Friday, June 20, 2014

நானும் அவளும் ...

[எனது டைரியில் 2 வருடங்கள் முன்னர் நான் எழுதி வைத்திருந்த சம்பவம் இது.. ]  

சற்றும் எதிர்பாரா அவஸ்தைகள் அவ்வப்போது..
நேற்று கோவிலொன்றில் ஸ்வாமி தரிசனத்திற்காக வரிசை கட்டி நின்றிருந்தார்கள்.. நானும்.. எனக்குப் பின்னே  நிறைவாண்டுக் கல்லூரி பயில்கிற ஓர் மாணவி... 
தரிசனம் நிகழ இன்னும் அரைமணி நேரம் உத்தேசமாக..
அதுவரைக்கும் எதற்காக மவுனம்?.. ஆகவே, அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன்.. அவளும் அதை மிக விரும்பி இருக்கவேண்டும்.. சட்டென்று எனது கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் துவங்கி.. பிறகு, அவளும் என்னோடு தனது கேள்விகளை வைக்க ... சுவாரஸ்யம் பற்றிக் கொண்டன.. 

பரஸ்பரம் நன்கு பகிர்ந்து கொள்ள முற்பட்டதும் எனக்கு அரை மணி நேரம் போதாத விஷயமாயிற்று... ஆனால் காலம் சதி செய்யத் துவங்கி விட்டது.. வரிசை துரிதமாக நகர்ந்தது.. அரைமணி அரை நொடிக்குள் தீர்ந்துவிடக் கூடுமோ??..

ஆனால் காலத்தின் அடுத்த சதி மிகவும் கோரமானது.. 
வரிசையை ஒழுங்கு படுத்துகிற ஒரு பனாதி , "ஐயோ.. பெண்களுக்கு தனி வரிசை... உன்னை யாரும்மா ஜென்ட்ஸ் கூட நிற்கச் சொன்னது?" என்றான்.. 
எனக்கு எல்லாம் உடனே கழன்று விழுவது போன்று ஆகிவிட்டது.. 
அந்தப் பெண்ணுமே கூட இதை எதிர்பார்க்கவில்லை.. நான் அந்த ஆசாமியிடம் "சேர்ந்தாப்புல வந்துட்டோம். பார்த்து அட்ஜஸ்ட் செய்யுங்கள்" என்று கேட்டும் பிரயோஜனமில்லை.. "ஹஸ்பண்ட் ஒய்ப் வந்தாலே செபரெட்டா தான் வரணும் " என்றான் அந்த நாஜிப் படைக் காரன்.. 

ஒரு சங்கடப் புன்னகையோடு அவள் விடைபெற்றது எனக்குப் பேரிடியாக இறங்கிற்று.. 

பெண்கள் வரிசை சீனச்சுவர் போன்று நீண்டு கிடந்தது.. 
செய்வதறியா திகைப்பில் கையைக் காட்டிவிட்டு நான் அந்த ஆண்கள் வரிசைக்குள் முடங்கியது மகா முட்டாள்தனம்.. நானும் அவளோடு பெயர்ந்து போய் வெளியே தேநீர் அருந்த சென்றிருக்கவேண்டும்.. கூட்டம் அடங்கியதும் திரும்ப வந்து இருவரும் தரிசனத்தில் கலந்திருக்கவேண்டும்.. 
இந்த புத்திசாலித் தனமான அனுமானங்கள் உடனடியாக ப்ரவகித்திருந்தால் அது உண்மையாகவே  புத்திசாலித்தனம். ஆனால், இப்படி எல்லாம் சாவகாசமாகத் தோன்றிற்று...!

மற்றவர்க்கு நல்லதொரு சிநேகிதிகள் வாய்ப்பது சுலபக் கிரமமோ என்னவோ, எனக்கது  சமீப காலமாக குதிரைக் கொம்பாக மாறிவிட்டது.. இளமை வறட்சி கண்டு  அதன் சுவடுகள் பாம்புச் சட்டையாக உரிக்கப் பெற்று புதுப் பொலிவோடு  முதுமை துவங்கி ரெண்டொரு வருடங்கள் ஆகி விட்டதன் நிமித்தமோ  என்னவோ பெண்கள் என்னில் சுவாரஸ்யம் காண்பிப்பதில்லை இந்நாட்களில்.. நானும் அதன் வலி மிகுந்த நியாயங்களை  உணர்ந்து அதற்கென மெனக் கெடும்  சூழல்களைத் தவிர்க்கப் பழகிக் கொண்டிருந்தேன்.. ஆனால், இப்படி அரிதாக ஓர் சூழல் வாய்க்கப் பெற்று அதனை உடனே பழுதாக்கிய பெருமை  என்னையே சாரும்.. எதற்கு காலத்தின் மீது பழிபோட வேண்டும்? 

பிற்பாடு என்ன தோன்றிற்றோ என்னவோ அவசரமாக தரிசனம் முடித்துக் கொண்டு  அவளைப் பார்க்கிற அவாவில் அந்த அடர்ந்த நெரிசலில் அலைந்தேன்.. ம்ஹும் ... 
அவளது முகமே கூட குழம்பத் துவங்கிற்று.. கொஞ்ச ஷணம் தானே பார்த்தேன் அவளை?.. ஆனாலும் மறுபடி பார்க்க நேரும் பட்சத்தில் கண்டுபிடித்து விடுவேன் என்கிற நம்பிக்கை உறுதி எல்லாம் கிடந்தன அனாதையாக என்னிடத்தில். 

இதற்குள்ளாக இத்தனை இம்சை நிகழக் கூடுமென்கிற தீர்க்கதரிசனம் கிடைத்திருக்கும்  பட்சத்தில் அவளது பெயர் , மொபைல் எண் .. பேஸ் புக் .. வாட்ஸ் ஏப்  .. ஈமெயில் .. என்று ஏதாவது ஒரு கருமத்தையாவது கரந்திருப்பேன்.. எவ்ரிதிங் மிஸ்ஸிங்.. 

எனது கேள்விகளுக்கான பதில்களாக அவளும் ஏதேதோ சொன்னாள் .. ஆனால் ஒரு பெண் நீண்ட நாட்கள் கடந்து என்னோடு அளவலாவுகிறாள் என்கிற பிரக்ஞை எனக்குள் எதனையும் கிரஹிக்கவியலா ஓர் கிறக்கத்தை செவ்வனே  நிரப்பியிருந்தது.. 

ஒருக்கால் நான் அவளைத் தேடுவதை அவளும் கூட கவனித்திருக்கலாமோ?ஆனால் அப்படி  இருந்திருக்க   வாய்ப்பில்லை.. உடனே ஓடி எனதருகே வந்திருப்பாள் அன்றோ??
-அல்லது  என்னைப் போலவே அவளும் என்னை அந்தக் கூட்டத்தில் தேடி இருப்பாளோ??..

--எது எப்படியோ... 
இருவரும் இருவருக்கும் தொலைந்து போனோம்..!!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...