Wednesday, February 3, 2016

பிதற்றல்களுக்கு மன்னிக்கவும்..

Image result for egoமகோன்னத உணர்வைக் கிளரச் செய்கிற எவையாயினும், அவைகளை ரகசியமாக்கி அனுபவிக்கிற போக்கு சிலருக்கு சாசுவதமோ என்னவோ அறியேன், என்னைப் பொருத்தமட்டில் அதனை ஏதோ ஒரு வகையில் நமது அருகாமையில் உள்ள சொந்தபந்தங்களுக்கு உற்றார் உறவினர்களுக்கு ஆப்த நண்பர்களுக்கு மனைவி குழந்தைகளுக்கு என்று பகிர்ந்தளிக்கப் பரிதவிப்பவன் நான்.. 

ஆனால், நாம் நினைப்பது போன்று அது அத்தனை சுலபத்தில் வாய்த்து விடுகிற சமாச்சாரமும் அல்ல.. 
உதாரணமாக ஒரு சாரம் ததும்பும் இசை.. பியானோ கட்டைகளைப் பிய்த்து உதறுகின்றன விரல்கள்.. அதனூடே லாவகமாக வந்து இழைகிற சேக்ஸோபோன்.. பிற்பாடு மெல்லத் தவழ்ந்து பின்புறமாக வருகிற மெட்டல் ஃப்ளூட் .. இவைகளோடெல்லாம் வந்து தனக்கும் ஒரு இடம் வேண்டுமென்று உரிமையோடு இடம் பிடித்துக் கொள்கிற வெஸ்டன் வயலின்.. 
ஒரு பீத்தொவனையோ , பாக்கையோ , மொஜார்ட்டையோ கேட்டுப் பழகிய எல்லாருக்குமே இந்த ஒத்தடம் நன்கு புரியும்.. மனச் சுளுக்கையும் உடற்சுளுக்கையும் ஒருங்கே  அகற்றி ஆழ் நித்திரைக்குள் பயணிக்க வைக்கிற  அத்தனை மேம்பாடுகளும்  அடங்கியுள்ளன இந்தக் கலவைகளுள்.. !

ஜாஜ்வல்யம் ததும்பும் ஜாஸ் இசையை கேட்ட வண்ணம் தெருக்களில் நடை இடுதல் என்பது அலாதி அனுபவம்.. பாதையை  மிதந்து கடப்பது போன்ற மாயைகளுள்  லயிக்கச் செய்து விடும் அற்புதம்.. 

எமது லாகிரி மற்றோரும் அறிய வேண்டும் என்கிற அனாவசிய ஆவல் என்னுள் மூள்வதேன் ?. என்னுடைய ரசனை என்னை உயர்த்திக் காண்பிக்க வேண்டுமென்கிற அசட்டு வெறி அது என்று உணர்கிறேன்.. 

அற்புத விஷயங்கள் எவையும் தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதற்காக எப்போதும் மெனெக்கெடுவது இல்லை.. அது தானாகவே உணரப்பட்டு  வியப்புக்களுக்கு உள்ளாக்கப் பெறும் .. அவை, அக்றிணை ஆயினும், இளையராஜா ஆயினும்.. !!

நம்முடைய "பிரம்மாதம்"துரிதகதியில் கண்டுணரப் படவேண்டும்.. பரிசு பாராட்டுக்கள்  குவியத் துவங்க வேண்டும் என்கிற கங்கணங்கள் உதித்த மாத்திரத்திலேயே  நம்முடைய "அனைத்தும்" அதே கதியில் அஸ்தமிக்கவும் துவங்கி விடுகின்றன என்கிற உண்மையையாவது உணர்கிற பக்குவம்  பெற வேண்டும்.. 

அல்லவெனில், நம்முடைய கர்வம் நமக்கே கர்மமாகி விடக்கூடும்.. !!Image result for ego

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...