Friday, February 19, 2016

கஜா.. [2 பக்க கதை ]

1

நிச்சயம் இதை ஒரு பக்கத்துக்கு மேல் எழுதும் பட்சத்தில் எனக்கே அலுத்துவிடும் என்பதோடு படிக்கிற உங்களுக்கும் அதே அலுப்பு வரக்கூடும்.. 
ஆகவே 2ஆம் பக்கம் போகிற வேலையே வைக்காமல் ஒரே பக்கத்தில் முடிக்கிற சாமர்த்தியத்தை கையாள வேண்டிய தார்மீகக் கடமையில் ஒரு பிரபல எழுத்தாளன் என்கிற முறையில் நான் இங்கே செயல்படப் போகிறேன்.. 

பக்கத்து வீட்டு சங்கரனிடம் கெஞ்சிக் கூத்தாடி நம்ம ஒருபக்க ஹீரோ கஜேந்திரன் ஓசி மொபெட் வாங்கி ஒன்றேகால் கி.மீ இருக்கிற கோதை டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு ஜஸ்ட் மனைவி சொல்லிவிட்ட 4 அல்லது 5 சாமான்கள் வாங்கிவர வேண்டி ஆயிற்று.. 

அதற்கு முன்னர் நம்ம கஜாவின் சுபாவங்களை இங்கே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது கதாசிரியன் என்கிற முறையில் எமது கடமையாகும்.. 
கஜா தனது மொபெடை செர்விஸ் விட்டதன் நிமித்தமே சங்கரனிடம் இரவல் வாங்க நேர்ந்தது.. மற்றபடிக்கு நம்ம ஹீரோ மொபெடுக்கு கூட அருகதை அற்றவனாக நீங்கள் கருதிவிடக் கூடாது.. 
சென்ற சில மாதங்கள் முன்னர் சங்கரன் இவ்வாறே செர்வீசுக்கு விட்டதன் நிமித்தம்  கஜாவிடம் ஒரு பத்து நிமிடங்கள் அவசர ஜோலிக்கு மொபெட் கேட்டதும் உடனே "ஐயோ சங்கரா.. ரியல்லி சாரி.. ஒரு அவசர வேலையா டவுன்ஹால் போக வேண்டியுள்ளது.. " என்று சொல்லிவிட்ட பொய்க்காகவே மொபெட்டை மெனக்கெட்டு வெளியெடுத்து கிளம்பி வெளியே சென்று ஒரு அரை மணி கழிந்து வீடு திரும்பவேண்டி ஆயிற்று கஜாவுக்கு.. 
ஆனால் சங்கரன் அதை எல்லாம் மனசுக்குள் வைத்துக் கொள்ளாமல் இப்போது இவன் கெஞ்சித் தொலைகிறானே என்கிற பாவத்துக்கு சாவியைக் கையில் கொடுத்து அனுப்பி வைத்தான்.. 
சங்கரனை ஹீரோவாக்கி இருக்க வேண்டும்.. ஆனால் இந்தக் கஞ்சன் அதையும் தட்டிப் பிடுங்கிக் கொண்டான் கதாசிரியனிடம்.. 

என்ன கெஞ்சினாலும் எந்தச்ப் பிச்சைக் காரனிடமும் ஒரு தர்ம சிந்தனையோ ஈவிரக்கமோ அற்று வளம் வருகிற நம்ம கஜா . 'ஒருக்கால் தான் ஒருகாலத்தில் பிச்சை எடுக்க நேர்ந்தால் கேட்பவனெல்லாம் தனக்கு தர்மம் செய்து திருவோடு விரைவில் நிரம்பி வழிய வேண்டும்' என்று கூட ஆசை கொள்கிற சுயநலமி, பேராசைக் காரன், கருமி.. 

கோமதி ஸ்டோர்ஸ் போய் இறங்கியதும், உள்ளே சென்றவன் தமது பட்டியல்களை கடைக்காரனிடம் நீட்டி விட்டு தனக்கு முதலில் சாமான்களை தயார் செய்யச் சொல்லி இவனுக்கு முன்னர் காத்திருந்தவர்களை கடுப்படித்தான்.. 
கடைக்காரரும் எப்போதும் முதலில் இவனைத் தொலைத்து விட வேண்டும் என்று தான் அவசரப் படுவார். ஏனெனில் ஏதேனும் வில்லங்கம் பேசி பிரச்சினை கொண்டு வந்து பற்பல முறைகள் எரிச்சல் மூட்டிய அனுபவம் கடைக்கார அண்ணாச்சிக்கு உண்டு. இவனை இனி மேல் வரவேண்டாம் என்று கூட உறுதிபடக் கூறுமளவுக்கு சங்கதிகள் நடந்தேறி இருக்கின்றன.. அதையும் தாண்டி பல் இளித்துக் கொண்டு வந்து இப்போதும் அதே கடுப்பை அடித்த வண்ணமே தான் உள்ளான் நம்ம ஹீரோ.. 
இந்த "கேப்"பில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும் இவன் பற்றி.. எங்கியோ க(ழு)தை ரெண்டாம் பக்கமும்  போயிடும் போலிருக்கே.. 

அன்னார் சமயத்துல எங்கியாச்சும் நடந்து போக வேண்டி வந்திடும்.. வீடு போவதற்கு அலுப்பு தட்டி விடும்.. உடனே 2வீலரில் போகிற நபர்களை ஒரு போலீஸ் மிரட்டலோடு டிராப் பண்ண சொல்லி பில்லியனில் ஏறிக்கொள்வார் கஜா.. இறங்கி ஒரு 'தாங்க்ஸ்' நவிலக் கூட முடியாத பன்னாடை.. 

ஆனால் இவரு வண்டியில போற போது யாரு உதவி கேட்டாலும் 'ம்ஹ்ம்.. நடந்து வாய்யா.. வாக்கிங் ஒடம்புக்கு நல்லது' என்று பிலாசபி பேசி நோகடிப்பார்.. 
இதே மாமிக எவளாச்சும் பிக்-அப் கேக்கட்டும்.. அண்ணன் விழுந்தடிச்சு ஒக்கார வச்சுக்குவார்.. அப்புறம்.. ஸ்பீட் பிரேக்கர் இல்லாமலே ப்ரேக் போட்டு சில்மிஷம் செய்யப் பார்க்கிற ஜொள்ளன்.. 

2
அப்படிப் பட்ட கஜேந்திரனுக்கு ரெண்டாம் பக்கமும் ஒதுக்க வேண்டிய ஒரு விபத்துக்கு நான் ஆளாக நேர்கிறது.. ஒதுக்கினாலும் பரவாயில்லை.. அண்ணனோட கொட்டம் இந்தப் பத்தியில அடங்கப் போறதை நெனச்சு என்னோட அருமை வாசகர்கள் நீங்கள் எல்லாம் எனக்கு சாகித்ய அகாதெமி விருதை இன்னொரு ஜாம்பாவானிடமிருந்து பிடுங்கியாவது கொடுப்பீர்கள்  என்று மிக நம்புகிறேன்.. 

திடீரென்று மொபெட் சாவியைக் காணவில்லை என்று பதற கதறவே ஆரம்பித்து விட்டார் கஜா. .. "ஐயோ. இரவல் வண்டியாயிற்றே. பூட்டிவிட்டு வந்தேனா?" என்று உடனே ஓடிப் போய் மொபெடை பார்க்கிறார்.. பூ போல நிற்கிறது.. 'சாவியை அதுலயே விட்டுட்டு வந்துட்டமோ .. ' என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்.. .நெருங்கியதும் .. ' அதானே அப்டி எல்லாம் மறந்தமாதிரி ஒருக்காலும் சாவியை வண்டியில விட்டதா சரித்திரமே இல்லையே.'. சைட் லாக்கை செக் செய்து கொள்கிறார். அதுவும் கிண்ணென்று லாக் செய்யப் பட்டிருக்கிறது.. 

திரும்ப கடைக்குள் சென்றதும் வண்டியிலே சாவி இல்லாததை சொல்லி கடைக்குள்ள தான் எங்கியாச்சும் விழுந்திருக்கும் என்று அங்கும் இங்கும் அலைபாய்ந்து தேடி , மற்றவர்களையும் தேடச் சொல்லி  ஒரு ரிக்வெஸ்ட் செய்தார் கஜா.. 20 நிமிடங்களாகியும் சாவி கிடைக்கவில்லை.. சங்கரனிடம் இருந்து 4 மொபைல் அழைப்புக்கள் வந்தாயிற்று.. ' ஒரே செக்கண்ட் சங்கரா. சாவி மிஸ் ஆயிடித்து . தேடிட்டு இருக்கோம்.. கெடச்சுடும் வந்துடறேன்.. ' என்றார்.. 

அப்புறம் 25வது நிமிடம் தக்காளிக்குள் விழுந்து கிடந்ததை அந்தக் கடைக்கு வந்த ஒரு சிறுமி எடுத்துக் கொடுத்தாள்..
அப்பாடா என்றாயிற்று கஜாவுக்கு .. முதல் முறையாக மனசார அந்த சிறுமிக்கு ஒரு நன்றியை சொன்ன கஜா, அவளுக்கு 5 ரூபாயில் ஒரு காட்பரி ஜெம்ஸ் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கையில் . .

இன்னும் 3 நிமிடங்கள் முன்னரே அதாவது 22 வது நிமிடம் அவர் கொண்டு வந்திருந்த சங்கரனின் மொபெட் கள்ளசாவி வைத்துத் திறக்கப் பட்டு திருடப் பட்ட விபரம் நம்ம ஹீரோவுக்கு அடுத்த 1அல்லது 2 வது நிமிடத்தில் தெரியவுள்ளது.. 

அந்தக் கண்றாவியை நாம் ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.. ?

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...