Showing posts with label சிறு கவிதை... Show all posts
Showing posts with label சிறு கவிதை... Show all posts

Friday, June 12, 2015

நடுவில்..

டலின் நடுவே 
தணியாத தாகத்தோடு.. 

கடவுள்களின் நடுவே 
நிறைவேறா பிரார்த்தனையோடு... 

வெற்றியாளர்களின் நடுவே 
தழுவிய தோல்வியோடு.. 

கடுந்துயர்களின் நடுவே 
சற்றே மகிழ்வோடு.. 

வாழ்க்கையின் நடுவே 
மரண பயங்களோடு .. !!
         
"திருப்பூரின் நடுவே ... 
இன்னும் வேலை தேடிக் கொண்டு" 
என்கிற ஒரு விஷயம் மனசில் தோன்றவே, மேற்கண்ட சில முரண்களும் இங்கே கவிதையாக முயல்கின்றன.. !

Thursday, September 4, 2014

அழகிய அசிங்கம்..

பதின் வயதுகளில்
முளைவிடாத
காதல்,
அரை நூறு
கடக்கவிருக்கையில்
அரும்புகிறது...




காலம் கடந்திருந்த

போதிலும்
காதல் அதன் மெருகில்
குறைவற்றே தான்
ஜொலிக்கிறது..
  

வயோதிகம் என்கிற

உணர்வெல்லாம்
காதலின் முன்னிலையில்
கல்லடிபட்ட நாயாக
ஊளைக் கதறலோடு
ஓடி ஒழிகிறது.




பொருந்தாக் காதலின்
அபஸ்வரம்
அபத்தமாய் புரிபடவில்லை..
மாறாக -- அன்று
விடுபட்டுப் போன
ஓர் உன்னத அனுபவம் இன்று 
நிகழ்வதாக
இங்கே கவிதை உருவெடுக்கிறது.. !!

[எங்காவது  என்னை எதாவது பொண்ணு லவ் பண்றதா நெனச்சுக்காதீங்க.. சத்தியமா நான் மட்டும் தான் ஒரு தலையா நின்னு லவ் பண்றேன்.. சத்தியமா நான்  ஒரே பொண்ணை  மட்டும் லவ் பண்ணலை.. பார்க்கற ஒவ்வொண்ணையும்  லவ் பண்ணிப் பார்க்கறேன், கற்பனையாவே.... 
முதிர்கன்னிய விரும்பற  வெடலைப் பசங்களைப் பத்தி கேள்விப் பட்டிருக்கோம்.. பார்த்திருக்கோம்.. ஆனா முதிர்கண்ணனை எதாச்சும் வெடலைப் பொண்ணுக  ரூட் விட்டதா ஹிஸ்டரி இருக்கா?.. அப்டி ஒரு வரலாற்றை ப் படைக்கத் தான் இந்த ராமன் போராடறான்.. யாராச்சும் என்னோட சீதை கிட்ட  போட்டுக் கொடுத்துடாதீங்க.. ஹிஹி.. ]

Monday, June 2, 2014

நம்பிக்கைவாதி..

சாதிக்காதவனின் 
சம்பாதிக்காதவனின் 
வலிகள் 
மிகுந்த துயரும் 
குற்ற உணர்வும் நிரம்பியவை.. 

அவன் தேடுகிற 
ஆறுதல் வார்த்தைகளும் 
தன்னம்பிக்கை தூண்டுகிற 
புத்தகங்களும் ஏராளம்.. 

அவனது வயதொத்தவர்களும் 
அவன் வயதில் பாதியே 
நிரம்பியவர்களும் 
ஈட்டுகிற 
பொருளும் செல்வமும் 
புகழும் இன்னபிற 
உயர் அடையாளங்களும் 
அவனில் ஓர் தாங்கொணா 
தடுமாற்றத்தை 
நிலைகொள்ளச் செய்வதை 
எக்காரணம் கொண்டும் 
தவிர்ப்பதற்கில்லை.. 

இவ்வளவு இம்சைகளை 
காலவளர்ச்சி அவனில் 
விதைக்கக்  கூடுமென்று 
அவன் கிஞ்சிற்றும் 
அனுமானித்தவனில்லை...!!

எதிர்பார்த்திருந்தால் கூட 
இந்த சூழல்களை சுலபமாக 
எதிர்கொண்டிருந்திருப்பான்.. 

மிகப் பெரும் விபத்தாக 
நேர்ந்தமையால் 
பிறப்பின் மீதும் 
தன்னைப் பிறப்பித்தவர்களின் 
மீதும் ஓர் இனம்புரியா 
காழ்ப்பை செருகி வைத்திருக்கிறான்.. 

ரயில்களின் பெயரையோ 
கிணறுகளின் பெயரையோ 
பாழாக்குகிற உத்தேசம் 
அவனுக்கு இல்லையாதலால் 
அவனது தற்கொலைகளுக்கு 
அவைகளை இழுக்க 
அவனுக்குப் பிடிக்கவில்லை.. .!!

ஜெயிப்பதற்கான வாய்ப்பு 
இன்னும் ஓயவில்லை 
என்கிற சிந்தனை அவனில் 
ஓர் வற்றா ஜீவா ஊற்று போல 
எப்போதும் இதயத்தின் ஒரு 
மூலையில் அவனில் 
குடிகொண்டுள்ளது.. 

அந்த நம்பிக்கையில் 
தான் , ரப்பர் பென்சிலுக்கு 
அடம்பிடிக்கிற தனது 
மகளின் பிஞ்சுக் கையைப் 
பற்றிக் கொண்டு 
பக்கமிருக்கிற கடைவீதிக்கு 
நடந்துபோய்க் கொண்டிருக்கிறான்.. !!!

Monday, July 9, 2012

படைப்பாளிகள் பரஸ்பரம்....


!

பிரம்மனைத் 
தத்ரூபமாகக் கல்லில் 
சமைத்துக் 
கொணர்ந்தமைக்காக 
அந்த ஸ்தபதி 
மிக உயரிய 
விருதுகளுக்காகப் 
பரிந்துரைக்கப் பட்டார்...


--அவர் , தன்னால் 
பிறவி ஊனமாகச் 
சமைக்கப் பெற்றமைக்காக 
நிச்சயம் 
பிரம்மா 
கசிந்திருக்கக் கூடும்...
கல்லாயிருந்த 
போதிலும்....!!



Tuesday, May 29, 2012

நாய் உட்பட..

ஓர் இழையில்
ரோஷம் மானம்
எல்லாமே
நம்மிலிருந்து
விலகி விடுவது
ஆச்சர்யமே...

மீசையை முறுக்கி
கண்களை உருட்டி
மிரட்டி -
சிங்க கர்ஜனையோடு
வசனம் பிதற்றிய
காலம் மறக்கவில்லை...

கோடொன்றைக் கிழித்து
அதைத் தாண்டினால்
கொய்துவிடுவதாக
பயமுறுத்தியதற்கு
பெரிய மரியாதை இருந்தது...
!

எனது சுபாவங்கருதி
மிரண்டு கிடக்கிற
மனைவி குழந்தைகளோடு
வீட்டு நாயும் அடக்கம்..!!

எனது இருப்பின்
போதிலாக - வீடு
நரகமாக உணரப்பட்டது
எல்லோராலும்..
நாய் உட்பட..

எனது
வெளியூர்ப் பயணம்
சொர்க்கவாசல்
திறப்பதாக இருந்தது
எல்லாருக்கும்..

வீட்டில் நானற்ற
தருணங்களில்
எங்கேனும் நிகழ்கிற
சாலை விபத்து
செய்திகளில்
எனது பங்களிப்பை
அநேகமாக என்
வீட்டிலிருப்பவர்கள்
எதிர்பார்த்திருக்கக் கூடும்
என்றே என் உள்மனம் உளறும்..

என் தினவுகள் அனைத்தையும்
வயோதிகம் வந்து
கபளீகரிப்பதை
சுவாரஸ்யமாகி ரசிக்கின்றன
என்னை சூழ்ந்திருக்கிற கண்கள்..!

அவர்கள் கண்களில் எல்லாம்
கொள்ளிவைக்கப்
பதறுகிறது என் ஆற்றாமை
மற்றும் இயலாமை...

ஆனால் எனக்குக்
கொள்ளி வைக்க
நெருப்பெனத்
தகிக்கின்றன
அவர்களது கண்கள்..!!

Monday, November 16, 2009

குழந்தையின் வருகை..

உன் ரௌத்திரம்
என்னை குதூகலப்படுத்தும்..
என் முடியை
நீ பொசுக்குகிற சுகம்
என் தலைவலிகளைக்கூட
சொஸ்தமாக்கும்...

பசியில் நீ வீறிடுவதை
சற்று ரசிப்பேன்...
கையில் பால்புட்டியை
வைத்துக்கொண்டே...
உன்னை அழ வைப்பது
நோக்கமன்று.,
உன் சாரீரம் வலுவடைய
வேண்டும் என்கிற உத்தி அது...

உன் மௌனமான புன்னகை
ஓர் அழகென்றால் - உன்
முணகல் நிறைந்த
புன்முறுவல் ஓர் நேர்த்தியான
சங்கீதம்...

-செத்துக்கிடந்த
என் வாழ்க்கை.. இன்று
உயிர்த்தீயில் ஜொலிக்கிறது!
இற்றுக்கிடந்த என் கனவுகள்..
இன்று இறுகிப்போய்
வடிவம் பெற்றிருக்கின்றன..!!

வீடு வரவே சலிப்புணர்ந்தேன்
அன்று..
இன்று வெளியேற சலிப்புணர்கிறேன்
வீட்டை விட்டு..!
உன் வருகை-
எனக்குள் நிகழ்த்திய இந்த
மாற்றங்களை ...
நீர்வீழ்ச்சியில் குளிப்பதாக
உணர வைக்கின்றன..!!


சுந்தரவடிவேலு...

Sunday, October 18, 2009

தீர்க்கதரிசி...

தீபாவளிக்கு
அடுத்த நாள்...
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
வெடிக்காத
பட்டாசுகளைப்
பொறுக்கி சேமித்துக்
கொள்கிறான்..
அடுத்த தீபாவளிக்கு..!!

சுந்தரவடிவேலு..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...