Tuesday, July 7, 2015

மறதிகளும் ஞாபகங்களும்..

காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்கையில் மனசுக்குள் பற்பல அற்புதக் கருத்துக்கள் புடைத்தெழுகின்றன .. யாதொன்றையும் விட்டுவிடாமல் பிளாகில் இறக்கி எனது அறிவுச் சுமையைக் குறைத்தாக வேண்டும் என்கிற வேகம் வெறி ஒன்றாகப் புறப்பட்டு... 

வீடு வந்து கணினி திறந்து பிளாக் எழுத உட்கார்ந்தாலோ, அனுமானித்திருந்த எல்லா அற்புதங்களும் காற்றடித்த  மேகங்களாக நழுவித் தொலைந்து விட்டிருந்தன.. 
கருத்துக்கள் மனசுக்குள் பிடிபடுகிற போது , என்னவோ உடும்பாக, நங்கூரப் பாய்ச்சலாக உணர முடிகிறதே அன்றி, சற்று மணித்துளிகள் கடக்கையில், யாவும் எங்கோ பஸ்பமாகி விடுகிற இந்த 'கேவல-சுழற்சி' அன்றாட நிகழ்வெனிலும், என்னவோ பெரிய அறிவுஜீவி போன்ற எண்ணத்தில், எதனையும் ஒரு குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வதில்லை நான்.. 
Image result for forget
கணினி முன்னர் அமர்கையில் தான் புலனாகிறது, என்னுடைய "என் பற்றிய" பலவீனம்.. சிலர் தான் மனதளவிலும் பார்த்த மாத்திரத்தில், நினைத்த மாத்திரத்தில் ஒரு புகைப் படக் கருவி போன்று பதித்து வைத்துக் கொள்கிற சாதுர்யம்  கொண்டுள்ளனர் .. 

என்னுடைய திறன்கள் எல்லாம் உடனடியாக நீர்த்து விடுகிற தன்மையே கொண்டுள்ளன என்பதை என்றோ நான் நன்கறிவேன் என்ற போதிலும், இந்தத் தவறுகள் தொடர் நிகழ்வாக என்னை ஆக்கிரமித்துள்ளதை நான் உணர்கிறேன்.. 
இருந்த போதிலும் சிலவற்றை தத்துப்பித்தென்றாவது இங்கே கொணர்ந்து சேர்க்கும் திராணியில் முயல்கிறேன்.. 

அன்றே கொல்கிற அரசனே ஒரு 'கொலைக் குற்றவாளி'யாகவும்,  நின்று கொல்கிற  தெய்வம் சும்மா நின்றவாறாக மட்டுமே இருப்பது போன்றும்  தோன்றுகிறது.. 
களவாணிகளுக்குத் துணை போகிற அரசன், எங்கே போய் தண்டனை கொடுப்பதாம்?.. 

இருக்கிறவனுக்கே மேற்கொண்டும் அள்ளிக் கொட்டுகிற கடவுள், இல்லாமையில் கெஞ்சிச் சாகிறவனுக்கு சற்றேனும் ஆதரவு காண்பிப்பது பரம  அசாத்தியம் போன்றே தான் விடாப்பிடியாகத் தோன்றுவதேன்?

ஒரு குடும்பத்தின் "ரொட்டி ஜெயிப்பாளரை " [bread winner ] சதா நேரமும் போராட்டத்தில் தவிக்க விட்டு , என்ன போராடியும் கொஞ்சமே ஜெயிப்பதும், அல்லது முழுதுமாகத் தோற்பதும் என்றவாறே வெறுப்பேற்றி  வெம்பிக் கிடக்கிற வாழ்க்கை..

ஏற்கனவே பற்பல நிறுவனங்களுக்கு எம்.டி யாக இருக்கிற பனாதி, மேற்கொண்டும் தொட்டதெல்லாம் துலங்கி ... லாப லட்சம் கோடிகளை திருப்பதி ஸ்ரீ வாரி உண்டியலில் கவிழ்ப்பதும்.... இல்லாத ஏழை எளியோருக்கு கிஞ்சிற்றே தான தர்மங்கள் புரிவதும்.. அந்த தர்மம் இல்லாதவனுக்கு தொட்டு நக்கவே போதாமல் மேற்கொண்டும் அவனை அவஸ்தை பிடுங்கி சாகடிப்பதும்.. 

இப்போதைக்கு இந்த ஒற்றை சிந்தனையைக் கொட்டி விட்டிருக்கிறேன்..

[இது ஒன்றும் எனக்கு வருகிற புது சிந்தனை அன்று.. அன்றாடம், எல்லாருக்கும் நிழாடுகிற சகஜ சிந்தனையே]

பார்ப்போம்.., மறுபடி ஒன்று ஞாபகம் வருகையில் அதனையும் பதிவிறக்கம் செய்ய விழைகிறேன்.. 

மேற்கொண்டு காகிதம் பேனா கைவசம் வைத்துக் கொள்வது உசிதம் என்கிற முடிவுக்கு  வந்துள்ளேன்.. ஆனால், இப்படி ஒரு முடிவு வந்து பல வருடங்கள் ஆகின்றன.. 

1 comment:

  1. அனைத்தும் சிறிது காலம்... ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் மலரும் நன்னாள்... நம்பிக்கை தானே வாழ்க்கை...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...