Monday, November 29, 2010

கேவலமானவர்களின் சந்தோஷங்கள்..

{இப்படியாக சிலரை என் வாழ்நாளில் சந்திக்க நேர்ந்ததன் பொருட்டு எனக்குள் இப்படி ஓர் காழ்ப்பு... ஆனால் இப்படியான ஈனத்தமையில் உலவுபவர்களால் தான் நல்லவர்கள் இன்னும் நல்லவர்களாக தெரிகிறார்கள் என்று கருதுகிறேன்.}

உன் உற்சாகம்
எனக்கு வெட்கமாக
இருக்கிறது...
                                                            
ஓர் நாசுக்கில்லாமல்
குதூகலிக்கிறாய்...
உன் உற்சாகத்தைக்
காட்டிலும் உன்
சோபை இன்மை
நாகரீகமாக தெரிகிறது...

இங்கிதமற்ற உன்
பேரானந்தம்
என்னுள் இம்சை
விளைவிக்கிறது...

உன் சிரிப்பைக்காட்டிலும்
ஓர் அறை விட்டு உன்னை
அழவைப்பது
ஆரோக்கியமாகப்
படுகிறது எனக்கு...

உன் சந்தோஷத்தின்
மீதான என்னுடைய கோபம்
எல்லாருக்கும் என்னை
"பயித்தியக்காரன்" போல
தோற்றுவிக்கலாம்..,
--ஆனால் என்னைப்போல
உன்னை அன்றாடம்
தரிசிக்கிற அவஸ்தைகளை
அவர்கள் அனுபவிக்காத போது
அப்படித்தான் தோன்றும்..
இருக்கட்டும்..!!

உன் கால்களுக்கான
பாதணிகளை மாத்திரம்
தேர்ந்தெடுக்கிற சுயநலமி நீ..
--போலியோ பாதிப்பில்
விந்தி நடக்கிறவர்களைப்
பார்த்து, கையில் கூட வாயை
மூடத்தெரியாமல் சிரிக்கிற
உன் போன்ற ஓர் ஜென்மத்தை,
அதன் சிரிப்பை எப்படி
பொறுத்துக்கொள்வது??

Sunday, November 28, 2010

தொன்று தொட்டு....

வார்த்தைகளை விட
தொன்மையானவை
மௌனங்கள்...


மௌனங்கள்--
அமைதியின் அடையாளமாக                    
தியானத்தின் அடையாளமாக
வார்த்தைகளைக்காட்டிலும்
வீரியம் நிரம்பியதாக
நம் எல்லாரிலும்
ஊடுருவிக்கிடக்கின்றன....

கைதட்டல் வாங்குகிற
வார்த்தைகள் , சமயங்களில்
கல்லடியும் வாங்கக்கூடும்..

ஆனால் மௌனங்கள்
நிராயுதபாணியாக நின்றே
எதனையும் வெல்பவை..

மரணங்களும்
தொன்மையானவை தான்...
ஆனால் தொன்மையான
வாழ்வினை வைத்து
நாம் அதனை எப்போதும்
தவிர்க்கவும் தகர்க்கவுமே
போராடிப்பார்க்கிறோம்..,

ஓர் குழந்தை அடம் பிடித்து
பலூனை பெற்றுக்கொண்டதும்
ஓர் புன்னகை தவழ்கிறதல்லவா...?
--அப்படி இருக்கிறது
நம் வாழ்க்கைக்கான போராட்டம்
அனைத்தும்....

--நாம் அப்படி
போராடி ஜெயிப்பதை
மெல்லிய புன்னகையோடு
ரசித்துக்கொண்டிருக்கிறது மரணம்..!!

Thursday, November 25, 2010

காகிதப்பூ

மூன்று நாள்
முள்தாடியை
விரல்களால் நெருடியபடி
ஓர் நல்ல கவிதைக்கு
யோசித்துக்கொண்டிருப்பதைக்
காட்டிலும் -
நேர்கிற சுகமான இயல்பான
அனுபவங்களைக்
கவிதையாக பகிர்ந்துகொள்ளப்
பிரயத்தனிப்பது
நல்ல கவிஞனின் அடையாளம்..!

சமயங்களில்
அனுபவக் கவிதைக்கான
வார்த்தைகள் பிடிபட
மறுக்கலாம்..,
கற்பனையாகப் புனைகையில்
சுவாரஸ்யமான வார்த்தைகள்
பீறிடலாம்...
--அதற்காக அந்த அனுபவ
உணர்வுகள் அழிவதில்லை.!!

கற்பனைக்கு பிடிபட்ட
வார்த்தைகள் காகிதப்பூக்கள்..,
வார்த்தை பிடிபடாத
அந்த அனுபவ உணர்வுகள்
வாசனை மலர்கள்..!!            

கிட்டத்தட்ட இந்தக்
கவிதையைக்
  கூட மணக்காத
காகிதப்பூ போல தான்
உணர்கிறேன் நான்...

Saturday, November 20, 2010

ஓர் மகானின் கட்டுரை..    
 உலக அறிவு அற்றிருந்த பால்ய விளயாட்டுப்பருவங்கள் மாதிரியான சுவையான தருணங்கள் .. அநேகமாக சாகிற வரை எவருக்குமே கிடைப்பதில்லை..
ஓர் இழையில் எல்லா அறிவுகளும் வந்து மனதைத்தொற்றிக்கொண்டு , அந்த நாட்களை மலரும் நினைவுகளில் வைத்துத் தத்தளிக்க நேர்கிறது...
அதுவும் நம் அப்பாக்களோ தாத்தாக்களோ சந்தித்திராத வினோத சம்பவங்களையும்  , விபரீத மரணங்களையும்  .. கொடுமையான சோகங்களையும்  இன்றைய தலைமுறையினர் மிக சுலபமாக அன்றாடமுமே சந்திக்க தயாரிலும் பீதியிலும் இருக்க வேண்டியுள்ளது என்றால் அது மிகையன்று...

மிகவும் துரிதமாகவும் , ஆடம்பரமாகவும் வளர்ந்து வருகிற அறிவியலும் அது சார்ந்த மனித மூளைகளும் ...
என் போன்ற வெறுமனே தகவல்களை சேமிக்கிற, பொது அறிவை வளர்த்துக்கொள்கிற நபர்களின் கூட்டம் தான் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கெங்கிலும் அதிக சதவிகிதம்... டெக்னாலஜி  யில் அப்டேட் செய்து  சாதிப்பவர்களின் சாதனைகளை அன்றாடம் தகவல்களாக அப்டேட் செய்வதே எங்கள் போன்றவர்களின் சாதனை...{?}

இன்னும் சிலர் இருக்கிறார்கள்.... எல்லா செய்தித்தாள்களிலும் தலைப்பு செய்திகளாக வெளி வந்து ஊரே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிற ஓர் சூழ்நிலையில் கூட "எதுக்குடா எல்லாரும் என்னவோ மாதிரி இருக்கீக?" என்று சன்னமாக தனது சந்தேகத்தை கேள்வியை கேட்கிற சாதனையாளர்களும் உண்டு...

ஒரே குடையின் கீழ் இப்படி சாதிப்பவர்களும், தகவல் திரட்டிகளும், எதுவுமே உரைக்காதவர்களும் வாழ்ந்து வருகிறோம்...

என்னவோ சொல்ல வந்தவன் என்ன சொல்வதென்றே புரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறேன்... எனக்கு நானே என்னை தகவல் திரட்டி என்று தம்பட்டம் அடித்துக்கொள்வது சற்று குற்ற உணர்வாக உள்ளது..."எதுவுமே உரைக்காத" லிஸ்டில் சேர்வதே சாலச்சிறந்தது என்று கூட தோன்றுகிறது இந்த மகானுக்கு....ஹிஹிஹ்..

Monday, November 15, 2010

அநாகரீகமான யதார்த்தங்கள்?.....

என் அற்பத்தனங்களும்
சபலங்களும்
எனது நண்பர்களுக்கு               
மாத்திரமே
பிரத்யேகமானவை...

மனைவியினிடத்து
மிக நாசுக்காகவும்
அற்பத்தனங்களோ
சபலங்களோ சற்றும்
இது வரை வாழ்வில்
அறிமுகமே ஆகாத
தொனியில்....

வார்த்தைகளில் ஆகட்டும்
செய்கைகளில் ஆகட்டும்
சுலபத்தில் விரசங்களை
உட்புகுத்தி தன்னை
மிக கேவலமான
மனிதர்களாக சித்தரிப்பதில்
மனைவி குழந்தைகள் நண்பர்கள்
மற்றும் எந்த நபர்களிடமும்
கிஞ்சிற்றும் வெட்கமே அற்ற
சிலரை நான் அடையாளம்
காண்கிறேன் அனேக சமயங்களில்....

கீழ்த்தரமாக அவர்கள்
புரிபட்டாலும்
யதார்த்தம் தொலையாதவர்கள்
என்றே என்னால் உணரவியல்கிறது...

Saturday, November 13, 2010

சமாளிப்பு..

 என்றோ ஒரு நாள்
ஓர் சுவாரஸ்யமான
கவிதை ஒன்றை               
எழுதி வைத்ததாக
ஞாபகம்...
-மறுபடி அதனைக்
கொணர்வதற்கான
முஸ்தீபுகளை
மேற்கொண்டாலும்
அதே கோர்வையில்
வார்த்தைகள் பிடிபட
மறுக்கிறது.. மற்றும்
அந்தக் கருத்துக்
கூட அத்தனை தெளிவாக
நினைவிலில்லை...
--இவ்வளவு இம்சையில்
அது குறித்து எதற்கு
இத்தனை பிரலாபம்?

கவிதை வறட்சியில்
ஓர் பழைய கவிதைக்கான
தேடல்..
அது கிடைக்கவில்லை
என்கிற அவஸ்தையைப்
பதிவு செய்வதில்
இப்போது ஒரு கவிதை...??

Monday, November 8, 2010

மலர்ந்த நினைவுகள்...

தீபாவளிக்கு அடுத்த நாள் எனது பால்ய நண்பர் விஜயஷங்கர்  தனது மகனுடன் எனது வீட்டிற்கு வந்திருந்தார்...நேருக்கு நேர் பார்த்து வருடங்கள் பல ஆகி விட்டன..நீண்ட இடைவெளி... பழைய நண்பனைக் காண்பதென்பது கிட்டத்தட்ட பிரிந்திருந்த காதலியைக் காண்பதற்கு ஒப்பான ஓர் உணர்வை ஏற்படுத்தியதென்றால் அது மிகையன்று...

வாழ்க்கை எல்லாருக்குமே இப்படியே தான் ...
வெவ்வேறான தளங்களில் இருவரும் ... தகுதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான சந்திப்பல்ல இவைகள்... அநேகமாக.. பரஸ்பரம் பார்த்து சிலிர்த்துக் கொள்ளவே என்று தோன்றுகிறது எனக்கு...

நான் புலம் ஏதும் இது வரை பெயராமல் திருப்பூரிலேயே .. இன்னும் கொஞ்சம் பந்தா படுத்த வேண்டுமானால் இந்தியாவிலேயே இருந்து வருகிறேன், இனி மேலும் இருந்து வருவேன்.. இந்தியா மீதான பற்று அப்படி எனக்கு..(?)
ஆனால் எனது நண்பரோ, படிப்பு நிமித்தமாகவும் தொழில் நிமித்தவாகவும் பற்பல நாடுகளை சுற்றிவிட்டு இன்று பெங்களூருவில் வசித்து வருகிறார்...
--- மேற்கொண்டும் வெளிநாடுகள் செல்கிற திட்டங்களில் இருக்கிறாரோ என்னவோ...

நான் கண்டிப்பாக இந்தியாவை விட்டு நகர மாட்டேன்.. உறுதியாக சொல்கிறேன் .. யாரும் கவலைப்படத் தேவை இல்லை... ஹிஹிஹ்ஹிஹ்....

ஆனால் அவர் மறுபடி வெளிநாடு செல்வதற்கு முன்னர் நான் ஒரு முறையாவது பெங்களூரு சென்று வரலாம் என்பதில் உறுதியாக உள்ளேன்...என் நண்பரின் அனுமதியை வாங்காமலே அடித்து சொல்கிறேன்... இருக்கட்டுமே, நண்பர் என்ன வரவேற்காமலா போய் விடுவார்?...             

Monday, November 1, 2010

அம்மா கட்சி...

குழந்தையின் அழுகைஇம்சை என்கிற என் கூற்றை
மனிதாபிமானமற்றது                        
என்கிறாள் என் மனைவி...
-அயர்ந்து நான்
உறங்குகிற போதோ
தொலைபேசியில்
எவருடனாவது தீவிர
விவாதத்தில் இருக்கிற போதோ
அவள் கதறுகிற நிகழ்வு
அன்றாடம் என்கிற
பழக்கத்துக்கு வந்தாகி விட்ட
போதிலும், அந்த
ஷனத்தின் கோபத்தை
கட்டுப்படுத்தத் தவறி
ரகளை செய்கிற
மகளை பொய்யாக
ஓர் மிரட்டு மிரட்டுகையில்
உதடு பிதுங்கியவாறு
அடங்கிப்போகிறாள் என்றாலும்
மனைவி என்னை
ஹிட்லராக சித்தரித்து
எனக்குள் குற்ற உணர்வை
விதைத்து விடுகிறாள்...

-பிற்பாடான சாவகாச
தருணங்களில்
அப்பா அப்பா என்று
என்னுடன் தான்
சிரித்துக் கொஞ்சி
விளையாடுகிறாள்...எனிலும்
நான் மிரட்டுகையில் எல்லாம்
அவள் அம்மா கட்சி...!!

சுந்தரவடிவேலு...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...