இந்த வாழ்க்கை பற்பல பரிமாணங்களில் எல்லாராலும் அனுசரிக்கப் படுகிறது.. ஒருவர் ஏற்கிற விதத்தில மற்றொருவர் ஏற்பதில்லை... அவர் அவர்களுக்கான அனுமானங்களோடு ஓர் பிரத்யேகமான சூழல் அனுபவப்படுகிறது..
உதாரணமாக மலை வளைவுகளில் ரசனையோடு ஓர் டூ வீலரில் பயணிப்பவரும் உண்டு... வெறுமனே கடக்கப் பட்டால் போதும் என்கிற முஸ்தீபில் பயணிப்பவரும் உண்டு.. ரசனையோடு பயணிப்பவன் அந்த மலை முகடுகளையும் அங்கே அலைபாய்கிற முகில்களையும், அடர்ந்து படர்ந்திருக்கிற பசுமைவெளிகளையும் முழுதுமாக உள்வாங்கி தனது மனம் உடல் யாவும் அதில் உணர்கிற ஓர் மகோன்னத சிலிர்ப்பை உணர்ந்தவனாக இருக்கிறான்..
அதே சூழலில் அதே குளுமையில் வெறுமனே பாதை கடக்க மட்டும் அந்த டூ வீலர் இன்னொருவனுக்கு உபயோகமாகிறது...
இவ்விதமாக எல்லா விஷயங்களுமே ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதத்தில் புரிபடுகிற சமாச்சாரங்களாக உள்ளது..
ஆனால் ரசனைகளுக்கான அவகாசங்களும் உண்டு.. ஏதோ ஓர் அவசர தருவாயில், மனைவியோ மகளோ அம்மாவோ அப்பாவோ நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையாகி விடுகையில், சீதோஷ்ண நிலை என்ன ரம்மியமாக இருப்பினும் அவை குறித்த பிரக்ஞை மண்டையிலோ மனதிலோ ஏறும் வாய்ப்பில்லை... அவர்களது ஆரோக்கியம் திரும்பப் பெறவேண்டும் என்கிற பிரார்த்தனைகள் மாத்திரமே பிரதான விஷயமாகி, சில்லென்ற தென்றல் சுரணையற்றதாகி விடுகிறது..
இந்தப் பற்றுகள் யாவும் நம்மைப் பின்னிப் பிணைந்து எவ்வித சுகந்த கால நிலைகளையும் சுலபத்தில் நரகமாக்கி விடுவது ஒருவித மன அமைப்பின் நிமித்தம் என்றே அனுமானிக்க நேர்கிறது..
ஆக , நரகம் சொர்க்கம் என்கிற சூழல்கள் யாவும் மனதை மையப் படுத்தியே புறத்தில் நாம் உணரவேண்டி உள்ளதேயன்றி , புறத்தினை காரணிகளாக்கி நமது மன அமைப்பை மாற்றுவது சாத்யமா என்பது மனோதத்துவ ரீதியாக ஆராயப் படவேண்டிய சிக்கல்கள் ...
"பற்றற்று இருத்தல்" "எல்லாமே மாயை" "நிலையற்ற தன்மை" என்கிற விஷயங்கள் யாவுமே எல்லாராலுமே ஏதோ ஓர் காலத்தின் கட்டாயத்தில் மிகவும் விரும்பப் பட்டும் யதார்த்தமாகவும் பின்பற்றி இருக்கக் கூடும்.. ஆனால் இவைகளினின்றெல்லாம் மீண்டு வந்து , மறுபடி இந்த வாழ்க்கையின் மீதாக அபரிமிதப் பற்று வைப்பதிலும் புளகித்துப் போவதிலும் தான் ஓர் சுவாரசியமே பொதிந்துள்ளதாக நமக்கொரு அடையாளம் பிடிபட்டுவிடுகிறது..
அந்த அடையாளத்தை என்றாவது ஒரு நாள் சில ஷணங்கள் தொலைத்துவிட விரும்புகிறோம்.. , அதிலே ஓர் மகோன்னதம் சீறிப் பாய்வதாக உணர்கிறோம்.. சரியான பாதைக்கு வந்து விட்டதாக கர்வம் கூடப் படுகிறோம்.... ஆனால் அவை யாவும் ஓர் ஈசலின் ஆயுட்காலத்தோடு நம்மிடம் நீடித்திருப்பதை உணர்ந்து மெளனமாக வெட்கிக்கூடப் போகிறோம்..
முடிவில் சொன்னது 100% உண்மை...
ReplyDeleteTHANKS FOR YOUR REVIEW MR.DHANABAL SIR
ReplyDelete