Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, December 31, 2015

கள்ளச் சோகம் .........

ள்ளக் கணவனோடு 
படுக்கையில் 
சல்லாபித்துக் 
கொண்டிருந்த ஒரு 
காலை 11 மணி 
சமயத்தில் ...
-சாலையில்  
ஆம்புலன்ஸ் 
கடந்த சைரன் 
சற்றே துணுக்குற 
வைத்தன இருவரையும்.. !

'நகரெங்கிலும் 
இந்த ஈன முணகல் 
தொடர்கதையாகி விட்டது'
என்று சொல்கிறவனை 
'ஆமாம்' என்று 
ஆமோதிக்கிறாள் அவள்.. 

காலை புறப்பட்டு 
அலுவல் சென்ற 
கணவன் அடிபட்ட 
செய்தி அவள் 
காது சேர, 
குறைந்த பட்சம் 
இன்னும் பத்து 
அல்லது 
பதினைந்து 
நிமிடங்களாவது 
பிடிக்கக் கூடும்.. !!

Wednesday, September 23, 2015

அம்மாக்களின் சுபாவங்கள்..

அங்கொன்றும் 
இங்கொன்றுமாய் 
பிஞ்சுப் பாதங்களின் 
ஒற்றை செருப்புக்கள் 
பாதை எங்கிலும் 
அனாமதேயாமாய்க் 
கிடக்கின்றன.. 

அம்மா மடியில் 
அயர்ந்து போய்  
அப்படியே நழுவி 
இருக்கக் கூடும்.. 
அல்லது 
தெரிந்தே கூட 
நழுவி .. 
சொல்லத் தெரியாமல் 
பார்த்துக் கொண்டே கூடப் 
போயிருக்கும்.. 

வீட்டிற்குப் போய் 
இறங்கும் போது தான் 
காலிலுள்ள ஒற்றை 
செருப்பை அம்மா 
கவனிப்பாள் .. 
'சனியனே.. இப்பத் 
தான் வாங்கிக் 
கொடுத்தோம்.. அதுக்குள்ள 
தொலச்சுட்டியே'
என்று திட்டுவதை 
எதற்கென்று புரியாமலே 
அழும்.. 

மறுபடி மற்றொரு ஜோடி 
செருப்பு.. 

குழந்தையே 
தொலைந்து போய்க் 
கிடைத்தாலும் 
'சனியனே எங்க 
போயித் தொலைஞ்சே?'
என்று திட்டிவிட்டு 
பிறகு அதற்கும்  
சேர்ந்தாற்போன்று 
கொஞ்சுவது தான் 
அம்மாக்களின் சுபாவங்கள்.. !!
Image result for mother and child

Monday, August 4, 2014

சக்கரம்..

என்னுடைய 
பல நண்பர்களின் 
மரணம் 
இந்த வாழ்வின் நிலையாமை 
குறித்து எனக்கு 
உணர்த்தி இருக்கின்றன.. 

ஒரு வார கால 
அவகாசத்தில் அவ்வித 
உணர்வுகள் விடைபெற்று 
மறுபடி படிந்து விடுகிறது 
வாழ்க்கை.. 

இருக்கிற வரைக்குமான 
நிரந்தரத் தன்மையில் 
இந்த வாழ்க்கை மட்டுமே 
புரிபடுவதால் 
நாம் உணரும் சாத்தியமற்ற 
மரணத்தின் மீதான 
மதிப்பும் பயமும் 
தாற்காலிகமாகி விடுவது 
எல்லாருக்குமான 
யதார்த்தம் என்பதே 
யதார்த்த உண்மை.. !!

சாசுவதமான மரணம் 
சுவாரசியப் படுவதில்லை.. 
மாறாக சாஸ்வதமற்ற 
வாழ்க்கையே அதீத 
சுவாரஸ்யம்....!

மரணங்களை 
மனிதர்கள் வெறுத்தால் 
என்ன ..?!
வரவேற்க மறுத்தால் 
தான் என்ன??

மனிதர்களை 
அரவணைக்கவும் 
ஆதரவளிக்கவும் 
நிரந்தரப் புகலிடம் 
கொடுக்கவும் 
மரணங்கள் எப்போதும் 
தயார் நிலையிலேயே 
உள்ளன.. !!

Thursday, February 13, 2014

இலக்கு ...

எனது சில 
ந[ண்]பர்களின் 
பட்டியலில் 
அவர்களோடு 
ஒப்பிடுகையில் 
நான் மிக 
சிறந்தவன் என்கிற 
ஆணவம் 
அனாவசியம் 
என்கிற போதிலும் 
அதென்னவோ ஓர் 
சுவாரசியம்..!!

அப்படியாக 
எனது பட்டியலில் 
இடம் பெற்ற 
எல்லாரது 
சுய அபிப்ராயங்களும் 
தரவரிசையில் 
என்னைப் போலவே தான் 
அவர்களே 
முன்னிலை வகுப்பர் 
என்பதில் ஐயப் பாடென்ன?...

"எனக்கு நாந்தேன் 
பெரிசு" என்கிற 
யதார்த்த இறுமாப்பு..!!

மற்றவனைப் புரட்டிப் 
போட்டுப் பின்னுக்குத் 
தள்ளிவிடுகிற அவசரம்.., 
தான் மட்டுமே 
முன்னின்று கொடி 
நாட்ட வேண்டுமென்கிற 
வெறி, வேகம் 
--பண்பற்ற 
மனிதப் பண்பு..!

தோற்ற வலிகளில் 
துவண்டிருப்பவனை 
முன்னுக்கு நிறுத்த 
வேண்டுமென்கிற 
மாண்பு 
என்றைக்கு முளை 
விடுகிறதோ 
அன்றைக்குத் தான் 
துவங்குகிறது 
இந்த உலகம்..!!

Monday, December 10, 2012

தவிர...

வாழ்க்கையைத் தவிர
யாவற்றுக்கும்
உத்திரவாதமிருக்கிறது...
--ஆனால்
வாழ்க்கை
பெரிய உத்திரவாதம் போல
மற்றவற்றின்
உத்திரவாதங்களுக்காக
நாமெல்லாம்
அதீதம் மெனக்கெடுகிறோம்..!

தாற்காலிகமான
முகவரிகளில் நாம்
வசித்து வருகிறோம்...
ஆனால்
விண்ணப்ப படிவங்களில்
"நிரந்தர முகவரி"
என்கிற கட்டத்தில்
எதையோ பூர்த்தி
செய்துகொண்டிருக்கிறோம்...

யாரோ சொல்லி

உலகம் உருண்டை
என்று புரிந்துகொண்டுள்ளோம்..
யாரோ சொல்லி
இந்த பூமி
நவகோள்களில் ஒன்றென்று
அறிந்து வைத்திருக்கிறோம்..!

நாமென்ன சொல்கிறோம்?..
அவனம்பிக்கைகளைத் தவிர..!!

நாமென்ன செய்கிறோம் ?..
சும்மா இருப்பதைத் தவிர..!!!

Monday, November 5, 2012

கிழிசல் ....



டித்தல்  திருத்தலாகவே 
எல்லாமிருக்கிறது 
என்னிடத்தில்...!

ஆரம்பத்திலேயே 
தெளிவைக் கொணர்கிற 
சாதுர்யம் ஏனோ 
பிசகி விடுகின்றன 
எல்லாவற்றிலும் 
எல்லா தருவாய்களிலும்..!!

திருத்துவதென்பதை
ஓட்டுப் போட்டதாக 
உணர்கிறேன்..
ஆதலால்--
என்னிடம் 
திருந்தி இருக்கிற 
எல்லாமே 
ஓட்டுப் போட்ட 
பலவீனத்திலேயே 
உள்ளன...!
                                                                   
திருந்தப் பெறாத 
தவறுகள் கூட 
ஓர் பிரத்யேக 
தேஜஸில் மிளிர்வதாக 
அபிப்ராயம் எனக்கு...

ஆனால் 
பலவீனப் பட்டாலுமே 
கூடப் பரவாயில்லை..
தவறுகளை 
சரி செய்கிற 
சந்தோஷம் 
வேறெதிலுமில்லை..!!

Sunday, June 10, 2012

ஆண்மை என்கிற பொய்மை

என் கோபங்களும்
வெறுப்புக்களும்
ஓர் இழையில்
எனக்குள் தாங்கொணா
குற்ற உணர்வை
நிகழ்த்துகிற
வல்லன்மை கொண்டவை..

ஆனால் அவைகள்
அரங்கேறுகையில்
நம் வீரமும் ஆண்மையும்
செவ்வனே செயல்படுவதாக
ஓர் தினவு...
--அவ்விதம் நடவாமல்
அமைதி காப்பது
"பொட்டத்தனம் "
என்கிற அனுமானம்..

ஒவ்வொரு
கோபத் தருவாயும்
இப்படியே தான்
கடக்கின்றன...

கோபங்களும்
தவிர்க்கப்படும் போல
தெரியவில்லை..
கூடவே
குற்ற உணர்வுகளும் ...!!


சுந்தரவடிவேலு..

Tuesday, December 6, 2011

கவனக்குறைவுகள்..


...

வானத்தை மூடுகிற
என் பிரயத்தனத்தில்
வீட்டுக் கூரை
ஒழுகுவதை 
கவனிக்கத் தவறி
விட்டேன்....


தெருவில் 
நனையாமல்
குடை பிடித்துக்
கொள்கிற நான்
என் வீட்டினுள்
முழுதுமாக
நனைந்து  விடுகிறேன்..


இப்படித் தான்---
வீட்டினுள் இம்சிக்கிற
எலிக்குப் பொறி
வைக்க மறந்து
வெளியில் இல்லாத
புலிக்கு 
வலை விரிக்கச்
செய்கிறது விதி..!!
!

சுந்தரவடிவேலு                

Friday, November 25, 2011

முற்றுப் பெறுகின்றன முரண்கள்..

முரண்களினூடே
இயங்கப் பெறுகிறது
வாழ்க்கை..
மிகவும் தெளிவிலிருப்பதாக
நினைத்துக் கொண்டே 
குழப்பங்களைப் 
பற்றிக் கொண்டு 
நீள்கிறது காலம்...


பற்றற்று இருப்பதாக
நினைத்துக் கொண்டு
புதிய உத்திகளோடு
சந்தையில் அறிமுகமாகிற்
பொருள்களைக் 
கையகப் படுத்துகிற
தாகம்... வெட்கமேயற்று
வியாபிக்கிறது மனசுள்...


மௌனத்தை 
மையப் படுத்த
முனைகயிலேயே,
எதையேனும் முணுமுணுக்கப்
பிரயத்தனிக்கிறது வாய்...


வேசி வீட்டு
பூஜையறையில் 
பிரசன்னமான  பக்தி--
கோவிலில் 
அவளை தரிசித்த
போது காணாமற்
போயிருந்தது..


மரணத்திற்கு
எதிர்மறையான 
இந்த வாழ்க்கை...
--மரணத்துடன்
ஒப்பிடுகிற தகுதியையே
இழந்து நிற்கிறது...

மரணம் தெளிவானது
எவ்வித முரண்களுமற்றது...!!


புதைப்பதா எரிப்பதா
என்கிற சர்ச்சைகள் யாவும்
மரணித்திருப்பவனுக்கு
சம்பந்தப் படாதது..!!!



Tuesday, October 13, 2009

பலம் பொருந்திய தோல்விகளும்.. அதன் ஞாபகங்களும்...

எனது காதல்
சற்று விநோதமானது...

-என் கன்னங்கள்
அவள் உதடுகளுக்கு
முத்தமிடும்..

-அவளது மடியில்
சாய்ந்த வண்ணமாகவே
அவளுக்காகக் காத்துக்
கிடப்பேன்...

-இந்நாட்களில்
அவளுடனாக
புணர்ச்சி கொள்ளும்
தருணங்களில் கூட,
... அன்று
காதலிக்க ஆரம்பித்த
நாட்களில் "எனக்குகிடைப்பாளா?"
என்கிற கேள்விக்குறிகளுடன்
ஏங்கிக்கொண்டிருந்த அந்த
ஞாபங்கங்கள் ...

-இன்றைக்கு
எனக்குக் கிடைத்து
விட்டாள்...
அவளைப் புணர்கிறேன்
என்கிற நிதர்சனங்களை
எல்லாம் தாண்டி..
--மறக்கவே
முடியாத அன்றைய
தேடல்களின் அவஸ்தைகள்
இன்னும் வேதனை
கலந்த சுவாரசியங்களை
பதிவாக்கிக்கொண்டிருக்கிற
ஞாபகச்சுழல்கள்...
--என்
தற்போதைய
ஆசுவாசத்தையே கூட
மூர்ச்சையாக்கி
உள்ளிழுத்துக்கொள்கிற
சாத்யக்கூறுகள்
கொண்டவை என்றே
அனுமானிக்கிறேன்...!!


சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

Saturday, September 5, 2009

சுதந்திரம்...

நிழல்கள் குறித்த
அதீத ப்ரக்ஞை எனக்கு..
-நிஜங்களைப் புறக்கணிக்கிறேன்
என்பதே புரியாமல்...!
...அனிச்சைகள் மீதான
எதிர்பார்ப்புகளால் ,
நிகழ்கிற நிதர்சனங்கள் குறித்து
சற்றும் ப்ரக்ஞை இல்லை எனக்கு...
வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டே
வீட்டு விலாசம் தொலைந்த
கவலையில் என் அறை ஜன்னலோரம்
நான்....
வீடு ஜப்திக்கு வந்த போது
விலாசம் கிடைக்கப் பெற்றது...

--வெளியுலகம்
ஜன்னலற்றும் இன்னலற்றும்
இருக்கக் காண்கிறேன்...

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

Tuesday, September 1, 2009

உன்னிடத்தில் மட்டும்..

உன் நிபந்தனைகளுக்குக்
கட்டுப்படுவதையே
சுதந்திரமாய் உணர்கிறேன்...
உன் யாதொரு வேண்டுகோளுக்கும்
இணங்கிடும் அவசரம்
எப்போதும் என் வசம்...!

என் எல்லா வட்டாரங்களும்
கல்லுளி மங்கனாய்
என்னை அபிப்ராயித்திருக்க,
--உன்னிடம் மாத்திரம்
என் தாமதத்தை நான்
மிகவும் அநாகரிகமாய் உணர்கிறேன்..!!

உன்னிடம் மட்டுமே
எனக்குப் பறந்து காண்பிக்க
வேண்டுமென்று தோன்றுகின்றது.,
--சிறகுகள் சிதைந்த நிலையிலும் கூட..!!!

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...