Saturday, February 27, 2016

மாயைகள்..

நாம் விரும்பி லயிக்கிற ஒன்றில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்கிற அதீத அவா மனசுள் பூத்தெழுந்து புத்துணர்வு நல்கி புளக்கிக்கச் செய்கிற இந்த மாதிரியான அனுபவங்கள் அரதப் பழையன . !
என்றாலுமே கூட ஒவ்வொரு முறை அவ்வித ஆவல் மனசுள் மிளிர்கையில், அந்த உணர்வே என்னவோ புத்தம்புதிது போன்று  நம்முள் கிளர்ந்தெழப் பெற்று ஒருவித வார்த்தை பிடிபடாமல் நழுவி விடுகிற அலாதி உணர்வாக வியாபிக்கக் கூடும்..

.. ஜாஸ் இசையில் லயிக்க நேர்கையில் எல்லாம் இப்படி லாவகமாக சாதுர்யமாக இந்த கித்தார் கருவியை நாமும் கற்று இதே அசத்தலோடு பிய்த்து உதற வேண்டுமென்கிற தீட்சண்யம் மேலோங்கி நெருப்பு போன்று ஜ்வாலை பரப்பி என்னுள் ஓர் சுகந்த இம்சையை நிரப்பும்.. 
அதே துரிதத்தில் திரும்பவும் மறைந்து பிற மாற்றுத் திறன்கள் குறித்த சிந்தனைகளில் புரளத் துவங்கும் குரங்கு மனம்.. 
அதுவுமற்று இதுவுமற்று எதுவுமற்று அனைத்தும் பஸ்பமாகும் என்பதை எமது தீர்க்க தரிசனம் அறியும் என்கிற போதிலும் அவ்வாறான "நிபுணத்துவ மாயை" யில் சற்றே கிடப்பது .. ஒருவித லாகிரி வஸ்துவில் தன் நிலை மறந்து கிடப்பதற்கு ஒப்பான ஒருவித போதை ஷணங்கள் .. 

சத்தியமாக நிபுணத்துவம் பெற்று சாதிக்கிற ஒரு பண்டிதத்துவ நிலை இவ்விதமாக இல்லாமல் வேறொரு நேர்த்தியான தளத்தில் பயணிக்கக் கூடும்.. 
நானுமே கூட அவ்வப்போது இந்த நேர்த்தியான தளத்திலே பயணிக்கிற ஆவல் மூண்டு செவ்வனே பயணிப்பதாக நம்பிக் கொண்டு அற்புதக் கற்பனையில் கண்கள் மூடிக் கிடப்பேன்.. !!

வேற்றுமை..

Image result for cow
மாடுகளை
கும்பலாக 
கோசாலைகளில் 
மட்டுமே 
பார்த்துப் பழகிய 
கண்களுக்கு .. 

பீஃப்  கடை 
அருகாமையில் 
பார்க்க நேர்கையில் 
சூன்யம் ஒன்று 
வந்து சுடத் தான் 
சுடுகிறது.. 

இந்தியத் தமிழர்களாகப் 
புலனாகிற 
கோசாலை மாடுகள்.. 
இலங்கைத் 
தமிழ் அகதிகளாகப் 
புரிபடுகிற 
பீப் கடை மாடுகள்..!!
 Image result for cow

Thursday, February 25, 2016

காதலன் டைரியிலிருந்து

ன்னை ஸ்பரிசிப்பதற்கான வாய்ப்புக்கள் பன்முறை வழங்கப் பட்டுமே கூட ... தொடாமலிருப்பதே புனிதக் காதல் என்கிற முட்டாள் அனுமானத்தில் எமது பௌருஷம் பிதற்றிக் கிடந்த நாட்கள் அவை.... 

இன்றும்மைக் கண்களால் கூடக் காண்பதரிது என்கிற ஓர் சூழலைக் காலம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.... தீர்க்கதரிசி போன்று இதனை அன்றே நான் எதிர் நோக்கியிருந்தேன் என்பதே கொடுமையான உண்மை.. 
 (FatoOoma Qatar ~) Tags: flowers two sunlight macro girl lady canon garden 50mm hands focus hand traditional fingers nails smell notme henna qatar mashallah   qatari   400d 7na fatooma
என்னை நீ மதித்ததே பெரிய புண்ணிய விஷயம் போன்று அரண்டு போய்க் கிடந்தேன்.. மற்றபடிக்கு உன்னைத் தொடுவதோ, உன் கைகளைப் பிடித்து முத்தங்கள் உதிர்ப்பதோ, பிற்பாடு அள்ளி அணைப்பதோ.. யாவும் எனது காதலுக்கு நான் செய்கிற பெரிய அபவாதம் போன்று தீர்மானம் மேற்கொண்டிருந்தேன்.. 

அருந்த நான் நீர் கேட்கையில் தம்ளரில் வந்து ஜலம் கொடுக்கையில் அதனை உமது விரல்கள் எனது விரல்கள் தீண்டா வண்ணம் மிகக் கவனமாக வாங்கி அருந்திய அந்தக் காட்சிகள் இன்னும் எனது கண்கள் முன்பு  விரிந்து படர்கின்றது.. 

ஒருக்கால் தொடுவது அன்று நிகழ்ந்திருக்கும் பட்சத்தில் நீ எம்மைத் தவறாக கருதக்கூடும் என்று பயந்து நான் மன்னிப்புக் கூடக் கேட்கத் துணிந்திருப்பேன்... நல்ல வேளையாக அந்த அளவு எமது மடத்தனம் நீளவில்லை என்பது சற்றே ஆறுதல்.. 

நீயுமே கூட நான் தொடுகிற சந்தர்ப்பத்திற்காக காத்திருந்திருக்கலாம் என்று என்ன அழகாக அவசரமாக இந்த நாட்களில் நான் புரிந்து வைத்திருக்கிறேன்??.. ஐயோ ஐயோ.. 

Friday, February 19, 2016

கஜா.. [2 பக்க கதை ]

1

நிச்சயம் இதை ஒரு பக்கத்துக்கு மேல் எழுதும் பட்சத்தில் எனக்கே அலுத்துவிடும் என்பதோடு படிக்கிற உங்களுக்கும் அதே அலுப்பு வரக்கூடும்.. 
ஆகவே 2ஆம் பக்கம் போகிற வேலையே வைக்காமல் ஒரே பக்கத்தில் முடிக்கிற சாமர்த்தியத்தை கையாள வேண்டிய தார்மீகக் கடமையில் ஒரு பிரபல எழுத்தாளன் என்கிற முறையில் நான் இங்கே செயல்படப் போகிறேன்.. 

பக்கத்து வீட்டு சங்கரனிடம் கெஞ்சிக் கூத்தாடி நம்ம ஒருபக்க ஹீரோ கஜேந்திரன் ஓசி மொபெட் வாங்கி ஒன்றேகால் கி.மீ இருக்கிற கோதை டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு ஜஸ்ட் மனைவி சொல்லிவிட்ட 4 அல்லது 5 சாமான்கள் வாங்கிவர வேண்டி ஆயிற்று.. 

அதற்கு முன்னர் நம்ம கஜாவின் சுபாவங்களை இங்கே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது கதாசிரியன் என்கிற முறையில் எமது கடமையாகும்.. 
கஜா தனது மொபெடை செர்விஸ் விட்டதன் நிமித்தமே சங்கரனிடம் இரவல் வாங்க நேர்ந்தது.. மற்றபடிக்கு நம்ம ஹீரோ மொபெடுக்கு கூட அருகதை அற்றவனாக நீங்கள் கருதிவிடக் கூடாது.. 
சென்ற சில மாதங்கள் முன்னர் சங்கரன் இவ்வாறே செர்வீசுக்கு விட்டதன் நிமித்தம்  கஜாவிடம் ஒரு பத்து நிமிடங்கள் அவசர ஜோலிக்கு மொபெட் கேட்டதும் உடனே "ஐயோ சங்கரா.. ரியல்லி சாரி.. ஒரு அவசர வேலையா டவுன்ஹால் போக வேண்டியுள்ளது.. " என்று சொல்லிவிட்ட பொய்க்காகவே மொபெட்டை மெனக்கெட்டு வெளியெடுத்து கிளம்பி வெளியே சென்று ஒரு அரை மணி கழிந்து வீடு திரும்பவேண்டி ஆயிற்று கஜாவுக்கு.. 
ஆனால் சங்கரன் அதை எல்லாம் மனசுக்குள் வைத்துக் கொள்ளாமல் இப்போது இவன் கெஞ்சித் தொலைகிறானே என்கிற பாவத்துக்கு சாவியைக் கையில் கொடுத்து அனுப்பி வைத்தான்.. 
சங்கரனை ஹீரோவாக்கி இருக்க வேண்டும்.. ஆனால் இந்தக் கஞ்சன் அதையும் தட்டிப் பிடுங்கிக் கொண்டான் கதாசிரியனிடம்.. 

என்ன கெஞ்சினாலும் எந்தச்ப் பிச்சைக் காரனிடமும் ஒரு தர்ம சிந்தனையோ ஈவிரக்கமோ அற்று வளம் வருகிற நம்ம கஜா . 'ஒருக்கால் தான் ஒருகாலத்தில் பிச்சை எடுக்க நேர்ந்தால் கேட்பவனெல்லாம் தனக்கு தர்மம் செய்து திருவோடு விரைவில் நிரம்பி வழிய வேண்டும்' என்று கூட ஆசை கொள்கிற சுயநலமி, பேராசைக் காரன், கருமி.. 

கோமதி ஸ்டோர்ஸ் போய் இறங்கியதும், உள்ளே சென்றவன் தமது பட்டியல்களை கடைக்காரனிடம் நீட்டி விட்டு தனக்கு முதலில் சாமான்களை தயார் செய்யச் சொல்லி இவனுக்கு முன்னர் காத்திருந்தவர்களை கடுப்படித்தான்.. 
கடைக்காரரும் எப்போதும் முதலில் இவனைத் தொலைத்து விட வேண்டும் என்று தான் அவசரப் படுவார். ஏனெனில் ஏதேனும் வில்லங்கம் பேசி பிரச்சினை கொண்டு வந்து பற்பல முறைகள் எரிச்சல் மூட்டிய அனுபவம் கடைக்கார அண்ணாச்சிக்கு உண்டு. இவனை இனி மேல் வரவேண்டாம் என்று கூட உறுதிபடக் கூறுமளவுக்கு சங்கதிகள் நடந்தேறி இருக்கின்றன.. அதையும் தாண்டி பல் இளித்துக் கொண்டு வந்து இப்போதும் அதே கடுப்பை அடித்த வண்ணமே தான் உள்ளான் நம்ம ஹீரோ.. 
இந்த "கேப்"பில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும் இவன் பற்றி.. எங்கியோ க(ழு)தை ரெண்டாம் பக்கமும்  போயிடும் போலிருக்கே.. 

அன்னார் சமயத்துல எங்கியாச்சும் நடந்து போக வேண்டி வந்திடும்.. வீடு போவதற்கு அலுப்பு தட்டி விடும்.. உடனே 2வீலரில் போகிற நபர்களை ஒரு போலீஸ் மிரட்டலோடு டிராப் பண்ண சொல்லி பில்லியனில் ஏறிக்கொள்வார் கஜா.. இறங்கி ஒரு 'தாங்க்ஸ்' நவிலக் கூட முடியாத பன்னாடை.. 

ஆனால் இவரு வண்டியில போற போது யாரு உதவி கேட்டாலும் 'ம்ஹ்ம்.. நடந்து வாய்யா.. வாக்கிங் ஒடம்புக்கு நல்லது' என்று பிலாசபி பேசி நோகடிப்பார்.. 
இதே மாமிக எவளாச்சும் பிக்-அப் கேக்கட்டும்.. அண்ணன் விழுந்தடிச்சு ஒக்கார வச்சுக்குவார்.. அப்புறம்.. ஸ்பீட் பிரேக்கர் இல்லாமலே ப்ரேக் போட்டு சில்மிஷம் செய்யப் பார்க்கிற ஜொள்ளன்.. 

2
அப்படிப் பட்ட கஜேந்திரனுக்கு ரெண்டாம் பக்கமும் ஒதுக்க வேண்டிய ஒரு விபத்துக்கு நான் ஆளாக நேர்கிறது.. ஒதுக்கினாலும் பரவாயில்லை.. அண்ணனோட கொட்டம் இந்தப் பத்தியில அடங்கப் போறதை நெனச்சு என்னோட அருமை வாசகர்கள் நீங்கள் எல்லாம் எனக்கு சாகித்ய அகாதெமி விருதை இன்னொரு ஜாம்பாவானிடமிருந்து பிடுங்கியாவது கொடுப்பீர்கள்  என்று மிக நம்புகிறேன்.. 

திடீரென்று மொபெட் சாவியைக் காணவில்லை என்று பதற கதறவே ஆரம்பித்து விட்டார் கஜா. .. "ஐயோ. இரவல் வண்டியாயிற்றே. பூட்டிவிட்டு வந்தேனா?" என்று உடனே ஓடிப் போய் மொபெடை பார்க்கிறார்.. பூ போல நிற்கிறது.. 'சாவியை அதுலயே விட்டுட்டு வந்துட்டமோ .. ' என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்.. .நெருங்கியதும் .. ' அதானே அப்டி எல்லாம் மறந்தமாதிரி ஒருக்காலும் சாவியை வண்டியில விட்டதா சரித்திரமே இல்லையே.'. சைட் லாக்கை செக் செய்து கொள்கிறார். அதுவும் கிண்ணென்று லாக் செய்யப் பட்டிருக்கிறது.. 

திரும்ப கடைக்குள் சென்றதும் வண்டியிலே சாவி இல்லாததை சொல்லி கடைக்குள்ள தான் எங்கியாச்சும் விழுந்திருக்கும் என்று அங்கும் இங்கும் அலைபாய்ந்து தேடி , மற்றவர்களையும் தேடச் சொல்லி  ஒரு ரிக்வெஸ்ட் செய்தார் கஜா.. 20 நிமிடங்களாகியும் சாவி கிடைக்கவில்லை.. சங்கரனிடம் இருந்து 4 மொபைல் அழைப்புக்கள் வந்தாயிற்று.. ' ஒரே செக்கண்ட் சங்கரா. சாவி மிஸ் ஆயிடித்து . தேடிட்டு இருக்கோம்.. கெடச்சுடும் வந்துடறேன்.. ' என்றார்.. 

அப்புறம் 25வது நிமிடம் தக்காளிக்குள் விழுந்து கிடந்ததை அந்தக் கடைக்கு வந்த ஒரு சிறுமி எடுத்துக் கொடுத்தாள்..
அப்பாடா என்றாயிற்று கஜாவுக்கு .. முதல் முறையாக மனசார அந்த சிறுமிக்கு ஒரு நன்றியை சொன்ன கஜா, அவளுக்கு 5 ரூபாயில் ஒரு காட்பரி ஜெம்ஸ் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கையில் . .

இன்னும் 3 நிமிடங்கள் முன்னரே அதாவது 22 வது நிமிடம் அவர் கொண்டு வந்திருந்த சங்கரனின் மொபெட் கள்ளசாவி வைத்துத் திறக்கப் பட்டு திருடப் பட்ட விபரம் நம்ம ஹீரோவுக்கு அடுத்த 1அல்லது 2 வது நிமிடத்தில் தெரியவுள்ளது.. 

அந்தக் கண்றாவியை நாம் ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.. ?

Tuesday, February 16, 2016

6ஆம் அறிவுத் தொந்தரவுகள்..




சோற்றுப் பருக்கைகள்
காலில்  மிதிபடுகையில் கூட 
என்னவோ மலம் 
மிதித்துவிட்ட துரிதகதியில் 
ஓடிச்சென்று கால்களைக் 
கழுவுகிறோம்.. 

என்றேனும் மலத்தினை 
மிதித்து விட நேர்கையிலும் கூட 
அது ஒரு மனிதனின் 
செரிமானமான உணவென்கிற 
அறிவியலை ஏற்க மறுத்து 
அசூயை கொண்டு 
கழுவ ஓடுகிறோம்.. 
Image result for aversion
எந்த உயிரினங்களுக்கும் 
பரஸ்பரம் 
அவைகளின் மலம் 
அருவருப்பு ஏற்றுவதில்லை.. 
மனித இனத்துக்கு மாத்திரம் 
தான் இன்னொருவனின் 
உணவு முறைகள் கூட 
அவன்  உண்ணும் 
முறைகள் கூட 
குமட்டல் ஏற்படுத்தி விடுகின்றன.. !!
Image result for aversion

Friday, February 12, 2016

கடவுளும் நானும்..



ன்னை வசீகரித்து 
மூர்ச்சையாக்கினாய். 
கோவிலுக்கு வந்த பெண்களில் 
கவிதை புனைவதற்கான
அனைத்து யோக்யதைகளையும் 
புதைத்து வைத்திருந்தன
உமது அவயவங்கள் மட்டுமே.. !

கர்ப்பகிரக சுவாமி அலங்காரம் 
எமது பிரக்ஞையில் ஏனோ 
குவியவே இல்லை.. 
நமஸ்கரிக்கிற உமது 
கைவிரல்களும் 
பிரார்த்தனையில் முனகும் 
உமது உதடுகளுமே
திரையிடப் படாத 
தரிசனமாயிற்று எனக்கு.. !

  உம்மைப் பார்த்துப்
பிரார்த்திக்க வேண்டிய தேவை 
சுவாமிக்கு இருந்தது போலவே 
எனக்குத் தோன்றியது.. 
ஆனால் நீ சுவாமி பார்த்து
உருகிப் பிரார்த்தித்தது 
முரணாய்ப் புரிந்தது எனக்கு.. !!

ஆனால் சுவாமியிடம் 
பிரார்த்தித்தே தீரவேண்டிய 
பல இன்னல்களில் மூழ்கிக் 
கிடக்கிற நான் 
சுவாமி மறந்து உன்னில் 
லயித்து உன்னைப் 
பிரார்த்தித்தமைக்காக 
நிச்சயம் சுவாமி 
என்னை தண்டிக்க 
வாய்ப்பில்லை  
என்கிற இந்த 
உத்திரவாதத்துக்குக் காரணம் ..

என்னை கவனிக்காமல்  
என்போலவே சுவாமியும் 
"உன்னை மட்டுமே 
தரிசித்துக் 
கொண்டிருந்திருக்கக்  கூடும் "
 என்பதாலுமே  கூட 
இருந்திருக்கலாம்?..!!

[--இன்னொன்றும் கூட எனக்குத் தோன்றுகிறது.. தன்னைத் தவிர்த்து உன்னைப் பார்த்தமைக்காக ஸ்வாமி  எம்மை தண்டிப்பதாவது?.. இன்னும் கூட சேர்த்து எமக்கு அருள் பாலிப்பாரோ ? ஹஹ.. ]





Wednesday, February 3, 2016

பிதற்றல்களுக்கு மன்னிக்கவும்..

Image result for egoமகோன்னத உணர்வைக் கிளரச் செய்கிற எவையாயினும், அவைகளை ரகசியமாக்கி அனுபவிக்கிற போக்கு சிலருக்கு சாசுவதமோ என்னவோ அறியேன், என்னைப் பொருத்தமட்டில் அதனை ஏதோ ஒரு வகையில் நமது அருகாமையில் உள்ள சொந்தபந்தங்களுக்கு உற்றார் உறவினர்களுக்கு ஆப்த நண்பர்களுக்கு மனைவி குழந்தைகளுக்கு என்று பகிர்ந்தளிக்கப் பரிதவிப்பவன் நான்.. 

ஆனால், நாம் நினைப்பது போன்று அது அத்தனை சுலபத்தில் வாய்த்து விடுகிற சமாச்சாரமும் அல்ல.. 
உதாரணமாக ஒரு சாரம் ததும்பும் இசை.. பியானோ கட்டைகளைப் பிய்த்து உதறுகின்றன விரல்கள்.. அதனூடே லாவகமாக வந்து இழைகிற சேக்ஸோபோன்.. பிற்பாடு மெல்லத் தவழ்ந்து பின்புறமாக வருகிற மெட்டல் ஃப்ளூட் .. இவைகளோடெல்லாம் வந்து தனக்கும் ஒரு இடம் வேண்டுமென்று உரிமையோடு இடம் பிடித்துக் கொள்கிற வெஸ்டன் வயலின்.. 
ஒரு பீத்தொவனையோ , பாக்கையோ , மொஜார்ட்டையோ கேட்டுப் பழகிய எல்லாருக்குமே இந்த ஒத்தடம் நன்கு புரியும்.. மனச் சுளுக்கையும் உடற்சுளுக்கையும் ஒருங்கே  அகற்றி ஆழ் நித்திரைக்குள் பயணிக்க வைக்கிற  அத்தனை மேம்பாடுகளும்  அடங்கியுள்ளன இந்தக் கலவைகளுள்.. !

ஜாஜ்வல்யம் ததும்பும் ஜாஸ் இசையை கேட்ட வண்ணம் தெருக்களில் நடை இடுதல் என்பது அலாதி அனுபவம்.. பாதையை  மிதந்து கடப்பது போன்ற மாயைகளுள்  லயிக்கச் செய்து விடும் அற்புதம்.. 

எமது லாகிரி மற்றோரும் அறிய வேண்டும் என்கிற அனாவசிய ஆவல் என்னுள் மூள்வதேன் ?. என்னுடைய ரசனை என்னை உயர்த்திக் காண்பிக்க வேண்டுமென்கிற அசட்டு வெறி அது என்று உணர்கிறேன்.. 

அற்புத விஷயங்கள் எவையும் தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதற்காக எப்போதும் மெனெக்கெடுவது இல்லை.. அது தானாகவே உணரப்பட்டு  வியப்புக்களுக்கு உள்ளாக்கப் பெறும் .. அவை, அக்றிணை ஆயினும், இளையராஜா ஆயினும்.. !!

நம்முடைய "பிரம்மாதம்"துரிதகதியில் கண்டுணரப் படவேண்டும்.. பரிசு பாராட்டுக்கள்  குவியத் துவங்க வேண்டும் என்கிற கங்கணங்கள் உதித்த மாத்திரத்திலேயே  நம்முடைய "அனைத்தும்" அதே கதியில் அஸ்தமிக்கவும் துவங்கி விடுகின்றன என்கிற உண்மையையாவது உணர்கிற பக்குவம்  பெற வேண்டும்.. 

அல்லவெனில், நம்முடைய கர்வம் நமக்கே கர்மமாகி விடக்கூடும்.. !!Image result for ego

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...