Tuesday, April 29, 2014

கிராமாயணம்....

பால்ய விடுமுறைக் காலங்கள் முழுதுமாக சொர்க்கமாக உணரப் பட்டு கழிக்கப் பட்டு வந்த இடம் எனது தாய் பிறந்த கிராமம். நானும் எனது தாயின் வீட்டு இடது புறத் திண்ணையில் தான் பிறந்தேன் என்பது கல்வெட்டில் பதித்தாக வேண்டிய அற்புத வரலாறு.. 

எப்போது சென்றாலும் நான் அந்தத் திண்ணையை என்னவோ ஓர் தெய்வாம்சம் பொருந்திய பிராந்தியம் போன்று மெய்சிலிர்த்துப் போய் சற்று நேரம் உற்று நோக்கி இன்புறுவது  வழக்கம்.. 


பிற்பாடு வேலை நிமித்தங்களாலும் இன்னபிற சூழல்களாலும் அந்த கிராமம் சென்று அளவளாவுதல் என்கிற சந்தர்ப்பங்கள் வாய்க்காமல், அல்லது நானே அமைத்துக் கொள்ளாமல் என்று சில பல வருடங்கள் நழுவி . ஓடிவிட்டன....

அப்படி ஓர் அடர்த்தியான இடைவெளிக்குப் பிற்பாடு நேற்று சென்று வருகிற நிலைமை அமைந்தது. எனது அம்மா வகையறா உறவுகள் கறிச்சோறு போடுகிறார்கள் என்கிற ஹைலைட் விஷயத்தோடு எனது பயணம் மேற்கொள்ளப் பட்டது.. 


16வயதினிலே ஸ்ரீதேவி பாடித் திரிந்த செந்தூரப் பூவே பாடல் போல பளீரென்று இருந்த கிராமம் அது. பரவசப் புல்வெளிகள் எங்கும் வியாபித்து பட்டாம் பூச்சிகளின் வண்ணப் படையெடுப்பில் எமது வசந்தங்களை மெருகேற்றிய சுகந்த ஸ்தலம் அது.. ஜீவ ஊற்றாய் ஜலம் கசிந்த கிணறுகளோடு எந்நேரமும் மோட்டாரில் நீர் பாய்ந்து சோளக் கதிர்களும் சம்பா நெற்களும் பூத்துப் பூரித்து, வகை புரியா பல வகையறா பட்சிகளின் பரவசச் சிறகடிப்புகள் தொடர் நிகழ்வாக இருந்த  இன்பபுரி அது.. 


அந்த சுவடுகள் என்றைக்குத் தொலைந்ததோ நானறியேன்.. ஆனால், எனக்கு எல்லா கொடுமைகளும் இந்த ஷணத்தில் துவங்கி விட்டதாக உணர்ந்து அங்கலாய்த்தேன்.. ஆம், ஓர் பேரழகு ஸ்திரீ, பரதேசிக் களவாணிகளால் கதறக் கதறக் கோரமாகக் கற்பழித்து சீரழிந்த கோலத்தில் காட்சி அளித்தது கிராமம்.. 

தலைமீது தீசட்டி வைத்தது போல வெய்யில்.. செருப்பற்ற கால்கள் ரத்தம் சுண்டி  நடக்கிற திராணியை இழக்கக் கூடிய கொதிநிலை... வறண்டு கிடக்கிற எல்லா கிணறுகளும்..  தலைவிரித்தாடுகிற தண்ணீர் பஞ்சம்.. பல மாதங்களாக தனது சுவடுகளைப் பதிக்காத மழை.. காய்ந்து கருகிக் கிடக்கிற தென்னைகள், மற்ற பயிர்கள்.. விவசாயம் விவஸ்தை இழந்த  அனாதைச் சிறுக்கி  போல.. விவசாயிகள் தற்கொலைக்கு முன்னரே மூர்ச்சையாகிக் கயிற்றுக் கட்டில்களில்.. 


அன்றெல்லாம் சதா நேரமும் என்னைக் கவிதை எழுதத் தூண்டிய கிராமம், இன்றைக்கு எனது பேனா மையில் கூட ஈரமிழக்கச் செய்து விட்டதை உணர்ந்து உள்ளுக்குள் அழுதேன்.. 


கெட்டிப் பாலில் காப்பிகளும், மணக்கிற மோரில் கொத்தமல்லிகளும் பருகுவதற்கு உபசரித்த அந்தக் காலங்களும்.., பச்சைத் தண்ணி கேட்டால் கூட யோசித்துக் கொணர்ந்து கொடுக்கிற இந்தக் காலங்களும் .. 
மலையளவிலான இந்த வேறுபாடுகள் மிகப் பெரும் வலிகளை என்னுள் நிகழ்த்திவிட்டது .. 

கறிசோறு உண்கிற பசி கூட காணாமற்போயிற்று.. 

அன்றெல்லாம் எமது வருகையை அகமகிழ்ந்து வரவேற்று எம்மை அரவணைத்துக்  கொண்ட இதே கிராமம்.. 
இன்றைக்கு எமது கால்களைக் கட்டிக் கொண்டு உதவிக்குக் கேவுவதாக எனக்குத்  தோன்றியது.. 

அடுத்த நாள் நகரம் வந்து எமது அலுவல்களில் முடங்கி வேறு வகையறா பிரக்ஞையில் மூழ்குகிறேன்... 

எமது கால்களைக் கட்டிக் கொண்ட என் தாயின் கிராமத்தை உதறி விட்டு வந்த குற்ற  உணர்விலோ என்னவோ அற்பமான வேலைகள் எல்லாம் கூட வழக்கத்துக்கு  மாறாகப் பிசகல் தட்டிற்று..  

Sunday, April 27, 2014

மறுபடி மறுபடி..

மறுபடி மறுபடி...


மிகவும் சாஸ்வதம் போல
மிக மிக நிரந்தரம் போல
எவ்வளவு சம்பவங்கள்
வாழ்நாள் நெடுக..
எல்லோருக்குமாக 
அனுபவங்களாகி 
விடுகின்றன??

--அவைகளில் 
ஐக்கியமாகித்
 திளைக்கையில்
ஓர் சுவாரஸ்யம்...
பிய்ந்து உதிர்வது
போல் வெளியேறுகையில்
ஓர் ஆற்றாமை...!!

எல்லோருக்குமே
திரும்பிப் பார்ப்பதற்கான
எவ்வளவு 
மலரும் நினைவுகள்..
அழியா சுவடுகள்??!!

சட்டையுரிக்கின்ற
பாம்பென - எவ்வளவோ
துயர்களைக் 
கழற்றி எறிந்திருக்கின்றன
காலம்..

நத்தை ஓடென
அடைந்து கொள்ளவும்
மீன் தூண்டிலென
மாட்டித் துள்ளவும்
பல சந்தர்ப்பங்கள்..

புலிகளிடம் சிக்கிப்
பிழைத்திருக்கிறோம்..
ஆடு முட்டி
சாகக் கிடந்திருக்கிறோம்..

மரணம் 
நிகழவிருப்பதற்கான
சாத்யக் கூறுகளையும்
நிதர்சன உண்மைகளையும்
தாண்டி .. 
--வாழ்க்கை மட்டுமே
வியாபித்து எங்கெங்கிலும்
விரிந்து கிடப்பதான
மாயையுள் மயங்கிச்
சிலிர்க்கிறோம்..!!

சுந்தரவடிவேலு..

Thursday, April 24, 2014

மழைக்கால ஞாபகங்கள்..

மழையின் ருசியில் 
மயங்கியது நாக்கு...
சின்னத் தூறலில்
நனைவதற்குக் கூடத்
தடை விதித்த 
பால்ய காலங்கள்
மலரும் நினைவுகளாய்
இப்போது நனைந்துகொண்டே...!

ஒவ்வொரு மழையிலும்
ஓடிப்போய் நனையவே 
என் ரசனைகள் பருத்திருந்தன...
ஆனால் தடை விதிப்பதைக்
கடமையாயும் கெளரவமாயும்
கருத்தாய்க் கொண்டிருந்தனர்
பெற்றோரும் மற்றோரும்...!
சிணுங்கிக்கொண்டே விலகி நிற்பேன்..
போகப்போக என் அடம் 
அவர்களுக்கு பெரிய இம்சையாகவே,
குடைகொடுத்து இறக்கிவிடுவர்
மழையில் என்னை..
என் குடையை  கொஞ்சம் மட்டும்
நனைய விட்டு
 முழுதுமாக
நான் நனைந்து...மேற்கொண்டு
குடை  நனையாமல் 
பார்த்துக் கொள்வேன்...!!

மழையில் நனைகிற என்
திமிரை எவராலும் எப்போதும்
அடக்கவே முடிந்ததில்லை...

மழை வருகிற முஸ்தீபில்
வானம் பூச்சாண்டி காட்டுகிற
போதெல்லாம் , மக்கள்
ஏன் அப்படி துரிதம்
காட்டுகிறார்களோ  என்று
எரிச்சல் வரும் எனக்கு...

இத்தனை ஜாக்கிரதை
காட்டுகிற மக்கள்
சளி காய்ச்சல் என்று
அடுத்த நாள் ஆஸ்பத்திரியில்
குவிகிறார்கள்...

இத்தனை கிழிக்கிறவன்
என் மகள் நனைகையில்
பதறாமலா இருக்க முடிகிறது?
அவசரமாகக் கைக்குட்டை
எடுத்து அந்த சின்ன
மண்டையைத் 
துவட்டி விடாமலா இருக்க முடிகிறது??...

Sunday, April 20, 2014

அரசியல் தெரியாதவனின் ஆதங்கம்..

ஜெயலலிதா வந்து திரும்பிய ஹெலிகாப்டர் மேலேறிப் பறக்கிறது.. 
அந்த ஹெலிகாப்டரின் காற்றாடி விசையோடு சுழல, அந்தப் பிரத்யேகப் பிராந்தியத்தில் காற்று ஓர் சூறாவளி போல அடிக்கிறது.. அமைச்சர்களின் முடிக் கற்றைகள் காற்றில் பரபரக்கிறது.. 
ஆனால் அந்த விசுவாச அமைச்சர்கள் தரையில் குப்புற சாய்ந்து மேலே பறக்கிற அம்மாவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த ஓர் அற்புத காட்சியை.. பலரும் பார்த்திருக்கலாம்.. அல்லது எவரேனும் சிரித்துக் கொண்டே சொல்லக் கேள்விப் பட்டிருக்கலாம்.. 

இந்த இவர்களது விசுவாசம்... இவர்களது பெற்ற அம்மாக்களாலும் கட்டிய மனைவிமார்களாலும் மற்றும் இவர்களது அன்புக் குழந்தைகளாலும் வரவேற்கப் பெற்றிருக்குமா?.. இந்த இவர்களது செய்கைக்காக மனசு வெதும்பி "அய்யஹோ.. இந்த மனுஷன் இப்படி மானத்த வாங்குறானே!!" என்று தர்மசங்கடப் பட்டிருப்பார்களா?

அப்படி சங்கடப் பட்டிருந்தால் அந்த அமைச்சரின் குடும்பத்தையாவது பெருமையாக நினைக்கலாம்.. ஆனால், விழுந்து கும்பிடுகிற இவர்களது பத்தாம்பசலிக் கலாசாரத்துக்கு அவர்களும் துணை போவார்களாயின்.. 
இவர்களைப் பார்த்து ஒரே கேள்வி எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.. "அப்படி என்னடா இந்தக் காசை சம்பாதிக்கணும்?.. இந்த ஈனப் பொழப்புப் பொழைக்கறதுக்கும் .. பீயத் திங்கறதுக்கும் அப்டி ஒன்னும் ஆறு வித்யாசங்கள் இருக்கறதா படலை.. காசு பணம் போனா திரும்பி வந்துடும்.. ஆனா, உசுரு மானம் போனா அம்புட்டு தான்.. 
ஆனா இந்த அதிமுக அமைச்சப் பசங்க உசுரோட இருந்தா மட்டும் போதும்னு நெனைக்கிற ஜென்மங்களா இருக்குதுக..  மானமாவது மசுராவது??

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்தக் கொடூரங்களை அனுமதிப்பதே அவதூறு என்றிருக்க .. இந்த நடவடிக்கைகளை ஆகாயத்தில் பறந்த வண்ணமே  பார்ப்பதும் சிலாகிப்பதும் நிகழ்ந்திருந்தால் இந்த சம்பவத்துக்காக ஒவ்வொரு தமிழனும் தலைகுனிந்து வெட்கப் படவேண்டிய சங்கடத்துக்கு ஆளாகிறான்.. 

இன்னொரு கொடுமை... 
மத்தியில ஆளப் போற மோதிக்கு .. நம்ம காப்டன் துணை நிக்கிறாராமா .. ஹிஹி.. இது எப்டி இருக்குன்னா, ஊரெல்லாம் சேர்ந்து இழுக்கற தேரை, அப்டியே லைட்டா   டச் பண்ண, -- இவுரு டச்சிங்ல தான் தேர் அழகா நகருதாம்.. இப்டி மப்புலையே சூளுரைக்கிறாரு நம்ம புரட்சிக் கலைஞர்.. 

வேணும்னா பாருங்க.. மோதி பிரதம மந்திரி ஆனதுக்குக் காரணமே நாந்தான்னு  நாளைக்கு வி.காந்த்  பீத்திக்கப் போறாரு.. நல்ல வேலை, நம்ம லட்சிய திமுக ராசேந்தருக்கு  அப்டி ஒரு சூழ்நிலை ஆயிருந்துதுன்னா அது இன்னும் நாறி  இருக்கும்.. இப்போதைக்கு இந்த தேமுதிக கிளப்பற நாத்தத்தை சமாளிக்கப் பார்ப்போம்.. 

ஓட்டுக் கேக்க மட்டும யோகியணுக போல கும்பிட்டுட்டு பல்லக் காட்டிட்டு வர்ற பசங்க  அப்புறம் ஜெயிச்சா ஏரியா பக்கமே தலைவச்சு படுக்காத கத பழய கத.  இவனுக சொத்தைச் சிரிப்பை இப்பெல்லாம் பொதுஜனங்க நல்ல புரிஞ்சு வச்சிருக்காங்க. அந்தக் காலத்துல தான் பாவம் வெள்ளந்திக.. 
இப்பெல்லாம் அப்டி இல்லை மாமோய்.. 
இப்டி பெரிசா பெனாத்திட்டே ஒரு போக்கிரி பய கிட்ட நாட்டை ஒப்படைப்போம் நாங்க.. அப்புறம் டவுசரைக் காணோம் கோவணத்தைக் காணோம்னு லபோதிபோன்னு அடிச்சுக்கிறது அப்புறம் ஆசுவாசப் பட்டுக்கிறது இன்னைக்கு நேத்தா  நடந்துக்கிட்டு இருக்கு? 
எல்லாம் பழகிப் போச்சு நைனா.. விடு ஜூட்.. 

Sunday, April 13, 2014

சித்திரை வாழ்த்துக்கள்.. அனைவருக்கும்..

இயல்பாக ஓர் சம்பவம் மனதை பாதித்து .. அதனைக் கவிதையென புனைகையில் அது ஓர் பூ இயல்பாக மலர்வது போன்ற ஓர் உணர்வை தரும்..

ஆனால், எதுவும் எழுதாமல் இருக்கிறோமே, எதையேனும் ஒன்றை எழுதித் தொலைவோம் என்கிற ரீதியில் மாத்திரம் எழுத உட்கார்ந்தோமேயானால் வரும் பாருங்கள் ஒரு வெறுமை.., ஒரு குற்ற உணர்ச்சி.. , அது ஓர் வார்த்தையே அற்ற கருமமான உணர்ச்சி..

அப்படி அனேக சமயங்கள் எமக்கு வாய்ப்பதுண்டு .. அப்போதெல்லாம் குண்டியைக் கட்டிக் கொண்டு எழுந்து போய் வேறு வேலைகளில் மனதை லயிக்க விடுகிற புத்திசாலித்தனம் கொஞ்சம் என்னிடம் உண்டு..
லைப்ரரி சென்று விடுவேன்.., கோவில்கள் சென்று விடுவேன்.., நல்லதொரு படமொன்றை தேர்ந்தெடுத்துப் பார்க்க மெனக்கெடுவேன்..

அதன் பிறகாக ஏற்படுகிற சுவாரஸ்ய அனுபவங்களைப் பதிவிறக்கம் செய்ய எனது விரல்கள் .. வெட்டவெளியிலேயே qwerty தட்ட ஆரம்பித்து விடும்..

இந்த கணினி வந்த பிற்பாடு காகிதங்களும் பேனாக்களும் மிகவும் அன்னியப் பட்டுப் போயின.. ஓர் வெற்றுத் தாளெடுத்து அன்றெல்லாம் எதையேனும் எழுதுவதும் வரைவதுமாக கழிந்த சுவாரஸ்ய தருவாய்கள் ஓர் மலரும் நினைவாக இன்றும் மனவெளியில்..

மிகப் பலருக்கும் இதே வித அனுபவங்கள் தான் என்பது எனது அனுமானம்..
ஒருவகையில் இது பத்திரமான விஷயமும் கூட.. ஏன் எனில், காகிதங்களில் எதையேனும் எழுதி பொறுப்பாக பத்திரப் படுத்தத் தெரியாத சுபாவம் என்னுடையது.. அங்கும் இங்குமாக எமது வீடெங்கிலும் அலைபாய்ந்து கொண்டு கிடக்கும்  எமது படைப்புகள்.. என் வீட்டார் என்னுடைய எதையும் எடுத்துப்  பார்க்கவோ படிக்கவோ மாட்டார்கள் எனிலும், வருகிற விருந்தினர்களுக்கு  அது விருந்தாக அமையக் கூடும்.. எப்போதுமே தனது வீட்டுப் படுக்கை அறைகள் எவருக்கும் எந்த சுவாரசியங்களையும் ஏற்படுத்துவதில்லை.., மாறாக பிறரது ப.அறைகள் அதீத சுவாரஸ்யம்..

நானும் எதையேனும் அதிகப் பிரசங்கமாக எழுதி விடுகிற ஆற்றல் படைத்த எழுத்தாளன் வேறு.. படிப்பவர்களுக்கு எம்முடைய மேதாவித் தனம் அடையாளப் பட்டால் பரவாயில்லை. அதற்கு மாறாக, என்னுடைய உள்முகம் மற்றும்  உள்மனம் .. அதன் சபலங்கள், அழுக்குகள், என்கிற ரீதியாக புரிபடுமாயின்  அது மிகப் பெரிய தர்ம சங்கடங்களையும் லஜ்ஜைகளையும் என்னில் ஊடுருவ வாய்ப்பாகிப் போகும்..

அந்த வகையில் பார்க்கப் போனால், இந்த கணினியும், பிளாகுகளும் பேஸ் புக்கும்  தேவலாம்.. எங்கோ இருந்து கொண்டு படிக்கிறார்கள்.. அவர்களது உணர்வுகள் குறித்த பெரிய அக்கறையோ கவலையோ என்னை வந்து உசுப்புவதில்லை.. கூட்டத்தில் கல்லை விட்டெறிகிறேன் .. யார் மண்டையிலோ நங்கென்று  ஒரு கிண்டு கிண்டி, வலியில் வெகுண்டெழுகிறார்கள் .. தாக்கியது யாரென்று புலனாகாமல் விதிர்த்துப் போகிறார்கள் .. இன்னாரென்று புரிந்தாலும் எதுவும் செய்வதற்கு சாத்யப் படாமல் இம்சை உணர்கிறார்கள் ..... ஹிஹி..

எல்லாருக்கும் இந்தத் தன்னிகரில்லா தங்கத் தமிழனின் இனிய தமிழ் புத்தாண்டு சித்திரை நல்வாழ்த்துக்கள்.. 

Tuesday, April 8, 2014

ஆத்திகவாதிகள் மன்னிக்கணும்.. [மன்னிக்காட்டியும் பரவாயில்லை]

பிரத்யேக விழா காலங்களில் கோவில்களில் கும்மென்று கூடுகிற கூட்டமும், ஸ்வாமி தரிசனத்திற்காக வரிசை கட்டி நிற்பதையும் பார்க்கையில் அந்தக் காட்சி "வாவ். என்னங்கடா இது" என்று வியக்கத் தோன்றும்.. 

சிற்சிறு கோவில்களிலேயே இவ்விதமாக பம்முகிறது கூட்டமென்றால் பழனி திருப்பதி திருச்செந்தூர் குருவாயூர் போன்ற கோவில்களிலோ சொல்லி மாளாத கூட்டம்.. 2 நாட்களெல்லாம் பொறுத்திருந்து வேங்கடானைப் பார்க்க வேண்டியுள்ளது திருப்பதியிலே.. தரிசனம் என்னவோ ரெண்டொரு நிமிடங்கள் தான்.. அதற்குள்ளாக பிடரி பிடித்துத் தள்ளி விடுகிறார்கள் ஆந்திரப் பெண் போலீசுகள்.. ஹிஹி.. அதிலொரு கிளுகிளுப்பு.. 

வெளியே வந்த பிற்பாடு "ஹப்பாடி.. இன்னைக்கு ரொம்ப நன்னா தரிசுச்சுண்டேன் .. போனவாட்டிய விட இந்த தர்ஷன் ரொம்ப பேஷா அமஞ்சிடித்து.. ரொம்ப லக்கி நானு!" என்று அரற்றிக் கொள்வதை கவனிக்கையில் , வாயில் தவிர்த்து வேறேதாவதைக் கொண்டு சிரிக்க வெறி பிறக்கிறது எனக்கு.. 

ல்லை செதுக்கிறது ஸ்தபதி.. பூவையும் பொட்டையும் வச்சு ஜாஜ்வல்யமா அலங்கரிச்சு வுடறது பூசாரிங்க.. நெதமும் ஒரு பெரிய பியூட்டி பார்லரா மாறுது கருவறை.. 
வெளிய நின்னு கும்பிடுற பசங்க .. "என்ன ஒரு ராஜ அலங்காரம்.. காண கண்கோடி வேணாமோ?" ன்னு பெரும பீத்தரச்சே வருது பாருங்கோ ஒரு டென்ஷன்.. எங்க போயி முட்டிக்கிறது?

மக்களை எப்டி எல்லாம் மூளை சலவை செஞ்சு வச்சிருக்காங்க!!.. 
[மனசுக்குப் பட்டதை படக்குன்னு சொல்லிட்டேன்.. இது எந்த பக்தர்களோட மனசையும் புண்படுத்தணும் என்கிற நோக்கமல்ல.. மக்களோட அறியாமை மேல ஒரு கோபமே தவிர மக்கள் மேல அல்ல.. ஏதோ என்னோட நியாயங்களை ரெண்டொருவர் ஏற்கிற பட்சத்தில் கூட எமது இடுகை வெற்றி கண்ட விதமாக நான் குதூகலிப்பேன்..]

Monday, April 7, 2014

ஆன்மீக அலசல்..

மனிதர்களை சுவாமிகள் படைத்தனர் என்பதற்கு எந்த சாட்சிகளும் அறவே இல்லை.. ஆனால் அனைத்து சுவாமிகளும் மனிதர்களால் மாத்திரமே படைக்கப் பெற்றன என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்துக்களும் இருக்க வாய்ப்பில்லை.. 

அவனே கற்களைத் தேர்ந்தெடுத்து.. உருவத்தை செதுக்குகிற லாவகம் உள்ள கற்களை தனியே பிரித்தெடுத்து .. அந்தக் கல்லில் அவன் கொணர்கிற நேர்த்தி மிகு புன்னகைகளும், ரவுத்திரங்களும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.. கற்களில் எல்லா உணர்வுகளையும்  பிரதிபலிக்கச் செய்கிற சிற்பியினுடைய கைவண்ணங்கள் .. வாவ் என்று வியக்கச் செய்கின்றன.. அப்படி வியக்காத சில கல்மனம் படைத்த ரசனை அற்ற ஜடங்களும் படர்ந்து பரவித் தான் கிடக்கின்றனர் எங்கெங்கிலும்..

வானத்தைக் கூட அற்பமாக அண்ணாந்து பார்க்கிற அகம்பாவ மனிதர்கள் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும் நமக்கென்ன?..
காலில் மிதிபடுகிற மண்ணெடுத்து நெற்றியில் இட்டுக் கொள்கிற அபிமானம் கொண்டு இப்புவியில் நாம் வாழப் பழகுவோமே..!!

இயற்கையின் பால் லயித்து இதயம் நெகிழ்கையில் ஏற்படுகிற உணர்வுக் கிளர்வுக்கு ஈடு வேறென்ன இருக்க முடியும்?..
எவ்வளவோ மனிதர்கள் ரசிக்க உகந்தவர்களாக, மதிக்க உகந்தவர்களாக.. இருக்கத்தான் செய்கிறார்கள்.. பார்த்தாலே கண்ணீர் மல்க வைக்கிற ஞானிகளும்.. அவர்களிடம் அடைக்கலம் ஆகி விடலாம் என்கிற அபரிமித ஆர்வம் பெருக்கெடுக்கவும் தான் செய்கின்றன..

உடனே அப்படி எல்லாம் எவரும் அடைக்கலம் ஆகிவிடுவதாக இல்லை.. பலருக்கும் அவ்வித கற்பனைகள் மேலோங்கி மனதினை ஆட்டுவிப்பதே சாதனை போன்ற  இறுமாப்புகள் நெஞ்சுக் கூட்டில்..

அதையும் தாண்டித்  தான் சிலர் தன்னையே அர்ப்பணிக்கிற நிகழ்வுகள் எல்லாம் நேர்கின்றன.. அந்த சிலரின் மனசுகளும் அவர்களது முடிவுகளும் பிரம்மிக்கச் செய்கின்றன..

தொடர்பற்றோ தொடர்புடனோ எனக்குத் தோன்றிய விஷயங்களை தோன்றிய மாத்திரத்தில்  கொட்டித் தீர்த்துவிட்டேன்..
இப்படி ஆன்மீக சம்பந்தப்பட்ட அபிப்ராயங்களை அவ்வப்போது எழுதுகையில் ஓர் இனம்புரியாத  உணர்வு பிரவகிக்கிறது மனசுள்.. இதற்காகவே இப்படி எதையேனும்  மாதம் ஒருமுறையாவது எழுதலாம் என்கிற உத்தேசம்..

பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன..

Friday, April 4, 2014

குக்கூ

குக்கூ பார்த்தேன்..
இப்படம் குறித்து பல வகையறா விமரிசனங்களை முன்னரே கேட்கவில்லை.. நல்ல வேளையாக இந்தப் படம் பார்த்துவிட்டு வந்த பிற்பாடு தான் யூ டியூபில் பிரஷாந்தின், பாஸ்கியின் ரிவியூஸை கவனித்தேன்.. ஆளாளுக்கு கன்னாபின்னாவென்று அரற்றி இருக்கிறார்கள்..
குற்றமென இவர்கள் சுட்டிக் காண்பித்த எத்தனையோ விஷயங்களை நான் மிகவும் ரசித்தேன்..
சுற்றுப் புற சூழலின், திரை அரங்கு சூழலின் நிமித்தம் ஒரு ரசனை மிகு மனிதனின் ரசனை பிசகுகிற வாய்ப்பு எங்கெங்கிலும் உள்ளது ஆதலால், ஓர் மவுன தருவாய் ஒன்றில் இப்படத்தினை பொறுமையாக கவனிப்பது சாலச் சிறந்தது..
நேற்று எங்கள் ஊர் திரையரங்கில் இப்படம் கடைசி ... கூட்டம் அறவே இல்லை.. ஆகவே ஆர்ப்பாட்டங்களும் வெட்டிக் கூச்சல்களும் இல்லை என்பதாலோ என்னவோ அங்குலம் அங்குலமாகக் கண்டு வியந்தேன் இப்படத்தினை..

முதற்கண் ஒன்றினை சொல்லிக் கொள்ள அவா கொள்கிறேன்..
நிச்சயம் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.. எல்லாருமே இப்படத்தினை கண்டு களிக்க வழிவகை செய்ய வேண்டும்..

மாற்றுத் திறனாளிகளின் அன்றாட யதார்த்த சூழல்களை, இவ்வளவு நேர்த்தியாக முந்தைய வேறெந்தப் படங்களும் சொன்னதில்லை என்பது எமது தாழ்மையான கருத்து..

போட்டி இல்லாமலே தேர்வு செய்கிற தகுதியோடு எவ்வளவோ விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உண்டு.. அப்படி எனில், இப்படம் வேறெந்தப் படங்களோடும் போட்டி எதுவும் போடாமலேயே போட்டிக்குத் தேர்ந்தெடுக்கிற முழுத் தகுதிகள் உண்டு என்பது அடியேனின் அபிப்ராயம்..

பிரத்யேகமாக இப்படத்தின் அறிமுக நாயகி மாளவிகா.. அடேங்கப்பா.. என்ன ஒரு தத்ரூபம்.. அசத்தி விட்டார்..

இசை ஓர் புதுப் பரிணாமத்தில் பிரயாணிக்கிறது.. இளையராஜா போல மனசில் பிரம்மாதமாக மனனமாகவில்லை எனிலும், இந்த இசை ஓர் தனி ரகம் தான்..
ரெண்டொரு பாடல் கூட மனசை வருடி சென்றன..

அலட்டல்கள் இல்லாத ஒளிப்பதிவு..
நாயகனும் யதார்த்தத்தில் சோடை போகவில்லை.. மேடைக் கச்சேரிகளில் இளையராஜா வாய்ஸ் கொண்டு பாட வேண்டிய காரெக்டர்.. கச்சிதமாக செய்திருக்கிறார் அந்த  அட்டகத்தியில் குத்திக் கிழித்தவர்..

தயவு செய்து dvd hd பிரிண்ட் டில் கிடைக்கிற பட்சத்தில் கூடஅதனைத் தவிர்த்து திரை அரங்கு சென்று கவனிப்பீராக....
தமிழ் படங்களுக்கு இப்படம் ஓர் மைல்கல் என்பதில் எந்த ஆட்சேபத்துக்கும் இடமில்லை.. ..

Thursday, April 3, 2014

facebook.. FACE BOOK.. முகப் புத்தகம்....

Photo: தினம் ஒரு பொன்மொழி

http://www.dinakaran.com/Daily_Calendar.aspfacebook கில் என்னுடைய நண்பர் ஒருவர் வெளியிட்ட படமும்  தத்துவமும்..
இதற்கு நான் வெளியிட்ட கமெண்ட் கீழே காண்க..!!

  • Sundara Vadivelu வெற்றி கண்டவர்களையே புதைக்கக் காத்திருக்கிறதடா இந்த சண்டாள சமுதாயம்.. ஈவிரக்கம் என்பதே கொஞ்சமும் அற்ற நாதாரிப் பயல்களன்றோ பரவிப் படர்ந்து கிளை விட்டுக் கிடக்கின்றனர் எங்கெங்கிலும்.. ?.. பிறர்க்கு ஊறு விளைவிப்பதே தங்களின் தலையாய கடமை போல செயலாற்றுகிற அற்ப மூடர்கள் குவிந்த இந்த சமுதாயம், இன்னும் சுனாமி கொண்டு போகாமல் இருப்பது அதிசயமன்றோ ?
    உமது உற்ற நண்பன் கூட உமது வெற்றியை உற்சாகமாக உணர்கிறானா என்பது மில்லியன் டாலர் கேள்வியே.. 
    தோல்வியில் நீ துவள்கையில் ஆறுதல் சொல்வதை 
    பரமானந்தமாய் சொல்வானடா அந்தப் படுபாவி.. 
    உம்முடைய அற்ப வெற்றிக்குக் கூட டாஸ்மாக்கிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிற குழாம் தானேடா குவிந்து கிடக்கிறது.. ஹிஹிஹி.. 
    [கண்ணாம்பாள் வசனம் போல படிக்கவும்..]
    16 hours ago · Like · 1
  • Sundara Vadivelu

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...