நாமெல்லாம்
மரணத்தின் குழந்தைகள்....!
நாம் கோபிக்கிறோம்
மதிப்பதில்லை
வரவேற்க விரும்புவதில்லை
என்பதற்காக
மரணங்கள் நம்மைக்
கோபிப்பதில்லை ...
நம்மை எல்லாம்
மதித்து வரவேற்கிற
மாண்பு மரணத்திடம்
என்றென்றும் நிரம்பித்
ததும்புகிறது..
ஒரு குழந்தையினுடைய
உதைகளைப் போன்று
நமது எதிர்ப்பை
ரசிக்கின்றது மரணம்..
பள்ளி செல்ல அடம்பிடிக்கிற
எல்.கே.ஜி. குழந்தைகளாகிறோம்
மரணத்திடம் நாம்..
வாழ்க்கையின் வலிகளை
நிறைவு செய்துவிட்டுப்
புறப்படத் தூண்டுகிற மரணத்தை
ஏனோ நாமின்னும்
பரமவைரி போன்றே பாவிக்கிறோம்..
உடலெனும் பையில்
உயிரை ஜேப்படி செய்கிற
மரணத் திருடனை
தண்டிக்கிற போலீஸ்
ஏழேழு லோகங்களிலும் காணோம்..
இன்னும் இன்னும்
பிறப்புண்டு என்கிற
நம்பிக்கைகளும்
பிறவா வரமே வேண்டும்
என்கிற பிரார்த்தனைகளும்
தொன்று தொட்ட
நிகழ்வாகத் தொடர்கின்றன..
ஒரே பிறப்பு
ஒரே மரணம்
என்கிற கணக்கு மட்டுமே
உள்ளதென்ற உண்மை ....
பரஸ்பரம் பிறப்புக்கும்
இறப்புக்கும் மட்டுமே
புரிந்த உண்மையாகக்
கூட இருக்கக் கூடும்.. !! ??...
No comments:
Post a Comment