Thursday, March 11, 2010

விண்ணை தாண்டி வருவாயா? விமரிசன முயற்சி..

என் இளம்ப்ராயங்களில் என்னை நான் ஒரு சினிமா பிரியன் என்று சொல்வதைக்காட்டிலும் சினிமா வெறியன் என்று சொன்னால் தான் பொருந்தும் அளவுக்கு கண்ட படங்களையும் கண்டபடிக்குப்பார்த்து பொழுதுகள் ஒட்டித்தீர்த்திருக்கிறேன்.... ஆனால் இன்றைய சூழ்நிலைகளும் மனநிலைகளும் அவ்வித போக்குகளுக்கு அறவே முழுக்குப்போட வைத்து விட்டன.. அன்றைக்காவது படிக்கவேண்டியது இருந்தும் கூட அதனைத்தவிர்த்து படங்கள் பார்த்து வந்தேன்.. இன்று அந்த வேலையும் இல்லை, ஆனால் ஏனோ படம் பார்க்கிற மனோபாவம் முற்றிலும் பஸ்பமாகிவிட்ட முரண்பாடு எனக்கே ஓர் இனம் புரியாத தன்மையை எனக்குள் ஊடுருவச்செய்திருக்கிறது...

மிக நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்தேன்.. இதற்கு முன்னர் அயன் பார்த்ததாக ஞாபகம்.. அதற்கும் முன்னர் தசாவதாரம் பார்த்தேன் என்று நினைக்கிறேன்...

இன்னதென்று கதையை சொன்னால், சப்பை மேட்டராகத்தான் தெரியும்.. கீழே வீட்டில் இருக்கிற சிம்பு , மேல் வீட்டில் இருக்கிற த்ரிஷாவை லவ் செய்கிறார்.. புறக்கணிப்பது போல ஆரம்பித்து , பிற்பாடு சிம்புவின் காதலை த்ரிஷா ஏற்றுக்கொள்கிறார்.. பெண் வீட்டார் கிறிஸ்டியன்.. சிம்பு ஹிந்து... வழக்கமான கிறிஸ்துவர்களுக்கே உரிய எதிர்ப்பு.. விடாபிடியாக துரத்திக் காதலிக்கிற தமிழ்பட கதாநாயகன் .. காதல் எதுவும் வேண்டாம், நட்பு போதும் என்று நாயகி அபிப்ராயம் சொல்ல நாயகனும் அதனை ஏற்க, அடுத்த ஐந்து நிமிடங்களில் நாயகனுக்கு நாயகி தன உதடுகளை கடிக்க சொல்லி அனுமதி அளிப்பது .. நட்பு காதலாவது, காதல் காமத்தை நெருங்குவது...

இப்படியான ஓர் வழக்கமான தமிழ் டுபாக்கூர் கதையை .. கவுதம், எ. ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் பரமஹம்சா.. மற்றும் பலர் சேர்ந்து படத்தை அற்புதமான கவிதையாக்கி தவழ விட்டிருக்கிறார்கள் என்றால் தகும்...
அழுத்தமான வசனங்கள், காட்சிகளுக்கு புது மெருகேற்றுகிற பின்னணி இசை.... சொக்க வைக்கிற சில பாடல்கள்..

பொதுவாக நான் சிம்பு படங்களை பார்த்ததில்லை, டிவியில் ஒளிபரப்பாகிற பாடல்களை மாத்திரம் பார்த்து கண்டபடிக்கு திட்டித்தீர்ப்பேன்.. இவனெல்லாம் ஒரு நடிகன், இவனுக்கு ஒரு பாட்டு... ராஜேந்தரை விட பய்யன் லூசான் என்றெல்லாம் ஓர் ஆணித்தரமான அனுமானங்களை சிம்பு குறித்து வைத்திருந்தேன்...
--ஆனால் அவை அனைத்தையும் பொடி தவிடாக்கி விட்டான் சிம்புப்பயல் என்று தான் சொல்ல வேண்டும் இந்தப்படத்தில்... இவ்வளவு முதிர்ந்த இலக்கிய ரீதியான உணர்வுகளை மிக சுலபத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிற அவரின் திறன் பாராட்டத்தக்கது.. ஆனால் என்ன, இந்த தன்மையை தொடர நமது இயக்குனர்கள் விட மாட்டார்கள், மறுபடி அதே குத்துப்பாட்டு ஆட வைத்து பையனை வீண் செய்து விடுவார்கள்..,
சிம்புவை பாராட்டினால் எவ்வளவு தகுமோ அதே அளவு தகும் த்ரிஷாவை பாராட்டினாலும்... மிக நேர்த்தியான சூழ்நிலைகளுக்கு ஏற்ற பாவனைகளை பிரதிபலித்து அசத்தி இருக்கிறார் த்ரிஷா..

முடிவு சற்றே குழப்பினாலும், கொஞ்சம் பொறுமை காத்து கவனிப்போமேயானால் , அங்கு இழையோடுகிற ஓர் சோகமும் அதிர்ச்சியும் ரொம்பவே நம்மை திக்கு முக்காட செய்து விடும் என்பதில் ஐயம் எதுவுமில்லை...!!

--சுந்தரவடிவேலு...

1 comment:

  1. எனக்கு படம் பிடிக்கவில்லை. ஆனால் சிம்புவின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...