மறுபடி மறுபடி...
மிகவும் சாஸ்வதம் போல
மிக மிக நிரந்தரம் போல
எவ்வளவு சம்பவங்கள்
வாழ்நாள் நெடுக..
எல்லோருக்குமாக
அனுபவங்களாகி
விடுகின்றன??
--அவைகளில்
ஐக்கியமாகித்
திளைக்கையில்
ஓர் சுவாரஸ்யம்...
பிய்ந்து உதிர்வது
போல் வெளியேறுகையில்
ஓர் ஆற்றாமை...!!
எல்லோருக்குமே
திரும்பிப் பார்ப்பதற்கான
எவ்வளவு
மலரும் நினைவுகள்..
அழியாச் சுவடுகள்??!..
சட்டையுரிக்கின்ற
பாம்பென - எவ்வளவோ
துயர்களைக்
கழற்றி எறிந்திருக்கின்றன
காலம்..
நத்தை ஓடென
அடைந்து கொள்ளவும்
மீன் தூண்டிலென
மாட்டித் துள்ளவும்
பல சந்தர்ப்பங்கள்..
புலிகளிடம் சிக்கிப்
பிழைத்திருக்கிறோம்..
ஆடு முட்டி
சாகக் கிடந்திருக்கிறோம்..
மரணம்
நிகழவிருப்பதற்கான
சாத்யக் கூறுகளையும்
நிதர்சன உண்மைகளையும்
தாண்டி ..
--வாழ்க்கை மட்டுமே
வியாபித்து எங்கெங்கிலும்
விரிந்து கிடப்பதான
மாயையுள் மயங்கிச்
சிலிர்க்கிறோம்...
ஒவ்வொரு ஷணமும்..!!
ஒவ்வொரு ஷணமும்..!!
சுந்தரவடிவேலு..
No comments:
Post a Comment