Tuesday, October 4, 2011

வெப்பம்...


 

என் அந்தரங்க டைரி
வீட்டில் அங்கும் இங்குமாக
எறிந்தபடி தான் கிடக்கிறது...

என் டீன் வயது
சபலங்கள் துவங்கி,
ஓர் பிராயத்தில்
நான் காதல்வசப்பட்டது,
என் காதல் வெற்றிபெற்றது
பிற்பாடு தோல்வியுற்றது,
இன்னபிற எனது
சேஷ்டைகள் அனைத்தும்
அடங்கிய அந்த டைரியை
நானே மறுபடி வாசிக்க
பயப்படுவேன், மற்றும்
சங்கடப்படுவேன்...

மலரும் நினைவுகளில்
உழல அவ்வப்போது
அவா பிறக்குமேயானாலும்
அந்த டைரி தவிர்த்து
பிறவற்றில் லயிக்கவே முனைவேன்...!!

அப்படியான
அந்த டைரியை
மாற்று நபர் படிக்க நேர்கையில்
அதன் நிமித்தமான எனது
தர்மசங்கடங்கள் சொல்லி மாளாது..
பல முறைகள்
அதனை எனது பெட்டியில் 
அடைப்பதற்கான திட்டம் வரும்..
ஆனால் ஏனோ அது
நடைமுறை சாத்யப் படாத
விதமாகவே முடிந்து போகும்..

சில விஷயங்கள் 
சுலபத்தில் தீர்வு காண்பவை..,
ஆனால் ஒருவித சோபை யின்மையால்
அது நிறைவேறாத , 
நிறைவேறும் வாய்ப்பே அற்றதாக
நிலைபெற்றுவிடுகிற தன்மை
ஆச்சர்யமானது..

அப்படித்தான் அந்த எனது
டைரி, மனைவி கண்ணிலும்
வீட்டிற்கு வருகிற நபர்கள்
கண்ணிலும் ஊசலாடிக்கொண்டே
இருப்பது, எனக்குள் ஓர் வகை
அச்சத்தை உண்டு பண்ணிக்கொண்டே 
இருக்கிறது...

ஒரு நாள் தீவிர முடிவெடுத்து
எறிந்து கிடக்கிற அந்த 
டைரியை எரித்துவிடுவதே
உசிதம் என்று கருதி
--அதற்கு முன்னர்
ஒரேமுறை அதனைப்
படித்துவிட முடிவுசெய்து..
படித்து முடித்து....

ஒருவழியாக
எனது பீரோவின் 
உள் அறையுள் வைத்துப்
பூட்டப்பட்டது அந்த டைரி...

"இன்னும் கொஞ்சம் 
பாக்கி இருக்கிறது படிக்க, 
அதற்குள் அந்த டைரியை
எங்கே போட்டீர்கள்?"
என்று என் மனைவி 
கேட்ட போது..
நான் உயிரோடு எரியூட்டப்
படுவதாக உணர நேர்ந்தது...!!!    

1 comment:

  1. நல்ல கவிதை . எங்களுக்கும் அந்த டைரிய ஒபன் பண்ணுங்க பாஸ்

    கமெண்ட் படிக்கும் அனைத்து நண்பர்களும் , என் கதையை படியுங்கள் :
    B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...