RX 100 YAMAHA....
1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்தேன்...
கடந்த பதினெட்டு ஆண்டுகள் இதே பைக்கை உபயோகித்து வந்தேன்... என்னவோ காதலி பிரிகிற உணர்வு... நீண்ட நாள் நண்பன் கண் காணாத ஊருக்கு செல்வது போன்ற தாங்கொணா வேதனை... வாரி அனைத்து பல முத்தங்கள் தந்து விடத் தோன்றியது... அழவில்லையே தவிர எனக்குள் ஓர் கசிவு உள்ளே என்னை முழுதுமாக நனைத்திருந்தது... இதற்கு அழுதால் சிரிப்பார்கள் என்கிற லஜ்ஜை, அழுவதை மறைக்க வேண்டியாயிற்று..

அன்றைய யவ்வனத்தில், யுவனாயிருந்த காலத்தில் ... விழித்துக் கொண்டே கண்ட கனவு தான் அந்த யமஹா... லட்சணத்துக்கும் அதிவேகத்துக்கும் ப்ராபல்யமான அந்த பைக்கை ஆசை ஆசையாக நான் வாங்கியது என் அப்பாவுக்கு எரிச்சல் தந்தது... மைலேஜ் அதிகம் தராது என்பதோடு விபத்துக்கான சாஸ்வதங்களும் இந்த பைக்கில் அதிகம் உண்டு என்கிற அக்கறை தான் என் அப்பாவின் கோபமும் எரிச்சலும் என்பது என் இளமைனதுக்குப் புரிபடவில்லை...
ஆனால் எனது நண்பர்கள் மத்தியில் அந்த பைக் பெருமிதமான விஷயமாயிற்று... அதனை வசப்படுத்த இயல்பான வசதி வேண்டும் என்பதோடு காசு பணம் குறித்த கஞ்சத்தனமில்லாத ஓர் லாவகத்தை ஏற்படுத்துகிற வல்லன்மை கொண்டது யமஹா.. ஆனால் எனது தன்மை அப்படி ஒன்றும் பிரமாதமானதாக இல்லை என்பது யாவரும் அறிந்தது... இவன் தன்மைக்கு இந்த பைக்கா என்கிற முரண் பீறிடும் பார்வைகளை நான் அடையாளம் கண்டிருக்கிறேன்... இவைகளை எல்லாம் தாண்டி வார்த்தைகளற்ற ஓர் இறுமாப்பில் நான் வலம் வருவேன் இந்த பைக்கில்..
சுசுக்கியோ ஹோண்டாவோ தராத ஓர் பிரத்யேக மிதப்பை இது பிரதிபலிக்கும் என்கிற மாயையில் அன்று சிக்கிய பலருண்டு..
பல ஊர்களுக்கு பல மைல் பயணங்களை மேற்கொண்டு என் தெனாவெட்டை பிற எனக்கு அறிமுக நபர்கள் இல்லாத ஊர்களிலும் பறைசாற்ற முயன்ற எனது அன்றைய சிறுபிள்ளைத் தனங்கள் யாவும் இன்றைய முதிர்ச்சியில் என்னில் நிழலாடுகின்றன...
அந்த பைக்கின் நிமித்தம் நான் பற்பல கலவை உணர்வுகளை அன்றும் அனுபவித்தேன் இன்றைய பிரிவிலும் அனுபவிக்கிறேன்...
மறுபடி ஒரு நாள் எங்கேனும் எவரேனும் ஓட்ட எதேச்சையாக நான் பார்க்க நேரும் என்கிற அனுமானம் உண்டு..
அப்போது---- நான் கடப்பதை அந்த பைக்கும் சத்தியமாக உணரக்கூடும்... சத்தியமாக...!!
V.SUNDARAVADIVELU..
sure Yamaha Rx is GREAT..!
ReplyDelete