Monday, October 31, 2011

மழைக்கால ஞாபகங்கள்..

மழையின் ருசியில்
மயங்கியது நாக்கு...                             
...
சின்னத் தூறலில்
நனைவதற்குக் கூடத்
தடை விதித்த 
பால்ய காலங்கள்
மலரும் நினைவுகளாய்
இப்போது நனைந்துகொண்டே...!

ஒவ்வொரு மழையிலும்
ஓடிப்போய் நனையவே 
என் ரசனைகள் பருத்திருந்தன...
ஆனால் தடை விதிப்பதைக்
கடமையாயும் கெளரவமாயும்
கருத்தாய்க் கொண்டிருந்தனர்
பெற்றோரும் மற்றோரும்...!

சிணுங்கிக்கொண்டே விலகி நிற்பேன்..
போகப்போக என் அடம் 
அவர்களுக்கு பெரிய இம்சையாகவே,
குடைகொடுத்து இறக்கிவிடுவர்
மழையில் என்னை..
என் குடையை  கொஞ்சம் மட்டும்
நனைய விட்டு
 முழுதுமாக
நான் நனைந்து...மேற்கொண்டு
குடை  நனையாமல் 
பார்த்துக் கொள்வேன்...!!

மழையில் நனைகிற என்
திமிரை எவராலும் எப்போதும்
அடக்கவே முடிந்ததில்லை...

மழை வருகிற முஸ்தீபில்
வானம் பூச்சாண்டி காட்டுகிற
போதெல்லாம் , மக்கள்
ஏன் அப்படி துரிதம்
காட்டுகிறார்களோ  என்று
எரிச்சல் வரும் எனக்கு...

இத்தனை ஜாக்கிரதை
காட்டுகிற மக்கள்
சளி காய்ச்சல் என்று
அடுத்த நாள் ஆஸ்பத்திரியில்
குவிகிறார்கள்...

இத்தனை கிழிக்கிறவன்
என் மகள் நனைகையில்
பதறாமலா இருக்க முடிகிறது?
அவசரமாகக் கைக்குட்டை
எடுத்து அந்த சின்ன
மண்டையைத் 
துவட்டி விடாமலா இருக்க முடிகிறது??...

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...