Showing posts with label cinema review... Show all posts
Showing posts with label cinema review... Show all posts

Tuesday, August 26, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம்.. ... [RADHAKRISHNAN.பார்த்திபன்]

எந்த ஸைடில் இருந்தும் பாஸிடிவாக ரிசல்ட் வரவில்லை என்பதால் அஞ்சான் படத்தை தவிர்த்து .... விகடனில் 45 மதிப்பெண் பெற்றதைக் கண்டு பார்த்திபன் படத்துக்கு சென்று வந்தேன்..

கிட்டத்தட்ட பாலச்சந்தரின் பட அமைப்போடு திரைக்கதை அமைத்து அதே வித காட்சி அமைப்புகளுக்கு ஜிகினா ஒட்டியது போன்று ஒரு தன்மையை இவரது இந்தப் படம் எனக்கு உணர்த்தியது.. இதே வகையறா உணர்வு வேறு எவருக்கேனும் வந்தால் எனக்கொரு கம்பெனி கிடைக்கும்.. ஆனால் அப்படி எவரும் அபிப்ராயப் பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

சரி அதை விடுங்கள்.. நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு R . பார்த்திபன் அப்பாவின் முழு ராதாக்ருஷ்ணன் என்கிற facebook பாணி பெயரை உடன் சேர்த்துக் கொண்டு தனது செண்டிமெண்டுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.. அப்டியே இந்தப் படத்துக்கும் புத்துயிர் கொடுத்து தனது துவண்டு போன கரியரையும் சற்றே தூக்கி நிறுத்தி விட்டிருக்கிறார் இந்தப் படத்தின் மூலம்..

ஒரே ட்ராக்கில் ஒரு திரைக் கதை அமைத்து அதனூடே பயணிக்கிற படங்கள் கூட என்னென்னவோ குளறுபடிகளை சந்திக்க நேர்ந்த விபத்துக்களை நாம் கண்டிருக்கிறோம்.. ஆனால், பார்த்தி ... இத்தனை ட்ராக்கில் சம்பவங்களைக் கோர்த்து அதற்குள் காரெக்டர்களைப் புகுத்தி அவைகள் எல்லாவற்றுக்கும் ஒரு தேஜஸை கொடுத்திருப்பது, இவரது கால் நூற்றாண்டு கால சினிமா அனுபவத்தின் அடையாளம் என்பதில் ஐயம் என்ன இருக்கப் போகிறது??

தனது நக்கல் கற்பனை வசனங்களுக்கு இன்றைய புது சூழல்களையும் உள்வாங்கி  அதனூடே ஹாஸ்யம் செய்கிற இவரது அபார மூளை ஆச்சர்யப் படுத்தாமல் இல்லை. காமரசத்தை சொட்டச் சொட்டக் கொடுக்க வேண்டுமென்கிற  கமல்ஹாசனின் தாகம் இவருக்குள்ளும்  வெண்ணை போன்று திரண்டு  கிடக்கிறது.. ஆனால் குடும்பங்கள் கும்பலாக நெளியாமல் வந்து கவனிக்க  வேண்டுமானால் அவ்விதக் காட்சிகளை நாசுக்காக வேறு கையாள  வேண்டிய பெரும்பொறுப்பு இருக்கிறது..

நடிப்பவர்கள் எப்படி சொன்னாலும் நடித்து விடுவர்.. பார்த்திபனும் எப்படி எடுக்கவும்  துணிந்தவர் தான் என்ற போதிலும் .. இங்கிதம் கருதி இலைமறை காயாகத் தான்  இந்தக் காட்சிகளை நகர்த்த வேண்டியுள்ளது..

ஒரு பொண்டாட்டியைக் கூட கண்ணில் காண்பிக்காமல் ரெண்டு பொண்டாட்டிக் காராராக நடித்திருக்கும்  தம்பி ராமையா அபார நடிப்புத் திறன் கொண்டுள்ளவர்  என்பது இப்படத்தில் அதீதம் நிரூபணமாகிறது..

அந்த ஹீரோயினாக வரும் பெண்ணின் துடிப்பும் ஆற்றலும் ஜாஜ்வல்யமும் அந்த ஹீரோ பயலிடம்  ரொம்ப மிஸ்ஸிங்.

எல்லா துறைகளிலும் அததற்குரிய தாகங்களோடு பரிதவிக்கிற முயல்கிற நபர்கள் எங்கெங்கிலும் இருந்தவண்ணம் போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர். அதே போன்று இந்த சினிமா துறையிலும் ஜெயிக்க வேண்டுமென்று அரும்பாடு  படுகிற நபர்கள் பல்கிப் பெருகி விட்டனர் என்பதில்  சந்தேகமில்லை.. அப்படி ஒரு குழாமை வைத்தே ஒரு முழுநீளப் படத்தையும்  எடுத்து அப்ளாஸ் வாங்கி விட்டார் பார்த்திபன்..

திருவோண விருந்துகளில் மலையாளிகள் தங்களது விருந்தில் கொடுக்கிற உணவு முறைகள் ரெண்டு பக்கப் பட்டியல் கொண்டவை.. அதனைப் போன்றே  பார்த்திபனும் தனது படங்களில் அபரிமிதமான கதம்ப விஷயங்களை ஓயாமல் சளைக்காமல்  படைக்கிற ஆற்றல் கொண்டவர்.

அகோரப் பசியில் சென்றால் தான் யாவற்றையும் சுவைத்து மகிழ்ந்து பாராட்ட முடியும்.. பசியில்லாமலோ, அரைப் பசியிலோ சென்றால் அப்படியே இலையை மூடி விட்டு வரவேண்டும்..
ஆகவே ஒரு சினிமா பசியோடு அதாவது , நல்லதொரு மனநிலையில் சென்று இதனைப்  பாருங்கள்.. முழுதுமாக இல்லை என்றாலும் கூட பாதியாவது ரசிக்கிற வாய்ப்பு அமையலாம்..  நன்றி. 

Saturday, August 18, 2012

மதுபானக் கடை (திரைப்பட விமரிசனம் )

மதுபானக் கடை படம் பார்த்தேன்..
நிஜமாகவே ஓர் கச்சடா ஒயின் ஷாப்புக்குள் நுழைந்த ஓர் அசூயை நிரம்பிய சூழலை உருவாக்கிய செட்டிங் போட்டவருக்கு ஓர் பெரிய பாராட்டு...

அங்கே வந்து அன்றாடம் குடிக்கிற குடிகாரப் பயல்கள் ஆகட்டும், குடித்துவிட்டு அவர்கள் செய்கிற ரகளைகள் ஆகட்டும், மிக யதார்த்தமாக நகர்த்தி அசத்தி இருக்கிற திரைக்கதைக்கு ஒரு குவாட்டர் .. இல்லை இல்லை.. ஒரு புல்லே வாங்கித் தரலாம்..

அந்த மாமூல் ரகளை செய்கிறவர்களை விரட்டியடிப்பதும், அவர்களது லூட்டியை சலித்துக் கொள்வதும் கூட நகைச்சுவை இழையோடும் விதமாக அமைந்துள்ளது...

அந்த மதுபானக் கடைக்கு ஓர் முதலாளி , கஸ்டமர்களுக்கு சப்ளை செய்கிற டாஸ்மாக் தொழிலாளிகள், எல்லாருமே நடிக்கவில்லை.., மாறாக இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள் அந்தப் பாத்திரங்களாகவே... காமெரா இவர்களுக்கெல்லாம் தெரியாமல் இவர்களை சுட்டுத் தள்ளியது போல யதார்த்தம் தாண்டவமாடுகிறது படம் நெடுகிலும்... ஒ(ளி )லிப்பதிவின் யதார்த்தங்கள் கூட அதே கரகாட்டம் ஆடியுள்ளதெனில் மிகையன்று... இவ்வளவு யதார்த்தங்களோடு இசையும் சேர்ந்து கொள்கிறது..

இப்படி ஓர் நாற்றவெளி, கதையின் மையமாயிருக்கையில் ... வாசமானதொரு காதலும் தளமமைத்திருப்பது ஆச்சர்யமும் ஆறுதலும் நிரம்பிய விஷயங்கள்... சாராயக் கடையின்  முதலாளி மகளையே டாவடிப்பதும் , டாவடித்தவாறு அந்தப் பெண்ணின்  அப்பனையே அதாவது தன் முதலாளியையே நக்கலாகவும் கேவலமாகவும்  பேசுவதும், அதற்காக அந்தப் பெண் சற்று கோபிப்பதும்  பிற்பாடு காதலில் துவண்டு கோபிக்கிற சுரணை இழப்பதும் நம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பப் புதிய காட்சிகள்...

இவ்வளவு இயல்பான சினிமாவுக்கு , திரை அரங்கு மொத்தத்திலும் பத்துப் பதினைந்து பேர்கள்  இருந்தால் அதிகம்... ஒருக்கால் ரெண்டு வாரம் ஆனதால் கூட்டம் குறைந்து காணப் படுகிறதோ தெரியவில்லை..

-நிச்சயம் ஒரு நல்ல சினிமாவை சுலபத்தில் அடையாளம் கண்டு கொள்கிற எவருமே இதையும்  அதே சுலபத்தில் அடையாளம் கண்டு கொண்டு வியப்பார்கள் என்பதில்  கிஞ்சிற்றும் ஐயமில்லை..

Tuesday, August 16, 2011

தெய்வத் திருமகள் படம் superb..

தெய்வத் திருமகள் படம் பார்த்தேன்... அற்புதம் என்று ஒரு வார்த்தையில் அவசரப்பட்டு சொல்லத் தோன்றுகிறது... ஆனபோதிலும், என்னால் இயன்ற அளவிற்கு அந்த அற்புதங்கள் என்ன என்று சற்று விலாவாரியாக விவரிக்கத்தோன்றுகிறது.. 
ஏற்கனவே இந்தப் படம் குறித்து பல வார மாத தின இதழ்கள் விமரிசனம் செய்திருக்கலாம்.., நீங்களும் அவைகளைப் படித்திருக்கலாம்... 
எனது விமரிசனம் அவைகளை விட தெளிவாயிருக்கும் என்று சொல்வதற்கில்லை.. இதையும் தான் படித்து விடுங்களேன்...

விக்ரம் நடிப்பு சொல்லி மாளாது... துவக்கம் முதல் நிறைவு வரைக்கும் அதே அப்பாவித்தனமான மனோபாவங்களை முகத்தில் பிரதிபலிக்க செய்து பிரம்மிக்க வைக்கிறார்.... வக்கீலாக வரும் அனுஷ்காவின் நடிப்பு கூட சொல்லும் படியாக யதார்த்தமாக உள்ளது.. உதவியாளராக வரும் சந்தானமும் நன்றாக செய்துள்ளார்.. அந்த ஆரம்ப கட்ட நகைச்சுவை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.. படம் போட்டு பத்து நிமிஷம் கழித்து வருபவர்கள் உள்ளே சிரித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டும், மற்றும் அந்த நகைச்சுவைக்குள் ஒன்ற முடியாமல் திணற வேண்டும்.. ஆகவே, படம் துவங்கும் முன்னரே உள்ளே இருப்பது உத்தமம்..

அந்தக் குழந்தை எக்ஸ்ட்ரீம்லி சூபர்ப்... என்ன ஒரு எக்ஸ்ப்ரஷன்.. என்ன ஒரு யதார்த்தம்.... கதைக்களமாகட்டும், பின்னணி இசை ஆகட்டும், ஒளிப்பதிவு , டைரக்ஷன் .. எல்லா அம்சங்களுமே அம்சம்... பல கட்டங்களில் கண்களில் நீர் கசியும்... ஆகவே கண்டிப்பாக ஒரு கைக்குட்டையை ரெடி யாக வைத்துக்கொள்க..

சலங்கை ஒலி, பூவே பூச்சூடவா போல என்னை மறுபடி மறுபடி பார்க்கத்தூண்டுகிற படமாக இது அமைந்துள்ளது... கண்டிப்பாக எல்லாரும் ஒரு முறையாவது அரங்கு சென்று பாருங்கள்.. பிற்பாடு சாவகாசமாக ஒரு நாள் DVD யில் அல்லது சன் டிவி யில் பார்க்கலாம்.. நன்றி..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...