Saturday, November 19, 2011

கவிதைச் சிதறல்கள்..





உயிர்த் திரவம்
உடற்கோப்பையை
விட்டு சிந்தி விடுகையில்
எல்லா நாமதேயங்களும்
அனர்த்தமாகி விடுகிற
சம்பவம் அன்றாடம்
எங்கெங்கிலும்
நிகழ்ந்த வண்ணமே
உள்ளபோதிலும்
--ஏனோ இந்த
வாழ்க்கை மென்மேலும்
சுவாரஸ்யப்பட்டுக் கொண்டே
தானிருக்கிறது
எல்லாருக்கும்...

புதிய உத்திகளில்
நாளொரு மேனியுமாய்
குவிகிற மின்சாதன
உபகரணங்கள்..
"இது தான் உள்ளதிலேயே
மிகவும் உன்னதமானது"
என்கிற பெருமிதம்
நிறைவுறும் முன்னரே
மற்றொரு மகத்தானது
முளைத்துவிடுகிறது
அதே சந்தையில்...

அப்பாவின் ரத்தக் கொதிப்பு
குறித்தோ, அம்மாவின்
சர்க்கரை அளவு குறித்தோ
எந்தப் பிரக்ஞையும்
அற்றவனுக்கு ..
கைபேசியில் பாட்டரி சார்ஜ்
குறைவது கவலையளிக்கிறது..
எதிர்முனையில் காதலி
குரல்வளை நசுக்கப்
படுவது போல பீதி உணர்கிறான்..

சார்ஜ் தீர்ந்த மறுகணம்
பிஸி க்கலாக சந்திக்க
அவசரப்படுகிறான் ...
ஆசுப்பத்திரிக்கு பெற்றோரை
ஆட்டோவில் அனுப்பிவிட்டு..!!

நோய் ஒருவிதமாகத்
தாக்குகிறதெனில், மகன்
வேறுவிதமாகத் தாக்குகிறான்
பெற்றவர்களை...

பெற்றோரை கவனிக்காத
சுரணை கூட அவனுக்கில்லை...
காதலி பேசுவதை
பக்கமிருந்து கவனித்தாகவேண்டும்.!!!

காதலியின் காய்ச்சல்
அவனை பாதித்த அளவுகூட
அப்பாவின் மரணம்
பாதிக்கவில்லை...

பின்னொரு நாளில்
அப்பாவின் இல்லாமை
அவனை பெரும் வெறுமையில்
செலுத்த உள்ளது..
--அதைவிட இப்போதைய
அவனது அசட்டையான
போக்கிற்காக வருந்தி
தனிமையில் போய்
தேம்பியழப் போகிறான்...!  

1 comment:

  1. //காதலியின் காய்ச்சல்
    அவனை பாதித்த அளவுகூட
    அப்பாவின் மரணம்
    பாதிக்கவில்லை...//
    வாழ்வின் எதார்த்தங்களைப் புட்டுப் புட்ட வைத்திருக்கிறீர்கள்.
    கசப்பான உண்மை.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...