Thursday, October 28, 2010

தித்திக்கிற தீபாவளிகள்

எல்லா ரகளைகளுடனும்
இளமை குதூகலத்தில்
கும்மியடித்துக்கொண்டிருந்தது.
தீபாவளி என்றால்
அதற்கான எல்லா சுகந்தங்களும்    
வீரியம் பெற்று
ரத்தத்தை அதீத சூடேற்றிய
வண்ணமாகக் கழியும்....
ஒற்றை வெடியைக்கூட
சுவாரஸ்யம் குன்றாமல்
லொட்டு லொட்டு என்று
ஓயாமல் வெடித்துத் திரிவோம்..
-இன்று கட்டு வெடி வெடிக்கவே
அசுவாரசியம் வந்து விடுகிறது..

இளமையின் அதே வீச்சில்
மறுபடி தீபாவளி வராதா
என்கிற ஏக்கம்
இப்போது வருகிற
எல்லா தீபவளிகளின் போதிலும்..!!

நம் அத்தனை
ஆனந்தங்களையும்  நம்
குழந்தைகள் இந்த நாட்களில்
உணர்கிறார்களா என்பது
கேள்வி தான் என்ற போதிலும்
நமது சுவாரஸ்யம் குறித்த
இதே வித கேள்விகள்
அன்று நம் பெற்றோர்களிடமும்
இருந்திருக்குமோ என்னவோ...?

ஆக, எல்லா தலைமுறைகளுமே
தனக்கு நேர்ந்தவை மாத்திரமே
மகோன்னதமானவை என்கிற
தீவிர நம்பிக்கையில் வாழ்ந்து
வருவதாக அனுமானிக்கிறேன்...

Thursday, October 14, 2010

நானும் கடவுளும் முரண்களும்...

 1

நாத்திகனையும்
காப்பாற்றுகிற பொறுப்பு
கடவுளுக்கு இருக்கிறது...

சாதாரண மனிதர்கள்
கடவுள்களில் பாரபட்சம்
பார்க்கலாம்..,
அசாதரணமான கடவுள்
மனிதர்களில் பாரபட்சம்
பார்ப்பதில்லை...!!

இந்தக்கருத்துக்கூட
இனி எந்தக் கடவுளுக்குப்
போய் சேருமோ தெரியவில்லை..

ஆனால் நிச்சயம்
ஒரு நாத்திகனாவது
படித்துப் பார்ப்பான்
என்றே அனுமானிக்கிறேன்....!!



நன்றி நவில்வதிலுள்ள 
பேரின்பம்
பிரார்த்தனைகளில் இருப்பதாகத்
தெரியவில்லை..
பிரார்த்தனை என்பது
மெருகேற்றிய பிச்சை..!

கோயில் வாசலுக்கு
வந்ததும் பிச்சைக்காரனிடம்
நீ கடவுளாகி விடுகிறாய்...

--உள்ளே நீ கடவுளிடம்
ரகசியமாக பிச்சை கேட்டாய்..,
பிரார்த்தனை என்கிற பெயரில்...!!



நான் கடவுளைப்
பிரார்த்திப்பதில்லை..,
நம்பிக்கையின்மையால் அல்ல,
கடவுள் மீதான பெருமதிப்பால்....

என்னுடைய அல்ப
பிரார்த்தனைகளைப் பொருட்படுத்துகிற
அவகாசம் கடவுளுக்கு
இல்லாமற் போகக்கூடும்,
உடனே நான் அந்த
அசாதாரண கடவுளை
கோபிக்கக்கூடும்..,
அவசரப்பட்டு "கடவுள் பலவீனமானவன்"
என்று முடிவெடுக்கக்கூடும்..,

ஏதேனும் நிறைவேறுகிற
தருவாயில்
உடனடியாக கடவுளுக்கு
நன்றி சொல்கிற அவசரமும்
நாகரிகமும் என்னிடமிருக்கிறது....!!

சுந்தரவடிவேலு...

Tuesday, October 12, 2010

நேரம் காலம் நல்லா இருந்தா...

எழுதி சம்பாதிக்கிற எண்ணம் கொண்டவர்கள் ... அது சாத்யமாவது அவ்வளவு எளிமையுமல்ல, அவ்வளவு சிரமமும் அல்ல... இப்படி இரண்டு வகையறா கோணங்களிலும் வசீகரமாக உணர வைக்கிற இந்த உலகம் ஆச்சர்யம் நிரம்பியது..
அந்தக்காலகட்டங்களில் எழுதி, எழுத்தாளர்களாக பிரபலமானவர்கள் உண்டு., பிரபலமாகாமலே நன்றாக எழுதியவர்களும் உண்டு..
எது எப்படியான போதிலும் எழுதி எவரும் பெரிய கோடீஸ்வரர்களாக ஆனதாக எந்த செவி வழி செய்திகளும் இல்லை..

ஆனால் இன்றைய சூழல்கள் வேறு... கண்டதையும் எழுதி விரல் நொந்து கிடக்கிற பல எழுத்தாளர்களும்  உண்டு,  சும்மா feather touch செய்து லட்சம் கோடி அள்ளுகிற கில்லாடி எழுத்தாளர்களும் உண்டு.. உதாரணமாக வைரமுத்து, பா.விஜய், என்று நீண்டதொரு பட்டியல் போடலாம்... உடனே அவர்கள் மீதாக அவசரப்பட்டு பொறாமை கொள்வது அறிவீனம்.. அவர்களது இலக்கிய அறிவு, அதனை நாசுக்காக கையாள்கிற திறன், ரசிகர்கள் வியக்கும் வகையில் காட்சிகளில் கற்பனா சக்தியை கொணர்வது..., இப்படி நிறைய திறமைகள் இருக்கும் அவர்களை எல்லாம் ஆய்வு செய்கையில்...

நாமெல்லாம், டுபாக்கூராக நான்கு வார்த்தைகளை தெரிந்து வைத்துக்கொண்டு சுலபத்தில் கவிதை எழுதி விடலாம், பிரபலக் கவிஞர்கள் ஆகி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருப்பது வீண்வேலை...  

விஷய ஞானம், அதை பாங்காக வெளிக்கொணரும் திறமை..... யாவற்றையும் விட நேரம் அதிர்ஷ்டம் எல்லாம் ஒரு சேர கும்மி அடித்தால் நாமும் ஆனந்தக் குலவை கொட்டிக்கொண்டு பிறரை பொறாமை கொள்ள செய்து கொண்டிருக்கலாம்....

Saturday, October 9, 2010

காலக்கைதி

விளையாடுகிறது
என்று நினைத்தால்...
--மனசைக்கீறி
ரணப்படுத்தி இருக்கிறது
காலப்பூனை..!

என்னைக் கடித்துக்
குதறப்போவது புரியாமல்
மாரில் அழுத்திக்
கொஞ்சிக்கொண்டிருந்திருக்கிறேன்...          

--பூனை பாவனையில்
புலியாக இருக்கிறது காலம்..,
காலப்புலி...!!

மண்புழுவென 
நினைத்த "காலம்"
பூராணாக ஊர்கிறது....
--சுழற்றும்  சாட்டை
என கருதிய "காலம்"
கொத்தும் பாம்பாக நெளிகிறது..


பூக்களை சொரியுமென்று
நினைத்தால்
முட்களை செருகுகிறது காலம்..
பன்னீர் தெளிப்பதாக
நினைத்தால் எச்சிலை உமிழ்கிறது...

--என் மரணத்தைக்
காரணம் காட்டியாவது
காலத்தை நான்
குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தாமல் விடமாட்டேன்..!!!

Tuesday, October 5, 2010

அனாதையாகும் திறன்கள் ..

எவருடைய டைரிகளை எடுத்தும் எனது சரிதங்களைக் கிறுக்கிக் கொண்டிருந்திருக்கிறேன் எனது பால்ய காலங்களில்...இன்னொருவர் டைரியை பார்ப்பதோ படிப்பதோ அநாகரீகம் என்றிருக்க நான் கொஞ்சமும் இங்கிதமற்று எழுதியிருக்கிறேன்..
நல்ல வேலையாக நான் அப்படி கிறுக்கிய டைரிகள் யாவும் எனது தந்தை  மற்றும் சகோதரிகளின் டைரிகள் என்பதால் வெறும் திட்டு வாங்கியதோடு தப்பித்துக்கொண்டேன்...
விவஸ்தை  ஏதுமற்று என் அன்றாட நிகழ்வுகள் யாவற்றையும் அந்த டைரிகளில் தத்துபித்தென்று எழுதிக்குவித்து விடுவேன்...          

என் எழுதுகிற தன்மை உணர்ந்து அவர்களாவது எனக்கு ஒரு டைரி பரிசாகவோ "இந்தா வச்சுத்தொலை" என்றோ கொடுத்திருக்கலாம்... குறைந்த பட்சம் பழைய பாடாவதி டைரி யாவது கொடுத்திருக்கலாம்.. அவ்வளவு டைரி யிலும்  ரெண்டொரு பக்கங்கள் சின்ன வரவு செலவு கணக்குகளோ இன்னபிற அவர்களது படிப்பு சம்பந்தமாக எதாவது நாலு பக்கங்கள் மாத்திரம் தான் எழுதி இருப்பார்கள்.. 

இதை நான் ஏன் இவ்வளவு மெனக்கெட்டு சொல்ல வருகிறேன் என்றால், ஏதேனும் எழுதுகிற திறனுள்ள ஒரு நபரை அந்தக்குடும்பத்தில் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டுமேயன்றி அதனை மதியாமலும், பழித்துக்கொண்டும் இருப்பது எந்த விதத்தில் ஆரோக்கியம் என்பது எனக்குப்புரியவில்லை... 

எழுதுகிற திறன் மட்டும் அல்ல, வேறு வகையறா சார்ந்த திறன்கள் ஏதேனும் ஒரு நபருக்கு இருப்பினும் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிற பாங்கு வேண்டும், அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு.. திறன்களை அடையாளம் காணும் திறனற்று இருப்பவர்களைக்கூட மன்னிக்கலாம், ஆனால் அது தெரிந்தும் வெறுமனே இருப்பவர்களை என்ன செய்வது....இப்படித்தான் பல குடும்பங்களில் பல கலைகள் அனாதையாக அரங்கேற முடியாத அவஸ்தைகளோடும் மௌனமான வலிகளோடும் உயிருடன் புதையுண்ட வண்ணம் உள்ளன...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...