என்னை வசீகரித்து
மூர்ச்சையாக்கினாய்.
கோவிலுக்கு வந்த பெண்களில்
கவிதை புனைவதற்கான
அனைத்து யோக்யதைகளையும்
புதைத்து வைத்திருந்தன
உமது அவயவங்கள் மட்டுமே.. !
கர்ப்பகிரக சுவாமி அலங்காரம்
எமது பிரக்ஞையில் ஏனோ
குவியவே இல்லை..
நமஸ்கரிக்கிற உமது
கைவிரல்களும்
பிரார்த்தனையில் முனகும்
உமது உதடுகளுமே
திரையிடப் படாத
தரிசனமாயிற்று எனக்கு.. !
உம்மைப் பார்த்துப்
பிரார்த்திக்க வேண்டிய தேவை
சுவாமிக்கு இருந்தது போலவே
எனக்குத் தோன்றியது..
ஆனால் நீ சுவாமி பார்த்து
உருகிப் பிரார்த்தித்தது
முரணாய்ப் புரிந்தது எனக்கு.. !!
ஆனால் சுவாமியிடம்
பிரார்த்தித்தே தீரவேண்டிய
பல இன்னல்களில் மூழ்கிக்
கிடக்கிற நான்
சுவாமி மறந்து உன்னில்
லயித்து உன்னைப்
பிரார்த்தித்தமைக்காக
நிச்சயம் சுவாமி
என்னை தண்டிக்க
வாய்ப்பில்லை
என்கிற இந்த
உத்திரவாதத்துக்குக் காரணம் ..
என்னை கவனிக்காமல்
என்போலவே சுவாமியும்
"உன்னை மட்டுமே
தரிசித்துக்
கொண்டிருந்திருக்கக் கூடும் "
என்பதாலுமே கூட
இருந்திருக்கலாம்?..!!
[--இன்னொன்றும் கூட எனக்குத் தோன்றுகிறது.. தன்னைத் தவிர்த்து உன்னைப் பார்த்தமைக்காக ஸ்வாமி எம்மை தண்டிப்பதாவது?.. இன்னும் கூட சேர்த்து எமக்கு அருள் பாலிப்பாரோ ? ஹஹ.. ]
No comments:
Post a Comment