Sunday, April 22, 2012

மானம் கெட்டவன்

மிகத் துரிதமான
எனது சோம்பேறித்
தனங்களும் ..
மிக மிக
சோம்பேறித் 
தனமான எனது
அவசரங்களும்
என்னிடம் எனக்குப்
பிடித்தவை மற்றும்
பிடிக்காதவை..

எல்லாருக்குமான
வாழ்க்கை 
அபரிமிதமான
துடிப்பில் இயங்குகையில்
கல் தேரையாக
எனது...

பாய்வதற்கான பதுங்கல்
என்கிற அனுமானம்
எல்லாருக்கும்...
அதனைச் சாக்காட்டி
நானும் படுத்துறங்கப்
பழகிக் கொண்டேன்...

எனது குறட்டை கூட
புலியின் உறுமலில்
பயமுறுத்துவதாக
சொல்கிறார்கள்...
அதிர்ந்து கூடப் 
பேசத் தெரியாதவனுக்கு
இவ்வளவு தப்புத் தப்பான
அடையாளங்களா??

என் இளம்ப்ராயங்களில்
என் ஜாதகத்தை கணித்த
ஜோதிடர்கள் பலரும்
நான் பெரிய 
மேதாவி ஆவதற்கான
எல்லா அருகதைகளும்
இருப்பதாகப் பிதற்றி
என் அம்மாவின்
சுருக்குப் பையை
காலி செய்தனர்... 
எனக்காவது கொடு,
மொபெடுக்கு பெட்ரோல்
போட உதவுமென்று
கேட்டுப் பார்த்தாலும்
ஊம்ஹும்...

இந்தக் காலகட்டம்
என்னைப் பொருத்தவரைக்கும்
பரவாயில்லை... 
என் அம்மா 
முன்னர் போல
என்னைக் குறித்து
ஜோதிடம் பார்த்து
காசை விரயம் செய்வதில்லை.., 
அதோடு எனது
பைக்கிற்கான பெட்ரோல்
போடுவதற்கான காசினை
நான் உருவிக் கொள்வதை
தூங்குகிற என் அம்மாவினால்
கண்டுகொள்ள முடியவில்லை..

என் அக்காவிடம்
நேற்றுப் பேசிக் கொண்டிருந்தாள்
என் அம்மா...
""எடுக்க எடுக்க
முழிச்சுப் பார்த்தா 
அவன் மனசு கஷ்டப்படும்...
நாம பெத்த கடனுக்கு..""

பேசியது கேட்காதது மாதிரி
புரியாதது மாதிரி
சுலபமாக என்னால் 
இருந்துவிட முடிகிறது....
அந்த இரவில்
பதட்டமில்லாமல் 
அம்மாவிடம் 
சுருக்குப் பையை
உருவ முடிந்தது...
முழித்துக் கொண்டிருந்த 
அக்கா தான் 
கேவலமும் பரிதாபமும்
கலவையான ஓர் பார்வை
பார்த்து என்னை
சங்கடத்திற்கு ஆளாக்கினாள்..!!

சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...