Sunday, September 27, 2009

விழா நாட்கள்..

சரஸ்வதி பூஜை இன்று..
இளம்ப்ராயங்களில் இந்த மாதிரியான விழாக்காலங்களில் மனசு உணர்ந்த ஓர் ரம்மியமான தன்மைகள், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை... அப்படி ஓர் உன்னத உணர்வில் கிறங்கிப்போயிருக்கும் இளமனது.. பட்டாம்பூச்சிக்குப் போல வண்ண வண்ணமாய் சிறகுகள் முளைத்துக் குதூகலித்த அதே விதமான தன்மைகளுடன் வாழ்க்கை நெடுக இருந்திருந்தால் ஆகாதா என்கிற பெரும் ஏக்கம் இன்று.... முதிர்ந்து கிடக்கிற மனசுக்குள் சருகுகளும், கவலை தோய்ந்த சலசலப்புக்களும்...!!
சுண்டலுக்கும் பொரிக்குமாக என் வீதியின் ஒவ்வொரு அழைப்பே இல்லாத வீடுகளுக்குள் எல்லாம் எங்கள் பிரவேசம் இருக்கும்... எவ்வித லஜ்ஜைகளும் அற்று இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிற யதார்த்தங்கள் எல்லாம் இன்று எங்கு ஓடி ஒளிந்து கொண்டனவோ அறியேன்...
பசித்திருந்தால் கூட பட்டினி கிடக்கிற பொறுமைகளும் சோம்பல்களும் இன்றைக்கு போல அன்றெல்லாம் இருந்ததில்லை... இல்லாத பசிக்கே எதையேனும் வாயில் போட்டு அரைத்து வயிற்றுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் இளமை... அவ்வளவு அனாவசியமாக இருந்தாலுமே கூட அன்றைய நாட்களின் வீரியமும் விசாலமும் இந்தப் பிராயங்களில் இல்லை என்று தான் சொல்வேன். இந்த மனோபாவங்கள், சூழ்நிலைமைகள் யாவருக்குமே வாய்க்கிற பொதுவான உணர்வுக்குழப்பங்களா அல்லது பிரத்தியேகமாக என் போன்ற சில பயித்தியங்களுக்கு மட்டுமா புரியவில்லை..
--விழாக்காலங்களில் மனசை அதன் போக்கில் விடுகிற சந்தோஷங்களைக்கூட பயிற்றுவிக்க முடியாத சோபை இன்மையில் வறண்டு கிடக்கிற இந்தப்பருவம் ," பெரும் சாபம்" என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?
எல்லாரும் இப்படி இல்லை என்றே சொல்வேன்.. இன்னும் எத்தனையோ முதிர்ந்தவர்கள் இந்த மாதிரியான விழா நாட்களில் இன்னும் அதே பழைய உற்சாகம் குன்றாமல் அனுசரித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்... அந்த ஆரோக்யமான போக்கு ஏன் சிலருக்கு கைவரப் பெறுவதில்லை ?
நாம் பார்த்து கொண்டாடினால் தான் நம் குழந்தைகளும் அதே விதமாக அனுசரிப்பர்..
நாம் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பேயறைந்தாற்போல முழித்துக்கொண்டிருந்தோமேயானால் நம் குழந்தைகள் இப்போதே இந்த மாதிரியான விழா நாட்களை பிரயோஜனம் இல்லாமல் உணர ஆரம்பித்து விடுவார்கள்...
ஆகவே, ஒவ்வொரு நாளையும் விழா போல அனுஷ்ட்டித்துப் பழக்குவோம் நம் குழந்தைகளுக்கு... நம் பகுத்தறிவுகளை இப்போதே அவர்களுள் திணித்து அவர்களையும் குழப்ப வேண்டாமே...!!


சுந்தரவடிவேலு.
திருப்பூர்..

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...