கனவுகளின்
சம்பவக் கோர்வை
எப்போதும் எனக்கு
பிரம்மிப்பு..
ஓர் தேர்ந்த
திரைக்கதை போல.,
காட்சியமைப்பின்
யதார்த்தம் குலையாமல்
நிதர்சனத்தைக் காட்டிலும்
தெளிவும் பொலிவும்
இழைந்தன கனவுகள்..
யதார்த்த வாழ்க்கை
இங்கே நைந்த சேலையாய்
இருக்க, கனவுகள்
ஆயத்தப் பட்டாடையாய்
ஜ்வலிக்கிறது..
நிஜங்கள் இங்கே
சுரணை இழந்து கிடக்கையில்
நிழல்கள் தொடு
உணர்வில் நெளிகிறது...!
சினிமாவில் ஓர் சோகக்
காட்சிக்காக விசும்பிவிசும்பி
கைக் குட்டையை நனைத்தவன்
அப்பா செத்ததுக்கு
கண்ணீருக்குப் பதில்
எச்சிலைத் துப்பி --
கன்னத்தில் இழுக்க வேண்டியாயிற்று...
கற்பனைகளுள்
சுலபமாக அடியாழம்
சென்று விடமுடிகிற என்னால்
உண்மைகளின் சமதளத்தில்
காலூன்றி நிற்கக் கூட
அனுமதி கிடைக்காத உணர்வு...
வெட்கப்படவும்
ஒளிந்துகொள்ளவுமே
அதிகம் பழகியிருக்கிறேன்...
யதார்த்தங்களோடு கைகுலுக்கவோ
புன்னகைத்து வரவேற்கவோ
பால்யம் தொட்டே
அன்னியப்பட்டு நிற்கிறேன்..
எல்லா நண்பர்களின்
வீடுகளுக்கும் அவர்களது
அனுமதியில்லாமலே கூட
சுலபத்தில் பிரவேசிக்க
முடிகிற என்னால் ---
"நீ இருக்கிறாயா?
உன் வீடு வரட்டுமா?"
என்று உரிமையில் கேட்கிற
நண்பனிடம் கூட
வெளியே இருப்பதாக
சொல்லிவிட்டு
மல்லாந்து
படுத்துக் கிடப்பேன்
என் அறையில்..!!
சுந்தரவடிவேலு
//வெட்கப்படவும்
ReplyDeleteஒளிந்துகொள்ளவுமே
அதிகம் பழகியிருக்கிறேன்...
யதார்த்தங்களோடு கைகுலுக்கவோ
புன்னகைத்து வரவேற்கவோ
பால்யம் தொட்டே
அன்னியப்பட்டு நிற்கிறேன்..//
இது நமக்கு வாய்த்த சாபம்...
நானும் அப்படியே...
நத்தை மனிதர்களாய்
வாழ்ந்து
பழகிவிட்டோம்!
கவிதை நன்று நண்பரே!