Sunday, November 6, 2011

ஜீவா இளையராஜா..

இசைஞானி இளையராஜா அவர்களுடைய துணைவியார் ஜீவா அவர்கள் மாரடைப்பு நிமித்தம் சமீபத்தில் காலமானது குறித்து கவலை உணர்கிறோம்...

ஜீவா என்கிற பெண்மணி இளையராஜாவின் மனைவி என்பதைத் தவிர வேறு அடையாளங்கள் இல்லாத ஓர் கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக இருக்கக்கூடும் என்றே அனுமானிக்கிறோம்...
--ஓர் ஆணின் ஆளுமைக்கும் அவனது திறன்களுக்கும் மௌனமான பின்புலமாக இருந்து க்ரியா ஊக்கிகளாக செயல்படுவது பெண்கள் என்று பொதுவாக ஓர் கருத்து உண்டு...
அந்த வகையில் இளையராஜாவின் வீரிய இசை ஞானத்துக்கு ஒருகால் ஜீவா என்ற பெண்மணி பின்புலமாக இயங்கியிருக்கக் கூடும்... 
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான துணை, இனி இந்த உலகில் இல்லை என்கிற சோகம் இளையராஜாவுக்கு மட்டுமல்ல.., அவரது இசையிலும் பாடல்களிலும் அயராமல் லயிக்கிற நம் அனைவருக்குமே...!!

அன்னக்கிளி முதற்கொண்டு ஆரம்பித்த அவரது இசைப் பயணம், இன்றும் மெருகோடும் அழகோடும் விளங்கி வருகிறதென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை... 
தமிழ் பாடல்களின் அழகியலுக்கு ராஜாவின் இசையே அடிநாதமாய் விளங்குகிறது... மற்ற பாடல்கள் பல இருப்பினும், அவை கூட இளையராஜாவின் இசை வருடியிருக்கக் கூடாதோ என்கிற ஏக்கத்தைப் பரப்புகிற விதமாகவே அவரது இசை நமக்குள் ஓர் கிறக்கத்தைப் பரப்பியிருக்கிறது என்பதில் மிகையோ அய்யப்பாடோ இல்லை...!!


ஒரு துறையில் வல்லுனராக பெயரெடுத்த ஓர் நபரை பொதுவாக நாம் வியந்து கூறுகிற ஓர் வாசகம் யாதெனில் : ''இவுரு மாதிரி ஒருத்தன் இனி தான் பொறந்து வரணும்"..  என்பது..
அப்படிப் பார்க்கையில், இளையராஜா மாதிரி ஓர் இசை வல்லுநர் முன்பு பிறக்கவுமில்லை, அவருக்கே பிறந்த கார்த்திக்கோ, யுவனோ கூட இல்லை..


பீதொவனும் பாக்கும் மொஜார்டும் ஓர் குறிப்பிட்ட இசைக் கோர்வையில் மட்டுமே வல்லுனர்களாக விளங்கி , அந்த ஓர் பிரத்யேகமான சொனாட்டக்களை மட்டுமே அபிவிருத்தி செய்து அவைகளில் புதுமை புகுத்தி பெயர் வாங்கினார்கள்... ஆனால் இளையராஜா, எல்லா பரிமாணங்களையும் மிக யதார்த்தமாக, மிக வீச்சாக , மிக வசீகரமாகக் கையாண்டார் என்றால் அது மிகையன்று... அவர் கையாண்ட அனைத்த வகை இசையுமே குறிப்பிட்ட அந்த சூழல்களின் வெளிப்பாடாகவும்,  மனித மனங்களின் வார்த்தைகளால் விளக்கவொண்ணா கடின உணர்வுகளை தன் இசையால் வெளிக் கொணர்ந்ததாகவுமே கொள்ளலாம்... 
அத்தனை வகையறா இசை முறைகளையுமே மிக லாவகமாக மிக நேர்த்தியாக மிக ரசிக்கிற வகையிலே ராஜா பிரசவித்தார்... 


பி ஜி எம் . என்று சொல்லப் படுகிற பின்னணி இசை உலகில் இளையராஜா தவிர வேறெந்தத் திரைப்பட இசை அமைப்பாளர்களுக்கும் இடமில்லை... 


இப்போது ஒலிக்கிற புதுப் பாடல்களை கேட்பதே சாபம் போல உணர வைக்கின்றனர் இன்றைய இசை மேதைகள்... ஒரு முறை கேட்டு மறுமுறை கேட்கவே காதுகள், மனசு எல்லாம் சலிப்புணர்கின்றன... ஆனால் இன்றும் இளையராஜாவின் எத்தனையோ பாடல்களை, எத்தனை முறை திரும்பக் கேட்டாலும் அதே பரவசம் மேலும் மேலும் அடர்த்தி தான் காண்கின்றன...


ராமராஜன் படங்களுக்கும் டப்பாங்குத்து நடக்கிறது...சங்கீதத்துவம் ததும்பும் சலங்கை ஒலி போன்ற கர்னாடக பாணி படங்களுக்கும் மிருதங்கம் மிரள்கிறது.. . 
இப்படியாக எல்லா கலவையான ரசனைகளிலும் தன்னை தன் இசையை மாற்றி அமைக்கிற வல்லன்மை இளையராஜாவுக்கு அமையப்பெற்ற வரம்... 


திருமதி ஜீவா இளையராஜா ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்போம்... மேற்கொண்டும் அவரது ஆத்மா , ராஜாவின் திறன்களுக்கு பின்புலமாக நின்று செயல்படட்டும்..

சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...