Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Thursday, March 12, 2015

காதலனின் டைரியிலிருந்து ......

மிக மிக அனிச்சையாகவே 
அன்றாடம் உம்மை 
தரிசிக்க வேண்டுமென்பதில் 
தீவிரம் காண்பிக்கிறேன்..!

உன்னைத் தேடும் போதிலாக
நீ கிடைத்து விட்டதான 
திருப்தியில் கிடந்த நான் 
நம்மில் நிகழ்ந்த ஆலிங்கனங்களில் 
நீ தொலைந்து போனதான 
ஏக்கத்தில் விம்முகிற எனது 
வினோத இதயத்தினை என்னவென்பது?

அவ்வப்போது 
நானுன்னைத் தேடியும் 
கிடைக்கப் பெறாமல் இருக்கிறாய்..
ஆனால்...
நான் கிடைத்தாலும் கூட 
நீ என்னைத் தொலைக்கவே 
பார்க்கிறாய் அவ்வப்போது..!!

உன் மீதான எனது 
காதலின் ஆழத்தை, 
உனக்கும் அதே தன்மையில் 
பயிற்றுவிக்கிற என் முஸ்தீபை 
ஏளனமாகப் புறந்தள்ளும் 
உமது செயலில் கூட 
ஒரு வசீகரம் உணர்கிற 
என் ரசனை 
எனக்கே என்னில் நிகழ்கிற 
ஒரு பொருந்தா உணர்வாக  
இம்சிக்கிறது..!

உன்னைக் கடிந்து 
கொள்கிற கற்பனை கூட 
வலி தருகிறது எனக்கு.. 
நீயோ 
நிஜவலி தரும் வகையில் 
சுலபத்தில் கடிந்து 
கொள்கிறாய் என்னை.. !

ஆலிங்கனங்கள் 
சுலபநிகழ்வாக அமையப் பெற்ற 
எனது அதிர்ஷ்டக் காதலில் 
என்னை நீ புறக்கணிக்கிற 
துரதிர்ஷ்டங்களும் அதே 
சுலபத்தில் நடந்தேறின 
என்கிற முரண்கள் 
சகிக்க முடியாத சாபக்கேடுகள் 
போன்றே தோன்றுகின்றன...!!

Friday, February 20, 2015

கழியாத பழையன ..

னது முகம் 
கூட எனக்கு 
தெளிவான ஞாபகத்தில் 
இல்லை.. 

ஆனால் உன்னைக் 
குறித்தான ஏக்கம் 
அதே அடர்த்தியில் 
இன்னும் என்னில்.. 

மறுபடி உன்னை 
எங்கேனும் நான் 
பார்க்கும் பேறு கிட்டுமோ 
என்கிற தேடல் உண்டு 
என்னிடம்.. !

சாலைகளில் 
எதிர்ப்படுகிற சில 
பெண்களின் முகங்கள் 
உனது முகம் 
ஒத்தவையாக  உள்ளன..
அப்போது மட்டும் 
உன் முகம் உடனே 
எனது இதயத்தைப் 
பிய்த்தெறிந்து வெளிவருகிறது.. 

உன்னை அன்று 
பின்தொடர்ந்தது போன்று  
உன் மாதிரி பெண்களையும் 
இன்று பின்தொடர  நேர்கிறது.. 

அவை 
மலரும் நினைவுகளுக்காக 
மட்டுமே அன்றி வேறெதற்கும் 
அன்று.. !!

எனது சூழல் புரியாத  
அவர்கள்  என்னை 
ஒரு களவாணி போன்று  
கருதி  துரிதமாகிறார்கள் ..

எனக்கது வேதனையளிக்கிறது..
நீயே அவ்விதம் 
புறக்கணிப்பது போன்று  
அழுகை முட்டுகிறது.. !!

Monday, June 11, 2012

காதலிப்பவர்களின் நாகரீகம்..!!

பேருந்து நிறுத்தத்தில்
உன்னோடு இருப்பது
எனது காதலுக்குக்
கிடைத்திருக்கிற
மகோன்னத
வாய்ப்பென்பேன்...

அனர்த்தமாகவேனும்
எதையேனும் உன்னோடு
பேசுகிற அற்புத
சந்தர்ப்பம் அது...

மற்றவர்கள் எல்லாம்
பேருந்து வரவேண்டும்
என்று காத்திருக்க --
நானும் நீயும்
வந்த பேருந்தை
தவற விட்டுக்
காத்திருக்கிறோம்...

காதலித்த ஆரம்ப
வெட்க நாட்களில்
உமது துரிதம் மற்றும்
பதட்டம் எனக்குள்
இம்ஸை ..

இன்றைய உமது
சாவகாசம்
என்னுடைய
அவசரங்களைக்
கூட நான்
அவமதிக்க வேண்டியுள்ளது..

இங்கே சில
அவஸ்தைகள்
இல்லாமல் இல்லை..
தெரு நாய்கள்
கூச்சலிட்டவாறு
புணர்கின்றன...
சில்லறை இல்லை
என்றாலும் விடாப்பிடியாக
பிச்சைக் காரன்
நச்சரிக்கிறான்...
--நமது பொருத்தம்
குறித்த சிலரது
இங்கிதமற்ற
அப்பட்ட விமரிசனங்கள்..

இவைகளை எல்லாம்
தவிர்த்தோ ..
தவிர்ப்பது போல
நடித்தோ
நாமும் என்னென்னவோ
பகிர்ந்து கொண்டு தான்
இருக்கிறோம்...
--இது தான்
காதலிப்பவர்களின்
நாகரீகம்..!!

சுந்தரவடிவேலு..

Thursday, November 3, 2011

காதல் கேன்சர்

சரிந்து விடக்கூடிய
சாத்தியமுள்ள 
விளிம்புகளில் கூட
மிக சாதுர்யமாக
உன்னுடன் 
நடந்து விட முடிகிற
என்னால் --
தெளிவான 
தேசிய நெடுஞ்சாலையில்
தடுமாற நேர்கிறது
நீ என்னைப் 
புறக்கணிக்கையில்...!

தங்கத்திரவமாக
ஊற்றெடுக்கிற 
காதல் ரசாயனம்
உடலின் மற்ற
நோய்க்கிருமிகள்
அனைத்தையும்
அழிக்கிற வல்லன்மை
கொண்டுள்ளது...

--ஆனால்
காதல் என்கிற
நோய்க்கிருமி
நம்மைத் 
தின்று தீர்ப்பதை
நம்மாலேயே 
உணர முடிவதில்லை
என்பதை விட
உணரவே பிடிப்பதில்லை...??

சுந்தரவடிவேலு 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...