Showing posts with label அபிப்பிராயம்.. Show all posts
Showing posts with label அபிப்பிராயம்.. Show all posts

Saturday, September 8, 2012

காதலின் அடுத்த தளம்..

அங்கும் இங்குமாக காதலர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் ஓர் தீரா ஏக்கம்... நமக்கிந்த சுகந்த அனுபவம் வாய்க்காமல் போயிற்றே என்று...
அதற்கான மெனக்கெடல்கள் என்வசம் இல்லை என்று முழுதுமாக சொல்லி விட முடியாது... என் மெனக்கெடல்கள் யாவும் நனைந்த பட்டாசுக்கு நெருப்பைச் செருக முயன்ற மாதிரியே அன்றி வெடிக்கத் தயாரிலிருந்த பட்டாசுகளுக்கு நெருப்பை  நான் காட்டவில்லை... கால ஈரத்தில் அவை நமுத்துப் போயின நாளடைவில்... பட்டாசும் நமுத்து தீக்குச்சியும் நமுத்து ....

என் காதலை வர்ணிக்க முனைகையில்-- என் பேனா- காகிதம், இப்போது இந்த கணினி .. எல்லாமே சத்தமில்லாமல் எங்கேனும் ஓர் மூலையில் மூக்கை சிந்தி அழுதவண்ணம் இருக்கக் கூடுமென்பது எனதெண்ணம்..

ஒரு ஒடுங்குன டப்பா மூஞ்சியை வைத்துக் கொண்டு ஒய்யாரமான ஒருத்தியைக் கவிழ்த்துப் போட்ட அவனுடைய சாதுரியம் எனக்கு அதிசயம், ஆச்சர்யம்... என்ன தேஜஸ் அவனிடம் கண்டாள்  அந்த அழகிய பெண்?.. அவளது கால் தூசின் சமானம் கூட அவன் இல்லை, ஆனால் அவனில் லயித்து...,  தன்னை முழுதுமாக அவனுள் புதைத்து... காதல் புரிகிறாளே ...! செய்வதறியாது திகைக்கிறேன்..!!

-இந்தத் திகைப்பு ஏதோ ஒரு ஜோடியை மட்டுமே கண்டல்ல... ஏகப்பட்ட ஜோடிகள் இந்த தினுசில் தான் இருக்கின்றன...
எக்ஸ்க்ளூஸீ வாக ரெண்டொரு ஜோடி மட்டுமே மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும்... அதிலொரு ஆத்மதிருப்தி...
எது எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு மனசு போகுதா?.. நமக்குத்தான் இதெல்லாம் வாய்க்கலே.. வாய்ச்சதாவது  வெளங்குதான்னு ஒரு நோட்டம்    போடறதுல ஒரு  த்ரில்..

இந்தப் பெண் நமக்கு கிடைப்பாளா?.. இவளது தேகம் நம் சொந்தமாகி, இவளை முழுதுமாக வருடி இன்ப ரசத்தில் கிறங்கும் தருணம் நிகழுமா?.. அல்லது எல்லாமே வெறும் ஆசை கற்பனையோடு  முடிவு பெற்று விடுமா?.. ஹய்யோ.."
என்றெல்லாம் சதா கவலை கொண்டு, பசித்தும்  சாப்பிடாமல் படுத்தும் உறங்காமல்,  குளிக்கத் தோன்றாமல், குளிப்பதை நிறுத்த முடியாமல்... இப்படியான பேரவஸ்தைகளுக்குப் பிற்பாடு அந்தப் பெண் தனது மனைவியாக அமைந்தால்..? அதற்கீடு இவ்வுலகில் வேறொன்றுண்டோ??

மனைவி பேரழகியாகக் கிடைத்த பிற்பாடு அவளைக் காதலிக்கிற சுகம் கூட ரெண்டாம் பட்சம் தான்.. முந்தைய அனுபவத்தை ஒப்பிடும் போது ...

ஆனால் காதல்கள் ஆரம்பத்தில் மட்டுமே  கிறக்கம்  நிரம்பி வழிவதாகவும் ஆன் தி வே .. குண்டி துடைக்கிற கல்லாக மாறி நிற்பதை கண்கூடாகப் பார்க்கிறோம், பல இடங்களில்...

பெற்றோரின் மானக்கேடான உணர்வுகளும் அதன் நிமித்தமான சபிப்புகளும் தங்கள் குழந்தைகளை அந்த கதிக்கு நிறுத்தி விடுகிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றும் அளவு காதலர்களின் வாழ்வு வளமிழந்து போய் விடுவது சற்று வேதனையே..

ஆனால் நகை விற்கிற விலையைப் பார்த்தால், என்னைப் போல-- காதலிக்க வராத குழந்தைகளைக்  கண்டு பெற்றோரே கவலைப் படுமளவு காலம் மாறுகிறதோ என்று  கவலையோடு சிரிக்க நேர்கிறது...

"ஹேய் .. எரும மாடே.. அவன் உன்னைப் பார்த்து எவ்ளோ அழகா ஸ்மைல் பண்ணினான்.. நீ என்ன லூசு மாதிரி எந்த ரியாக்ஷனும் இல்லாம போயிட்டிருக்கே?"
இப்படி, தாய் மகளை -காதலிக்காததற்கு- சங்கடப்பட்டு சலித்துக் கொள்கிற காலம் நெருங்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது, விண்ணை முட்டுகிற விலைவாசிகளும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எகிறிக் கொண்டிருக்கிற நகை விலையும் ..

Friday, June 8, 2012

அப்பா

அப்பா இறந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன என்ற போதிலும் , அவருடைய புகைப் படத்திற்கு என்றேனும் மாலை அணிவிக்க நேர்கையில் ....கண்களில் ஓர் கசிவையும் மனசுள் ஓர் ஏக்க ஊற்று சுரப்பதையும் உணர முடியும்...
அவர் இருந்த போதிலான ஞாபக அலைகள் .. அந்தப் புகைப் படத்தின் தத்ரூபமான புன்னகை, அதைப் பார்க்கிற ஒவ்வொரு தருவாயிலும் நேரில் மறுபடி அவர் வந்து விட்ட ஓர் மாயையை நிகழ்த்திக் கொண்டே இருக்கும்...

மரணம் என்ன தான் இயல்பான மிகவும் இயற்கையான நிகழ்வென்ற போதிலும் அதென்னவோ தவிர்த்தே தீர வேண்டிய கட்டாயப் பட்டியலுக்குள் வந்து விடுவது வினோதமான ஓர் தன்மை..

நம்முடைய பட்டியல் எவ்வளவு பலவீனமானது என்பது அதைப் போடும் போதே நமக்கு சுலபத்தில் புரிந்தும் விடுகிறது...
காலம் நமக்களிக்கிற அந்த சாபப் பரிசை ஏற்றே ஆகவேண்டிய தருணம் எல்லாருக்குமான அனுபவம்..

சாவதற்கு நியாயமே இல்லை என்கிற கூற்றனைத்தும் நம்முடையதே தவிர காலத்தின் கூற்றுக்கு அடிபணிய வேண்டிய மிக சாதாரண மனிதர்கள் நாம்...
காலம் போடுகிற பட்டியல் அரங்கேறி விடுகையில், நாம் வெறும் ஆசுபத்திரி பில்லை மட்டுமே செட்டில் செய்ய வேண்டி  ஆகிவிடுகிறது..

Monday, May 14, 2012

வழக்கு எண் 18\9 பட விமரிசனம்....

வழக்கு எண் 18\9 பார்த்தேன்... விகடனில் ஐம்பத்தஞ்சு மார்க் போட்டிருக்கிறார்கள் என்கிற வெறியில் போய் பார்த்தேன்... தமிழ் சினிமா என்கிற வழக்கமான பார்முலாவை தூக்கி எறிந்து விட்டு ஓர் டாகுமெண்டரி போல எடுத்திருக்கிறார்கள்... 
இவ்வளவு எளிமையான சூழ்நிலைகளை வைத்துக் கொண்டு மிக ஸ்டைல் ஆக திரைக்கதை அமைத்த விதம் அருமை... ஒரு பாட்டிற்கு வெளிநாடு இல்லை என்பதோடு, பாட்டே இல்லை... இசை அற்று அவ்வப்போது ஒலிக்கிற ஒரே பாடலும் மனசை போட்டு பிசைகிறது... 
லிங்குசாமி தனக்கென்று போட்டுக் கொள்கையில் மசாலா டீ போட்டுக் கொள்கிறார்.. யாரையாவது விட்டுப் போடுகையில் மூலிகை கலந்த
பத்தியக் காபி போட வைக்கிறார்??அவ்வபோது சினுங்குகிற இசை அந்த சூழலுக்கேற்றதாகத் தான் உள்ளது... காரெக்டர்களின் இயல்பும் அனிச்சை போன்ற நடிப்பும் ஆச்சர்யமூட்டுகிறது... 
ஆபாசங்கள் எதுவும் திணிக்காமல் அருவருப்பான வசனங்களை உதிர்க்காமல் .. வெள்ளந்திகளாகவே எல்லாரும் உலா வருவது ஆரோக்கியமாக இருக்கிறது... 
இந்த மாதிரி சினிமாக்களுக்கு மக்கள் பக்குவப் படவேண்டும்... அப்போது தான் மறுபடி மறுபடி நல்ல படங்கள்  வரக் கூடும்.. திறமை மட்டுமே ஹீரோ வாக இருக்கும்... 
ஆனால் நம்மவர்கள் சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க விரும்புகிறவர்கள்... சினிமாவில் உண்மைகளையும் யதார்த்தங்களையும் தரிசிப்பதில் சலிப்புக் காண்கிறவர்கள்...
இந்த ஈனத் தன்மைகளை மாற்றி மக்கள் ரசனைக்குப் புத்துயிர் தருவதில் பெரும் பங்குள்ளவர்கள் இன்றைய சினிமாவை சிருஷ்டிப்பவர்கள்.... பாலாஜி சக்திவேல் போன்றவர்கள் பெருக வேண்டும்... 

நன்றி
சுந்தரவடிவேலு..           

Sunday, March 20, 2011

அரசியல் பேசிப் பார்க்கிறேன்...

வைகோ முதற்கண் பிரபாகரன் குறித்த சிந்தனைகளை வீசி எறிந்து விட்டு ஓர் தனித்தன்மையுடன் செயல் பட்டால் தான் அவரை குறித்து ஓர் நல்ல அபிப்ராயம் வரும் எல்லாருக்கும், --அதாவது ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளிடமும் சரி, பொது ஜனங்களிடமும் சரி... இன்னும் விடுதலைப்புலிகளுக்கு உடந்தையான ஓர் தன்மையையே எப்போதும் பிரதிபலித்துக் காண்பித்துக் கொண்டிருப்பது சற்றும் ஆரோக்கியம் அற்ற ஓர் போக்கு...இந்தப்போக்கில் இருந்து வெளி வந்து மாறுபட்ட சுயம்பாக செயல்பட்டாலே ஒழிய ம தி மு கா வோ வைகோவோ எவராலும் பெருவாரியாக மதிக்கபபடுவதற்கான சந்தர்ப்பமே மிக மிக குறைவு... கேப்டன் பிரபாகரன் போல நடித்த விஜயகாந்த் கூட ஜெயலலிதாவால் மதிக்கப்படுகிறார்...ஆனால் உண்மையாக கேப்டன் பிரபாகரன் போல ஆவதற்கு துடிக்கிற வைகோ புறக்கணிக்கப்படுகிறார்... இது தான் யதார்த்தம்...   

v . சுந்தரவடிவேலு..

Tuesday, March 8, 2011

எல்லா உயிரினங்களும்....

மாயை என்பதாக வாழ்க்கை புரிபடுகையில் , பற்றற்ற தன்மைகளை குறி வைக்கிறது மனது..., வாழ்க்கை மீது பற்று அபரிமிதம் ஆகிற பொழுது, மாயை என்பதே புரியாமல் போகிறது...
எல்லா தன்மைகளும், எல்லா நிகழ்வுகளும் ஓர் இழையில் எல்லாருக்கும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது ...
மரணங்களும் மயானங்களுமே பேராசைகளையும் அகம்பாவங்களையும் சற்றேனும், தாற்காலிகமாகவேனும் தணிக்கிற வல்லன்மை கொண்டவையாக உள்ளன...
மற்றபடி மறுபடி வீடு திரும்பி குளித்து விட்டு உள்ளே நுழைகையில், அதே மனவியாதிகள் சுலபத்தில் தொற்றிக் கொள்கின்றன...!!

சிலரைத்தான் "இந்த வாழ்க்கை மாயை" என்கிற கூற்று அபரிமிதமாகத் தாக்கி
புத்தராகவும் , ஞானியாகவும் மாற்றுகிறது...
-- பலரையும் இவ்வித சிந்தனைகள் கிஞ்சிற்று மட்டும் உட்புகுந்து விட்டு உடனடியாக வெளியேறி விடுகிறது...
எந்த லஜ்ஜைகளும் அற்று "ரெண்டு ரூபாய் கூட குறைக்க முடியாது"என்கிற விதத்தில் விவாதம் செய்து வியாபாரத்தில் களமிறங்க முடிகிறது...

ஆனால் அப்படி பேரங்களோடும் விதண்டாவாதங்களோடும் சச்ச்சரவுகளோடும் வாழ்கையில் தான் இந்த வாழ்க்கை உயிர்ப்போடும் உன்னதத்தோடும் புரிபடுகிறது... எல்லாம் மாயை என்று விலகி நிற்பது உயிருடன் புதையுண்டதாக ... அசுவாரஸ்யமாக ..... அநாவசியமானதாக.... இன்னபிற இம்சைகளாக --- உணர்ந்து விட ஏதுவாகிறது...??

மற்ற எல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித உயிர் மகத்தானதாக நாம் பிதற்றிக்கொள்கிறோம்... 
--எல்லா உயிரினங்களும் அதனதன் பாஷைகளில் இப்படித்தான் பிதற்றிக்கொள்ளும் என்று அனுமானிக்கிறேன்...

வி. சுந்தரவடிவேலு...             ..

Sunday, October 4, 2009

சமத்துவம் என்பது வாழ்க்கையில் இல்லை..

ஜனங்கள் ஒன்று கூடுகிற திருவிழா கால கோவில்கள் ஆகட்டும் பிற கேளிக்கைகள் சார்ந்த இடங்கள் ஆகட்டும்..
மனிதக்கூட்டங்கள் எங்கு கூடுகிற காட்சியைப் பார்க்க நேர்கிற போதும் எனக்கு ஓர் விஷயம் தோன்றிக்கொண்டே இருக்கும்..
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் பெரிய சமத்துவ உணர்வுகள் எல்லாம் பீரிடவில்லை..
நாமெல்லாம் 'சாகப்போகிறவர்கள் என்பதில் மட்டுமே பிரம்மாண்டமானதோர் சமத்துவம் பொதிந்து கிடப்பதாகத் தெரிகிறது.

வாழ்கிற காலங்களில் அனேகமாக எல்லாருமே பாரபட்சங்களோடும் போட்டி பொறாமைகள் கொண்டும் , பிழைப்புக்கான போராட்டங்களோடும்
ஆடம்பரங்களை அனுபவிக்க வேண்டும் என்ற அவசரங்களும், அந்த சம காலத்தில் தன்னை சார்ந்தவர்களோ தமது நெருங்கிய நண்பர்களோ அவ்வித ஆடம்பரங்களை சுலபமாக அனுபவிக்கையில் நமக்குள் நேர்கிற ரசாயன மாறுதல்களும் அங்கலாய்ப்பான வேதனைகளும் வார்த்தைகளில் பிடிபடாது..
--ஆக, வாழ்க்கை என்பது சமத்துவத்திற்கு முரணாக இருப்பதையே யதார்த்தத்தில் தரிசிக்க முடிகிறது.
இதனை ஒப்பிடுகிற போது தான் மரணம் மிக யதார்த்தமான சமத்துவத்துடன் எனக்குப்படுகிறது...

என்றேனும் நாம் நடந்து செல்ல வாய்க்கையில் ஓர் அவசரம் நிமித்தம் டூ வீலரில் செல்பவர்களை drop செய்யச்சொல்லிக் கேட்டுப்பாருங்கள்..பத்துக்கு ஒன்பது பேர்கள் "நான் அப்பிடி போறேன்.. இப்பிடி போறேன்.." என்று சொல்லி பறந்து விடுவார்கள். சிலரோ ஊமைகள் போல ஒன்றுமே பேசாமல் போய்க்கொண்டே இருப்பார்கள்..
இப்படியெல்லாம் சுட்டிக்காட்டுகிற .. சமுதாயத்தை குட்டிக்காட்டுகிற நானே இந்தத்தவறுகளை சுலபத்தில் ஓர் மனநிலையில் செய்து விடுவேன்.. நான் டிராப் செய்ய சொல்லிக் கேட்கையில் மதிக்காமல் போகிறவர்களின் மீதான கோபங்கள் ஒருபுறம்... அப்படி உதவி கேட்பவர்களே என்றேனும் எனக்கு உதவாமல் ஒதுங்கியிருப்பார்களோ என்கிற கற்பனை ஒருபுறம்....

--மேற்சொன்ன சின்ன உதாரணமே போதும், நம் வாழ்க்கையில் சமத்துவம் எப்படி வாழ்கிறது என்று...


சுந்தரவடிவேலு. திருப்பூர்.

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...