Saturday, March 16, 2013

நெனச்சத எழுதறேன். -2- [பரதேசி சினிமா விமரிசனம்]

பரதேசி பார்க்க நேர்ந்தது.. அந்த ஆரம்ப கட்டங்களில் பாலா காட்டுகிற 1939 ஆம் வருடத்திய சாலூர் என்கிற பெயரிட்ட கிராமம், வெள்ளந்திகளின் கூடாரமாக இருக்கிறது.. அன்று வாழ்ந்து வந்த மக்கள் எல்லாருமே எங்குமே அப்படித்தானோ?
பாரதிராஜா காண்பிப்பது தான் கிராமம் என்றிருந்தவனுக்கு பாலா காண்பிக்கிற இந்த கிராமம் இன்னும் ஆழ்ந்து ஊடுருவுகிறது மனசை..

சினிமாத்தனம் என்கிற ஓர் தன்மைக்கு பலிகடா ஆகாமல் யதார்த்தங்களை மாத்திரமே தனது இயல்பாக மறுபடி தன்னை நிலைநிறுத்தியுள்ள பாலாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டத் தகும்..

இதற்கு மேலாக ஓர் ஈனத் தனத்தை காண்பிக்கவே முடியாது - என்கிற விதமாக அமைந்துள்ள இப்படத்தின் கதாநாயகனாக முரளியின் மகன் அதர்வா அசத்தி இருப்பது... அதற்கு ஈடாக நாயகியும் அசத்தியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்..

இன்னபிற பாத்திரங்களும் அதே நேர்த்தியோடு பாலாவால் மிக இயல்பாக ஆட்டுவிக்கப் பட்டுள்ளன..

அந்தப் பழமையை வெள்ளித் திரையில் நெடுகவே திணித்திருப்பது அசாத்தியத் துணிச்சல்..

மதராசப் பட்டினத்தில் தனது பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் உயிர் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இப்படத்துக்கும் அந்தக் காரியத்தை செய்திருக்கிறார்.. பாலா போன்ற ரசனை மிக்கவர்களுக்கு இவ்வித அடையாளங்கள் கூடவா தெரிந்து விடாமல் போய்  விடும்?

ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் எடிட்டிங்கும் வசனங்களும் பாடல்களும் .. இன்னபிற எல்லா டெக்னிக்  விஷயங்களுமே பாலா போலவே இந்தப் படத்திற்கு ஒத்துழைப்புக்  கொடுத்துள்ளன என்று கூறலாம்..

கண்ணீர் நமது கண்களை விட்டு வெளியேறத் தடுமாறுகிற வகையிலே காட்சி அமைப்பின்  சோகங்கள் இறுகிக் கிடக்கின்றன.. பொத்துக் கொண்டு அழ வேண்டுமென்றாலும், சம்பவங்கள் நம் மனங்களை freeze ஆக்கி விடுவதால் வெளி வந்த பிற்பாடு  தான். உருக நேர்கிறது..

அந்த வெள்ளைக் காரர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் அடிமையாக  நமது அப்பாவி ஜனங்கள் அனுபவிக்கிற பேராவஸ்தை.. இதன் நடுவே வந்து உயிரை களவாடிப் போகிற அந்தக் கொள்ளை நோய்கள்.. விட்டு வந்த கிராமத்தை மறுபடி நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கொடூரம்.. இங்கிருந்து தப்பிக்க முயல்கையில் அதற்கென இவர்கள் அளிக்கிற  கூடுதல் தண்டனைகள்.. மனைவிமார்களைக்  கபளீகரித்து, காம வேட்டை ஆடுகிற டீ எஸ்டேட் வெள்ளைக் கார முதலாளிகள்..

இப்படி படம் நெடுக வலிகளும் வேதனைகளும் தர்மசங்கடங்களும் பிரச்னைகளும் ... படம் பார்க்கிற நாமும் வந்து ஓர் டீ எஸ்டேட்டில் மாட்டிக் கொண்ட ஒரு உணர்வு..

அவார்டுகளை வேண்டுமானால் குவிக்கக் கூடும், வசூலைக் குவிக்குமா என்பது கேள்வி தான்... ஏனென்றால் மிகப் பலரும் படம் பார்த்துவிட்டு வெளி வருகையில் இந்தப் படத்தை சலித்துக் கொள்வது தான் நாகரீகம் போல, ஒரு கடமை போல "ப்ச்" என்றும் "ச்சை " என்றும் கோரஸாக குலவை பாடி வந்தார்கள்..

அவார்டுகள் குவிவது போலவே , வசூலும் என்றைக்குக் குவியத் துவங்குகிறதோ அன்றைக்குத் தான் பாலாவுக்கு யதார்த்தமான வெற்றி.. அவார்டு கொடுப்பவர்கள் மாத்திரம் ஓர் படைப்பை  அங்கீகரிப்பதென்பது மிகவும் செயற்கையாகவும்  கவலையாகவும் உள்ளது..

நன்றி.. 

1 comment:

  1. சிந்திக்க வேண்டிய கேள்வி தான்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...