷ்டம் க்ளிக் செய்து காசு வந்தாலுமே அது மானம் கெட்ட காசு தான்.

ஆனால் மக்கள், நாய் விற்ற காசு குரைக்குமா என்கிற அறிவுப்பூர்வ கேள்விகளை ஸ்டாக் வைத்திருக்கிறார்கள்.

நானுமே கூட பங்குச்சந்தையில் சம்பாதிக்கலாம் என்கிற பேராசையில் ஆன்லைனில் சில பங்குகளை விற்றும் வாங்கியும் intraday செய்கிறேன். அம்பதை வைத்துக்கொண்டு நூற்றைம்பது சம்பாதிக்கிற பேராசையில், இருக்கிற அம்பதையும் இருபத்தைந்தாக்கி , அதுவும் அம்பேல் ஆக இருக்கிறது.. இப்படி தன்மானம் அற்ற வகையில் சம்பாதிப்பது அறிவுப்பூர்வமானவர்களுக்கும் பகுத்தறிவாளிகளுக்குமே கூட சுவாரஸ்யப்பட்டுவிடுகிற விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இன்னும் என் போன்ற முட்டாள்களுக்கு சொல்லவும் வேண்டுமோ?

Sunday, December 13, 2009

போட்டிகள்...

போட்டிகள் எனக்குள் தாங்கொணா வெறிகளையும் கற்பனைகளையும் விதைக்குமேயன்றி அதில் ஈடுபடவோ வெற்றி பெறவோ சாத்யப்படுவதில்லை என்பதை பல போட்டிகளில் பங்குபெற்று உணர்ந்திருக்கிறேன்.
ஆனாலும் போட்டி என்பது ஓர் ஆரோகியமான போக்கு என்பதை அறிவேன். எந்த விதமான தன்மைகளுக்கும் போட்டி என்பது இன்றியமையாத ஒன்றென்றே கருதுகிறேன். போட்டி இல்லாத எந்த விஷயங்களும் ஓர் வீரியமிழந்தே காணக்கூடும். போட்டி என்று வந்த பிறகே அந்த விஷயம் வசீகரமாக மாறும்..

அவ்விதமாகத்தான் தமிழ்மணம் அறிவித்திருக்கிற போட்டியை உணர்கிறேன். என் பங்கிற்கு எனது ரெண்டொரு படைப்புகளை ... அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க .... வெளியிட முனைந்து இருக்கிறேன் என்ற போதிலும் , பல அறிவுப்பூர்வமான எழுத்தாளர்கள் பங்கு பெறுகிற இந்த கோதாவில் என் பங்கேற்பு கேலிக்குரியது என்பதை அனுமானித்தே நான் என் படைப்புகளை வெளியிட நேர்ந்திருக்கிறது...

நன்றி.. வெற்றி பெறக்காத்திருக்கிற புத்திசாலிகளுக்கு என் ADVANCED CONGRATULATIONS.


அன்பு
சுந்தரவடிவேலு....

Monday, December 7, 2009

அல்வாவின் அடிமைகள் நாம்..

மிக அன்னியமாகி விட்ட வசந்தங்கள் குறித்து நானும் வெட்கமில்லாமல் அசை போடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். என்னோடு மிக நெருக்கமாக சிநேகம் வைத்துள்ள சங்கடங்களையும் வேதனைகளையும் அப்புறப்படுத்தவும் தவிர்த்து ஒழிக்கவும் நானும் படாத பாடு படுகிறேன் என்றாலும் அவைகள் வெட்கமில்லாமல் என்னை அணுகி, நான் வசந்தங்களை கற்பனையில் அசை போடுவது போலவே நிஜத்தில் என்னை அவைகள் அசை போடுகின்றன.

எந்த சித்தாந்தங்களுக்கும் கட்டுப்படாமல் வாழ்க்கையானது அதன் போக்கில் ஓர் வகையான சூட்சுமத்தில் பயணித்து நம்மையும் உடன் அழைத்துக்கொண்டு போகிறது, நாம் விருப்பப்பட்டாலும் படாவிட்டாலும்.... போராடியேனும் ஜெயித்தாக வேண்டும் என்கிற தீவிர வெறி ஒரு புறம் இருந்தாலும், காலமும் நேரமும் சில நபர்களுக்கு மாத்திரமே அதிகம் கை கொடுக்கிறது .. பல பேர்களுக்கு அல்வா கொடுத்து விடுகிறது...


இப்படியாக அல்வாவுடனாக சப்புக்கொட்டிக்கொண்டு பலரும் அலைந்து கொண்டிருக்க ... அதுவே கூட நாளடைவில் சுவாரசியப்பட்டும் போகிற கேவலக்கூத்துக்களும் அரங்கேறி விடுகின்றன..


அல்வாவில் மண் ஒட்டியிருந்தாலுமே கூட அதனை தட்டி விட்டோ அல்லது மண்ணுடனாகவோ சாப்பிடவும் பழகிக்கொண்டோம்... எதனையும் ஜீரநித்துப்பழகி விடுகிற நமது பெருந்தன்மை நமக்கே நம் மீது ஓர் பரிதாபம் கலந்த ஆச்சர்யத்தைக் கொடுத்து விடுகிறது...


இப்படி அல்வா தந்த காலம் மனசிறங்கி ஒரு தருணத்தில் கை கொடுக்க முன் வந்தாலுமே கூட அல்வாவுக்கு அடிமைப்பட்ட பலரும் காலம் கொடுக்கிற கையை திருகி எறியக்கூட துணிந்து விடுகிறோம்....



சுந்தரவடிவேலு.. திருப்பூர்.

Saturday, December 5, 2009

பிரக்ஞையுள்ள முகமூடிகள்..

அனிச்சைகளும் விபத்துக்களும்
எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகிற
வினோதம் என் வாழ்வு நெடுக...!

ஜாக்கிரதைகள் மீதான வெறி..
அஜாக்கிரதைகளை
அநாகரீகமாக உணரும் மருட்சி..!!

கடிக்காமல் பறக்கிற
கொசுவைப்பார்த்தாலே
ஜீவகாருண்யம் முடிவுக்கு வந்து
விடுகிற நிலைமையில்--
இன்னும் கடித்து விட்டாலோ
ரௌத்ரம் வேறு கைகோர்த்துக் கொள்கிறது..

நடிக்கிற பாத்திரமாய்க் கூட
அசௌகரி ய ங்களுக்கு சந்தர்ப்பம்
அளிக்க முடியாமல் இருக்கிற எனக்கு
--சௌகரியமாக வாழ்க்கையை
நிதர்சனத்தில் எங்கனம் அனுசரிப்பது
என்பது புரியாத புதிராயும்
கேள்வியாயும் வியாபித்துக்கிடக்கின்றன...

சுந்தரவடிவேலு..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...