Wednesday, September 24, 2014

திருவிழாக் கடைகளும் கிழவிகளும்..

கோவில் திருவிழாக்களில் 
தொண்டுக் கிழவிகளின் 
பொரி கடலைக் கடைகள் 
எம்மைக் கவர்ந்திழுப்பவை.. 

எண்பத்தி சொச்சங்களும் 
தொண்ணூற்றி சொச்சங்களும் 
சுவடுகளாகப் புரியும் 
அந்த முகச் சுருக்கங்களில்.. 

எனக்கு 
முப்பதில் சர்க்கரை வந்தாயிற்று.. 
நாற்பதில் நிகழ்ந்த சாலேசரத்தில் 
முகத்தைக் கிழடு தட்டிக் 
காண்பிக்கிற கண்ணாடி அணிந்தாயிற்று.. 
ஐம்பதில் காணாமல் 
போய் விடுகிற எல்லா 
சாத்யக் கூறுகளோடும் 
பாத்தி கட்டிவிட்டன வியாதிகள் உடலில்.. !!

"அரை நூற்றாண்டே 
மனித ஆயுள் இனி "  என்கிற வழக்கு 
அமலுக்கு வந்தால் ஆச்சர்யமில்லை.. 

ஆனால் அந்தக் கிழவிகள் 
ஏற்றிப் படுக்கவைத்த பாடைகளைக் 
கிழித்து விட்டு வந்து இங்கே 
வியாபாரம் செய்வது போன்று 
புலனாகிறது எனக்கு.. 

முகங்களில் கண்ணாடி இல்லை.. 
தொங்குமந்த சூம்பிக் கிடக்கிற 
முலைகளில் கவனமில்லை.. 
பொரியையும் கடலை வகையறாக்களையும் 
படிகளில் அள்ளிப் போட்டு 
சுருக்குப் பையில்  காசைத் 
திணிக்கிற பிரக்ஞை தான் அதீதம்.... 

மிச்ச சில்லறையைக் கொடுக்க 
ஒரு அங்கலாய்ப்பு.. அதற்குமாய் 
சேர்த்து பொரி போட்டு விடுகிற நாசுக்கு.. 

காலணா அரையணா  
காலங்களில் புழங்கிய 
சுவடுகள் கிஞ்சிற்றும் அற்று 
இன்றைய ஐம்பதும் நூறும் 
ஐந்நூறும் ஆயிரமும் 
அந்தக் கரடுமுரடான கைகளில் 
தவழ்வதைப் பார்க்கையில் .. 

எதிரிலே 
பழங்கால நாணயங்கள் சேகரிக்கிற 
கடை ஒன்றை வைத்திருக்கிற 
எனக்குள் .. 
ஒரு இனம்புரியாத 
லஜ்ஜை 

காலணாக் காசொன்றை 
எடுத்து அவளிடம் சென்று 
வறுகடலை கொடுக்கச் சொல்லிக் 
குசும்பு செய்து பார்த்தேன்.. 

குண்டியில் சிரிக்காத 
குறையாக முறைத்துப் 
பார்க்கிறாள் கிழவி.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...