சாந்த சொரூபமாகத் தான் வீட்டினுள் நுழைந்தேன்... மகள் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்... வழக்கம் போல பரஸ்பரம் நானும் என் மனைவியும் புன்னகைத்துக் கொண்டோம்... இது அனிச்சையாக அன்றாடம் வழக்கமாக நிகழ்கிற விஷயம்..
மகள் விழித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், என் வருகையை மிக ஆர்ப்பாட்டமாக வரவேற்பதோடு நான் அவளுக்காக என்னென்ன வாங்கி வந்திருக்கிறேன் என்கிற ரெய்டு நடக்கும்...
கடைசிக்கு ஓர் அஞ்சு ரூபா ஜெம்ஸ் மிட்டாயாவது இருக்கவேண்டும்.., இல்லையெனில் கேவலமாகப் பார்க்கும் என்னை அந்தப் பிஞ்சு...
வெளியே சுற்றி விட்டு வீட்டினுள் வருகையில் கைகால் முகம் எல்லாம் நன்கு அலம்பி விட்டு சொட்டுகிற ஈரத்தை ஈரிழைத்துண்டால் துடைத்து விட்டு அதன் பிறகே என் மகளை எடுத்து ஆசை தீர முத்தங்கள் பரிமாறிக் கொஞ்சுவது எனது வழக்கம்...
சமயங்களில் இந்த சுகாதாரம் குறித்த பிரக்ஞையை மறக்க வைத்து விடும் அவளது வரவேற்பு... வேர்வையிநூடே அவளைத் தூக்கிக் கசக்கி அந்த சின்னக் கன்னங்களை எனது மூக்கு போட்டுப் புரட்டி எடுத்துவிடும்..அப்போதைய அவளது சிரிப்பின் வீச்சு என் கொஞ்சுகிற வெறியை இன்னும் மேம்படுத்தும்..
சட்டையை அவிழ்த்து ஹாங்கரில் மாட்ட மறந்து ... மகளிடம் மாட்டிக்கொள்வேன் பல சமயங்களில்... சட்டைப் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டாள் என்றால் அவ்வளவு தான்... என் லைசென்சு, என்
ஏ டிஎம் கார்டு, இன்னபிற என் காகித சமாச்சாரங்கள் அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விட்டு ... கடைசியில் ரூபாய் நோட்டுக்களுக்கு வருவாள்..
போட்டுக் கசக்குவாள்.. எனக்கு டென்ஷன் ஆகிவிடும்... சாமான்யத்தில் வாங்கிவிடவும் முடியாது.. கிழித்து விடமாட்டாள்.., பயக்கவேண்டாம் என்று மனைவி வேறு அட்வைஸ்... அதை டைவெர்ட் செய்ய மாற்று சம்பவம் ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும்... இப்படி என் மகளின் நிமித்தம் பல innovation நடக்கும் அன்றாடம்..
பசியில் சாப்பிட உட்காருகையில் ருசி குறைபாடு கண்டு என் ஆண்மை பொங்கி எழும்... பசி ருசியறியாது என்பது எதிர்காலத்தில் நான் பிச்சைக்காரன் ஆன பிறகு வேண்டுமானால் ஒத்து வரும்... இப்போதைய அவகாசத்தில், கருவேப்பிலையும் கடுகையும் கூட அனுபவித்து ரசித்து ருசிக்கிற மனோபாவத்தில் நானிருக்கிறேன்...
இன்றும் அப்படித்தான் நிகழ்ந்து விட்டது... சாந்த சொரூபமாக உள்ளே வந்தேனா, மகள் தூங்கிக்கொண்டிருந்தாளா, .. கைகால் முகம் அலம்பி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேனா, சரியான பசி... சாப்பிட ஆரம்பித்தாலோ, சாம்பார் சரியில்லை, ரசத்தில் தூக்கலாகப் புளி... நாறுகிற மோர்... பிள்ளையைப் பார்த்துக்கொண்டு பொரியல் செய்ய நேரமில்லையாம்..
கன்னாபின்னாவென்று திட்டியாயிற்று...பாப்பா தூங்குகிற ஸ்மரணை கூட அறுந்து கத்தியாயிற்று...
ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தவள், என் கதறலில் துணுக்குற்று விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்தது எனக்குள் ஓர் லஜ்ஜையை ஏற்படுத்திற்று., என் நடத்தை மீது எனக்கே ஓர் தாங்கொணா அசூயையை கிளறவைத்தது..
தூங்காமல் அடம் பிடித்துக் கொண்டிருந்த குழந்தையை மிக மெனக்கெட்டு சற்று முன்னர் தான் தூங்க வைத்தவளுக்கு மீண்டும் அவஸ்தையைக் கொடுத்து விட்டேன்... இனி அது சாமான்யத்தில் தூங்காது... நை நை என்று அரற்றி எடுத்து விடும்..
என் கோபங்கள் யாவும் வடிந்ததோடு, அழும் என் மகளைக் கொஞ்சுவதற்கான முஸ்தீபில் நான் இறங்க நேர்ந்தது...
என் மகள் மீதான என் மனைவியின் ஒருங்கிணைப்பும் ஐக்கியமும் என்னுள் பிரம்மிப்பை ஏற்படுத்துபவை... என்ன பசியிலும் குழந்தை சாப்பிடாமல் அவள் சாப்பிட்டதில்லை... யதார்த்தமாக ஒரு தும்மல் போட்டாலும் கூட அது குறித்து கவலை கொண்டு , அதற்கான மருந்தை தயார் செய்கிற துரிதம் அவளிடம்...
அங்கும் இங்கும் வெளியே சுற்றித் திரிந்து விட்டு உள்ளே வந்து குழம்பு ரசம் சரியில்லை என்று மனைவியைத் திட்டுகிற சம்பவம் புதிதல்ல... ஆனாலும் ஒவ்வொரு முறையும் அது ஓர் குற்ற உணர்வையும், மேற்கொண்டு அப்படி கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது என்கிற தீர்மானத்தையும் ... சுமந்தவாறே தான் திட்டித் தீர்க்க வேண்டியுள்ளது...
என் ரௌத்ரத்தை சமாளித்தாக வேண்டும், குழந்தையின் அடத்தை சரிக் கட்டியாக வேண்டும்... இப்படி அவஸ்தையான பொறுப்புகள் கூடிக்கொண்டே தான் போகின்றன என் மனைவிக்கு...
குழந்தையைக் காட்டிலும் பிரத்யேகமாகக் கொஞ்சத் தோன்றும் என் மனைவியை... சமயங்களில்..! அதற்காக அவள் வெட்கப் படுவாள் என்றெல்லாம் யோசிப்பதில்லை..
. இன்னும் என்ன, கொஞ்ச நேரத்தில் சாம்பாருக்காக கத்தித் தீர்க்கப் போகிறோம்..அதற்குள்ளாக எதற்கு கொஞ்சவேண்டும்? என்கிற காரணத்தாலேயே அந்தத் திட்டம் இன்னும் தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது..!!