Saturday, October 31, 2009

மீண்டும் ஏமாந்தது காக்கா...

வடை சுட்டு ஜீவனம் செய்து வந்த பாட்டி செத்துப்போனதற்கு காக்கையும் நரியும் வந்திருந்தன...
ஏமாற்றி தன் வடையை தந்திரமாக கவ்விச்சென்ற நரியை அதன் பிறகு இழவு வீட்டில் தான் பார்த்தது காகம்..
ஏன் அப்படி அன்று என் பசி குறித்த கவலை கூட அற்று தந்திரமாக பிடுங்கிச்சென்றாய் என்று நாக்கை பிடுங்கிக்கொள்வது போல நரியிடம் கேட்க வேண்டுமென்று காகம் யோசித்தது... ஆனால் இந்தக்கூட்டத்தில் அதைக்குறித்து கேட்பது அவ்வளவு நாகரீகமில்லை என்பதை உணர்ந்து .. பதினாறாம் நாள் காரியத்துக்கு வருகிற போது கேட்கலாம் என்று கேள்வியை ஒத்திவைத்தது காகம்.. காகத்தின் இந்த அனுமானத்தை எப்படியோ உணர்ந்து கொண்டது அந்தத்தந்திரக் கார நரி..

பதினாறாம் நாள் காரியத்திற்கு நரி வராதது காகத்துக்கு மறுபடி ஓர் பெரிய ஏமாற்றமாயிற்று...


சுந்தரவடிவேலு..

Wednesday, October 28, 2009

உன் ஒற்றைப் பார்வையில்...

எதுவுமற்ற வெறுமை
வந்து அவ்வப்போது
மனசை
சூனியமாக்கினாலும்
உன் நினைவுகள் வந்து
யாவற்றையும் நிரப்பி
என்னை நிறைகுடம்
ஆக்கி விடும்..

என் மனக்குளத்தில்
உன் பிம்பம் போதும்..
சலனம் ஏற்படுத்தி விடும்..!
எத்தனையோ பேர்கள்
கல்லெறிந்த போதெல்லாம் கூட
கலங்காமல் இருந்த
மனக்குளம்
இன்றுன் .. ஒரே பார்வையில்
பேரலைகள் படர்ந்து
துவம்சம் செய்து
புரட்டிப்போட்டு விட்டது என்னை..!!

சுந்தரவடிவேலு..

Sunday, October 25, 2009

மலரினும் மெல்லிய...

பாலியல் குறித்து விஷயங்களை சேகரிக்க எந்த வயதிலும் சலிப்பதே இல்லை.. நாம் இந்த பிரபஞ்சத்தில் அடி எடுத்து வைத்ததே அந்தப் புணர்ச்சியின் நிமித்தம் என்பதாலோ என்னவோ, பிரத்யேகமாக அந்த விஷயத்தில் அதீத கவனத்தை இயல்பாகவே செலுத்தப் பழகிக்கொண்டோம்...

ஆனபோதிலும் அவைகளைப்பற்றி விவாதிக்கையில் நாசுக்கு தவறாமல் சற்று இங்கிதம் தொனிக்க பரிமாறுவதே ஆரோக்யமான போக்காகும்.. அல்லாமல் யதர்ர்த்தமாக சொல்கிறோம் என்கிற பாணியில் பேசினோமே யானால் அது ஆபாசமாகவும் விபரீதமாகவும், சொல்கிற நபருக்கே குற்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் மாறி விடக்கூடும்...

அவை குறித்து ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் உள்ளன.. தொலைகாட்சி அலைவரிசைகள் உள்ளன. அதற்கென நேரம் ஒதுக்கி கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.. எந்தக்கேள்விகள் ஆனாலும் ஒளிவு மறைவு அற்று கேட்கிறார்கள்.. பதிலும் பக்காவாக சொல்கிறார்கள்.. அப்படியிருக்க, இந்த ப்ளாகில் நானேதும் புதிதாக சொல்லிவிடப்போவதில்லை..

பாலியல் குறித்து அது சார்ந்த எவ்வளவோ நிபுணர்கள் படம் போட்டுக்காட்டுகிற இந்த சூழ்நிலையில் நான் இங்கே சொல்ல ஒன்றுமில்லை.. நானும் அவை குறித்து எவரேனும் சொல்ல, வாய் பிளந்து கேட்கவே ஆயத்தமாயுள்ளேன் என்பதால் .... நான் ஏதேனும் சொல்ல வருகிறேனோ என்று வாய் திறந்து எவரேனும் இருப்பீர்களேயானால் ....

நெல்லை ஹல்வாவைத்தான் திணிக்க வேண்டும்...



சுந்தரவடிவேலு, திருப்பூர்.


Friday, October 23, 2009

என் கண்மணி...

நீ உன்
அழுகையை நிறுத்தினாலும்
நானென்
தாலாட்டை நிறுத்தமாட்டேன்..

உன்
பஞ்சுக்கன்னங்களில்
என் நாசியை
அழுத்தி-
உன் புன்னகைச்சூட்டின்
அருகாமையில்
குளிர் காய்வது
அலுக்காத சந்தோஷம்..

எட்டி எட்டி நீ
என்னை உதைத்தாலும்
உன் கால்களை
கட்டிக்கொண்டு
முத்தமிடுவதை
வழக்கமாக்கிக்கொண்டுள்ளேன்..

எனக்கு நீ
அருள் பாலிக்கவில்லை
என்றாலுமே கூட-
உன்னை பிரார்த்திப்பதை
மட்டும் என்னால் தவிர்க்கவே
முடியாது...!!


சுந்தரவடிவேலு.. திருப்பூர்.

Tuesday, October 20, 2009

சிலரது மனநிலைகள்..வியப்பூட்டுகின்றன

சில படங்களை நான் பார்த்து விட்டு வருவேன்.. என் மனதிற்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.. எனது நண்பர்களிடமும் அதே ரீதியில் அவர்களும் உணர வேண்டும் என்கிற விதமாக அந்தப்படத்தை சென்று பார்க்கச்சொல்வேன்.. எனது வேண்டுகோளினை ஏற்று சில நண்பர்கள் சென்று வருவார்கள்.. நான் விரும்பியது போலவே அவர்களும் அதனைக்குறித்து விமர்சித்து என் ரசனைகளை அங்கீகரிப்பார்கள்.., நானும் புளகாங்கிதம் அடைய நேரும்..
என் ரசனைகளை அங்கீகரிப்பதும் கூட ஓர் கலைஞனையே ஊக்குவிக்கிற ஓர் தன்மையை எனக்குள் நிகழ்த்தச்செய்வது ஓர் விபரீதமான சந்தோஷம்...

ஆனால் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.. நான் ரசித்தவற்றை எந்தப்பிரமாதமும் இல்லை என்பதாக சொல்லி அதற்குரிய தர்க்கரீதியான விளக்கங்களையும் முன் வைக்கிற நோக்குடன் அதீதப் பிரயத்தனத்துடன் என்னிடம் வாதாடி என்னை அவர்களுடைய கருத்துக்களுக்கு உடன்படச்செய்வதை பெரிய கௌரவப் பிரச்சினையாக்கி முழங்குவார்கள்., நானும் முடிந்த வரை கிண்டி, கிளறி... போய் தொலைகிறது என்று அவர்களுக்கு இணக்கமாக ஆமோதிப்பதை .. தாங்கள் வெற்றி பெற்றதாக உணர்வதைபபார்க்க எனக்கும் ஓர் அல்ப சந்தோஷம்.. நான் தோற்று விட்டதாக இதற்கெல்லாம் கவலைப்படுகிற அறிவீனம் எனக்கில்லை.. ஆனால் என் போல அவர்கள் இல்லை.. அவர்களுக்கு இந்த கவைக்கு உதவாத விஷயத்தில் கூட வெற்றி தேவைப்படுகிறது என்பதோடு தோல்வியை கேவலமாக வேறு நினைப்பார்கள்...

என்னவோ , ஒரு படம் பார்த்தோம், ரசித்தோம், அது குறித்து அபிப்பிராயம் சிறிது பகிர்வோம் என்கிற புத்தி கூட அற்று அதில் ஆழ்ந்து போய் பட்டிமன்றமே நடத்துகிற அளவுக்கு அறிவும் வெறியும் இருப்பதைப்பார்க்கையில் , நம்முடைய ரசனைகள் கூட சற்று மெருகு குறைந்தே காணப்படுகின்றது...


சுந்தரவடிவேலு.. திருப்பூர்

Sunday, October 18, 2009

தீர்க்கதரிசி...

தீபாவளிக்கு
அடுத்த நாள்...
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
வெடிக்காத
பட்டாசுகளைப்
பொறுக்கி சேமித்துக்
கொள்கிறான்..
அடுத்த தீபாவளிக்கு..!!

சுந்தரவடிவேலு..

Friday, October 16, 2009

diwali..happy moments...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
குதூகலம் கும்மாளமிடும் இந்த நாள்
அன்றும் இன்றும் என்றும்
அதே சுகந்த உணர்வுகளை
தெளிக்கிறது ... நெருப்பில்..
enjoy this diwali wildly everybody..

sundaravadivelu..

Tuesday, October 13, 2009

பலம் பொருந்திய தோல்விகளும்.. அதன் ஞாபகங்களும்...

எனது காதல்
சற்று விநோதமானது...

-என் கன்னங்கள்
அவள் உதடுகளுக்கு
முத்தமிடும்..

-அவளது மடியில்
சாய்ந்த வண்ணமாகவே
அவளுக்காகக் காத்துக்
கிடப்பேன்...

-இந்நாட்களில்
அவளுடனாக
புணர்ச்சி கொள்ளும்
தருணங்களில் கூட,
... அன்று
காதலிக்க ஆரம்பித்த
நாட்களில் "எனக்குகிடைப்பாளா?"
என்கிற கேள்விக்குறிகளுடன்
ஏங்கிக்கொண்டிருந்த அந்த
ஞாபங்கங்கள் ...

-இன்றைக்கு
எனக்குக் கிடைத்து
விட்டாள்...
அவளைப் புணர்கிறேன்
என்கிற நிதர்சனங்களை
எல்லாம் தாண்டி..
--மறக்கவே
முடியாத அன்றைய
தேடல்களின் அவஸ்தைகள்
இன்னும் வேதனை
கலந்த சுவாரசியங்களை
பதிவாக்கிக்கொண்டிருக்கிற
ஞாபகச்சுழல்கள்...
--என்
தற்போதைய
ஆசுவாசத்தையே கூட
மூர்ச்சையாக்கி
உள்ளிழுத்துக்கொள்கிற
சாத்யக்கூறுகள்
கொண்டவை என்றே
அனுமானிக்கிறேன்...!!


சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

Sunday, October 11, 2009

ரசனைகள்..

காதல் என்கிற
புனிதம் துவங்கும்
பொழுதே
காமத்துக்கான
அடிக்கல்லும் சேர்ந்தே
நாட்டப்படுகிறது....

புணர்தல்
நிகழ்கிற தருணம்
வரைக்கும்
காதல் - தன்
புனிதத்துவத்தை
இழக்காமலே தான்
இருக்கிறது...

காமமும்
புனிதம் என்றும்
அது மலரினும் மெல்லியது
என்றும் உணரப்படுவதற்கு
அபரிமித ரசனை தேவைப்படுகிறது...

ரசனையற்ற புணர்தல்கள்
சலிப்பை ஏற்படுத்தும்
நாளடைவில்...!
பிறகு...
காணாமல் போயிருக்கும்
காதலும் காமமும்...!!

சுந்தரவடிவேலு

Friday, October 9, 2009

சும்மா ஒரு.. உடான்சு...

கிட்டத்தட்ட என் அளவிற்கு சொத்து சேர்த்து விட்டார் பில் கேட்ஸ் என்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் என்னை முந்த விடக்கூடாது என்பதை இந்த வருட தீபாவளித்தீர்மானமாக எடுத்துக்கொள்கிறேன்.

எனக்குக்கொடுக்க வேண்டிய ஆஸ்கார் பரிசை எ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்தது போதாதென்று , இப்பொழுது ... நோபெல் பரிசையும் வேறொரு நபருக்குக் கொடுத்து என்னை கேவலப்படுத்தியுள்ளார்கள்...

இம்புட்டு கனவை வச்சுக்குட்டு டவுன் பஸ் நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டு போக வேண்டியுள்ளது..
ஒதைக்காதடா கழுதை... கடிக்காதடா நாயி... ஒதுங்கி நில்றா பன்னி...
கண்டக்டர் ஒரு பக்கம் கடிக்க ... ஆதிவாசி போன்ற ஆண்களும் பெண்களும் அதிகாரம் பண்ண... மேர்சீ டெஸ்பெஞ்சுல போக வேண்டிய ஆளு நான்... இப்ப உங்க கிட்டயெல்லாம் திட்டு வாங்கிக்கினு போக வேண்டியிருக்கேன்னு... ஒரு டுபாக்கூரு கற்பனை...!!

Thursday, October 8, 2009

தினமலர் செய்தியாளர் லெனின் கைது குறித்து..

சினிமா நடிகைகளின் கற்பு, பத்திரிகயாளர்களின் சுதந்திரம் ....
எல்லாமே ஒரு சேர பறிபோய்க் கொண்டிருக்கிறது நமது தேசத்தில்...
நடிகை.. தனது வாழ்வாதாரம் கருதி கற்பை அற்பப்பொருள் ஆக்கிக்கொண்டாள்..
பத்திரிகைகள்... circulation-ஐ அதிகமாக்க இந்த அற்ப விஷயங்களை பிரமாதப்படுத்தி focus செய்து கொண்டிருக்கின்றன..

Wednesday, October 7, 2009

???

பறவைகளை விட
தூரத்தில் பறக்கிறது
சிறகுகளே இன்றி...
பேரண்டம்....!

சுந்தரவடிவேலு...

நோ கமெண்ட்ஸ்...

ஏதேனும் கமெண்ட்ஸ் வரும் என்று எதிர்பார்த்தால் ஒன்றையும் காணோம்.. கமெண்ட்ஸ் டானிக் மாதிரி.. எழுதுபவர்களுக்கு...
ஆனபோதிலும் அதற்கான தகுதி பெறாத எழுத்துக்களுக்காக கமெண்ட்ஸ்-ஐ எதிர் பார்த்துக் கிடப்பது அறிவீனம்...
எவ்வளவோ பேர்கள் படிக்கலாம்.. ப்ச். என்னத்தைப்போய் விமர்சிப்பது என்கிற சலிப்பில் கூடப்போயிருக்கலாம்... அல்லது.. இவன் அறுத்துத் தள்ளுவான். என்று ஒதுங்கிப்போயிருக்கலாம்... இப்படி ஏதாவது நிகழலாம்..
இதற்கெல்லாம் சலிக்காமல் கல்லுளி மங்கன் போல எதையேனும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகள் வகுத்துக்கொண்டேன் என்றாலும் இந்தப் பாழாய்ப் போன மனசு இருக்கே... எவரேனும் ஏதேனும் என் கருத்துக்கள் குறித்து பிரலாபித்து இருக்க மாட்டார்களா என்கிற நப்பாசை.... அன்றாடம் கமெண்ட்ஸ் காலத்தில் சற்று மேய்வேன்.. ஜீரோ கமெண்ட்ஸ் என்று இருப்பதைப்பார்த்து .."இன்னாங்கடா இது.. நம்ம காவியத்தைப் படிச்சுட்டு நம்ம ரசிகப்பெருமக்கா கண்டுக்காம இருக்காஹலே.."ன்னு ஒரு சடவு....
...இதுக்கெல்லாம் அசந்தராத வாத்தியாரே.. சும்மா எதையாச்சும் கச்சா முச்சா ன்னு கிறுக்கிக்கினே கெட... அதெல்லாம் எதனாச்சும் ஸொல்லுவாஹ.. சொல்லாட்டியும் தான் என்ன.. நீ பாட்டுக்கு எய்திக்கினே கெட ...ன்னு அசரீரி ஒன்னு பொலம்புது நைனா...

Sunday, October 4, 2009

சமத்துவம் என்பது வாழ்க்கையில் இல்லை..

ஜனங்கள் ஒன்று கூடுகிற திருவிழா கால கோவில்கள் ஆகட்டும் பிற கேளிக்கைகள் சார்ந்த இடங்கள் ஆகட்டும்..
மனிதக்கூட்டங்கள் எங்கு கூடுகிற காட்சியைப் பார்க்க நேர்கிற போதும் எனக்கு ஓர் விஷயம் தோன்றிக்கொண்டே இருக்கும்..
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் பெரிய சமத்துவ உணர்வுகள் எல்லாம் பீரிடவில்லை..
நாமெல்லாம் 'சாகப்போகிறவர்கள் என்பதில் மட்டுமே பிரம்மாண்டமானதோர் சமத்துவம் பொதிந்து கிடப்பதாகத் தெரிகிறது.

வாழ்கிற காலங்களில் அனேகமாக எல்லாருமே பாரபட்சங்களோடும் போட்டி பொறாமைகள் கொண்டும் , பிழைப்புக்கான போராட்டங்களோடும்
ஆடம்பரங்களை அனுபவிக்க வேண்டும் என்ற அவசரங்களும், அந்த சம காலத்தில் தன்னை சார்ந்தவர்களோ தமது நெருங்கிய நண்பர்களோ அவ்வித ஆடம்பரங்களை சுலபமாக அனுபவிக்கையில் நமக்குள் நேர்கிற ரசாயன மாறுதல்களும் அங்கலாய்ப்பான வேதனைகளும் வார்த்தைகளில் பிடிபடாது..
--ஆக, வாழ்க்கை என்பது சமத்துவத்திற்கு முரணாக இருப்பதையே யதார்த்தத்தில் தரிசிக்க முடிகிறது.
இதனை ஒப்பிடுகிற போது தான் மரணம் மிக யதார்த்தமான சமத்துவத்துடன் எனக்குப்படுகிறது...

என்றேனும் நாம் நடந்து செல்ல வாய்க்கையில் ஓர் அவசரம் நிமித்தம் டூ வீலரில் செல்பவர்களை drop செய்யச்சொல்லிக் கேட்டுப்பாருங்கள்..பத்துக்கு ஒன்பது பேர்கள் "நான் அப்பிடி போறேன்.. இப்பிடி போறேன்.." என்று சொல்லி பறந்து விடுவார்கள். சிலரோ ஊமைகள் போல ஒன்றுமே பேசாமல் போய்க்கொண்டே இருப்பார்கள்..
இப்படியெல்லாம் சுட்டிக்காட்டுகிற .. சமுதாயத்தை குட்டிக்காட்டுகிற நானே இந்தத்தவறுகளை சுலபத்தில் ஓர் மனநிலையில் செய்து விடுவேன்.. நான் டிராப் செய்ய சொல்லிக் கேட்கையில் மதிக்காமல் போகிறவர்களின் மீதான கோபங்கள் ஒருபுறம்... அப்படி உதவி கேட்பவர்களே என்றேனும் எனக்கு உதவாமல் ஒதுங்கியிருப்பார்களோ என்கிற கற்பனை ஒருபுறம்....

--மேற்சொன்ன சின்ன உதாரணமே போதும், நம் வாழ்க்கையில் சமத்துவம் எப்படி வாழ்கிறது என்று...


சுந்தரவடிவேலு. திருப்பூர்.

Friday, October 2, 2009

பிசகல்..

கூப்பிடு தூர
சந்தோஷங்களைப்
புறக்கணித்து விட்டு
துயர்களிடம்
அழையா விருந்தாளிகளாய்
நுழைகிறோம்...

நூலிழையில்
தவறிப்போன
சந்தோஷங்களுக்காக
அங்கலாய்த்து சாகவே
அன்றாடம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
துயர்களின் துணையோடு..!!


சுந்தரவடிவேலு.

குப்பை..

முன்னரெல்லாம் நான் கிறுக்குவதற்கு என்றே scribbling pad வைத்திருப்பேன். .. இன்றைக்கு அதற்கு பதிலாக கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறேன்..- அதுவும் இப்படி பிரத்யேகமாக ப்லோக் எல்லாம் திறந்து..முந்தைய என் கிறுக்கல்களை நான் மட்டுமே படித்து, சலித்து, கிழித்தெறிந்தும் .., சிலவற்றைப்படித்து சிலிர்த்து.. பாதுகாத்தும் வந்திருக்கிறேன்.
இன்று சலிக்க வைப்பவைகளையும் சிலிர்க்க வைப்பவைகளையும் பாகு படுத்தவே புரியாமல் கொட்டித்தீர்க்கிறேன்..
எனது வீட்டின் dustbin இப்போதெல்லாம் நிரம்புவதே இல்லை..
அது தான் எல்லா குப்பைகளையும் உங்களிடம் கொட்டி விடுகிறேனே..

சுந்தரவடிவேலு.

Thursday, October 1, 2009

அவஸ்தை..

எந்த வசீகரங்களுமற்ற
கனவுகளுடன் உறக்கம்...
விழிப்பில் தான் எல்லாம் சூன்யம்
என்றால் உறக்கத்திலுமா?..

ஞாயிற்றுக்கிழமை
சாயங்காலம் ... சினிமா பார்க்கலாம்
என்று திரையரங்கு போனால்
அரங்கு நிறைவு...
பிளாக் டிக்கட் வாங்கிப்பார்க்க
வேண்டியதாயிற்று...

பிறகு ரெண்டொரு நாட்கள்
கழிந்து ஓர் இரவில் வந்த
கனவிலும் சினிமா பார்க்க
தியேட்டர் விரைகிறேன்...
பிளாக் கில் கூட டிக்கட்
கிடைக்காமல் வீடு திரும்புகிறேன்...!!


சுந்தரவடிவேலு.

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...