Showing posts with label ?. Show all posts
Showing posts with label ?. Show all posts

Thursday, January 17, 2013

காதலின் சுவடுகள்...

என்னைக் காதல் வசப்படுத்தி பாதித்த எவ்வளவோ பெண்களுக்கு என்னைக் குறித்த தகவல்கள் எந்நாளும் தெரிவிக்கப்பட்டதே இல்லை... ஒருக்கால் எனது காதல் முறையாகத் தெரிவிக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பெண் என்னை அணுகி எனது காதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கமுடியும்... பரஸ்பரம் எங்கள் காதல் செவ்வனே பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கக்கூடும்..... காதலின் சுவை உணர்ந்தவனாக, நானும் இவ்வுலகில் ஓர் மகோன்னத அனுபவத்தைப் பெற்றவனாக வலம் வந்திருக்கமுடியும்..!

கவைக்குதவாத வெட்கங்களும் மௌனங்களும், நான் சிறந்து விளங்கி இருக்கவேண்டிய எல்லா தளங்களிலும் என்னை வெறுமனே ஒன்றுமற்றவனாக ஆக்கி யாவற்றையும் அனாவசியத்துக்குப் புதைத்து வைத்திருக்க வேண்டிய விபரீதங்களில் எனது வாழ்நாட்கள் கழிந்தும் கரைந்தும் விட்டன...

இனி மேற்கொண்டு செய்வதற்கோ சொல்வதற்கோ ஒன்றுமில்லை என்றானபோதிலும், ஞாபகங்களாக மனசுள் நிழலாடுகிற அந்த வறண்ட பிராந்தியங்களை இங்கே பதிவிறக்கம் செய்வதில் சிறிது ஆசுவாசம் உணரமுடிகிறது... அதன் நிமித்தமே, இந்தக் "குப்பைகொட்டுகிற" காரியம் நடந்தேறுகிறது....!!

இன்னொரு விஷயத்தையும் என்னால் கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை... அதற்கான சாத்தியக் கூறுகள்  நிச்சயம் இல்லை என்று என்னால் அனுமானிக்க முடிகிறதென்ற போதிலும், அதையும் தாண்டி காலம் என்னை அதிசயப் பட வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்கும் என்கிற ஊர்ஜிதம்  பிடிவாதமாக எனக்குள் வியாபித்துள்ளது.... அதாகப் பட்டது.----

எனது காதலின் தகவல் எப்படி எந்தப் பெண்களுக்கும் தெரிவிக்கப் படாமல் வாய்த்ததோ , அதே அடிப்படையில் அந்தப் பெண்கள் என்னைக் காதலித்த தகவல்களும் அதே மௌனத்தில் உறைந்து தகவலாற்றுப் போய் விட்டிருக்கலாம் என்பதே அது....!
-இந்த அனுமானம் எனது நெஞ்ஜெலும்புக் கூட்டில் பெருமைகளையும் கவலைகளையும் ஒருசேரத் திணித்து வார்த்தைப் படுத்தவியலாத ஓர் உணர்வை  உருவாக்கி கண்களில் நீர் கசிந்து கன்னங்களில் உருண்டோட செய்கின்றன...!!




Friday, September 21, 2012

ஏதோ சொல்ல வருகிறேன்..

எல்லாம் மாயை என்கிற சித்தாந்தம் இந்த வாழ்வு குறித்த ஓர் வகையான வெறுமையான அபிப்ராயமேயன்றி, அவ்வித சித்தாந்தம் அப்படி ஒன்றும் ஆரோக்கியமான தன்மையாகத் தெரியவில்லை...

எவ்வளவோ அரிய பெரிய சாதனையாளர்கள் எல்லாம் இவ்விதமாக எதிர்மறையாக இந்த வாழ்வினை அனுசரித்திருக்கும் பட்சத்தில் அவர்களுடைய சாதனை நிச்சயம் சாத்தியப் பட்டிருக்காது.. 

சாதிக்க வேண்டுமென்கிற அக்கறை அற்றவர்களும் சாதிப்பதை தனது பிரக்ஞையுள் கொணர்ந்திராதவர்களுமே இவ்வித அற்ப முடிவினை உடனடியாக எடுத்து கவிதையும் கதையும் புனைந்து கொண்டிருப்பர்....

நமது பிரபஞ்சம் நவகோள்களுள் ஒன்றென்பதையும், மற்ற எட்டுக் கோள்களும் மனிதர்கள் வசிக்கும் லாயக்கற்றவை என்பதையும் கண்டுணர்ந்த விஞ்ஞானிகள் மூளை எம்மாத்திரம், தண்ணி அடித்துவிட்டு தனது வீடே மறந்து போய் மல்லாந்து கிடக்கிற அற்ப மனித மூளை எம்மாத்திரம்?..

       
மூளையின் வடிவமும் அதன் இயக்கங்களும் வேண்டுமானால் மாறுபாடற்று இருக்கலாம்... ஆனால் அதன் சிந்திக்கிற ஆற்றலும் திறனும் அதற்குரிய ரசாயனங்களும் வெவ்வேறு வகையறாவில் வியாபித்துள்ளன..

பிரக்ஞை தொலைந்து மல்லாந்து மாயை என்று உளறுபவன் உளறலை ஏற்பது நமது   கேனத்தனம் ...
விண்வெளியில் அன்றாடம் நிகழ்கிற பற்பல அற்புதங்களை செய்தியாகப் படிப்பதற்கும் கேட்பதற்கும் கூட ஓர் மனநிலையற்று எருமைமாடு  கணக்காக நம்மையும் அறியாமல்  நாமெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நிதர்சன  உண்மை..

Tuesday, January 19, 2010

மயிலிறகு..

காதல் என்ற
மயிலிறகு வருடல்
வாழ்வு நெடுக
எத்தனை பேர்க்கு
வாய்க்கும்?
--நெடுக வேண்டாம்..,
ரெண்டொரு வருடங்கள்..?
அந்தக்கொடுப்பினை
கூட அற்று வெறுமனே
நகர்கிற கொடுமை,
பிறப்புக்கே இழுக்கென்று
அபிப்ராயிக்கத்தோன்றுகிறது...

குறைந்த பட்சம்
ஒருதலைக்காதலிலாவது
பொழுதுகள் கழிந்திருக்குமாயின்
அது கூட வாழ்க்கையை
சற்று நிரப்பி விட்ட மாயை...

மயிலிறகாக உணராமல்
மயிராக உணர்ந்து எவ்வளவோ
காதல்கள் செய்யப்படுகின்றன.,
--பின்னொரு நாளில் கொச்சை
படுத்தப்பட்டு , காதல் என்பதற்கான
தாத்பர்யமே சீரிழந்து ...
ஆனால் அப்படி இங்கிதமில்லாத-
வர்களுக்கெல்லாம் காதல்
துவக்கத்தில் சுலபத்தில்
சாத்யப்பட்டு விடுகிற
விபரீதம் ..

எவ்வளவோ மயிலிறகுக்காதல்கள்
ஒருதலைப்பட்சமாக மட்டுமே
ஏங்கி சாகடிக்க வைத்து விட்டு
நடை பிணமாக்குகிற
அவலங்கள் யாவும்....
--- காதலே அற்று வாழ்ந்து
சாவதை விட மேன்மையானதென்றே
அடித்துக்கூற முடியும்
காதல் உணர்ந்த எல்லாராலும்...!!


சுந்தரவடிவேலு

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...