Monday, October 10, 2011

இன்று வந்ததும் அதே நிலா?? SHORT STORY....

இரண்டாமாண்டு கல்லூரி சென்று கொண்டிருக்கிற எனது மகளின் தோழி, என்னை காதல் வசப்படுத்திய விபரீதத்தை நான் எனது டைரியில் எழுதுவதைக் கூடத் தவிர்க்க வேண்டியாயிற்று...



"அங்கிள்" என்று வெள்ளந்தியாக என்னிடம் பேசுகிற, அப்பா ஸ்தானத்தில் என்னை நிறுத்திப் பார்க்கிற அந்த என் மகள் போன்ற பெண்ணிடத்து என் பொருந்தா காதல் மீது எனக்கே ஓர் தாங்கொணா அசூயை...

குற்ற உணர்வோடு சரிவர சாப்பிடக்கூட பிடிபடாமல் அலுவல் கிளம்புகிறேன்... என் நடவடிக்கையின் மாறுதல்களை சுலபத்தில் அடையாளம் கண்டு கேள்வியாகப் பார்க்கிற என் மனைவியின் முகம் ஓர் அவஸ்தை என்றால், என் தன்மை குறித்த எவ்வித சந்தேகங்களும் அற்ற என் மகள் சுபா முகமாகட்டும், அந்தத் தோழிப் பெண் கவிதா வாகட்டும்... பேரவஸ்தை எனக்கு...!!

இவ்வித சூழல்களோடு டிவி நாடகமோ, சினிமாவோ வேண்டுமானால் சுவாரஸ்யத்தோடு பார்த்துக் கொண்டிருக்கலாம், ஆனால் உண்மையாக எனக்கே நடக்கிறதென்றால், .. எங்கே போய் கொட்டித் தீர்க்க?

சில விஷயங்கள் ஓர் பிரத்யேகமான பின்புலத்தோடு தான் நடக்கிற சாத்தியம் கொண்டுள்ளன... இந்த விஷயமும் அப்படி ஓர் பின்புலத்தோடு தான் நிகழ்கிறது என்கிற உள்ளுணர்வொன்று என்னுள் கிளர்ந்து கொண்டே தான் இருக்கிறது... 
இந்த மாதிரியான காதல் உணர்வுகள் யாவும் ஓர் பிராயத்தில் எனக்குள் நேர்ந்தவை தான்... ஒரு தலையாகவும், பிறகு இருதலையாகவும் அந்த அனுபவம் அடர்த்தி கண்டது... அதில் சிலிர்த்து இறுகிய இருதயம் இன்னும் அதே பாறையின் திணவில் தான் என்னுள் படிமானமாகிக் கிடக்கிறது..

காதல் இருதலையாகிக் கூட தோல்வி காண நேருமாயின் அது மாபெரும் சாபமன்றோ?... ஒருதலைக் காதல்கள் கூட வெற்றிவாய்ப்பினை எட்டிப்பார்த்த சம்பவங்களை எல்லாம் தரிசித்து வியந்தவனுக்கு... இருவரும் ஓடி ஓடி ஆசை தீரக் காதலித்த ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறுபட்டுப் பிரிவதென்பது உலகமகா சோகமல்லவா??

அதற்கான காரணிகள் பெற்றோர் என்றால் கூட ஜீரணிக்கலாம்..., சம்பந்தப் பட்ட காதலியே காரணம் என்றால்?.. அப்படி ஆயிற்று என் காதல் கதை... என் தகுதியும் செல்வாக்கும் அவளுக்கு நான்காம் தரமாகி விட்டன... அவளைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் அந்தஸ்த்தை ஒப்பிடுகையில்..!!

பெண் பார்க்க வருகிற வைபவத்தையே ஓர் இழவு சேதி போல என்னிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்... எப்படியோ அதனைத் தவிர்க்கச் சொல்லியும், ஊருக்குள்ளேயே அவர்களை விடாமல் விரட்டி விடுமாறும் தான் என்னிடம் அழாத குறையாக கட்டளைகள் விடுத்துக் கொண்டிருந்தாள்...நான் தான் கேனப்பயல், "விடுடி .. சும்மா பொலம்பாதே.. வந்தா வந்து பார்த்துட்டுப் போகட்டும்.. நீயும் பார்க்கற மாதிரி பார்த்துட்டு புடிக்கலைன்னு சொல்லிடு" என்று புத்திசாலி போல ஐடியா கொடுத்தேன்..

ஆனால் வந்தது ஆப்பு... மாப்பிள்ளையின் ஆஜானுபாகு, அரசாங்க உத்தியோகம், சம்பளம், எல்லாம் அம்மணியை தலைகுப்புறத் திருப்பி விட்டது.. மேற்கொண்டு என்னைப் பார்ப்பதை ஓர் இழவு போல உணர ஆரம்பித்து விட்டாள்...

என்னென்னவோ செய்யத் திட்டமிட்டு , "என் கையால உன்னை கொல்றேன் பாரு" என்றெல்லாம் வீர சபதமேற்று...
ஓர் தருவாயில்--- சீ போடி நாயே..போயும் போயும் உன்னைக் கொன்னு என்னோட வாழ்க்கையை நான் தொலச்சுக்கனுமா? என்கிற தீர்மானத்தில், என் வாழ்க்கையை வேறு கோணத்தில் நான் செலுத்த நேர்ந்த .. ... அந்த சம்பவங்கள் யாவும் நிழலாடுகிறது... 

இன்று எனக்கும் ஓர் நல்ல மனைவி, வெளியூரில் படிக்கிற மகன், உள்ளூர் கல்லூரியில் படிக்கிற மகள் என்று நேர்த்தியாகத் தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது... ஆனால் பாருங்கள் --

இப்படி ஓர் காதல் இப்பொழுது...
அதற்கான காரணத்தை நான் திடீரென்று ஓர் நடுராத்திரியில் தூக்கத்தின் நடுவே உணர நேர்ந்தது... 
--அந்தக் கவிதாவினிடத்து, என் முன்னாள் காதலி கல்பனாவின் முகச்சாயல்..

முன்னாளில் உயிருக்கு உயிராகக் காதலித்த ஓர் பெண்ணின் முகம் இவ்வளவு தாமதமாக நினைவில் எழுகிற விபரீதம் அதிசயமாக இருக்கிறது எனக்கு... அந்த முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் அல்லவா கல்பனா அங்கே வந்திருக்க வேண்டும்?.. அப்படி அப்பட்டமாகவா  இருக்கும் முகம்? ஏதோ சாயல்கள் தானே??


இந்தக் குழப்பங்களின் நிமித்தமாக எனக்கு கவிதாவை உடனடியாகப் பார்த்தாக வேண்டும் போல அவசரம் தொற்றிக்கொண்டது...

என்னவோ சொல்லி வைத்தாற்போல கவிதா அடுத்த நாள் அவள் அம்மாவோடு என் வீடு வந்தாள்... அவள் அம்மா, ---- கல்பனா..

என்னைப் பார்த்துக் கும்பிட்டாள்... நானும் பதிலுக்குக் கும்பிட்டேன்..
எனக்கு உடனடியாக ஞாபகம் வந்து விட்டது.. அவள் என்னை சுத்தமாக மறந்து விட்டாள் போலும்..!!  எந்தப் பழைய சங்கதிகளும் அவளில் பிரதிபலிக்கவில்லை..

--கல்பனாவிற்கு மறப்பதென்பது அப்போதும் சரி, இப்போதும் சரி .. பெரிய விஷயமில்லையே!!!

வழக்கம் போல மறுபடி ஒரு நாள் கவிதா என் மகள் சுபாவைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தாள்.. 

அனிச்சையாக நான் அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்.. அவளும் பதில் புன்னகை செய்தாள்..  இந்த முறை அவளது புன்னகையில் அந்தப் பழைய வெள்ளந்தி மறைந்து விட்டிருப்பதாகத் தோன்றியது எனக்கு..!!


2 comments:

  1. கதை ரொம்ப நல்லா வந்திருக்கு சார்...

    ReplyDelete
  2. பன்னிக்குட்டி ராமசாமி அண்ணனுக்கு வணக்கம்.. என் சிறுகதையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணே...
    ஆனா அண்ணே, கொஞ்சம் உங்க நக்கல் பயோக்ராபியை ஓரங்கட்டி விட்டு நிஜ நிலவரத்தை சொல்வீரானால், மிக்க மகிழ்வேன்..
    மறுபடி சந்திப்போம் அண்ணாச்சி...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...