Thursday, January 28, 2016

பிரபலம்..

னித இனத்தில் மட்டும் "பிரபலமானவன்" என்பவனுக்குக் கிடைக்கிற பிரம்மாண்ட மரியாதை என்பது இந்த ஆறாம் அறிவின் பிரதான கிறக்கம் அல்லது முட்டாள் தனம் என்று சொல்லப் பொருந்துமோ?

நமது இனத்தில், நமக்குப் பாய்கிற ரத்தம், சதை நரம்பு எலும்பு .. அடிபட்டால் பிடிக்கிற சீழ்.. பசி வந்தால் ருசியறியாமல் கிடைப்பதை உண்டு வயிற்றை நிரப்புதல், பசி இல்லை எனில் அமிர்தமே கிட்டினும் புறக்கணித்தல் ... என்கிற அதே செயல்பாடு கொண்ட ஒரு உடம்புக்கு நாமளிக்கிற மகத்தான மரியாதை என்பது எனக்கு எப்போதுமே தலையாய மாயை போன்றொரு தோற்றுவிப்பை வெளிக் கொணரும்.. !

முண்டியடித்துக் கொண்டு அந்த நபரின் ஆட்டோகிராப் வாங்க அலைபாய்வது, அந்த சற்று நாழிகையில் கிடைக்குமா கிடைக்காமல் போய் விடுமா என்று அங்கலாய்த்து கலவரப் படுவது.. கையெழுத்து வாங்கி விடும் பட்சத்தில் என்னவோ செயற்கரிய நிகழ்வை நிகழ்த்தி விட்ட பிதற்றலில் குதூகலிப்பது.. 

--ஒவ்வாத ஒருவித அசூயையில் இதனை எல்லாம் விலகி நின்று கவனிக்கிற துரதிர்ஷ்டங்கள்  அவ்வப்போது எமக்கு நிகழும்.. 

ஒரு நபரின் துணிச்சல் நிரம்பிய திறன் அவனை இப்படி வேற்றுமைப் படுத்தி, ஒரு குழாமையே தன்வசப் படுத்துகிற இந்த செயல் மனித வரலாறுகளில் மட்டுமே இடம்பெற்று  வருகிற சாபக்கேடு என்று நான் சொன்னால், அதனை மறுதலித்து "பெரும் வரம் இது " என்று வாதிடுகிற, வாதிட்டு வெற்றி கண்டு விடுகிற அறிவாளிகளும் பகுத்தறிவு வாதிகளும் நிறையப் பேர்கள் உண்டு என்பதை நான்  நன்கறிவேன்.. 


அவ்வித ஆளுமைத் திறன்கள் அற்ற பேடிகளும் கையாளாகாத நபர்களுமே பொறாமை பொச்சரிப்பு  கொண்டு இந்தக் கூத்தை எல்லாம் கேலி பேசுகிற புறக்கணிக்கிற பொல்லாப்புகளை செய்து ... 

இந்த பேனருக்கு பாலபிஷேகம் வார்க்கிற வகையறா மனிதர்களிடத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியுள்ளது.. !!

எது எப்படி ஆனபோதிலும், இந்தக் களேபரங்கள் எவையும் நின்று விடப் போவதில்லை என்பதை யாமறிவோம்.. 

அதே விதத்தில், என்னையொத்த சிலரது  கருத்துக்களும் மாறப் பெறுவதில்லை என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விழைகிறது  தன்மானம்.. !!
நன்றி..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...