Saturday, February 14, 2015

நாஸ்திகனின் பக்தி..

சுவாமியைப் பிரார்த்திப்பதில்
என்னிடம் உண்மையில்லை..
அவ்வப்போது
சுவாமியை நிந்திப்பதில் கூட
தைரியமில்லை..

எதிலேனும் தோல்வி தழுவுகையில்
காரணம் சுவாமி
என்று கூப்பாடு போடுகிற நான்
எதையேனும் வென்றெடுக்கையில்
எனது திறன் என்று
மார் தட்டிப் புளகிக்கிறேன்..

சுவாமிக்கு ஆராதனை நடக்கையில்
குழந்தையின் பிஞ்சுக் கரங்களைக் கூப்பி
கர்ப்பக்கிரகம் பார்த்துக் கும்பிடச்
சொல்லி அறிவுறுத்துகிறாள் தாய்..
நானோ
பிரார்த்தனையின் போது
எவளது முகம்
மிளிர்கிறதென்று
எதிர்வரிசையை நோட்டமிடுகிறேன்.. !!

சுவாமி கோபிப்பாரோ என்கிற
பயங்களும் சந்தேகங்களும்  இருப்பினும்
என்னை மட்டும் மன்னித்து விடுகிற
உத்தேசம்  கடவுளுக்கு எப்போதும் உண்டென
நம்புவதுண்டு நான்..
நம்பிக்கை தானே வாழ்க்கை?

அர்ச்சகர் விநியோகித்த விபூதி குங்குமம்
எவள் நெற்றிக்கு அம்சம்
என்கிற எமது அடுத்த ஆராய்ச்சி
துவங்கி விடும்..

எனக்குப் பின்னாடி நிற்பவர்கள்
முன்னுக்கு என்னை
நகரச்சொல்லி துரிதப் படுத்துவர்..

என்னைத் தாண்டி நகரச் சொல்வேன்
பின்புற நபர்களை..

அடுத்த தீபாராதனைக்கு
புதிதாக வருகிற பெண்களை
நான் பார்த்தாக வேண்டி இருக்கிறது...!!






No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...