Sunday, April 13, 2014

சித்திரை வாழ்த்துக்கள்.. அனைவருக்கும்..

இயல்பாக ஓர் சம்பவம் மனதை பாதித்து .. அதனைக் கவிதையென புனைகையில் அது ஓர் பூ இயல்பாக மலர்வது போன்ற ஓர் உணர்வை தரும்..

ஆனால், எதுவும் எழுதாமல் இருக்கிறோமே, எதையேனும் ஒன்றை எழுதித் தொலைவோம் என்கிற ரீதியில் மாத்திரம் எழுத உட்கார்ந்தோமேயானால் வரும் பாருங்கள் ஒரு வெறுமை.., ஒரு குற்ற உணர்ச்சி.. , அது ஓர் வார்த்தையே அற்ற கருமமான உணர்ச்சி..

அப்படி அனேக சமயங்கள் எமக்கு வாய்ப்பதுண்டு .. அப்போதெல்லாம் குண்டியைக் கட்டிக் கொண்டு எழுந்து போய் வேறு வேலைகளில் மனதை லயிக்க விடுகிற புத்திசாலித்தனம் கொஞ்சம் என்னிடம் உண்டு..
லைப்ரரி சென்று விடுவேன்.., கோவில்கள் சென்று விடுவேன்.., நல்லதொரு படமொன்றை தேர்ந்தெடுத்துப் பார்க்க மெனக்கெடுவேன்..

அதன் பிறகாக ஏற்படுகிற சுவாரஸ்ய அனுபவங்களைப் பதிவிறக்கம் செய்ய எனது விரல்கள் .. வெட்டவெளியிலேயே qwerty தட்ட ஆரம்பித்து விடும்..

இந்த கணினி வந்த பிற்பாடு காகிதங்களும் பேனாக்களும் மிகவும் அன்னியப் பட்டுப் போயின.. ஓர் வெற்றுத் தாளெடுத்து அன்றெல்லாம் எதையேனும் எழுதுவதும் வரைவதுமாக கழிந்த சுவாரஸ்ய தருவாய்கள் ஓர் மலரும் நினைவாக இன்றும் மனவெளியில்..

மிகப் பலருக்கும் இதே வித அனுபவங்கள் தான் என்பது எனது அனுமானம்..
ஒருவகையில் இது பத்திரமான விஷயமும் கூட.. ஏன் எனில், காகிதங்களில் எதையேனும் எழுதி பொறுப்பாக பத்திரப் படுத்தத் தெரியாத சுபாவம் என்னுடையது.. அங்கும் இங்குமாக எமது வீடெங்கிலும் அலைபாய்ந்து கொண்டு கிடக்கும்  எமது படைப்புகள்.. என் வீட்டார் என்னுடைய எதையும் எடுத்துப்  பார்க்கவோ படிக்கவோ மாட்டார்கள் எனிலும், வருகிற விருந்தினர்களுக்கு  அது விருந்தாக அமையக் கூடும்.. எப்போதுமே தனது வீட்டுப் படுக்கை அறைகள் எவருக்கும் எந்த சுவாரசியங்களையும் ஏற்படுத்துவதில்லை.., மாறாக பிறரது ப.அறைகள் அதீத சுவாரஸ்யம்..

நானும் எதையேனும் அதிகப் பிரசங்கமாக எழுதி விடுகிற ஆற்றல் படைத்த எழுத்தாளன் வேறு.. படிப்பவர்களுக்கு எம்முடைய மேதாவித் தனம் அடையாளப் பட்டால் பரவாயில்லை. அதற்கு மாறாக, என்னுடைய உள்முகம் மற்றும்  உள்மனம் .. அதன் சபலங்கள், அழுக்குகள், என்கிற ரீதியாக புரிபடுமாயின்  அது மிகப் பெரிய தர்ம சங்கடங்களையும் லஜ்ஜைகளையும் என்னில் ஊடுருவ வாய்ப்பாகிப் போகும்..

அந்த வகையில் பார்க்கப் போனால், இந்த கணினியும், பிளாகுகளும் பேஸ் புக்கும்  தேவலாம்.. எங்கோ இருந்து கொண்டு படிக்கிறார்கள்.. அவர்களது உணர்வுகள் குறித்த பெரிய அக்கறையோ கவலையோ என்னை வந்து உசுப்புவதில்லை.. கூட்டத்தில் கல்லை விட்டெறிகிறேன் .. யார் மண்டையிலோ நங்கென்று  ஒரு கிண்டு கிண்டி, வலியில் வெகுண்டெழுகிறார்கள் .. தாக்கியது யாரென்று புலனாகாமல் விதிர்த்துப் போகிறார்கள் .. இன்னாரென்று புரிந்தாலும் எதுவும் செய்வதற்கு சாத்யப் படாமல் இம்சை உணர்கிறார்கள் ..... ஹிஹி..

எல்லாருக்கும் இந்தத் தன்னிகரில்லா தங்கத் தமிழனின் இனிய தமிழ் புத்தாண்டு சித்திரை நல்வாழ்த்துக்கள்.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...