Wednesday, December 24, 2014

k .பாலச்சந்தர்

இயக்குனர் சிகரம்..
எத்தனையோ அடிவாரங்களை கைபிடித்து உச்சியில் நிறுத்திய பெருமை இந்த சிகரத்துக்கு எப்போதும் உண்டு..
சார்த்தியே கிடந்த எத்தனையோ பத்தாம்பசலி ஜன்னல்களை தமது யதார்த்தக் காற்றை அனுப்பி திறக்க வைத்த தீர்க்கதரிசி..

வாழ்க்கை நெடுக வேலி எனப் படர்ந்து கிடந்த எவ்வளவோ இம்சை நிரம்பிய முடிச்சுக்களை சுலபத்தில் களைந்த சூத்திரதாரி.. !

காதலானாலும் காமமானாலும் தன்னுடைய படங்களில் மாத்திரமே அதன் வீரியம் முழுதையும் பிழிந்து திரையில் தாரை வார்த்துக் கொடுக்கிற பெரும் கலைஞன்.. நிழல்களை அப்படி தத்ரூபமாக நேசித்து, மற்றவர்களையும் தனது போக்கிலே பயணிக்க செய்த திறமைசாலி..

நிஜவாழ்வில் எவ்வித அவதூறுகளையும் சந்தித்திராத மாண்பு மிகு இயக்குனர் இவர்.. அகம்பாவமோ கர்வமோ எதுவாயினும் தன்னுள்ளேயே ரகசியப் படுத்தி, காமெராவில் இவர் கொணர்கிற கோணங்கள் யாவும் பெண்மை குறித்த மேன்மைகளையும் மென்மைகளையுமே அன்றி வேறொன்றறியோம் பராபரமே..!!

செல்லுலாய்டு என்கிற விஷயமே தமது வாழ்வில் புக நேர்ந்திடாத அன்றைய மகாகவியின் அனேக எழுச்சி மிகு கவிதைகளுக்கும் அற்புத தளங்களும் காட்சிகளும்  சம்பவங்களும் அமைத்துக் கொடுத்த நவீனகால பாரதி இந்த பாலச்சந்தர் ... 

இப்படியான செழுமை நிரம்பிய ஒரு கலைஞனுக்கு  காலம் மிகப் பெரும் ஆயுளைக் கொடுத்து நிறைவு வரைக்குமான அவரது படைப்புக்களை வெளிக் கொணர்ந்து  நம்மை எல்லாம் திகட்டத் திகட்ட ரசிக்கச் செய்து விட்டுத் தான் காலம் அவரை அழைத்துக் கொண்டது என்கிற உண்மையை உணர்வோமாக..!

யாரது பிரார்த்தனைகளும் அற்று இவரது ஆத்மா சாந்தி பெறக் கூடும் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லை எனிலும், அதனையும் மீறி இவருக்காகப் பிரார்த்தித்து  விடுவதில் தான் எல்லாருக்கும் விருப்பம்.. !!




Thursday, December 18, 2014

கி.பி ..[one page story?]

அது பரம்பரைக் கோடீஸ்வரர்கள் பங்களா.. 
அங்கே கொடுத்து வைத்த பயல் ஒருவன்.. நான்கைந்து வருடங்கள் முன்னர் பதின்களைத் தொட்டிருக்கும் பதினாறு வயதுக் காளை .. 
கிருஷ்ணபிரஸாத் என்கிற நாமம்.. 
'மைனர் கி.பி.' என்றால் பங்களாவிலும் பயில்கிற பள்ளியிலும் மகா பிரபலம்.. 
வீட்டைத் துப்புரவு செய்கிற கமலா உடலுக்கு முடியலை என்பதால் தனது ஏழாப்பு படிக்கிற சரண்யாவை அன்று அனுப்பி வைக்கவே.. 
மைனருக்கு மண்டை காய்ந்தது.. !
"ஏன் உங்க அம்மா இன்னைக்கு வரலையா ?" என்று கேட்டான் சரண்யாவிடம் 
வந்ததும் வராததுமாக.. 
"ஒடம்புக்கு சரி இல்லேங்க சின்ன எஜமான் " என்றாள் .. 
"நாளைக்காச்சும் வந்துடுவாங்களா?"
"வருவாங்க எஜமான்"
தன்னுடைய மடிப்புக் கலையாத பைஜாமா , அதிலே தெளிக்கப் பட்ட ஃபாப்ரிக் செண்ட் , தனது உடம்புக்கு அடித்துக் கொண்ட பாடி ஸ்ப்ரே எல்லாம் வீண் என்பது போன்று "இச்' கொட்டி நகர்ந்து கொண்டார் மைனர்.. 

10 ஆண்டுகளுக்குப் பிறகு ..  

அதே கோடீஸ்வர பங்களா.. 
26 வயதாகிற நம்ம "மேஜர் கி.பி." 
அப்போது தான் தனது கல்லூரி நண்பர்களோடு தமது 'ஆடி' காரில் பக்கத்துப் பிக்னிக் ஸ்பாட்டுக்கு சென்று விட்டுத் திரும்பினார்.. 
யாருடனோ சிரித்தவாறு மொபைலில் பேசியவாறே உள்ளே புகுந்த மேஜர், கமலாம்மா தமது அறையை துடைத்துக் கொண்டிருந்தது கண்டு டென்ஷன் ஆகிப் போனார்.. 
"ஏம்மா இன்னைக்கு சரண்யா வரலையா?"
"நாளைக்கு  வந்துடுவாய்யா.. இன்னைக்கு கொஞ்சம் ஒடம்புக்கு முடியலை"
"நாளைக்கு முடியாட்டியும் அனுப்பி வையுங்க.. எங்க ஃபேமிலி டாக்டரை வரவச்சு பார்க்கறோம்"
"சரிங்க  சின்ன எஜமான் . ரொம்ப நன்றிங்க.. "


Tuesday, December 16, 2014

ஒரு விவசாயி எழுதிய காதல் கவிதை..

என் கன்னக் காடுகளில் 
உன் முத்தமழை.. 
என் சேற்றுக் கன்னங்களில் 
உன் முத்தத் தாமரைகள்... 
என் தேனடைக் கன்னங்களில் 
உன் முத்தத் தேனீக்கள்.. !!

மழை பெய்த என் 
கன்னக் காடுகளில் 
உமது முத்த வெள்ளாமை.. !

பிறகு--
எனது வெள்ளாமைக் கன்னங்களில் 
ஊடுபயிராய் உமது முத்தங்கள்.. 

இன்னும் பிறகு---
பிடுங்கி எறியப் படவேண்டிய 
களைகளாக உமது முத்தங்கள்... !!

--மனச் சலிப்பை நிகழ்த்துகிற 
சுரப்பிகளை நீக்கியாக வேண்டும் 
மனிதனிடத்து...!
அல்லவெனில்-
நாறுவதை மணக்கிறதென்பான்.. 
மணப்பதை நாறுகிறதென்பான்.. !!

Sunday, December 7, 2014

உள்காயங்கள்..

சில வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு சிறு கவிதை.. என்னுடைய கவிதையின் கரு சிலருக்குப் புரியாமலும், சிலருக்குப் புரிந்தும் புரியாமலும் , நன்கு  புரிந்த சிலருக்கு எரிச்சலும்... ]

.. 
எனக்குள்ளான கவிஞனை 
பெண் ஒருத்தியே 
எப்போதும் தட்டி எழுப்புகிறாள்.. !

பூப் பெய்து விடும் முன்னரே 
மூப்படைந்தது போன்ற 
என் அவசர கவிதைகள் 
குறித்து எப்போதும் 
கவலை எனக்கு..!!
ஸ்ருங்காரமும் ஒய்யாரமும் 
ஒருங்கிழைய நான் புனைய 
முனைந்த  போதிலும் 
அரிதாரம் உதிர்ந்துபோன 
சுருங்கிய முகத்துடனும் 
ஊன்றுகோலுடனுமே 
தட்டுத் தடுமாறுகிறது 
என் கவிதை.. !!

ஆன்மாவின் விலாசமாக 
அமையக் கூடுமென்று 
நான் அனுமானித்திருந்த 
எனது கவிதை, 
எலும்புக் கூடாக 
பயமுறுத்துகிறது மனதை..!

சாமானியர்கள் புரிபடாமலும் 
புரிந்தவர்கள் எரிச்சலுற்றும் 
தடம்புரண்டும், புரையோடியும் 
படுகாயமாகிக் கிடக்கின்றன 
கவிதைகள்.. 
அப்படியாக மூர்ச்சையாகிக் 
கிடக்கிற எனக்குள்ளான 
கவிஞனை ஏன் தான் 
அவ்வப்போது இந்த 
அழகிய பெண்கள் தட்டித் 
தட்டி எழுப்பி எனக்குள் 
ஒரு ஸ்மரணையையும் 
தாங்கொணா வலிகளையும் 
கொணர்ந்து இம்சிக்கிறார்களோ 
புரியவில்லை...!!

Tuesday, December 2, 2014

ஒரு எளியவனின் கவிதை..

ஒரு எளிய 
மனிதன் சிந்திப்பது 
கூட 'கவிதை' யாகலாம்.. 
ஆனால்,  
ஒரு பிரபல கவிஞனின் 
வெறுமை ஒருக்காலும் 
கவிதையாகாது .. !!

ஆனால் 
புனைகிற ஆற்றலற்ற 
எளியவனின் சிந்தனை 
ஒரு நல்ல 
கவிதையாக மலர 
சாத்யமற்றுப் போகலாம்.. 
 அதே வேளையில் 
--வெறுமையின் 
வெப்பத்தைக் கூட 
தனது கவிதைத் 
திறனால் 
பனிக்கட்டிக்குள் 
திணித்து கவிஞன் 
படைத்து விடலாம்..!!?

வாழ்க்கையே இப்படித்தான்.. 
அனுபவங்களின் நிமித்தமாக 
அசாத்திய சூழல்கள்  கூட 
வசப் பட்ட  சுலபத்தில் அமைந்து 
விடக் கூடும்.. 

அனுபவமின்மையால் 
கிடைக்கப் பெற்ற 
அற்புத சந்தர்ப்பங்கள்  கூட 
கைநழுவிய பழமாக 
சேற்றினுள் புதையுண்டு 
போக நேரும்.. !!

Saturday, November 29, 2014

ஆன்மீகக் குழப்பங்கள்..

எல்லா ஜீவராசிகளின் மூலாதாரங்களையும்  சற்று கண்மூடி யோசிக்கையில், நம்மில் பீறிடுகிற ஆச்சர்ய உணர்வு நம்மையே பிய்த்தெறிந்து விடும் போலும்..!
நமக்காவது ஆதாம் ஏவாள் முதற்கண் படைக்கப் பெற்றனர்.. பிற்பாடு ஆப்பிள் ஆதாமால் உண்ணப் பட்டு மனித இனம் பெருகிற்று என்கிற அந்த ஆறாமறிவு புனைந்து வைத்துள்ள கற்பனையையோ --ஒருக்கால்-- உண்மையையோ நாம் சேகரித்து வைத்திருக்கிறோம் உத்தேசமாக.. !

ஆனால் இன்னபிற ஜீவராசிகளுக்கு? அவைகளுக்கும் மனிதனே தான் ஏதேனும் கட்டுக் கதைகள் புனைந்தாக வேண்டும்.. புனைந்து அவைகள் தான் மிகவும் உண்மை என்பது போன்று நிரூபித்தாக வேண்டியுள்ளது..

இத்தனை கோடி ஜீவராசிகள் இருக்கின்றன..
நம் பெற்றோர் சேராமல் நாமில்லை.. நாம் சேராமல் நம் பிள்ளை இல்லை.. நம் பிள்ளைகள் சேராமல் நமக்குப் பேரன் பேத்திகள் இல்லை..
இதே முறை மற்ற ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.. !

ஆனால்----

இந்த எல்லா ஜீவராசிகளும் பெற்றவர்களே இல்லாமல் முதல் உற்பத்தி ஒன்று நிகழ்ந்துள்ள அதிசயம் யோசிக்கையில், அங்கே தெய்வம் நம்பப் படுகிறது..

அதன் தொடர்ச்சியாக மக்களால் தெய்வங்கள் பல கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு உட்படுத்தப் பட்டன.. உருவங்கள் பொறிக்கப் பட்டன.. கற்சிலைகள் செதுக்கப் பட்டன..
மனிதன் தெய்வங்களுக்கு பல பரிமாணங்கள் மற்றும்  பரிணாமங்களைக் கொடுத்தான்.. பல சக்திகளைக் கொடுத்தான்.. அரிவாளை, சூலத்தை, குத்தீட்டியை .. என்று உபகரணங்களை வழங்கினான். நிராயுதபாணியாக நின்ற கடவுளின் கைகளில் ஆயுதங்களைத் திணித்து முகங்களில் குரூரம் கொப்பளிக்கச் செய்தான்.. தவறு செய்கிற--- குற்ற உணர்வு கொண்ட நபர்களை மிரளச் செய்தான்.. ! இது இன்னொரு மனித சிற்பியால் புனையப் பட்ட ரௌத்ர தோரணை என்பதைக் கூடப் புரிந்தும் புரியாத ஒரு தன்மையில் பொறி கலங்கிப் போனான்.

அவனே சிலைகளைப் படைத்து அவனே அதற்கு பயந்து நெற்றியில் குட்டி காதுகள் கவ்விப் பிடித்து  'தோப்புக்கரணம் ' போடுகிறான்..
கோவணத்தைக் கட்டிவிட்டு 'ஆண்டிக் கோலம்' என்று அபசகுணம் போன்று அங்கலாய்க்கிறான் .. ராஜ அலங்காரம் செய்து விட்டு 'அதி அற்புத தரிசனம் என்று புளகித்துக் கொள்கிறான்..

கடவுளுமே இப்படித்தானே .... பாரபட்சங்களோடு தானே நம்மைப் படைத்திருக்கிறான்?? 

Wednesday, November 26, 2014

சின்னதாய் ஒரு சிந்தனை..

ட்டெறும்பை நசுக்கி துவம்சம் செய்யப் பிரயத்தனித்த என் 6 வயது மகளிடம் அவசரகதியாக நான் சொன்னேன்.. 
"பாப்பா அதை நசுக்காதே.. அப்புறம், அதை காணோம் என்று அதன் அம்மா எறும்பு தேடும்.. காணவில்லை என்று கவலைப் படும்.. செத்துப் போய் விட்டது தெரிய வந்தால் சோகத்தில் கதறி அழும்.. ப்ளீஸ் விட்டுடு பாப்பா.. "

இப்படி நான் சொன்னதும் அவள் அதை விட்டுவிட்டாள் .. எனக்குமே கூட நான் அப்படி ஒரு கற்பனையோடு சொன்னது சற்று ஆச்சர்யமாக இருந்தது.. 
அது நான் அனுமானித்தது போல கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே இருந்து விட்டால்?.. 

குட்டியைக் காணவில்லை என்று நாய் அலைமோதுவது இல்லையா?.. கன்று கண்ட பசு பாலை சுரப்பதில்லையா?.. பசுவைக் கண்ட கன்று பரவசமாகித் துள்ளிக் குதிப்பதில்லையா?

ஆனால் ஈக்கும் எறும்புக்கும்  மாத்திரம் எதுவுமில்லை போன்றே நமதறிவுக்கு எட்டுவது வேடிக்கையாக இல்லை?.. 
சுரவிய தேங்காயின் துகள் கீழே சிதறிவிட்ட அடுத்த நிமிடம் வரிசை கட்டிக் கொண்டு படர்ந்து விடுகிற எறும்புக் கூட்டத்தின் அறிவு கவனிக்கையில், நிச்சயம்  அவைகளுக்குள்ளும் ஒரு பிரம்மாண்ட உலகம் விரிந்து கிடக்கக் கூடும் என்கிற சிந்தனை துளிர்க்கிறது.. 

Monday, November 24, 2014

கமல்ஹாசன் ..

நவம்பர் 7.. கமல்ஹாசன் பிறந்த நாள்.
அன்று முதலே கமல் குறித்தும், அவரது இந்த அறுபது வயது காலம் வரைக்குமான சாதனைகளையும் என்னால் முடிந்த வரைக்கும் சொல்லிப் பார்க்கலாம் என்றொரு அவா பீறிட... ஆனால் அது இயலாமலே போய் விட்டது..    

பிறந்தநாள் முடிந்து இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன..
அதனால் என்ன?.. கமல் குறித்து சொல்வதற்கு கால நேர அவகாசங்கள் எதற்கு?

விஜய் , அஜித்தை எல்லாம் டபுள் ஆக்ட் பார்ப்பதற்கே கந்தலாக உள்ளது..
சிங்கிள் ஆக்ட் செய்தாலே. அவர்களது காட்சிகள் மொக்கையாக உணரப் பட்டு, ஹீரோயினையோ , காமெடியனையோ காண்பித்தால் பரவா இல்லே என்று தோன்றுகிற அளவுக்குத் தான் உள்ளனர் இன்றைய சூப்பர் ஸ்டார்கள்..

ஆனால் அன்றைய ஸ்டாரான கமலோ .. இன்று நினைத்தாலும் புல்லரிக்கிற விதமாகத் தான் இருக்கிறார் மனசுள்..
தசாவதாரத்தில் 10 கேரக்டர்கள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனையோடு மிளிர்கிற அந்த சூட்சுமம் வேறெந்த தமிழ் நடிகர்களும் கனவோ கற்பனையோ கூட காண்பதற்கு சாத்தியப் படாத வகையிலே அமைந்திருந்தன என்றால் மிகையன்று.. !!

எந்த  பாவமானாலும் சுலபத்தில் அதனைப் பிரதிபலித்துக் காண்பிக்கிற கமலின் திறன்..
அண்ணாத்தே ஆடறார் குத்துப்பாட்டானாலும், வானிலே தேனிலா நளின ஸ்டெப்  ஆட்டமானாலும், சலங்கை ஒலி பரதநாட்டியப் பாடல்களானாலும் தத்ரூபமாக தன்னை அவைகளில் இழைத்துக் கொண்டு பணியாற்றுகிற அவரின்  சாமர்த்தியம் ... அவைகளை வர்ணிக்க வீரியம் போதாது வார்த்தைகளுக்கு.. !

அன்றைய களத்தூர் கண்ணம்மாவில் துவங்கி, நிழல் நிஜமாகிறது போன்ற படங்களில் இலக்கிய கூர்மை பொதிந்த வசனங்களோடு .. பிறகு சப்பாணிக் கிறுக்கனாக  16 வயதினிலே .. ஸ்ரீ தேவி யுடனான காதல் ரசம் ததும்பிய படங்கள்., அப்புறம் காலத்துக்கு ஏற்ற சிற்சில ஆந்திரக் கார மசாலாக்கள்..

இன்றைய நவீன யுகத்துக்கும் சுலபமாக விருந்து படைக்கிற அவரது ஆற்றல் நம்மை எல்லாம்  பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது..
கமலின் சமகாலத்திய நடிகர்கள் பலர் இருக்கலாம். நம்ம சூப்பர் ஸ்டார் உட்பட.. ரஜினியின் புகழும் சம்பாதியமும் வேண்டுமானால் கமலைக் காட்டிலும் பலமடங்கு எகிறி இருக்கலாம். நான் இங்கே வியாபாரங்கள் குறித்து பேச வரவில்லை..
அடர்ந்த கலைத்  திறன்களும் அவர்களுடைய மேதாவிலாசங்களுமே இங்கே அலசப் பெறுகின்றன..

பலரது ஆற்றல்கள் அடையாளப் படாமலேயே தொலைந்து போயிருக்கின்றன.. அல்லது களவாடப் பட்டுள்ளன.. களவாடியவர்கள் அதனை தன்னுடயாதாக தம்பட்டமடித்து அதன் நிமித்தமாக பிரபலம் கூட ஆகி இருக்கக்  கூடும்..
ஆனால் கமலுக்கு அப்படி எந்த அவதூறுகளும்  நிகழவில்லை என்பது  அற்புத விஷயம். அவரின் ஆற்றல்கள் உணரப் பட்டன.., படுகின்றன..!
அவரிடம் எவரும் களவாட முயன்று இதுவரை ஜெயித்ததில்லை.. அவரது தனித்துவம் என்பது நடிப்பு சம்பந்தப் பட்ட விஷயங்கள் மட்டுமன்று.. பல பரிமாணங்கள்  அவரை நம்மிடம் உயர்த்திக் காண்பிக்கின்றன..
அரசியல் விரும்பாத, அரசியல் புரியாத, அவரது கலைதாகம் , அந்த தாகத்தை இன்றளவும் அவர் ஒரு குழந்தை பால்பசியில் வீறிடுவது போன்ற தாகத்திலேயே  வைத்துக் கையாள்கிறார் என்பது பொருந்தும்..

சினிமாக்களில் சாதிவாரியாக  அவர் கையாண்ட விதம், அதற்கென அவர் பேசிய வசனங்கள் .. என்று பலவகயறா விஷயங்கள் பற்பல காட்டமான விமரிசனங்களுக்கும் எதிர்ப்பலைகளுக்கும் ஆளாகி, அவரை தர்மசங்கடங்களுக்குள் மூழ்கிடச்  செய்துள்ளன.., அந்தத் தடைகளை எல்லாம் சுலபத்தில் களைந்து விட்டு தமது கருத்துச் செறிவுகளை திரையில் மிளிரச் செய்த அவரின் மாண்பு மகத்தானதே..!!

 அவருக்கு வாய்க்கப் பெற்ற மனைவிகள், மகள்கள், மற்றும் இதர
தனிப்பட்ட அவரது வாழ்வுச் சூழல்கள்.. அவருக்கு தலைகுனிவையோ , நிமிர்ந்து  நடக்கிற வகையிலோ எவ்விதம் வேண்டுமாயினும் நிகழ்ந்திருக்கலாம்.. அவைகளைப் பொருட்டாக்கி அவரது கலை உணர்வுகளைக்  கொச்சைப் படுத்த முயல்வதோ, இன்னபிற துஷ்ப்ரயோகம் செய்வதோ  மற்றவர்களுக்கு மிக எளிதான நடைமுறை.. ஆனால், அதன் நிமித்தமாக ஒரு தேர்ந்த  கலைஞன் காயப் படக்கூடுமே என்கிற கவலையோ பயமோ கிஞ்சிற்று கூட அற்ற அவருடைய எதிராளிகள் மிகப் பெரும் வன்முறையாளர்களே எனில் அது மிகையன்று..!!

சூரியனையே கூடக் குறைகூறும் கயவர்கள் இருக்கத்தானே இருக்கிறார்கள்??  ஆனால் அன்றாடம் சூரிய நமஸ்காரம் செய்கிறவர்களும் அதைவிட அதிகம் பேர் இருக்கிறார்கள்  என்பதை ஞாபகம் வைப்போம்.. !!

Friday, November 21, 2014

வெள்ளை இருட்டு..

எங்கெங்கிலும்
வியாபித்திருக்கிற
வெறுமை குறித்த
பிரக்ஞை எவர்க்குமில்லை...

-வீரியமில்லாத
பிரச்னைகள் குறித்து
மிகவும் குவிக்கப்
பட்டுள்ளன எல்லாரது
இதயங்களும்...

கவனிக்கப் படாத
அடர்ந்த இருளினூடே
கிஞ்சிற்று சிதறிக்
கிடக்கிற வெளிச்சம்
குறித்து அதீத கவனம்
எல்லாருக்கும்..

வெளிச்சம்
அணையக் காத்திருக்கிறது..
இருளோடு ஐக்கியமாக
முயல்கிறது..

இருட்டுக்கு ஒன்றும்
வெளிச்சம் தேவைப் படாது.
வெளிச்சம் மட்டுமே
எப்போதும் இருட்டை
விரட்டுகிற முயற்சியிலேயே
இருட்டோடு கரைந்து போகும்.. !!


Sunday, November 16, 2014

எச்சரிக்கைமணி ....

களிர் பேருந்துகள் போன்று மகளிர் கோவில்கள் வரவேண்டும்.. 
ஆண்களுக்குத் தனி என்பதாக கோவில்கள்.. 
அங்கே பக்தி எண்ணங்கள் மாத்திரமே பிரசன்னமாகும்.. எதிரினங்களின் அவஸ்தை அற்று இரு பாலரும் தத்தம் பிரார்த்தனைகளை கடவுளின் முன்பு சமர்ப்பித்து விட்டு வெளிவருகிற வாய்ப்பாக அது அமையும்.. 

அல்லது குறைந்த பட்சம் இந்தக் கோவில் இந்தக் குறிப்பிட்ட நாட்களில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்... வேண்டுமானால் தம்பதி சகிதமாக வரலாம்..  தனித்து வருகிற ஆண்களோ பெண்களோ வேறு வேறு நாட்களில் தான் அனுமதிக்கப் பெறுவர் .. 

நடைமுறைக்கு ஒவ்வாத, சாத்தியப் படாத இப்படியான திட்டங்கள் மனசுள் சூழ்கின்றன.. 
ஏனெனில், கோவில்களில் பக்தியைக் காட்டிலும் காமம் கரைபுரண்டோடுகிறது.. சபலிஷ்டுகளின் ஆதிக்கம் பெருவாரியாக இருப்பதை கவனிக்க நேர்கிறது.. உண்மை பக்தியோடு வருகிற சிலரின் மனங்களைக் கூட சலனப் படுத்துகிற விதமாக தவறானவர்கள் நடந்து கொள்கிறார்கள்.. 

நமது ஹிந்துக் கோவில்களுக்குப் போய் விட்டுத் திரும்ப மசூதி வழியாக வருகையில் அங்கே நிகழ்கிற தொழுகைகள் ஆண்களை மட்டுமே சார்ந்து நிகழ்வதால் இவ்வித அவா நமக்கும் எழுகிறதோ என்று தோன்றுகிறது.. 
பெண்களற்ற அந்தப் பிராந்தியம் ஆண்களின் பக்தி எண்ணங்களில் திளைப்பதாகப் படுகிறது.. 

இந்த வரைமுறை நமது கலாசாரத்தில் இழந்து காணப் படுவது புதிராக உள்ளது.. இதே முறை, நமது பக்தி மார்க்கத்திலும் புகுந்திருக்கும் பட்சத்தில் கோவில்கள் மன அழுக்குகள் குவிந்து காணப் பட்டிருக்காது.. 

ஐயப்பன் கோவிலுக்கு  மாலை அணிந்து போவது கூட உண்மையான பக்திப் பிரயாணமாக மனசு ஏற்கிறது.. ஒருக்கால் அந்தக் கோவில் நமது மாநிலம் பெயர்ந்து  கேரளத்தில் வீற்றிருப்பதால் அவ்வித ஒழுக்கவிதி கைகூடிற்றோ என்னவோ .. இருக்கலாம்..  .அதுவே நமது மாநிலத்தில் அமைந்திருக்கும் பட்சத்தில்  விதிகள் இன்னும் தளர்த்தப் பெற்று வேறு பல வக்கிரங்கள் நிகழ ஏதுவாக  அமைந்திருக்கலாம்.. நல்லவேளை.. !

அம்மாவாசை, பிரதோஷம், பவுர்ணமி என்று மாதங்கள் தோறும் தொடர்ந்து வருகிற  விழாக்கால கோவில் கூட்டங்களில் .. சரி , இருபாலருமே வரட்டும்.. 
ஆனால், பெண்கள் வலதுபுறம், ஆண்கள் இடதுபுறம் என்கிற ஒரு முறை கூட தீவிரமாக  பின்பற்றப் படாத விதமாக எல்லாரும் கலந்து இருபுறங்களிலும் அலைமோதுகிற விதத்திலேயே  கோவில் நிர்வாகங்கள் அனுமதிப்பது என்ன நியாய முறை என்று புலனாகவில்லை.. !

வியர்வைக் கசிவினூடே விபூதி வாங்க அவசரப் படுவதும், அதிலே தள்ளுமுள்ளு நடந்து பெண்களின் உபகரணங்கள் களவாடப் படுவதும் பிறகு குய்யோ முறையோ  என்று புலம்பித் தீர்ப்பதும், .. இதே விதமாக, பிரசாத விநியோகங்களின் போதிலும் .. 'குப்பைத் தொட்டியில் எச்சிலை விழுந்ததும் அதனைக் கவ்வ  தெறித்தோடுகிற நாய்க் கூட்டங்கள் '  போன்று முந்தியடிப்பதும்.. 

மிக சாதாரண அடிப்படை ஒழுக்கங்கள் கூட நாமின்னும் கற்காத இந்தத் தருணத்தில் .. நமது குழந்தைகள் தமிழ் படிப்பதையும் பேசுவதையும் கூட தவிர்க்கச் சொல்லி  ஆங்கிலத்தில் பிதற்ற வேண்டுமென்கிறோம்.. அதற்காக அகமலர்கிறோம்.. 

எல்லா அநாகரீகங்களையும் ரகசியமாக சுலபத்தில் அரங்கேற்றி விடுகிற நாம், நமது சந்ததிகள் மாத்திரம் உயர் ரக வாழ்வினை அனுசரிக்க வேண்டுமென்று  மெனக்கெடுகிறோம்.. 

நம்முடைய முடைநாற்றம் நமது பிள்ளைகளுக்குத் தெரிய வருகையில் நமது மூஞ்சிகளில் ஒன்று அவர்கள் காரி உமிழ்வார்கள்.. அல்லது அவர்களும் நம்மோடு கைகோர்த்து  சேற்றுள் இறங்குவார்கள்.. !

ஜாக்கிரதை..!!!

Tuesday, November 11, 2014

பரஸ்பர...

நாமெல்லாம் 
மரணத்தின் குழந்தைகள்....!

நாம் கோபிக்கிறோம் 
மதிப்பதில்லை 
வரவேற்க விரும்புவதில்லை 
என்பதற்காக 
மரணங்கள் நம்மைக் 
கோபிப்பதில்லை ... 

நம்மை எல்லாம் 
மதித்து வரவேற்கிற 
மாண்பு மரணத்திடம் 
என்றென்றும் நிரம்பித் 
ததும்புகிறது.. 
ஒரு குழந்தையினுடைய 
உதைகளைப் போன்று 
நமது எதிர்ப்பை 
ரசிக்கின்றது மரணம்.. 

பள்ளி செல்ல அடம்பிடிக்கிற 
எல்.கே.ஜி. குழந்தைகளாகிறோம் 
மரணத்திடம் நாம்.. 

வாழ்க்கையின் வலிகளை 
நிறைவு செய்துவிட்டுப் 
புறப்படத் தூண்டுகிற மரணத்தை 
ஏனோ நாமின்னும் 
பரமவைரி போன்றே பாவிக்கிறோம்.. 

உடலெனும் பையில் 
உயிரை ஜேப்படி செய்கிற 
மரணத் திருடனை 
தண்டிக்கிற போலீஸ் 
ஏழேழு லோகங்களிலும் காணோம்.. 

இன்னும் இன்னும் 
பிறப்புண்டு என்கிற 
நம்பிக்கைகளும் 
பிறவா வரமே வேண்டும்
என்கிற பிரார்த்தனைகளும் 
தொன்று தொட்ட 
நிகழ்வாகத் தொடர்கின்றன.. 

ஒரே பிறப்பு 
ஒரே மரணம் 
என்கிற கணக்கு மட்டுமே 
உள்ளதென்ற உண்மை ....

பரஸ்பரம் பிறப்புக்கும் 
இறப்புக்கும் மட்டுமே 
புரிந்த உண்மையாகக் 
கூட இருக்கக் கூடும்.. !!   ??...                                                                                                                                                                                                                                           

Wednesday, November 5, 2014

ரூம் போட்டு யோசிச்சேன்.. ??

முன்குறிப்பு.. 
boss .. இது என்னோட ஸ்மால் இமேஜினேஷன்.. எங்கயாச்சும் என்னோட ஓன் எக்ஸ்பீரியன்ஸ் ன்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க.. 

பைக்கில் போய்க் கொண்டிருக்கையில், சூப்பர் ஃபிகர் ஒன்று தன்னை சில பல கி.மீ. தள்ளி ட்ராப் செய்ய சொல்கையில், எவனாவது 'ஸாரி மேடம் .. நீங்க நடந்தே போங்க.. நான் மாட்டேன்' என்று சொல்கிறவன் இந்தப் பிரபஞ்சத்தில் தேடினாலும் கிடைப்பானா?

'நடக்க முடியாமல் தள்ளாடுகிற ஒரு நோயாளியை, ஒரு வயதான கிழவன் கிழவியை மாத்திரம் தான் என்னால் ட்ராப் செய்ய  முடியும்.. நீங்கள் வேறு யாரையாவது ட்ராப் செய்யச் சொல்லுங்கள்' 
என்று சொல்கிற மனிதனை எப்படிப் பட்ட பேரழகியும் மணந்து கொள்ளலாம்.. 
ஆனா நைனா, நாட்டுநடப்பு அப்டி இல்லே... பேஞ்ச மழைக்கு இளப்பு வந்து மூச்சு விடறதே சிரமமா இருக்கற அம்மாவ அவசரமா ஆசுபத்திரிக்கு பைக்ல வச்சு கூட்டிக்கிட்டு போற போதே, ஒரு வத்தல் ஃபிகர் கையைக் காட்டி 'அண்ணே.. அவசரமா ராயல் தியேட்டர் போகணும்.. படம் போட்ருவான் .. ஆயாவ கொஞ்சம் வெய்டிங்ல போட்டுக்கிட்டு ட்ராப் பண்ணிடுங்க' என்றாலே போதும்.. 
'அம்மா நீ அப்டியே அந்த மரத்தடியில குந்திக்கினு இரு.. இந்த பாப்பாவ விட்டுட்டு வந்துடறேன்.. அப்டி யாராச்சும் உன்னை ஆஸ்பத்திரியில போயி விடறதா இருந்தா ஓகே சொல்லி ஏறிக்க .. நான் டைரக்டா அங்க வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்.. பெட்ரோல் போட ஒரு அம்பதோ நூறோ சுருக்குப் பய்யில இருந்தா குடு'.. என்பான் என்றால்..  

-இப்டி ஒரு மனுஷனை குஷ்டம் புடிச்ச விபச்சாரி கூட கட்டிக்க மாட்டாள்.. 

ஆனா உலகம் அப்டியா இருக்கு?.. செட் ஆகற சல்லி ஃபிகர் கூட, பார்ட்டி வெய்டானவனா ன்னு தான் ஸ்கேன் பண்ணிப் பார்க்குதுக.. இருக்கற கோவணத்தையும் உருவி ரிப்பனா கட்டிக்கத்தான் நெனைக்குதுக தவிர, 'இந்தா.. உன்னோட பொண்டாட்டி புள்ளைங்களுக்கு எதாச்சும் வாங்கிட்டுப் போ' ன்னு அன்பா ஆதரவா எந்தப் பொம்பளையும் பேசறதா காணோம்.. 

அப்டி பேசறவளா, பேசி மனசார செய்யறவளா இருந்தா நிச்சயம் அவளை 2 வதா கூடக் கட்டிக்கலாம்.. ?? ஹிஹி.. 


Monday, November 3, 2014

கத்தி.. film review..

கத்தி பார்த்தனுங்கண்ணா ....
கழுத்தை அறுத்துட்டாங்க.. விஜய் , முருகதாஸ், அனிருத், இப்படிக் கூட்டுக் கலவையோடு கூட்டுக் களவாணிகள் போன்று மனுஷனை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டிருக்கிற இவர்களது கைங்கர்யம் தாங்கலைப்பா  ரகம் ...

என்னவோ நாட்டை திருத்தறேன் பேர்வழி என்று இருக்கறவனை கொடஞ்சு எடுத்துட்டாங்க..
தெளிவில்லாத பாடல்கள்.. , எரிச்சலூட்டும் இரைச்சல் பின்னணி இசை. 

டபுள் ஆக்ட் விஜய் .. எதற்கு டபுள், எப்டி டபுள் என்பவை எல்லாம் அன்றைய எம்ஜியார் சிவாஜி படங்களில் தான் விளக்கியாக வேண்டும்.. இங்கெல்லாம் அது ஹ்ம் ஹ்ம் ... 

ஒருத்தர் பரம சாதுவாம், படிப்பாளியாம்.. இன்னொருத்தர், ஜெயில் கைதியாம், ஆனால் அந்தப் படிப்பாளி விஜய்க்கு பதிலாக வந்து கச்சை கட்டிக் கொண்டு அசத்துகிறாராம்.. 

படம் நெடுக அத்தனை விவசாய வயோதிகர்கள்.., அவர்களது அஹிம்சைப் போராட்டங்கள், அரசாங்கத்தை திருப்புவதற்கான தற்கொலைகள்.. 
விவசாயிகளின் அன்றாட அல்லல்களை, மேற்கொண்டு நாட்டில் விவசாயத்தை நிலைநிறுத்த வேண்டுமென்கிற அதி தீவிரப் பிரச்சாரமாக இந்தப் படம் பிரதிபலித்துக் காண்பிக்க வேண்டுமென்று மிகமிக மெனக்கெட்டு இருக்கிற முருகதாஸ் குழுவுக்கு பாராட்டுக்கள் எனிலும், அவர்கள் அனுமானித்த மாதிரி அப்படி பிரம்மாதவாகவெல்லாம் இந்தப் படம் எதையும் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை.. 

படத்தின் ஆரம்ப அரைமணி முக்கால்மணி நேரங்கள் பக்கா அமெச்சூராக ....
முந்தைய பல ஹிட் படங்கள் கொடுத்த ஒரு தேர்ந்த டைரக்டரின் எந்த அடையாளங்களும் அற்று , ஒரு சாதாரண குறும்படம் எடுக்கிற மண்டு டைரக்டரின்  காட்சி அமைப்பு போன்று சொதப்பலாக இருந்தது.. 

பிற்பாடு மெஸேஜ் ஒன்னு சொல்றேன் பாருன்னு சொல்றாரு சொல்றாரு.. நெசமாலுமே பட டைட்டில் மாதிரியே தான் படமும்.. 
கொஞ்சம் ஷார்ப்பா கத்தியத் தீட்டி கழுத்தை அறுத்திருந்தா கூட உடனடியா செத்துப் போயிருக்கலாம்... ஆனா, ஒரு மொன்னக் கத்திய வச்சுக்கிட்டு போட்டு ராவுன ராவுல நம்மை எல்லாம் கொத்துசுரா கொலையுசுரா ரணகளம் பண்ணுன புண்ணியம் முருகதாஸ் விஜய் குழுவையே சாரும்.. 

இதையெல்லாம் பார்த்த பெறகு விவசாயிக பண்றாங்களோ இல்லையோ நாம  சூஸைட் பண்ணனும் போல ஒரு வெறி, ஒரு வெறுமை படம் விட்டு வெளி வருகையில் படர்வதை தவிர்க்க முடியவில்லை.. 

ஆனால், நல்லவேளையாக ஆண்டவன் நமக்கெல்லாம் வாரி வழங்கி இருக்கிற அந்த மறதி  என்கிற ஆயுதத்தை வைத்துக் கொண்டு முடிந்த வரைக்கும் இந்த மாதிரியான படங்களுக்கு உபயோகிக்க வேண்டியாகிறது.. இதையெல்லாம்  மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பவன், நிச்சயம்  முருகதாஸுக்கு  அசிஸ்டன்ட் ஆக சேர்ந்து கொள்ளலாம்.. 

ஐயோ ஐயோ.. 

Thursday, October 30, 2014

சூரசம்ஹாரம் திருச்செந்தூர் ...

முதல் முறையாக கந்தர் சஷ்டிக்கு சூரசம்ஹாரம் பார்க்க திருச்செந்தூர் சென்று வந்தேன்..
கிட்டத்திட்ட நாற்பதாண்டு காலங்களுக்கும் மேலாக எப்படி இந்த பிரம்மாண்டத்தை கேள்விப் பட்டுக் கொண்டு மட்டும் இருந்தேன் என்கிற கவலையான வினா விடையற்று ததும்பிற்று என்னில்..

நரகக் கூட்டம் அது.. எங்கெங்கிலும் பம்மி பம்மியே சென்றாக வேண்டிய கடின சூழல்.. தனித்து சென்றேன் என்பதால் பிற பெண்களுள் சுலபத்தில் இழைய நேர்ந்தது.. அனைவருக்குமே அப்படியான வாய்ப்புகள் அங்கே வேண்டாமெனிலும் கொட்டிக் கொடுக்கிறது இந்த நாள்..

எதிரினக் கவர்ச்சிகளும் பக்தி எண்ணங்களும் பரவசக் குழப்பத்தில் யாதொருவரையும் ஆழ்த்தி விடுகிற வல்லமையை பிரவகிக்க செய்கிற இந்த சூழல், சற்றே குற்ற உணர்வுகளையும் எட்டிப் பார்க்க செய்கிற ஒரு தர்மசங்கடத்தினை நம்முள் திணிக்கத் தான் செய்கிறது..

சட்டை  பனியன் கழட்டியாக வேண்டும்.. வியர்த்து வழிகிற வெற்றுடம்போடு ஆளாளுக்கு உரசுகிற அந்த அவஸ்தை.. அதனூடே பெண்டிரும் வந்து........ எல்லா சோம்பேறிகளின் கலோரிகளும் நிச்சயம் நேற்று அதிகம் எரிந்திருக்கக் கூடும் என்பது எமது . அனுமானம்.ஆம், வியர்த்து ஒழுகியும், மன அரிப்பின் வக்கிரத்திலும் பல கலோரிகளும் பொசுங்கி சாம்பலாகி இருக்கக் கூடும்.. !!

முருகனைத் தவிர்த்து எல்லா கபட நாடகங்களும் அங்கே சுலப அரங்கேற்றமாக வியாபித்திருக்கிற கொடுமை சற்றே உற்று நோக்கின், புலனாகும்.. 250 ரூ. டிக்கட் வாங்கிக் கொண்டு என்னோடு வந்து பொது தரிசனத்தில் சுவாமி கும்பிட்ட நபர்.. அப்படி பல நபர்கள்..
இத்தனைக்கும் எனக்கு முன்னரே டிக்கட் எடுத்துக் காத்துக் கொண்டிருந்து விட்டு வந்தவர்கள். நான் அந்தக் கூட்டத்தில் தி.நெ.வேலியில் வாங்கி வைத்திருந்த ஹல்வாவை திணித்து விட்டு உட்புகுந்த பரம ரகசியம் எமக்கே ஆச்சர்யம்.. புகுந்தேனா உள்ளே கொண்டு வரப் பட்டேனா என்பதெல்லாம் அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.. 250ரூ.டிக்கட்டை கையில் வைத்துக் கொண்டு உள்ளே வர முடியாமல் திணறிக் கொண்டிருந்த பரம பக்தர்களின் கதி நகைக்க  உகந்ததாக இருந்தது..

திருப்பூரில் எமக்கு பரிச்சயமான சில நபர்களை தி.செந்தூரில் தரிசிக்க வாய்த்தது .. அடிக்கடி திருப்பூர் ஈஸ்வரன் பெருமாள் கோவில்களில் நான் பார்க்க நேர்ந்த ஒரு நபரை அடையாளம் கண்டு .. "நீங்க திருப்பூர் தானே?"
"யெஸ் .. நீங்க?"
"நானும் திருப்பூர்.. உங்களை நான் நம்ம ஊர் கோவில்களில் அடிக்கடி பார்ப்பேன் .. "
"ஓ .. அப்டியா.. "
அவர் தி.செந்தூருக்கு குடும்பத்தோடு வந்து ஒரு வாரமாக லாட்ஜில் தங்கி இருப்பதையும் அன்றாடம் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வதையும் பெருமையாக சொல்லி.. "நீங்க சாமி பார்த்துட்டீங்களா?" என்று கேட்டார். 
நான் "இல்லைங்க" என்ற எமது சோக வரலாற்றை சொல்லவே, மனுஷர் டென்ஷன் ஆகி  .. அவருக்கு அறிமுகமான ஒரு அய்யரை எமக்கு அறிமுகப் படுத்தி "இவரு எங்க ஊரு.. பார்த்து உள்ளே தரிசனம் செய்ய உதவுங்கள்" என்று சொல்லி நாசுக்காக  நகர்ந்து கொண்டார்.. 

"முருகன் நம்மை கை விடலை" என்கிற எமது அனுமானம் பொடி தவிடாக 2 நிமிடம் தான் பிடித்தது.. "உடனே உள்ளே போக எல்லார் கிட்டவும் 1500 ருப்பீஸ் வாங்கறேன்.. எனக்கு தெரிஞ்சவா உங்க ஊர்க்காரர்.. அவர் இன்ட்ரட்யூஸ் பண்ணியதால ஜஸ்ட் ஒரு தௌஸண்ட் கொடுத்தேல்னா போறும் "

'இன்னாங்கடா நடக்குது இங்க?.. இப்டியுமாடா குடுமியப் போட்டு பட்டய விட்டுக்கிட்டு ருத்ராக்ஷய மாட்டிக்கிட்டு  ஃப்ராடு பண்ணுவீங்க?' என்று தமிழ் ஹீரோஸ்  விக்ரம் விஷால் ரேஞ்சுக்கு கதற வேண்டும் போன்று வெறி என்னில் பூவாகி, பிஞ்சாகி, கணிந்தாலும் யதார்த்தத்தில் யாவற்றையும் மூடிக் கொண்டு மெளனமாக அந்தப் பக்கம் நகர்ந்து விட மட்டுமே நேர்ந்தது.. 

நாமெல்லாம் தான் கல்லில் கடவுளைக் காண இங்கே குழுமி வந்துள்ளோம். இங்கே வீற்றிருக்கிற கோவில் பூசாரிகளும் அர்ச்சகர்களும் இன்னபிற கோவில் சார்ந்த நபர்களும் பேசுகிற கடவுளையே கண்டிருந்தாலும் வாயில் மண்ணை கல்லை வைத்து அடக்கி விட்ட கயவர்கள் என்று தான் தோன்றிற்று எனக்கு.. 

சரி நமக்கெங்கே சாமி தரிசனம் தரப் போகிறார்?.. அடுத்த ஒரு அமைதி தருவாயில் வந்து  குடும்பத்தோடு தரிசிப்போம் .. இப்போதைக்கு கடலில் கொஞ்சம் நேரம் அளவளாவி விட்டு நகர்ந்து விடுவதே உத்தமம் என்றொரு முடிவு எடுத்தவனுக்கு செந்தூர் முருகனே மனம் இறங்கி இருக்க வேண்டும்.. 
நான் வெளியே செல்ல வேண்டும் என்று கெஞ்சியும் என்னை வெளியில் . விடவில்லை. 'இந்தக் கூட்டத்துல நீங்க வெளிய போக முடியாது.. அப்டி கோவிலுக்கு உள்ளே போயி தான் வரமுடியும் ' என்று சிறை வைத்தனர்.. 
பிரணவ மந்திரத்துக்கு அர்த்தம் புரியாத பிரம்மனை முருகன் சிறை வைத்தது போல, தேவர்களை இம்சித்த காரணத்துக்காக சூரனை சம்ஹாரம் செய்தது போன்று  ... நானும் ஏதோ தவறுகள் புரிந்து முருகனிடம் வசமாக மாட்டிக் கொண்டது போன்ற  அனர்த்த  பிரம்மைகள் என்னில் புடைசூழ்ந்து குடைந்து எடுத்தன.... 

ஆட்டு மந்தையைத் திறந்து விட்டது போன்று கதவைத் திறக்கவே திமுதிமு வென்று கூட்டம்  முட்டி மோதவே நானும் அவர்களுள் ஐக்கியமாகி உட்புகுந்து முருகன் முகம் கண்டு அகமலர்ந்தேன்.. 

கோவிலின் உட்பிரகாரத்தினுள் நிகழ்ந்த  களேபரங்கள் , சேரிக்குள் நடக்கிற வன்முறைக்கு  கொஞ்சமும் சளைத்ததில்லை.. குத்தும் வெட்டும் ரத்தக் களரிகளும் மிக மிக சாசுவதம் போன்று அங்கே பொதுமக்களும் போலீசுகளும் மோதிக் கொண்டதைப் பார்க்க நேர்ந்து ஆடிப் போனேன்.. 

ஒரு மிகப் பெரிய கலவரம் நேர்ந்து, சூரபத்மனை தலையை எடுத்து அசுரர்களை கொன்று குவித்த மெல்லிய அழகு முருகனின் இந்த வரலாறு அன்று நிஜத்தில் நிகழ நேர்கையில் இதே ஆர்ப்பரிப்போடு கடல் இருந்திருக்கலாம். ஆனால், இப்படியான மனிதக் கூட்டங்களும் ஆர்ப்பரிப்புகளும்  இருந்திருக்குமா என்பது கேள்வி.. 

ஆனால் இதே கற்பனையோடு, இதே ஒரே கதையோடு ஒவ்வொரு வருடமும் நிழலாக நிகழ்கிற  இந்தக் கூத்துக்கு பரவி இருக்கிற மக்களுக்கு எத்தனை முருகன் வந்து எத்தனை சூரர் தலைகளை காவு வாங்கினாலும் போதாது என்றே தோன்றுகிறது.. " ஹ்ம்ம்.. கமான் முருகா.. இன்னும் இன்னும்.. ஒன்ஸ் மோர்" என்று காரவத்தலை வேர்கடலையை பட்டாணி சுண்டலை வாயில் போட்டு அரைத்துக்  கொண்டே கூவிக் கொண்டே இருப்பார்கள்.. 


Friday, October 24, 2014

தீபாவளிகள்.. அன்றும் இன்றும்..

ஒற்றை ஒற்றையாய் 
அன்று விட்ட 
ஊசி வெடி ஆனந்தம் 
கட்டுக் கட்டாய் 
இன்று விடுகிற 
சர வெடிகளில் காணோம்.. 

சுவர்களில் அடித்து 
சத்தமெழுப்பிய 
அன்றைய வெங்காய 
வெடி சுகம் 
இன்றைய காது பிளக்கிற 
டைம்பாமில் மிஸ்ஸிங்.. 

நட் போல்டை லூஸ் 
பண்ணி கொள்ளுப் 
பட்டாசை செருகி 
பிறகு டைட் வைத்து 
தூரம் தூக்கி எறிந்து 
அது கீழே வந்து 
எழுப்புகிற அந்த சப்தம் 
இன்றைய பிளாஸ்டிக் 
துப்பாக்கிகள் எழுப்புகிற 
தொடர் குண்டு வெடிப்புகளில் 
இல்லவே இல்லை.. 

இன்றெல்லாம் ஆகாய 
மார்க்கமாக சென்று 
வண்ணங்கள் பரப்பி 
அலட்டிக் கொள்கிற 
கவுரவப் பட்டாசுகள் 
அன்றெல்லாம் இல்லை. 
காலி பாட்டில்களில் 
செருகி விடப் படுகிற 
ஒற்றை ராக்கெட் 
"உர்ஷ் " என்றொரு 
சப்தம் எழுப்பி மேலே சென்று 
ஒரே வெடியை வெடிக்கும். 
சமயங்களில் அதுவும் 
புஸ்வாணமாகி நம்மை 
நமுத்துப் போகச் செய்யும்.. !

ஆனால் 
இன்றைக்கு நிற்காமல் 
ஆயிரம் வெடிகள் வெடிக்கின்றன.. 
அன்று விடுபட்டுப் போன 
எத்தனையோ ஒற்றை 
வெடிகளையும் 
இன்றைய பட்டாசுகள் 
ஈடுகட்டுவதாக ஒரு 
அற்ப கணக்கு எனக்கு.. !!

Sunday, October 19, 2014

அரசியல் பேசறேன்..

சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிறையிலிடப் பட்ட அன்றைய கால கட்டங்களில் அவர்களை விடுதலை செய்யச் சொல்லி இந்த அளவுக்கு போராட்டங்கள் நடத்தி இருந்தால் நமது இந்தியா இன்று மிகவும் சுபிட்சம் பெற்றிருக்கும்.. ஆனால், அப்படிப் பட்ட தியாகிகள் சிறையில் இருப்பதை பெருமையாகவும் கர்வமாகவும் நினைத்து, அந்த சம்பவங்களை வரலாறுகளாக மாற்றி இன்றைக்குப் பாட புத்தகங்களில் இடம்பெற செய்து விட மட்டுமே நம்மால் முடிந்திருக்கிறது.. ஆனால் இன்றைய அரசியல் தலைவர்கள் சொத்துக் குவிப்பு வழக்குகளிலும் , மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளிலும், 2 G அலைவரிசை என்று அழைக்கபடுகிற தொலைபேசி சம்பந்த ஊழல் வழக்குகளிலும் சிக்கி நியாயமாக தண்டனை பெற வேண்டிய ஒரு சூழ்நிலையை சட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுத்த முற்பட்டாலும் , நாமெல்லாம் அதற்காக மிகவும் போராடி, உண்ணாவிரதம் இருந்து , கருப்பு சட்டை அணிந்து , அழுது ஆர்ப்பாட்டங்கள் செய்து , கவலை அடைந்து , தீக்குளித்து காயங்கள் அடைந்து, தற்கொலைகள் செய்து .. நமது கண்டனங்களை தெரிவித்து வருகிறோம்.. அரசியல் தலைவர்களை எல்லாம் விட மிகப் பெரிய குற்றவாளிகளாக நாம் தான் நமக்குத் தெரிகிறோம்.. இதே போக்கு தொடருமானால், இந்த மாநிலங்களை , இந்த நாட்டினை ஆள்கிற தலைவர்கள் மேற்கொண்டும் சுலபமாக சகஜமாக யதார்த்தமாக இதே போன்ற தவறுகளை தொடர்ந்து செயற்படுத்திக் கொண்டே தான் வருவார்கள்.. சுப்ரமணிசாமி போன்ற அரசியல் வாதிகள் நம் அனைவரது காழ்ப்பு உணர்ச்சிக்கும் ஆளாக நேர்கிற இந்த அநாகரிக விபத்தை நாம் சந்திக்கத் தான் வேண்டுமா?.. மகோன்னதமானவர்களைக் கொண்டாடும் குணமற்று, நம்மிடமிருந்து நமது சக்தியைப் பறித்து நமக்கே குழியைத் தோண்டும் சுயநலமிகளை ஆராதிக்கிற நமது மடமையை நாம் மட்டுமே தான் அடையாளம் கண்டு அதனைக் களைந்தெறிய வேண்டுமேயன்றி, வேறெவரும் அக்காரியத்தை செய்வதற்கு சாத்தியமில்லை.. ஜெய் ஹிந்த் ... 

Sunday, October 12, 2014

சுப்புணி


ஒன்று 
சுப்புணி ன்ற சுப்பிரமணி இன்னைக்குக் காலைல தான் அந்தக் கோட்டப் பெருமா கோவில் இருக்கற வீதியில செயின் சிநாச்சிங் செஞ்சு ரெண்டொரு நிமிஷம் ஓடித் தப்பிச்சவன், வாக்கிங் போறதுக்காக எதிர்த்தாப்புல வந்துக்கிட்டு இருந்த ஒரு தொண்டுக் கெழம் தன்னோட வாக்கிங் ஸ்டிக்ல அவன் காலுக்குள்ள வுட்டு விழ வச்சு, கம்பத்துல கட்டி வச்சு 'பொதுமாத்து' வாங்க வச்சுது.. 

என்னவோ ஏரியா கவுன்சிலர் பதவி கெடச்ச மாதிரி அதுக்கு ஒரே பாராட்டு மழ .. சாகப் போற வயசுல அதுக்கொரு போலீஸ் உத்தியோகம்.. 

வீதியில போறவன் வாரவன் எல்லாருமா ஆளாளுக்கு போட்டு வாங்குன வாங்குல சுப்புணிக்கு ஒதடு வீங்கி, கன்னம் வீங்கி, பல்லு ஒடஞ்சு ரத்தம் சட்டை காலர், வயிற்றுப் பகுதி என்று ஏகத்துக்கும் சிகப்பாய் நனைந்திருந்தது.. 

அவனும் முடிஞ்ச வரைக்கும் 'அண்ணே நான் திருடலை.. அது என்னோடது .. அவ என்னோட பொண்டாட்டி ண்ணே .. நம்புங்க ண்ணே ..' னு ஆன வரைக்கும் கெஞ்சிக் கதறிக் கூத்தாடிப் பார்த்தான்.. 
'இத இப்டி நீ சொல்வே. நாங்கெல்லாம் நம்பனும்?.. சுத்தப் பேமானிக ன்னு நெனச்சியாடா தே.மவனே..?' என்றொருவன் மூக்கில் குத்தினான்.. 
'வேணும்னா அவள விசாரிங்க ண்ணே ..' என்றான்.. 

ஆனா, அந்த சிறுக்கிமவ அந்த ஸ்பாட்டை விட்டே எஸ் ஆயிட்டா கழுத.. 

'சும்மா நாமலே போட்டு அடிச்சு எங்கயாச்சும் செத்துக் கீது போனான்னா போலீஸ் கோர்ட்ன்னு நாமுளும் சேர்ந்து அலையணும். மொட்டயா போலீசாண்ட  ஒரு கம்பிளின் கொடுத்துட்டம்னா அவுக வந்து ஸ்பெஷலா கவனிச்சுக்குவாங்க.. பாதி உசிர நாம புடிங்கிட்டோம்.. மீதிய அவனுக பார்த்துக்கு வானுக.. ' என்றான் ஒருவன்.. 

அரை சுரணையில் இருந்த சுப்புணிக்கு இதைக் கேட்டு இன்னும் பீதி பற்றிக் கொண்டது. 

இரண்டு 
------------
' ஹே . சாவித்ரி .. இது உன்னோட கழுத்துக்கு சூப்பரா இருக்கும் புள்ளே.. வாங்கிக்கிறையா? '
'நெசமாவா மாமா சொல்றீங்க?'
'நெசந்தான் புள்ள.. '

கல்யாணமாகி ரெண்டுமூணு வருஷமோ நாலஞ்சு வருஷமோ ஆகி இருந்திருந்தா கூட எந்தப் புருஷனும் இப்டி அக்கறையா நகைக் கடைக்குப் பொண்டாட்டியக்  கூட்டிட்டுப் போயி விசாரிக்க மாட்டான் .. ஆனா, சுப்ரமணிக்கும் சாவித்திரிக்கும் ரெண்டரை மாசம் தான் ஆவுது.. 
ஆக , மோகம் 30 ஆசை 60 ங்கற 90 நாள் கணக்குலேயே இன்னமும் 15 நாள் பாக்கி இருக்கு. அப்டிங்கற போது சத்தியமா எந்தப் புருஷனும் தமாசுக்குக் கேட்க  வாய்ப்பில்லே.. 

'இப்ப எதுக்கு மாமா.. அப்புறம் பார்த்துக்கலாம்' என்ற சாவியைக் கூட வாயை அடக்கி விட்டு நம்ம சுப்புணி அந்த 3 பவுன் கொடியை ஆசை ஆசையாய் வாங்கி  அவளுக்கு மாட்டி விட்டான்... 

3 மாதங்கள் நிறைவு பெறவே இன்னும் ஒரு வாரம் இருக்கையில் தான் நேற்று அந்த சம்பவம் ... 

2 நாட்கள் முன்னர் அந்தப் புதுப் பொண்டாட்டி முந்தைய காதலனோட எஸ்கேப் .. எதேச்சையா அவன் கூட அவளைப் பார்த்திருக்கான் .. 2 பேரும் வெளியூரு  தப்பிச்சுப் போக இருக்கும் போது , இவன் பார்த்திருக்கான்.. 
'திருட்டு முண்ட.. ஏண்டி என் வாழ்க்கைய நாசக் கேடு செஞ்சே?' ன்னு கேட்டு வெஞ்சிருக்கான் .. அழுதிருக்கான்.. 
அதைப் பார்த்து அவ சிரிச்சாளாம் .. 
அவ காதலன் .. 'இந்தப் பொட்ட கூட போயி என்ன வாழ்ந்து கிழிக்கப் போறே?' ன்னு நக்கல் செஞ்சானாம்.. 

பொண்டாட்டிய மிஸ் பண்ணி, ஆசை ஆசையா வாங்கிக் கொடுத்த 1 லட்சம் ரூபா செயினை  மிஸ் பண்ணி, அதையாச்சும் புடுங்கலாம்னு புடுங்கப் போயி , தர்மடி வாங்கி, ஜேப்படி திருடன்னு  பேரைக் கெடுத்து , ஒதடு மனசு எல்லாம் வீங்கி.. இதெயெல்லாம் சொன்னாலும், மக்களோ போலீசோ நம்பாம... ஐயோ.... 

மூன்று 

அந்த கருமங்கள் எல்லாம் முடிந்து நாலஞ்சு வருஷம் ஆச்சு..  
2வதாக சுப்புணி கல்யாணம் செஞ்சு அவனுக்கும் ருக்குவுக்கும் இப்ப மூன்றரை வயதிலும்  2 வயதிலும் ரெண்டு குழந்தைகள்.. 
இவனுடைய முந்தைய வரலாறுகள் அனைத்தையும் ருக்குவிடம் ஒரு காவியம் போன்று அரற்றித் தீர்த்தான்.. அவளும் அதிலே மலைத்து, இவன் மீது ஒரு  இரக்கம் கலந்த சிநேகமும் மதிப்பும் கொண்டிருந்தாள் .. 

இவன் ஊகித்து வைத்தது போன்றே ஒரு அசந்தர்ப்பத்தில், சாவித்திரியை இவன் நினைத்த கோலத்திலேயே சந்திக்க நேர்ந்து சந்தோஷமாக சிரித்தான்.. 
எஸ், அவனது காதலனால் ஒரு ப்ராத்தல் சந்தையில் விற்கப் பட்டு நாறிக் கிடந்தாள்.. இவனைக் கண்டதும் மூஞ்சியை மூடி அழுதாள்.. கழுத்தில் சிகப்புப் பாசிகள்  கோர்த்த ஒன்றை அணிந்திருந்தாள்.. 

அங்கே நின்றிருந்தால் மறுபடி ஏதேனும் பங்கம் விளைவிக்கத் துணிந்து விடுவாள் இந்த சதிகாரி என்று நகர முற்படுகையில்.. 
பின்னாடி இருந்து வந்த ஒரு 3 வயதுப் பெண்குழந்தை அவளது சேலை முந்தானையைப் பற்றிக் கொண்டு அழுவதற்கு தயாரானது.. 

தனது குழந்தைகளுக்கு வாங்கியிருந்த பொம்மைகளையும் தின்பண்டங்களை யும்  அதன் கைகளில் திணித்து விட்டு அங்கிருந்து எதுவும் பேசாமல் விரைந்தான்  சுப்பிரமணி.. 

Wednesday, September 24, 2014

திருவிழாக் கடைகளும் கிழவிகளும்..

கோவில் திருவிழாக்களில் 
தொண்டுக் கிழவிகளின் 
பொரி கடலைக் கடைகள் 
எம்மைக் கவர்ந்திழுப்பவை.. 

எண்பத்தி சொச்சங்களும் 
தொண்ணூற்றி சொச்சங்களும் 
சுவடுகளாகப் புரியும் 
அந்த முகச் சுருக்கங்களில்.. 

எனக்கு 
முப்பதில் சர்க்கரை வந்தாயிற்று.. 
நாற்பதில் நிகழ்ந்த சாலேசரத்தில் 
முகத்தைக் கிழடு தட்டிக் 
காண்பிக்கிற கண்ணாடி அணிந்தாயிற்று.. 
ஐம்பதில் காணாமல் 
போய் விடுகிற எல்லா 
சாத்யக் கூறுகளோடும் 
பாத்தி கட்டிவிட்டன வியாதிகள் உடலில்.. !!

"அரை நூற்றாண்டே 
மனித ஆயுள் இனி "  என்கிற வழக்கு 
அமலுக்கு வந்தால் ஆச்சர்யமில்லை.. 

ஆனால் அந்தக் கிழவிகள் 
ஏற்றிப் படுக்கவைத்த பாடைகளைக் 
கிழித்து விட்டு வந்து இங்கே 
வியாபாரம் செய்வது போன்று 
புலனாகிறது எனக்கு.. 

முகங்களில் கண்ணாடி இல்லை.. 
தொங்குமந்த சூம்பிக் கிடக்கிற 
முலைகளில் கவனமில்லை.. 
பொரியையும் கடலை வகையறாக்களையும் 
படிகளில் அள்ளிப் போட்டு 
சுருக்குப் பையில்  காசைத் 
திணிக்கிற பிரக்ஞை தான் அதீதம்.... 

மிச்ச சில்லறையைக் கொடுக்க 
ஒரு அங்கலாய்ப்பு.. அதற்குமாய் 
சேர்த்து பொரி போட்டு விடுகிற நாசுக்கு.. 

காலணா அரையணா  
காலங்களில் புழங்கிய 
சுவடுகள் கிஞ்சிற்றும் அற்று 
இன்றைய ஐம்பதும் நூறும் 
ஐந்நூறும் ஆயிரமும் 
அந்தக் கரடுமுரடான கைகளில் 
தவழ்வதைப் பார்க்கையில் .. 

எதிரிலே 
பழங்கால நாணயங்கள் சேகரிக்கிற 
கடை ஒன்றை வைத்திருக்கிற 
எனக்குள் .. 
ஒரு இனம்புரியாத 
லஜ்ஜை 

காலணாக் காசொன்றை 
எடுத்து அவளிடம் சென்று 
வறுகடலை கொடுக்கச் சொல்லிக் 
குசும்பு செய்து பார்த்தேன்.. 

குண்டியில் சிரிக்காத 
குறையாக முறைத்துப் 
பார்க்கிறாள் கிழவி.. !!

Saturday, September 20, 2014

அச்சம் மடம் நாணம் ...


என்னுடைய பதின் வயது 
சமயங்களில் .. எமது 
அப்பாவின் பதின் வயது 
சாகசங்கள் என்னிடம் 
பகிர்ந்து கொள்ளப் பட்டன.. 

என்னுடைய வயதில் 
என் தந்தையார் 
பற்பல சாதனைகளை 
நிவர்த்தி செய்ததாக 
எனது பாட்டியும் 
எனது அத்தைமார்களும் 
சொல்வார்கள்.. 

'ஆனால் நான் இன்னும் 
அரைவேக்காடாகவே இருந்து 
வருகிறேன்?' என்று 
அவர்களிடம் கேட்பேன்.. 

ஏழாம் வகுப்புப் படிக்காமலே 
ஆறிலிருந்து எட்டுக்கு 
டபுள் ப்ரமோஷன் ... 
14 ஆம் வயதிலேயே 
நீச்சல் போட்டியில் மெடல் ... 
எஸ்ஸல்ஸி யில் 
ஸ்டேட் பர்ஸ்ட்டுக்கு முயன்று 
மூன்றாவதாக வந்தமைக்காக 
மனமுடைந்து 2 நாட்கள் 
சாப்பிடாமல் இருந்தது .. 
லாங் ஜம்ப் ஹை ஜம்ப் 
கோகோ.. கபடி . கில்லி.. க்ரிக்கட் 
குண்டு பம்பரம் . என்று 
எதை எடுத்தாலும் 
எதிர்த்து விளையாடுகிறவன் 
வாயில் மண்ணைக் கவ்வ 
வேண்டுமாம்.. 

இன்னும் நீள்கிற 
அப்பாவின் பட்டியல் 
எனக்குள் ஒரு தாங்கொணா 
பெருமிதத்தை பரவச் 
செய்தன எனிலும் 
இத்தனை நாசுக்கில் 
25 % கூட எனக்குள் 
இறங்கவில்லை என்கிற 
கொடூர சோகம் 
என்னைப் பிய்ந்து போகச் 
செய்தது.. 

ஏன் அந்த ஜீன் 
எனக்குள் பதியவில்லை 
என்கிற ஆச்சர்ய எரிச்சல் 
எனக்கு.. 

உருவில் மாத்திரமே 
அப்பாவை ஒத்திருந்த என்னை 
என் அப்பாவை நன்கறிந்த 
பற்பலரும் 'நீ வெங்கட் டோட ஸன் தானே?'
என்ற அனுமானக் கேள்வியில் 
நான் 'ஆம்' என்றதும் சிலாகித்துப் போயினர்.. 

பின்னொரு நாளில் 
எனது சந்ததிகளிடம் 
'நான் கேட்கப் படுவேனா இப்படி எல்லாம்?' 
என்கிற வலிமிகு பயங்கள் 
படரத் துவங்குகின்றன 
அனாவசியத்துக்கு.. !!

Thursday, September 4, 2014

அழகிய அசிங்கம்..

பதின் வயதுகளில்
முளைவிடாத
காதல்,
அரை நூறு
கடக்கவிருக்கையில்
அரும்புகிறது...




காலம் கடந்திருந்த

போதிலும்
காதல் அதன் மெருகில்
குறைவற்றே தான்
ஜொலிக்கிறது..
  

வயோதிகம் என்கிற

உணர்வெல்லாம்
காதலின் முன்னிலையில்
கல்லடிபட்ட நாயாக
ஊளைக் கதறலோடு
ஓடி ஒழிகிறது.




பொருந்தாக் காதலின்
அபஸ்வரம்
அபத்தமாய் புரிபடவில்லை..
மாறாக -- அன்று
விடுபட்டுப் போன
ஓர் உன்னத அனுபவம் இன்று 
நிகழ்வதாக
இங்கே கவிதை உருவெடுக்கிறது.. !!

[எங்காவது  என்னை எதாவது பொண்ணு லவ் பண்றதா நெனச்சுக்காதீங்க.. சத்தியமா நான் மட்டும் தான் ஒரு தலையா நின்னு லவ் பண்றேன்.. சத்தியமா நான்  ஒரே பொண்ணை  மட்டும் லவ் பண்ணலை.. பார்க்கற ஒவ்வொண்ணையும்  லவ் பண்ணிப் பார்க்கறேன், கற்பனையாவே.... 
முதிர்கன்னிய விரும்பற  வெடலைப் பசங்களைப் பத்தி கேள்விப் பட்டிருக்கோம்.. பார்த்திருக்கோம்.. ஆனா முதிர்கண்ணனை எதாச்சும் வெடலைப் பொண்ணுக  ரூட் விட்டதா ஹிஸ்டரி இருக்கா?.. அப்டி ஒரு வரலாற்றை ப் படைக்கத் தான் இந்த ராமன் போராடறான்.. யாராச்சும் என்னோட சீதை கிட்ட  போட்டுக் கொடுத்துடாதீங்க.. ஹிஹி.. ]

Tuesday, August 26, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம்.. ... [RADHAKRISHNAN.பார்த்திபன்]

எந்த ஸைடில் இருந்தும் பாஸிடிவாக ரிசல்ட் வரவில்லை என்பதால் அஞ்சான் படத்தை தவிர்த்து .... விகடனில் 45 மதிப்பெண் பெற்றதைக் கண்டு பார்த்திபன் படத்துக்கு சென்று வந்தேன்..

கிட்டத்தட்ட பாலச்சந்தரின் பட அமைப்போடு திரைக்கதை அமைத்து அதே வித காட்சி அமைப்புகளுக்கு ஜிகினா ஒட்டியது போன்று ஒரு தன்மையை இவரது இந்தப் படம் எனக்கு உணர்த்தியது.. இதே வகையறா உணர்வு வேறு எவருக்கேனும் வந்தால் எனக்கொரு கம்பெனி கிடைக்கும்.. ஆனால் அப்படி எவரும் அபிப்ராயப் பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

சரி அதை விடுங்கள்.. நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு R . பார்த்திபன் அப்பாவின் முழு ராதாக்ருஷ்ணன் என்கிற facebook பாணி பெயரை உடன் சேர்த்துக் கொண்டு தனது செண்டிமெண்டுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.. அப்டியே இந்தப் படத்துக்கும் புத்துயிர் கொடுத்து தனது துவண்டு போன கரியரையும் சற்றே தூக்கி நிறுத்தி விட்டிருக்கிறார் இந்தப் படத்தின் மூலம்..

ஒரே ட்ராக்கில் ஒரு திரைக் கதை அமைத்து அதனூடே பயணிக்கிற படங்கள் கூட என்னென்னவோ குளறுபடிகளை சந்திக்க நேர்ந்த விபத்துக்களை நாம் கண்டிருக்கிறோம்.. ஆனால், பார்த்தி ... இத்தனை ட்ராக்கில் சம்பவங்களைக் கோர்த்து அதற்குள் காரெக்டர்களைப் புகுத்தி அவைகள் எல்லாவற்றுக்கும் ஒரு தேஜஸை கொடுத்திருப்பது, இவரது கால் நூற்றாண்டு கால சினிமா அனுபவத்தின் அடையாளம் என்பதில் ஐயம் என்ன இருக்கப் போகிறது??

தனது நக்கல் கற்பனை வசனங்களுக்கு இன்றைய புது சூழல்களையும் உள்வாங்கி  அதனூடே ஹாஸ்யம் செய்கிற இவரது அபார மூளை ஆச்சர்யப் படுத்தாமல் இல்லை. காமரசத்தை சொட்டச் சொட்டக் கொடுக்க வேண்டுமென்கிற  கமல்ஹாசனின் தாகம் இவருக்குள்ளும்  வெண்ணை போன்று திரண்டு  கிடக்கிறது.. ஆனால் குடும்பங்கள் கும்பலாக நெளியாமல் வந்து கவனிக்க  வேண்டுமானால் அவ்விதக் காட்சிகளை நாசுக்காக வேறு கையாள  வேண்டிய பெரும்பொறுப்பு இருக்கிறது..

நடிப்பவர்கள் எப்படி சொன்னாலும் நடித்து விடுவர்.. பார்த்திபனும் எப்படி எடுக்கவும்  துணிந்தவர் தான் என்ற போதிலும் .. இங்கிதம் கருதி இலைமறை காயாகத் தான்  இந்தக் காட்சிகளை நகர்த்த வேண்டியுள்ளது..

ஒரு பொண்டாட்டியைக் கூட கண்ணில் காண்பிக்காமல் ரெண்டு பொண்டாட்டிக் காராராக நடித்திருக்கும்  தம்பி ராமையா அபார நடிப்புத் திறன் கொண்டுள்ளவர்  என்பது இப்படத்தில் அதீதம் நிரூபணமாகிறது..

அந்த ஹீரோயினாக வரும் பெண்ணின் துடிப்பும் ஆற்றலும் ஜாஜ்வல்யமும் அந்த ஹீரோ பயலிடம்  ரொம்ப மிஸ்ஸிங்.

எல்லா துறைகளிலும் அததற்குரிய தாகங்களோடு பரிதவிக்கிற முயல்கிற நபர்கள் எங்கெங்கிலும் இருந்தவண்ணம் போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர். அதே போன்று இந்த சினிமா துறையிலும் ஜெயிக்க வேண்டுமென்று அரும்பாடு  படுகிற நபர்கள் பல்கிப் பெருகி விட்டனர் என்பதில்  சந்தேகமில்லை.. அப்படி ஒரு குழாமை வைத்தே ஒரு முழுநீளப் படத்தையும்  எடுத்து அப்ளாஸ் வாங்கி விட்டார் பார்த்திபன்..

திருவோண விருந்துகளில் மலையாளிகள் தங்களது விருந்தில் கொடுக்கிற உணவு முறைகள் ரெண்டு பக்கப் பட்டியல் கொண்டவை.. அதனைப் போன்றே  பார்த்திபனும் தனது படங்களில் அபரிமிதமான கதம்ப விஷயங்களை ஓயாமல் சளைக்காமல்  படைக்கிற ஆற்றல் கொண்டவர்.

அகோரப் பசியில் சென்றால் தான் யாவற்றையும் சுவைத்து மகிழ்ந்து பாராட்ட முடியும்.. பசியில்லாமலோ, அரைப் பசியிலோ சென்றால் அப்படியே இலையை மூடி விட்டு வரவேண்டும்..
ஆகவே ஒரு சினிமா பசியோடு அதாவது , நல்லதொரு மனநிலையில் சென்று இதனைப்  பாருங்கள்.. முழுதுமாக இல்லை என்றாலும் கூட பாதியாவது ரசிக்கிற வாய்ப்பு அமையலாம்..  நன்றி. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...