Saturday, February 21, 2015

ஒருதலைராகம்

பரஸ்பர காதலைக் 
காட்டிலும் என் 
ஒருதலைக் காதல்
வீரியமென்று முழங்கிக் 
கதறுகிறேன் மெளனமாக.. !

பூங்கா நாற்காலியில் 
ஒற்றையாக உட்கார்ந்திருக்கிறேன்.. 
நீ வந்தால் பரவாயில்லையே 
என்று.. 

சாயங்காலம் கரைந்து போய் 
அந்தியின் வெளிச்சம் 
சுட ஆரம்பிக்கையில் 
என் தனிமை அழத் துவங்கிற்று.. !

குலுங்கி அழ நேர்கையில் 
எல்லாம் உனது மடி 
என் ஞாபகத்துக்கு வரும்.. 
அருகில் நீ இருந்திருக்கும் 
பட்சத்தில் அதிலே 
சாய்ந்து அழலாம் என்றும்  
என் பிடரி முடியை 
நெருடுகிற உன் விரல்களின் 
ஆறுதல் நர்த்தனங்களும் .. 

நீ அருகில் இருந்திருக்கும் 
பட்சத்தில் நான் 
அழுவதற்கான சந்தர்ப்பமே 
இல்லையே என்கிற 
சுரணை வருகிறது...!

-ஆனால் 
நீ அற்ற  இந்தத் 
தருணம் .. 
எனக்கந்த சந்தர்ப்பத்தை 
அளித்துள்ளது.. 
ஆகவே, அந்தப் பூங்கா 
நாற்காலியில் குப்புறக் 
கவிழ்ந்து குமுறிக்  
கதறுகிறேன்.. 

நேரம் முடிந்தது 
என்று சொல்லக் 
காத்திருக்கிறான் 
பூங்கா காவலாளி.. 
அதுவும் போக, 
நான் அழுது முடிக்கட்டும் 
என்றும் அவன் 
காத்திருப்பதாகவே 
எனக்குத் தோன்றியது.. !!

பரஸ்பர காதலைக் 
காட்டிலும் என் 
ஒருதலைக் காதல்
வீரியமென்று முழங்கிக் 
கதறுகிறேன் மெளனமாக.. !

பொய்களை எல்லாம் 
மௌனமாகத் தான் 
முழங்கியாக வேண்டியுள்ளது.. !!!


2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...