Wednesday, May 30, 2012

நமது அவஸ்தை மதிக்கப்படுமா??

இந்த atm கார்டுகள் மனிதனை அவ்வப்போது படுகுழியில் தள்ளி மூர்ச்சை ஆக்கி சின்னாபின்னம் செய்து விடுகின்றன... 
சமீபத்தில் ஓர் பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்த மாதிரி காண்பிக்கிறது mini  statement .. ஆனால் என் கைக்குப் பணம் வந்த பாடில்லை... எனது அக்கவுன்ட் உள்ள வங்கியை அணுகிநாலோ, அதற்கொரு புகார் மனு அளிக்க சொல்லி, அதன்படி எழுதித் தந்து ரெண்டு வாரங்களுக்கு மேல் ஆயிற்று... 
அய்யஹோ .. அது குழந்தையை எல் கே ஜி சேர்ப்பிக்க தேவையான தொகை..இப்படி மாட்டிக்கொண்டதே என்று புலம்பிக் கூட அதற்குரிய துரித நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்த சமாசாரம் மறுபடி இன்றைக்கு என்னாயிற்று என்று விசாரிக்க சென்ற
போது 

  தான் புரிந்தது..
தாட் பூட் என்று கத்திதொலைந்தாலும் பிரயோஜனப் படாது என்று மறுபடி மூஞ்சியை பவ்யமாகவே வைத்துக் கொண்டு ஏன் சார் இவ்வளவு லேட்? என்று தான் முணக வேண்டியாயிற்று..
இன்னும் ரெண்டொரு நாளில் சரி செய்து பணம் எடுக்க ஏற்பாடு செய்கிறோம் என்று வாக்குறுதி தந்தார்கள்.. ஆனால் நம்முடைய அவசரமோ பதற்றமோ கிஞ்சிற்றும் அவர்களை பாதிக்கவில்லை என்பது கண்கூடு... state bank of travancore tiruppur main branch இல் தான் எனது சேமிப்புக் கணக்கு... அங்கே தான் இத்தனை குளறுபடி... ஏற்கனவே இவ்விதம் ஓர் ரெண்டாயிரத்துக்கு பிரச்சினையாகி ..
இதனை எல்லாம் நான் ஏன் மெனக்கெட்டு சொல்கிறேன் என்றால் , இவ்விதம் எல்லாருக்குமே நடக்கும் சாத்யக் கூறுகள் உள்ளன.... அவசரத் தேவைகளுக்கு உதவும் படியும் உடனே எவரிடம் விண்ணப்பிப்பது?.. நிலவரத்தை சொன்னால் தான் நம்புவார்களா?.. 
இதற்கெல்லாம் தீர்வு என்ன? யாரிடம் இவர்களது மெத்தனத்தை நாம் புலம்பித் தீர்ப்பது... ஒன்றும் விளங்கவில்லை.. இதனைப் படிக்கிற எவரேனும் consumer court சார்ந்த விஷயங்கள் தெரியுமானால் எனக்கு தெரிவிப்பீர்களாக.. அங்கே புகார் கொடுத்தால் அது செல்லுபடியாகுமா.. நமது அவஸ்தை மதிக்கப்படுமா??
தயை கூர்ந்து இவை குறித்து அறிந்தவர்கள் தெரியப் படுத்தவும்... நன்றி..

Tuesday, May 29, 2012

நாய் உட்பட..

ஓர் இழையில்
ரோஷம் மானம்
எல்லாமே
நம்மிலிருந்து
விலகி விடுவது
ஆச்சர்யமே...

மீசையை முறுக்கி
கண்களை உருட்டி
மிரட்டி -
சிங்க கர்ஜனையோடு
வசனம் பிதற்றிய
காலம் மறக்கவில்லை...

கோடொன்றைக் கிழித்து
அதைத் தாண்டினால்
கொய்துவிடுவதாக
பயமுறுத்தியதற்கு
பெரிய மரியாதை இருந்தது...
!

எனது சுபாவங்கருதி
மிரண்டு கிடக்கிற
மனைவி குழந்தைகளோடு
வீட்டு நாயும் அடக்கம்..!!

எனது இருப்பின்
போதிலாக - வீடு
நரகமாக உணரப்பட்டது
எல்லோராலும்..
நாய் உட்பட..

எனது
வெளியூர்ப் பயணம்
சொர்க்கவாசல்
திறப்பதாக இருந்தது
எல்லாருக்கும்..

வீட்டில் நானற்ற
தருணங்களில்
எங்கேனும் நிகழ்கிற
சாலை விபத்து
செய்திகளில்
எனது பங்களிப்பை
அநேகமாக என்
வீட்டிலிருப்பவர்கள்
எதிர்பார்த்திருக்கக் கூடும்
என்றே என் உள்மனம் உளறும்..

என் தினவுகள் அனைத்தையும்
வயோதிகம் வந்து
கபளீகரிப்பதை
சுவாரஸ்யமாகி ரசிக்கின்றன
என்னை சூழ்ந்திருக்கிற கண்கள்..!

அவர்கள் கண்களில் எல்லாம்
கொள்ளிவைக்கப்
பதறுகிறது என் ஆற்றாமை
மற்றும் இயலாமை...

ஆனால் எனக்குக்
கொள்ளி வைக்க
நெருப்பெனத்
தகிக்கின்றன
அவர்களது கண்கள்..!!

Saturday, May 26, 2012

டாக்டர் என்கிற வியாதி...


 

கன்சல்டிங்குக் காக ஆசுபத்திரி போயிருந்தேன் ... அதாவது எனது இதயம் சார்ந்த பிரச்சினை குறித்து... E C G  ECHO TMT BLOOD GLUCOSE  என்று எல்லா டெஸ்ட்களையும் எடுத்து ஓர் ஐந்தாயிரத்தை பழுக்க வைத்து விட்டார்கள்..

கையில் ஐநூறு ரூபாய் இருந்தால் கூட பைக்குக்கு நூறு ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போடுவதற்கு அங்கலாயக்கிற நம்மால் டாக்டரிடம் மட்டும் பேரம் எதுவும் பேச முடியாமல் கேட்டதை அவிழ்க்க வேண்டிய சூழ்நிலையை யோசிக்கையில் ஏனோ பைக்கின் மீது ஓர் பாசமும் கவலையும் கலந்த ஓர் உணர்வு ...

ரஜினி படத்துக்கு கூட முதல் ரெண்டு வாரமோ நாலு வாரமோ தான் கூட்டம் இருக்கும்... இந்த ஆசுபத்திரியிலோ ஒவ்வொரு நாளும் முதல் நாள் ரிலீஸ் ஆன ரஜினி படம் போல தான் பரபரப்பு... 
ரஜினி படத்துக்கு கூட பிளாக்கில் டிக்கட் கிடைத்து விடும்.. இங்கே கொஞ்சம் தாமதம் ஆனாலோ அடுத்த வாரம் வரச்சொல்லி அனுப்பி விடுவார்கள்..

திருப்பதி போலவே எப்போதும் நிரம்பி வழிகிறது ஆஸ்பத்திரி...
கையைத் திருகாமலேயே நோயாளிகளிடம் காசைப் பிடுங்குகிறார்கள் என்பது ஓர் நியாயமான குற்றச்சாட்டு தான் என்ற போதிலும், மனிதர்களுக்குப் பிரச்னை என்று நேர்கையில் வேறு எங்கு தான் தீர்வு கிடைக்கப் போகிறது, இந்த ஆசுபத்திரிகளைத் தவிர??

ஆம்புலன்சு டிரைவர் ,
"எவனாச்சும் அடிபட்டுக் 
கெடக்க மாட்டானா ?"
என்று தனது 
பிசினசை பிக்கப் 
செய்யப் பார்க்க....

செத்துருவான்னு 
தெரிஞ்சாலும் 
பொழைக்க வைக்கப் 
போராடுகிற நடிப்பில் 
சிவாஜிகணேசன் 
தோற்கவேண்டும் 
டாக்டர்களிடம்..

பொழச்சிருவான்னு 
தெரிஞ்சாலோ 
வீ ட்ரை அவர் பெஸ்ட் 
என்று சொல்லி 
தெய்வமாகி விடுவர் 
அதே டாக்டர்கள்..

நீ நகைய அடகு 
வச்சா என்ன 
கொள்ளை அடிச்சா 
என்ன..
பில்லுக்கு பணத்தைக் 
கட்டினா தான் 
அவுரு போராடி 
தோத்துப்போன 
டெட்பாடி நம்ம 
கைக்குக் கெடைக்கும்..

பெஸ்டா அவுரு 
ட்ரை பண்ணி 
பொழச்ச பேஷன்ட் 
திரும்ப வீடு வருவாரு..
இது உன்னோட 
மறு பெறப்புடா ராசா ன்னு 
அழுது வரவேற்கிற 
வெள்ளந்தித் 
தாயைப் பார்த்தால் 
கூட எந்தக் 
குற்ற உணர்வுகளும் 
எந்த டாக்டர்களுக்கும் 
வரவே வராதென்பது 
பயித்திய காரனுக்குக் கூட 
புரிந்த யதார்த்தம்...!!




Monday, May 21, 2012

CELLPHONE CULTURE..


மொபைல் போன் கலாச்சாரம் என்பது பனை போல வளர்ந்து நிற்கிற அனாச்சாரம்... எவராலும் இனி வெட்டி வீழ்த்த முடியாத இந்த நெடுமரம் இனி, மேலும் மேலும் பல்கிப் பெருகி நமது வாழ்க்கைக்குள் ஊடுருவி நம்முடைய இயல்பை, நம்முடைய நிம்மதிகளை களவாடி சென்று விட்டன..
எங்கெங்கு காணினும் செல்லோ செல்... கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறவன் தனது அன்றைய வசூல் நிலவரத்தை மற்றொரு பெக்கரிடம் விலாவாரியாக விளாசிக் கொண்டிருக்கிறான்... கான்பெரன்சு கூடப் போட்டிருப்பானோ அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்...
டூ வீலரில் பறக்கிற மைனர்களும் சரி, பொட்டச்சிகளும் சரி, முகங்களைக் கோணலாகத் திருப்பி காதும் தோளும் உரசவே பேசிக்கொண்டு போவதைப் பார்க்கையில் கடுப்பு ஒருபுறம் இருந்தாலும் ஒருபுறம் ஆச்சர்யம் இல்லாமல் இல்லை..எப்டி இப்டி டேலண்டா பேசிக்கினே, வண்டியை ஓட்டிக்கினே போறாங்கோ?.. நாமெல்லாம் வண்டியில போகப் போக செல் வந்ததுன்னா ஒரு ஓரமா ஒதுங்கி நின்னு செல் எடுக்கறதுக்குள்ளே நமக்கு வந்த கால் மிஸ்ட் கால் ஆயிடுது.. மறுபடி நாம டயல் பண்ண வேண்டியதா போயிடுது... சமயங்களில் அடிக்கிற செல்லை பாக்கேட்டிலிருந்து எடுக்கறதே சிரமமா போயிடுது... அப்டி கஷ்டப்பட்டு எடுத்துப் பேசினமுன்னா, எதிர் முனையில பொண்டாட்டி, "வீட்டுக்கு வரச்சே புளி வரமிளகா வாங்கிட்டு வரணும்" நு சொல்வா..

இம்சையும் அவஸ்தையும் ...


பிளாகில் இப்போது வேறு மாதிரியாக ஒரு சாப்ட்வேர் உபயோகிக்கிறார்கள்.., தமிழில் டைப் செய்யவே மிகவும் டென்ஷனாக உள்ளது... நாம் டைப் செய்கிற வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் அச்சாகிறது... ஒரு வார்த்தை நிறைவு பெற்ற பிறகே இங்கே வந்து சேர்கிறது... சலிப்பாகவும் எரிச்சலாகவும் உள்ளது.. முந்தைய சுலபத்தோடு ஒப்பிடுகையில் இது பேராவஸ்தையாக உள்ளது..
எதற்கு இப்படி எல்லாம் மென்பொருள் கண்டுபிடித்து நம்மைக் கடுப்பு ஏற்றுகிறார்களோ புரியவில்லை..


முந்தைய ஆப்ஷன் இப்பவும் உள்ளதா என்பதை நண்பர்கள் தெரிவிக்கவும்... என்னால் அதனை கண்டு பிடிக்க முடியவில்லை... நான் ஜிமெயில் கம்போசிங் போய் இப்போது எழுத வேண்டியுள்ளது...


ஓர் புதிய உத்தி என்பது உபயோகிக்க சுலபமானதாகவும் முந்தயதைக் காட்டிலும் பாராட்டத் தக்கதாகவும் இருக்க வேண்டும்.. அதுவல்லாமல் இப்போதைய தன்மை இம்சை தருவதாக இருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது... இந்தத் தகவல் எவர் காதுகளுக்குப் போகுமோ... மறுபடி எவர் இதனை பழையபடிக்கு மாற்றி அமைப்பரோ அறியேன்... அப்படி பழையபடிக்கு மாற்றுவது சாத்யமா என்பதும் புரியவில்லை..

Monday, May 14, 2012

வழக்கு எண் 18\9 பட விமரிசனம்....

வழக்கு எண் 18\9 பார்த்தேன்... விகடனில் ஐம்பத்தஞ்சு மார்க் போட்டிருக்கிறார்கள் என்கிற வெறியில் போய் பார்த்தேன்... தமிழ் சினிமா என்கிற வழக்கமான பார்முலாவை தூக்கி எறிந்து விட்டு ஓர் டாகுமெண்டரி போல எடுத்திருக்கிறார்கள்... 
இவ்வளவு எளிமையான சூழ்நிலைகளை வைத்துக் கொண்டு மிக ஸ்டைல் ஆக திரைக்கதை அமைத்த விதம் அருமை... ஒரு பாட்டிற்கு வெளிநாடு இல்லை என்பதோடு, பாட்டே இல்லை... இசை அற்று அவ்வப்போது ஒலிக்கிற ஒரே பாடலும் மனசை போட்டு பிசைகிறது... 
லிங்குசாமி தனக்கென்று போட்டுக் கொள்கையில் மசாலா டீ போட்டுக் கொள்கிறார்.. யாரையாவது விட்டுப் போடுகையில் மூலிகை கலந்த
பத்தியக் காபி போட வைக்கிறார்??அவ்வபோது சினுங்குகிற இசை அந்த சூழலுக்கேற்றதாகத் தான் உள்ளது... காரெக்டர்களின் இயல்பும் அனிச்சை போன்ற நடிப்பும் ஆச்சர்யமூட்டுகிறது... 
ஆபாசங்கள் எதுவும் திணிக்காமல் அருவருப்பான வசனங்களை உதிர்க்காமல் .. வெள்ளந்திகளாகவே எல்லாரும் உலா வருவது ஆரோக்கியமாக இருக்கிறது... 
இந்த மாதிரி சினிமாக்களுக்கு மக்கள் பக்குவப் படவேண்டும்... அப்போது தான் மறுபடி மறுபடி நல்ல படங்கள்  வரக் கூடும்.. திறமை மட்டுமே ஹீரோ வாக இருக்கும்... 
ஆனால் நம்மவர்கள் சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க விரும்புகிறவர்கள்... சினிமாவில் உண்மைகளையும் யதார்த்தங்களையும் தரிசிப்பதில் சலிப்புக் காண்கிறவர்கள்...
இந்த ஈனத் தன்மைகளை மாற்றி மக்கள் ரசனைக்குப் புத்துயிர் தருவதில் பெரும் பங்குள்ளவர்கள் இன்றைய சினிமாவை சிருஷ்டிப்பவர்கள்.... பாலாஜி சக்திவேல் போன்றவர்கள் பெருக வேண்டும்... 

நன்றி
சுந்தரவடிவேலு..           

Saturday, May 12, 2012

சாப்பாட்டு ராமன் கவிதை..


தேவலாம் என்று
எனக்குத் தோன்றுவதெல்லாம்
நயா பைசாவிற்கு ஆகாதென்று
அபிப்ராயம் வரும்
மனைவியிடமிருந்து...

சூப்பர் என்று
அவள் பிதற்றுவதெல்லாம்
சல்லிக் காசுக்கு ஆகாதென்றாலும்..
"ஆமாடா செல்லம்..
நல்ல ரசனை உனக்கு" என்று
புளகாங்கிதம் அடைய வைப்பேன்..

அவள் ரசிப்பதை
நான் புறக்கணிக்கையில்
சாம்பாரில் உப்பைத் தூக்கலாக்கி
விடுவாள்..
வெறும் தண்ணியில் கூட
ரசம் வைக்கவில்லை என்பாள்..
புளிச்சு நாறின தயிரை
தலையில் கட்டுவாள்..

ஆஹோ ஓஹோ வென்று
அவள் அரற்றுகிற அற்ப
விஷயங்களுக்கான அலட்டல்களை
நானும் ஆமோதிக்கப் பழகி
விட்ட காரணத்தால்...
ரெண்டு  பொரியல் செய்கிறாள்..,
அப்பளம் பொரிக்கிறாள்..
கூட்டு செய்கிறாள்,
புளிக்குழம்பு வைக்கிறாள், ..
முதற்கண் போட மறந்த
பருப்புப் பொடியைக் கூட
தயிருக்குப் பிறகாக போடட்டுமா
என்று கேட்டுப்  புல்லரிக்க வைக்கிறாள்..

சுந்தரவடிவேலு..

Sunday, May 6, 2012

ஆரோக்கியமானவர்களின் வியாதி..


நோய் குறித்து 
விசாரிப்பவர்கள்
அதற்கான செலவுகளையும்
விசாரிக்கிறார்கள்...
எனக்குத் தெரியும்..
நோய்கள் குறித்தும்
அவர்களுக்கு அக்கறையில்லை..
அதற்கான செலவுகள் குறித்தும்..!!

செலவு இத்தனை லட்சம்
என்கிற போதான 
அவர்களது ரகசிய மலர்ச்சி
எத்தனை நோயாளிகளுக்குப்
புரிபடுமோ தெரியவில்லை..
"--பிரச்சினையில்லை..
செலவுக்கான காப்பீட்டுத்
தொகை வந்துவிடும்"
என்கையில் ..
நோயாளியின் வியாக்யானம்
குறித்து ஓர் ஆற்றாமையை
பார்க்கலாம் அவர்கள் முகங்களில்...

 " "நோய்வாய்ப் படவேண்டும்..
செலவாகவேண்டும்..
அதற்கென பிரத்யேகமாக
கடன்பட வேண்டும்...
முக்கியமாக 
இன்சூரன்ஸ் பாலிசி
எதுவும் எடுக்காமலிருக்கவேண்டும்.." "

--அநேகமாக
இப்படி யோசிப்பவர்கள்
எல்லாம் 
முன்னர் இவனிடம்
கடன் கேட்டுப் 
பெறமுடியாதவர்களாகவே
இருக்கக் கூடும்...!!         


சுந்தரவடிவேலு....

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...