Sunday, January 3, 2016

பசங்க-2

ந்தப் படம் குழந்தைகளின் மன நிலைகளை சித்தரிப்பது ஒருபுறம் இருப்பினும், பெற்றோரின் மனநிலைகளும் மையப் படுத்தப் பட்டிருக்கின்றன.. யதார்த்தமாக.. !
குழந்தைகளின் ஆசைகளை நம்பி மட்டுமே பலூன்கடைக் காரன் கடை போட முடியும்.. மற்றபடி பலூனுக்கு ரகளை செய்து பெற்றவர்களை இம்சித்து பலூன்காரன் கஜானாவை நிரப்புகிற திறன் அனைத்து குழந்தைகளுக்கும் சாசுவதம்.. 
மனசுக்குள் பலூன்காரனை திட்டி விட்டு, தம்மடிக்க உதிரியாய் வைத்திருந்த எல்லா சில்லறைகளையும் கப்பம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அடம்பிடிக்கிற அரக்கக் குழந்தைகளின் அனைத்து தந்தைமார்களுக்கும் தவிர்க்க சாத்யப் படாமற் போய் விடுகிறது.. 

இந்தப் படத்தினை தயாரித்த சூர்யா அப்படிப் பட்ட வியாக்யானமான பலூன்காரன்.. நிச்சயம் சூர்யா கஜானா நிரம்பிவிடும்.. ஆனால் இந்த பலூன்களை வாங்கிய பிற்பாடு, நாமும் குழந்தைகளோடு குழந்தைகளாக தட்டி விளையாடுகிற சுவாரஸ்யம் நிகழ்கிறது.. !
அடுத்து ஏதேனும் ரெண்டொரு மசாலாவில் நடித்து சொதப்பலாகி விட்டாலும் தாக்குப் பிடிக்க முடிகிற அளவுக்கு  சூர்யாவை இந்தப் படம் காப்பாற்றும் என்றே தோன்றுகிறது.. 

பாண்டிராஜின் கைவண்ணத்தில், பலூன்கள் சிறப்புற மேலெழுகின்றன.. குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி, வெடிக்காமல், காற்றுப் போகாமல் நன்கு மிதக்கின்றன.. 

இப்படி, ஹோல் சேல் வியாபாரி, ரீடெயில் வியாபாரி, அவைகளை கொள்முதல் செய்கிறவர்கள், வாங்கிப் பயன் பெறுகிற கன்ஸ்யூமர்கள் என்கிற அனைத்த தரப்பினரும் முழு மனநிறைவு பெற்று விடக் கூடும் இந்த பலூன்களைப்  பொறுத்த வரைக்கும்.. 

அடுத்த வேளை உணவு கேள்விக் குறியாகி விட்ட ஒரு நடுத்தர, ஏழை எளிய குடும்பங்களில்  கூட, குழந்தைகள் பெற்றோர் அன்றாடம் சந்திக்கிற யதார்த்த அவஸ்தைகளே இத்திரைப் படத்தில் செவ்வனே புனையப் பட்டுள்ள செய்தி.. ரேஷன் சோற்றையே கஞ்சி வடிக்க வேண்டி வந்தாலும் ... 
"என் பய்யன் பணக்காரங்க படிக்கிற பெரிய கான்வெண்டுல படிக்கிறானாக்கும் ...." என்று அரற்றி இன்பம் காண்கிற அற்ப கலாச்சாரம் .. பெரிய அனாசாரமாக  இன்றைய மக்களின்  மனோபாவங்களில் பெரும் பங்கு வகிக்கிறது.. 

"ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி ஜீவிக்கிற ஒரு கான்வெண்ட் மிஸ் கிட்ட தான்  தனது பிள்ளை பாடம் கற்க வேண்டும் .. நாற்பதாயிரம் ரூபாய் வாங்குகிற  கவர்மெண்ட் மிஸ் கிட்ட வேண்டாம்.. "
"நாற்பதாயிரம் சம்பளம் கிடைக்கிற கவர்மெண்டு வேலை தான் வேண்டும்.. ஐந்தாயிரம்  வாங்குகிற கான்வெண்ட் ஸ்கூல் வேண்டாம்"

மேற்சொன்ன இந்த இரண்டு வியாதிகளும் எங்கெங்கிலும் பீடித்திருக்கின்றன.. ஏய்ட்ஸ்-ஸும்  கேன்ஸரும்  கூட குணமாகி விடக் கூடிய வகையில் எதிர்காலத்தில் மருந்துகள் கண்டு பிடிக்கப் படலாம்.. ஆனால், அந்த மேற்சொன்ன வியாதிகள் குழியில் போட்டாலும் தீராது.. !! 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...