Monday, June 2, 2014

நம்பிக்கைவாதி..

சாதிக்காதவனின் 
சம்பாதிக்காதவனின் 
வலிகள் 
மிகுந்த துயரும் 
குற்ற உணர்வும் நிரம்பியவை.. 

அவன் தேடுகிற 
ஆறுதல் வார்த்தைகளும் 
தன்னம்பிக்கை தூண்டுகிற 
புத்தகங்களும் ஏராளம்.. 

அவனது வயதொத்தவர்களும் 
அவன் வயதில் பாதியே 
நிரம்பியவர்களும் 
ஈட்டுகிற 
பொருளும் செல்வமும் 
புகழும் இன்னபிற 
உயர் அடையாளங்களும் 
அவனில் ஓர் தாங்கொணா 
தடுமாற்றத்தை 
நிலைகொள்ளச் செய்வதை 
எக்காரணம் கொண்டும் 
தவிர்ப்பதற்கில்லை.. 

இவ்வளவு இம்சைகளை 
காலவளர்ச்சி அவனில் 
விதைக்கக்  கூடுமென்று 
அவன் கிஞ்சிற்றும் 
அனுமானித்தவனில்லை...!!

எதிர்பார்த்திருந்தால் கூட 
இந்த சூழல்களை சுலபமாக 
எதிர்கொண்டிருந்திருப்பான்.. 

மிகப் பெரும் விபத்தாக 
நேர்ந்தமையால் 
பிறப்பின் மீதும் 
தன்னைப் பிறப்பித்தவர்களின் 
மீதும் ஓர் இனம்புரியா 
காழ்ப்பை செருகி வைத்திருக்கிறான்.. 

ரயில்களின் பெயரையோ 
கிணறுகளின் பெயரையோ 
பாழாக்குகிற உத்தேசம் 
அவனுக்கு இல்லையாதலால் 
அவனது தற்கொலைகளுக்கு 
அவைகளை இழுக்க 
அவனுக்குப் பிடிக்கவில்லை.. .!!

ஜெயிப்பதற்கான வாய்ப்பு 
இன்னும் ஓயவில்லை 
என்கிற சிந்தனை அவனில் 
ஓர் வற்றா ஜீவா ஊற்று போல 
எப்போதும் இதயத்தின் ஒரு 
மூலையில் அவனில் 
குடிகொண்டுள்ளது.. 

அந்த நம்பிக்கையில் 
தான் , ரப்பர் பென்சிலுக்கு 
அடம்பிடிக்கிற தனது 
மகளின் பிஞ்சுக் கையைப் 
பற்றிக் கொண்டு 
பக்கமிருக்கிற கடைவீதிக்கு 
நடந்துபோய்க் கொண்டிருக்கிறான்.. !!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...